நறுந்தொகை மூலமும் உரையும்


கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரணஅற் புதமலர் தலைக்கணி வோமே.

பதவுரை: பிரணவம் – பிரணவ மந்திரத்தின்;பொருள் ஆம்- அருத்தமாகிய, பெருந்தகை – பெருந்தன்மை யுடைய, ஐங்கரன் – ஐந்து கைகளை யுடையவராகிய விநாயகக் கடவுளின், சரணம் – திருவடியாகிய, அற்புதம் – அதிசயமிகுந்த, மலர் – செந்தாமரை மலரை, தலைக்கு அணிவோம் – தலையில் சூடிக்கொள்வோம் என்றவாறு.

பொழிப்புரை: பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்குவோம் என்றவாறு.

பிரணவம் எல்லா மந்திரங்களுக்கும், வேதத்திற்கும் முதலாக வுள்ளது. யாம் என்னும் எழுவாய் தொக்குநின்றது; ஏ: ஈற்றசை.

நூற்பயன்

வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை
யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த
நறுந்தொகை தன்னால் குற்றங் களைவோர் குறைவிலா தவரே.

பதவுரை: கொற்கை – கொற்கை யென்னும் நகரை, ஆளி – ஆள்பவனும், குலசேகரன் – தன்குலத்திற்கு முடிபோல்பவனும் ஆகிய, வெற்றிவேல் கை – வெற்றி பொருந்திய வேலினை யேந்திய கையை யுடைய, வீரராமன் – அதிவீரராம பாண்டியன், புகல் – சொல்லிய, நல் தமிழ் தெரிந்த – நல்ல தமிழில் விளக்கமுற்ற, நறுந்தொகை தன்னால் – நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலால், குற்றம் களைவோர் – குற்றத்தைப் போக்குவோர், குறைவு இலாதவர் – சிறுமை இல்லாதவராவர் (எ -று).

பொழிப்புரை: கொற்கை நகரதிபனும் குலத்திற்கு மகுடம் போன்ற வனுமாகிய அதிவீரராம பாண்டியன் கூறிய நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலைக்கற்றுக் குற்றத்தைப்போக்கிக் கொள்வோர் ஒரு குறையும் இல்லாதவராவர் (எ று.)

நறுந்தொகை யென்பதற்கு நல்ல நீதிகளைத் தொகுத்திருப்பது என்பது பொருள். இதுவே இந்நூலின் பெயர். இச்செய்யுளின் முதலில் ‘வெற்றி வேற்கை’ என்னுந்தொடர் இருத்தலால், அதனாலும் இந்நூலை வழங்குவர். ஏ – ஈற்றசை.

நூல்

1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்.

பதவுரை: எழுத்து – எழுத்துக்களை, அறிவித்தவன் – கற்பித்த ஆசிரியன், இறைவன் ஆகும் – கடவுள் ஆவான்.

பொழிப்புரை: ஒருவனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியன் அவனுக்குத் தெய்வமாவான்.

எழுத்து முதலாகக் கற்பிக்க வேண்டுதலின் கல்வியை எழுத்து என்றார். ஆசிரியனைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டு மென்பது கருத்து.

2. கல்விக் கழகு கசடற மொழிதல்.

பதவுரை: கல்விக்கு – (ஒருவன் கற்ற) கல்விக்கு, அழகு – அழகாவது, கசடு அற – குற்றம் நீங்க, மொழிதல் – (தான் கற்றவற்றைச்) சொல்லுதல்.

பொழிப்புரை: ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது தான் கற்றவற்றைக் குற்றமறச் சொல்லுதல்.

கசடு, ஐயம் திரிபு என்பன. ஒருவன் தான் கற்றவற்றை ஐயம் திரிபு இன்றியும், திருத்தமாகவும் பிறருக்குச் சொல்லவேண்டும் என்பதாம்.

3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

பதவுரை: செல்வர்க்கு – பொருளுடையவர்க்கு, அழகு – அழகாவது, செழும் கிளை – நல்ல சுற்றத்தை, தாங்குதல் – பாதுகாத்தல்.

பொழிப்புரை: செல்வமுடையோர்க்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல்.

கிளைபோன்றிருத்தலின் சுற்றம் கிளை யெனப்படும். செழுங் கிளை யென்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள் படும்.

4. வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும்.

பதவுரை: வேதியர்க்கு – மறையோர்க்கு, அழகு – அழகாவன, வேதமும்-வேதம் ஓதுதலும், ஒழுக்கமும் – நல்லொழுக்கம் குன்றாதிருத்தலும் ஆம்.

பொழிப்புரை: வேதத்தை மறவாமல் ஓதுதலும், ஒழுக்கத்திற் குன்றாமையும் அந்தணர்க்கு அழகாம்.

வேதத்தை மறந்தவரும், நல்லொழுக்க மில்லா தவரும் அந்தணராகார் என்பதாம்.

5. மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை.

பதவுரை: மன்னவர்க்கு – அரசருக்கு, அழகு – அழகாவது, செங்கோல் முறைமை – நீதி செலுத்தும் முறைமையாம்.

பொழிப்புரை: அரசருக்கு அழகாவது நீதி செலுத்தும் இயல்பாம்.

நீதியானது செவ்விய கோல்போன்றிருத்தலின், அது செங்கோல் எனப்படும். தமது நாட்டை நீதியுடன் ஆளாதவர் அரசராகார் என்பதாம்.

6. வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல்.

பதவுரை: வைசியர்க்கு – வணிகர்க்கு, அழகு – அழகாவது, வளர் பொருள் – வளர்கின்ற பொருளை, ஈட்டல் – தேடுதல்.

பொழிப்புரை: வாணிகர்க்கு அழகாவது வளர்கின்ற பொருளைச் சேர்த்தல்.

வளர்தலாவது மேன்மேற் கிளைத்தல்.

7. உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல்.

பதவுரை: உழவர்க்கு – வேளாளர்க்கு, அழகு – அழகாவது, இங்கு – இந்நிலத்தில், உழுது – உழுது பயிர் செய்து, ஊண் – உண்டு வாழ்தலை, விரும்பல் – இச்சித்தல்.

பொழிப்புரை: வேளாளர்க்கு அழகாவது பயிர் செய்து உண்டலை விரும்புதல்.

8. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.

பதவுரை: மந்திரிக்கு – அமைச்சனுக்கு, அழகு – அழகாவது, வரும்பொருள் – (மேல்) வரும் காரியத்தை; உரைத்தல் – (முன்னறிந்து) சொல்லுதல்.

பொழிப்புரை: அமைச்சனுக்கு அழகாவது மேல் வருங்காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல்.

9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை.

பதவுரை: தந்திரிக்கு – படைத்தலைவனுக்கு, அழகு – அழகாவன, தறுகண் – அஞ்சாமையும், ஆண்மை – வீரமும் ஆம்.

பொழிப்புரை: படைத்தலைவனுக்கு அழகாவன அஞ்சாமையும் ஆண்மையுமாம்.

தந்திரம் – சேனை, தந்திரி – சேனையை உடையவன்.

10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.

பதவுரை: உண்டிக்கு – உணவிற்கு, அழகு – அழகாவது, விருந்தோடு – விருந்தினருடன், உண்டல் – உண்ணுதல்.

பொழிப்புரை: உணவுண்டலுக்கு அழகாவது வந்த விருந்தினருடன் கலந்து உண்ணுதல்.

விருந்தினர் – புதியராய் வருகின்றவர், பரதேசிகள்.

11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல்.

பதவுரை: பெண்டிர்க்கு – மகளிர்க்கு, அழகு – அழகாவது, எதிர் பேசாது – (கணவன் சொல்லுக்கு) எதிர் பேசாமல், இருத்தல் – அடங்கியிருத்தல்.

பொழிப்புரை: மாதர்களுக்கு அழகாவது கணவனோடு எதிர்த்துப் பேசாது அடங்கியிருப்பது.

12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்.

பதவுரை: குலமகட்கு – குலப்பெண்ணுக்கு, அழகு – அழகாவது, தன் கொழுநனை – தன் கணவனை, பேணுதல் – வழிபடுதல்.

பொழிப்புரை: குலமாதுக்கு அழகாவது, தன் கணவனைப் பூசித்தல்.

குலமகள் – ஒருவனுக்கு உரியளாய் இல்லறம் நடாத்தும் நற்குடிப் பிறந்த பெண். பேணுதல் என்பதற்கு உண்டி முதலிய வற்றால், உபசரித்தல் என்றும் பொருள் சொல்லலாம்.

13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.

பதவுரை: விலைமகட்கு – விலைமாதுக்கு, அழகு – அழகாவது, தன் மேனி – தன் உடம்பை, மினுக்குதல் – மின்னச் செய்தல்.

பொழிப்புரை: பொதுமகளுக்கு அழகாவது, தன் உடம்பினை மின்னச் செய்தல்.

பொருள் கொடுப்பார்க்கு உரியளாதலின் பரத்தை விலை மகள் எனப்படுவள். மினுக்குதல் – ஆடை அணிகளாலும், மஞ்சள் முதலிய பூச்சுக்களாலும் விளங்கச் செய்வது.

14. அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல்.

பதவுரை: அறிஞர்க்கு – அறிவுடையோர்க்கு, அழகு அழகாவது, கற்று – (கற்கவேண்டிய நூல்களை யெல்லாம்) கற்று, உணர்ந்து – (அவற்றின் பொருள் களை) அறிந்து, அடங்கல் – அடங்கியிருத்தல்.

பொழிப்புரை: அறிவுடையோர்க்கு அழகாவது நூல்களைக் கற்றுணர்ந்து அடங்கியிருத்தல்.

அடங்கல் – செருக்கின்றியிருத்தல்; மனம் அடங்குதல் நூல்களிற் கூறியபடி நடத்தல்.

15. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை.

பதவுரை: வறிஞர்க்கு – வறுமையுடையோர்க்கு, அழகு – அழகாவது, வறுமையில் – அவ்வறுமைக் காலத்தும், செம்மை – செம்மையுடையராதல்.

பொழிப்புரை: வறியோர்க்கு அழகாவது வறுமை யுற்ற அக்காலத்தும் செம்மை குன்றாதிருத்தல்.

செம்மையாவது மானத்தை விட்டு இரவாமலும், தீயன செய்யாமலும் இருத்தல்.

16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க் கிருக்க நிழலா காதே.

பதவுரை: பனையின் – பனைமரத்தின், தேம்படு – மதுரம் பொருந்திய, திரள் – திரண்ட, பழத்து – கனியில் உள்ள, ஒரு விதை – வித்தானது, வான் உற – ஆகாயத்தைப் பொருந்தும்படி, ஓங்கி – உயர்ந்து, வளம் பெற – செழுமை உண்டாக, வளரினும் – வளர்ந் தாலும், ஒருவர்க்கு – ஒருவர்க்காயினும், இருக்க – இருப்பதற்கு, நிழல் ஆகாது – நிழலைத் தராது.

பொழிப்புரை: சுவை பொருந்திய பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும் ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது.

உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமையுடையவராகார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தேம்பழம் எனக் கூட்டுக. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது என விரித்துக் கொள்க. தொல்காப்பிய இலக்கணப்படி பனை முதலிய புறவயிரம் உள்ளவற்றிற்குப் புல் என்று பெயர். ஒருவர்க்கும் – என்னும் உம்மை தொக்கது. ஏ : ஈற்றசை.

17. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

பதவுரை: ஆலின் – ஆலமரத்தின், தெள்ளிய – தெளிந்த, சிறு பழத்து – சிறிய கனியிலுள்ள, ஒரு விதை – ஒரு வித்தானது, தெள் நீர் – தெளிந்த நீரையுடைய, கயத்து – குளத்திலுள்ள, சிறு மீன் – சிறிய மீனினது, சினையிலும் – முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே ஆயினும் – சிறியதே யானாலும், (அது), அண்ணல் – பெருமை பொருந்திய, யானை – யானையும், அணி – அலங்கரிக்கப்பட்ட, தேர்- தேரும், புரவி – குதிரையும், ஆள் – காலாளும் (ஆகிய), பெரும் படையொடு – பெரிய சேனையோடு, மன்னர்க்கு – அரசருக்கும், இருக்க – தங்கியிருப்பதற்கு, நிழல் ஆகும் – நிழலைத் தரும்.

பொழிப்புரை: சிறிய ஆலம் பழத்திலுள்ள விதையானது சிறிய மீனின் முட்டையைப் பார்க்கிலும் சிறியதாயிருப்பினும் அது முளைத்து வளர்ந்து நால்வகைச் சேனையுடன் கூடிய அரசரும் தங்கியிருக்க நிழலைத் தரும்.

உருவத்தாற் சிறியவரெல்லாம் சிறுமை யுடையவராகாது பெருமையுடையவருமாவர் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தெள்ளிய பழத்து என்றும், விதை நுண்ணிதே யாயினும் என்றும் கூட்டிக்கொள்க. அது முளைத்து வளர்ந்து நிழலாகும் என விரித்துக்கொள்க. மன்னர்க்கும் என்னும் உம்மை தொக்கது. நிழலாகும்மே என்பதில், ம்:விரித்தல் விகாரம்; ஏ : ஈற்றசை.

18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.

பதவுரை: பெரியோர் எல்லாம் – (உருவத்தால்) பெரியவரெல்லாரும், பெரியரும் அல்லர் – பெருமை யுடையவரும் ஆகார்.

பொழிப்புரை: உருவத்தாற் பெரியவரெல்லாரும் பெருமையுடைய வராகார்.

பெரியோர் என்பதற்கு வயதிற் பெரியவரென்றும், செல்வத்திற் பெரியவரென்றும் பொருள் கூறினாலும் பொருந்தும். அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே பெருமையுடையவ ரென்க. பெரியவரும் என்பதிலுள்ள உம்மை பின்வரும் சிறியரும் என்பதைத் தழுவியிருக்கிறது. இங்கே கூறிய விசேடவுரைகளை மேல்வரும் தொடர்க்கு மாற்றி யுரைத்துக் கொள்க.

19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்

பதவுரை: சிறியோர் எல்லாம் – (உருவத்தால்) சிறியவரெல்லாரும், சிறியரும் அல்லர் – சிறுமை யுடையவரும் ஆகார்.

பொழிப்புரை: உருவத்தாற் சிறியவரெல்லாரும் சிறுமை யுடையவராகார்.

20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர்.

பதவுரை: பெற்றோர் எல்லாம் – பெறப்பட்டவர்களெல்லாரும், பிள்ளைகள் அல்லர் – (நல்ல) பிள்ளைகளாகார்.

பொழிப்புரை: ஒருவர் பெற்ற பிள்ளைகளெல்லாரும் நல்ல பிள்ளைகளாகார்.

அறிவு ஒழுக்கங்களில் மேம்பட்ட பிள்ளைகளே பிள்ளைகள் என்று சொல்வதற்குத் தகுதியுடை யவர்கள் என்க.

21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்.

பதவுரை: உற்றோர் எல்லாம் – உறவின ரெல்லோரும், உறவினர் அல்லர் – (நல்ல) உறவினராகார்.

பொழிப்புரை: உறவினரனைவரும் சிறந்த உறவினராகார். இன்ப துன்பங்களில் ஈடுபட்டிருக்கும் சுற்றத்தாரே உறவினர் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையோர் என்க.

22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.

பதவுரை: கொண்டோர் எல்லாம் – கொள்ளப்பட்ட மனைவிய ரெல்லாரும், பெண்டிரும் அல்லர் – (நல்ல) மனைவியருமாகார்.

பொழிப்புரை: மணஞ் செய்து கொள்ளப்பட்ட மனைவிய ரெல்லாரும் நல்ல மனைவியருமாகார்.

கணவன் குறிப்பறிந்து பணிசெய்து நடப்பவளே மனைவி யென்று சொல்லுவதற்குத் தகுதி யுடையவள் என்க. பெண்டிரும் என்பதிலுள்ள உம்மை மேல்வந்த பிள்ளைகள், உறவினர் என்பவற்றைத் தழுவியது.

23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது.

பதவுரை: அடினும் – காய்ச்சினாலும், ஆவின்பால் – பசுவின் பால், தன்சுவை – தனது மதுரம், குன்றாது – குறையாது.

பொழிப்புரை: பசுவின்பாலை வற்றக் காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது (மிகும்.)

இது முதல் ஐந்து வாக்கியங்கள் பெரியோர்க்கு எவ்வளவு துன்பம் செய்தாலும் அவர்கள் தம் பெருமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன.

24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.

பதவுரை: சுடினும் – சுட்டாலும், செம்பொன் – சிவந்த பொன்னானது, தன் ஒளி – தனது ஒளி, கெடாது – அழியாது.

பொழிப்புரை: தங்கத்தைத் தீயிலிட்டுச் சுட்டாலும் அதன் ஒளி கெடாது (மிகும்.)

25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது.

பதவுரை: அரைக்கினும் – அரைத்தாலும், சந்தனம் – சந்தனக் கட்டை யானது, தன் மணம் – தனது வாசனை, அறாது – நீங்காது.

பொழிப்புரை: சந்தனக் கட்டையை அரைத்தாலும் அதன் மணம் நீங்காது (மிகும்.)

26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.

பதவுரை: புகைக்கினும் – புகையச் செய்தாலும், கார் அகில் – கரிய அகிற்கட்டையானது, பொல்லாங்கு கமழாது – தீ நாற்றம் வீசாது.

பொழிப்புரை: அகிற் கட்டையை நெருப்பிலிட்டுப் புகைத்தாலும் அது தீ நாற்றம் நாறாது (நன்மணங் கமழும்). பொல்லாங்கு – தீமை; அது தீய நாற்றத்தைக் குறிக்கிறது.

27. கலக்கினும் தண்கடல் சேறா காது.

பதவுரை: கலக்கினும் – கலக்கினாலும், தண் கடல் – குளிர்ந்த கடலானது, சேறு ஆகாது – சேறாக மாட்டாது.

பொழிப்புரை: கடலைக் கலக்கினாலும் அது சேறாகாது (தெளிவாகவே யிருக்கும்.)

28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய்.

பதவுரை: பால் பெய்து – பால் வார்த்து, அடினும் – சமைத் தாலும், பேய்ச்சுரைக்காய் – பேய்ச் சுரைக்காயானது; கைப்பு அறாது – கசப்பு நீங்காது.

பொழிப்புரை: பேய்ச் சுரைக்காயைப் பால்விட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது.

இதுவும், அடுத்துவரும் வாக்கியமும் சிறியோர்க்கு எவ்வளவு நன்மை செய்தாலும் அவர்கள் தம் சிறுமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. இக்கருத்து, “உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும், கைப்பறாபேய்ச் சுரையின் காய்” என நாலடியாரில் வந்துள்ளது. பேய்ச்சுரைக்காய் சுரைக்காயில் ஒரு வகை.

29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே.

பதவுரை: பல் விரை – பல வாசனைகளை, ஊட்டினும் – ஊட்டினாலும், உள்ளி – உள்ளிப் பூண்டானது, கமழாது – நன் மணம் வீசாது.

பொழிப்புரை: உள்ளிப் பூண்டுக்குப் பல வாசனைகளை ஊட்டினாலும் அது நறுமணம் கமழாது (தீ நாற்றமே வீசும்). ஏ : அசை.

30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே.

பதவுரை: பெருமையும் – மேன்மையும், சிறுமையும் – கீழ்மையும், தான்தர – தான்செய்து கொள்ளுதலால், வரும் – உண்டாகும்.

பொழிப்புரை: மேன்மையும் கீழ்மையும் தான் செய்யுஞ் செய்கையாலேயே உண்டாகும் (பிறரால் உண்டாவ தில்லை). ஏ:அசை.

31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே.

பதவுரை: சிறியோர் செய்த – சிற்றறிவுடையோர் செய்த, சிறுபிழை எல்லாம் – சிறிய குற்றங்க ளெல்லாவற்றையும், பெரியோர் ஆயின் – மேலோரா யிருப்பின், பொறுப்பது – பொறுத்துக் கொள்வது, கடன் – முறைமையாம்.

பொழிப்புரை: சிற்றறிவுடையோர் செய்த சிறிய பிழைகளைப் பெரியோர் பொறுத்துக் கொள்வது கடமை. பொறுமையினாலேயே பெருமை அறியப் படும் என்க. ஏ : அசை.

32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே.

பதவுரை: சிறியோர் – கீழோர், பெரும் பிழை – பெரிய குற்றங்களை, செய்தனர் ஆயின் – செய்தாரானால், பெரியோர் – மேலோர், அப்பிழை – அக்குற்றங்களை, பொறுத்தலும் – பொறுத்துக் கொள்ளுதலும், அரிது – அருமையாம்.

பொழிப்புரை: சிறியோர்கள் பெரும் பிழைகளைச் செய்தால் பெரியோர் அவற்றைப் பொறுத்தலும் அருமையாம்.

பெரியோர் பொறுப்பரென்று கருதி அவரிடத்துப் பெரும் பிழை செய்தல் கூடாது என்க. ஏ:அசை.

33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.

பதவுரை: நூறு ஆண்டு – நூறு வருடம், பழகினும் – பழகினாலும், மூர்க்கர் – கீழ் மக்களுடைய, கேண்மை – நட்பானது, நீர்க்குள் நீரிலுள்ள, பாசிபோல் – பாசியைப்போல, வேர்க்கொள்ளாது – வேரூன்றாது.

பொழிப்புரை: எத்தனை காலம் பழகினாலும் கீழ் மக்களுடைய நட்பு நீர்பாசி வேரூன்றாமைபோல வேரூன்றாது. ஏ : அசை.

34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.

பதவுரை: ஒருநாள் – ஒருதினம், பழகினும் – பழகினாலும், பெரியோர் – மேன்மக்களுடைய, கேண்மை – நட்பானது, இரு நிலம் பிளக்க – பெரிய பூமி பிளக்கும்படி, வேர் வீழ்க்கும் – வேரூன்றப் பெறும்.

பொழிப்புரை: ஒருநாட் பழகினும் மேலோருடைய நட்பானது பூமி பிளக்கும்படி, வேரூன்றி நிற்கும்.

நட்பை மரமாக உருவகப்படுத்தி ‘இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்’ என்றார். பின் சலித்தலின்றி நிலைபெறு மென்ப தாயிற்று.

35. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.

பதவுரை: கற்கை நன்று கற்கை நன்று – (நூல்களைக்) கற்றல் நல்லது, கற்றல் நல்லது, பிச்சை புகினும் – பிச்சைக்குப் போனாலும், கற்கை நன்று – கற்றல் நல்லது.

பொழிப்புரை: பிச்சை யெடுத்தாலும் கல்வி கற்பது நல்லது. வற்புறுத்துவதற்குப் பலமுறை கூறினார். ஏ : மூன்றும் அசை; தேற்றமும் ஆம்.

36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.

பதவுரை: கல்லா ஒருவன் – கல்வி கல்லாத ஒருவன், குல நலம் – தனது குலத்தின் மேன்மையை, பேசுதல் – சொல்லுதல், நெல்லினுள் பிறந்த – நெற்பயிரில் உண்டாகிய, பதர் ஆகும் – பதடியாகும்.

பொழிப்புரை: கல்லாதவன் தன் குலத்தின் மேன்மையைப் பாராட்டும் வார்த்தை பதர்போலப் பயனற்றதாகும்.

பேசுதல் வீண். அவன் பதராகும் எனச் சொற்கள் வருவித்து முடித்தலுமாம். நெற்பயிர் நற்குடிக்கும், பதர் நற்குடிப்பிறந்த கல்லாதவனுக்கும் உவமைகளாம். ம் : விரித்தல் விகாரம்.

37. நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே.

பதவுரை: நற்பால் நான்கு வகையான, குலத்தில் – குலங்களில், மேற்பால் ஒருவன் – உயர்குலத்திற் பிறந்த ஒருவன், கற்றிலன் ஆயின்- கல்லாதவனானால், கீழ் இருப்பவனே – தாழ்ந்த இடத்தில் இருப்பவனே.

பொழிப்புரை: உயர் குலத்திற் பிறந்தவன் கல்லாதவனாயின் தாழ்ந்த இடத்தில் இருக்கத் தக்கவனே.

நாற்பாற் குலம்: அந்தண அரச வணிக வேளாள குலங்கள். இக்கருத்து, “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும், கீழ்ப்பாலொருவன் கற்பின், மேற்பா லொருவனு மவன்கட்படுமே” எனப் புறநானூற்றில் வந்துள்ளது. ஏகாரம் : பிரிநிலையும் தேற்றமும் ஆம்.

38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்.

பதவுரை: எக்குடி – எந்தக் குலத்தில், பிறப்பினும் – பிறந்திருந் தாலும், யாவரே ஆயினும் – யாரா யிருந்தாலும், அக்குடியில் – அந்தக் குலத்தில், கற்றோரை – கல்வி கற்றவரை, மேல் வருக என்பர் – மேலிடத்து வருக என்று அழைப்பார்.

பொழிப்புரை: எக்குலத்திற் பிறந்திருந்தாலும் யாராயிருந்தாலும் கற்றோரை மேல் வருக என்று உபசரித்து அழைப்பார்.

யாவரேயாயினும் என்றது, எந்த நிலைமையினராயினும் என்றபடி, தாழ்ந்த குலத்திற் பிறந்தவராயினும் இளைஞராயினும் கற்றோரை அழைப்ப ரென்க. ‘வருக வென்பர்’ என்பது ‘வருகென்பர்’ எனத் தொகுத்தது.

39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

பதவுரை: அறிவுடை ஒருவனை – கல்வியறிவுடைய ஒருவனை, அரசனும் விரும்பும் – வேந்தனும் விரும்புவான்.

பொழிப்புரை: கல்வியறிவுடையவனை அரசனும் விரும்புவான். “அறிவுடையோனா றரசுஞ் செல்லும்” எனப் புறநானூற்றில் இக் கருத்து வந்துள்ளது. உடைய என்பது உடை என விகாரமாயிற்று.

40. அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்றே.

பதவுரை: அச்சம் உள் அடக்கி – அச்சத்தை உள்ளே வைத்து, அறிவு அகத்து இல்லா – அறிவு மனத்தி லில்லாத, கொச்சை மக்களை – கீழான பிள்ளை களை, பெறுதலின், பெறுவதைக் காட்டிலும், அக்குடி – அக்குடியிலுள்ளவர், எச்சம் அற்று – சந்ததியில்லாமல், ஏமாந்து இருக்கை – இன்புற் றிருப்பது, நன்று – நல்லது.

பொழிப்புரை: அறிவும் ஆண்மையு மில்லாத மக்களைப் பெறு வதைப் பார்க்கினும் மகப்பேறில்லாது களித்திருப்பது நன்று.

கொச்சை – கீழ்மை; வெள்ளாடு என்று பொருள் கொண்டு வெள்ளாடுபோலும் மக்கள் என்று கூறுதலுமாம். அப்பிள்ளை களைப் பெறுதலால் துன்பமே விளையுமாதலின், பெறாது களித்திருப்பது நல்லது என்றார். ஏமாத்தல் – களித்தல். ஏ : அசை.

41. யானைக் கில்லை தானமுந் தருமமும்.

பதவுரை: யானைக்கு – யானைக்குக் (கைந்நீண்டிருந் தாலும்), தானமும் – தானஞ் செய்தலும், தருமமும் – அறஞ்செய்தலும், இல்லை – இல்லையாம்.

பொழிப்புரை: யானைக்குக் கை நீண்டிருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை.

தானதருமஞ் செய்பவர்போற் காணப்படுகிறவர்கள் அவை செய்யாமலுமிருப்பர் என்பதாம். தானம் – தக்கோர்க்குப் பொருளை நீருடன் அளிப்பது. தருமம் – வறியவர்க்கு ஈதல் முதலியன.

42. பூனைக் கில்லை தவமுந் தயையும்.

பதவுரை: பூனைக்கு – பூனைக்கு (அது கண்மூடி ஒடுங்கி யிருந்தாலும்) தவமும் – தவஞ்செய்தலும், தயையும் – (உயிர் களிடத்து) இரக்கம் வைத்தலும், இல்லை – இல்லையாம்.

பொழிப்புரை: பூனை (கண்ணை மூடிக்கொண்டு அமைதியா யிருந்தாலும்) அது தவஞ்செய்தலும் அருளுடைத்தாதலுமில்லை.

தவவொழுக்கமும், சீவகாருணியமும் உடையவர் போற் காணப்படுகிறவர்கள் அவை யில்லாமலுமிருப்பர் என்பதாம். இவ்விரண்டு வாக்கியங்களும் வேடத்தினாலேயே ஒருவரை மதிக்கலாகாது என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன.

43. ஞானிக் கில்லை இன்பமுந் துன்பமும்.

பதவுரை: ஞானிக்கு – ஞானமுடையவனுக்கு, இன்பமும் – சுகமும், துன்பமும் – துக்கமும், இல்லை – இல்லையாம்.

பொழிப்புரை: மெய்ஞ்ஞானிக்குச் சுகமும் இல்லை; துக்கமும் இல்லை.

ஞானி இன்ப துன்பங்களை அடைபவன்போற் காணப் பட்டாலும் அவன் மகிழ்ச்சியாவது துயரமாவது அடையான் என்க.

44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.

பதவுரை: சிதலைக்கு – செல்லுக்கு, செல்வமும் – செல்வமுடைய ரென்பதும், செருக்கும் – செருக்குடைய ரென்பதும், இல்லை – இல்லையாம்.

பொழிப்புரை: செல்வமுடையரென்றும் செருக்குடையரென்றும் பாராமல் கரையான் யாவருடையையும் அரித்துவிடும்.

கீழ்நிலையிலிருப்பவர் பிறருடைய செல்வத்தையோ அதிகாரத்தையோ கண்டு அஞ்சார் என்க. விலை யுயர்ந்த ஆடை களை அரித்துவிடுவதால் செல்லானது செல்வமும் செருக்கு முடையதன்று; அஃது அதன் இயற்கையே என்று பொருள் கூறி, கீழ் மக்கள் தம் அறியாமை யாகிய இயற்கையினாலேயே பிறர்க்கு இடர் விளைப்பர் என்று கருத்துக் கொள்ளுதலும் ஆம்.

45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்.

பதவுரை: முதலைக்கு – முதலைக்கு, நீத்தும் – நீந்தும் நீர் (என்பதும்), நிலையும் – நிலைகொள்ளும் நீர் (என்பதும்), இல்லை- இல்லையாம்.

பொழிப்புரை: நீச்சென்றும் நிலையென்றும் பாராமல் முதலை எவ்வளவு ஆழமாகிய நீரிலும் செல்லும்.

மூர்க்கராயினார் தக்கது தகாதது என்று பாராமல் எவ்வளவு தகாத காரியத்தையும் துணிந்து செய்வர் என்க.

46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை.

பதவுரை: அச்சமும் – (தீய தொழிலுக்கு) அஞ்சுதலும், நாணமும் – (பழிக்கு) நாணுதலும், அறிவு இலோர்க்கு – அறிவில்லாதவருக்கு, இல்லை – இல்லையாம்.

பொழிப்புரை: அஞ்சத்தக்க தீய தொழிலுக்கு அஞ்சுதலும், பழிக்கு நாணுதலும் அறிவில்லா தவரிடத்தில் இல்லை.

47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.

பதவுரை: நாளும் – நட்சத்திரமும், கிழமையும் – வாரமும், நலிந்தோர்க்கு – பிணியால் மெலிந்தவர்க்கு, இல்லை – இல்லையாம்.

பொழிப்புரை: நோயால் வருந்தினவர்க்கு நட்சத்திரமும் கிழமையும் இல்லை.

இன்ன நாளில் இன்னது செய்யவேண்டு மென்னும் நியதி நோயுற்றார்க்குக் கூடாதென்க.

48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை.

பதவுரை: கேளும் – நட்பும், கிளையும் – உறவும், கெட்டோர்க்கு – வறுமையுற்றோர்க்கு, இல்லை – இல்லையாம்.

பொழிப்புரை: வறுமையுற்றோர்க்கு நண்பரும் உறவினரும் இல்லை.

49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.

பதவுரை: உடைமையும் – செல்வமும், வறுமையும் – தரித்திரமும், ஒருவழி – ஓரிடத்திலே, நில்லா – நிலைத்திரா.

பொழிப்புரை: செல்வமும் வறுமையும் ஓரிடத்திலே நிலைத்திராமல் மாறிமாறி வரும். பின்வருஞ் சில தொடர்கள் இவ்வியல்பை விளக்கு வனவாம்.

50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.

பதவுரை: குடை நிழல் இருந்து – வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர் – யானையை நடாத்திச் சென்ற அரசரும், நடைமெலிந்து – நடத்தலால் தளர்ச்சியுற்று, ஓர் ஊர் – மற்றோர் ஊரை, நண்ணினும் நண்ணுவர் – அடைந்தாலும் அடைவர்.

பொழிப்புரை: யானையின் பிடர்மேல் வெண் கொற்றக் குடை நிழல் செய்ய வீற்றிருந்து அதனைச் செலுத்திச் சென்ற அரசரும் வறுமையெய்திக் காலால் நடந்து மற்றோர் ஊருக்குச் செல்லினும் செல்வர்.

“யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை வினையுலப்ப வேறாகி வீழ்வர்”

என நாலடியாரில் இக்கருத்து வந்துள்ளது.

51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.

பதவுரை: சிறப்பும் – (பிறரை யேவிக்கொள்ளும்) முதன்மையும், செல்வமும் – பொருளும், பெருமையும் – மேன்மையும், உடையோர்- உடையவரும், அறக்கூழ்ச்சாலை – அறத்திற்குக் கஞ்சிவார்க்கும் சத்திரத்தை, அடையினும் அடைவர் – அடைந்தாலும் அடைவர்.

பொழிப்புரை: பிறரை யேவிக்கொள்ளும் முதன்மையும் செல்வமும் மேன்மையும் உடையவரும் வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலுமடைவர்.

இவ்விரண்டு தொடர்களிலும் உயர்வு சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது.

52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்.

பதவுரை: அறத்து இடு பிச்சை – அறத்திற்கு இடுகின்ற பிச்சையை, கூவி – (கடைத் தலையில் நின்று) கூவியழைத்து, இரப்போர் – இரக்கும் வறுமை யுடையோரும், அரசோடு இருந்து – அரச அங்கங்களோடு கூடியிருந்து, அரசு ஆளினும் ஆளுவர் – அரசாட்சி செய்தாலும் செய்வர்.

பொழிப்புரை: வீடுகள்தோறும் கடைத்தலையில் நின்று கூவியழைத்துப் பிச்சை ஏற்போரும் செல்வராகி அரசு அங்கங் களுடன் கூடி அரசாண்டாலும் ஆளுவர்.

இழிவு சிறப்பும்மை தொக்கது. பின் சிறப்பும்மை தொக்கு வருவனவற்றையும் கண்டு கொள்க.

53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினும் அழிவர்.

பதவுரை: குன்று அத்தனை – மலையவ்வளவு, இரு நிதியை – பெரிய செல்வத்தை, படைத்தோர் – படைத் தவரும், அன்றைப் பகலே – (படைத்த) அன்றைக்கே, அழியினும் அழிவர் – வறுமை யுற்றாலும் உறுவர்.

பொழிப்புரை: மலையளவு பெரும்பொருள் பெற்றவரும் பெற்ற அப்பொழுதே அதனை யிழப்பினும் இழப்பர்.

54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும்.

பதவுரை: எழுநிலை – ஏழு நிலைகளுடைய, மாடம் – மாளிகையும், கால் சாய்ந்து – அடியுடன் சாய்ந்து, உக்கு – சிதறுண்டு, கழுதை மேய் – கழுதைகள் மேய்கின்ற, பாழ் ஆயினும் ஆகும் – பாழ்நில மானாலும் ஆகும்.

பொழிப்புரை: ஏழடுக்கு வீடுகளும் சரிந்து வீழ்ந்து துகளாகிக் கழுதைகள் மேயும் பாழ்நில மானாலும் ஆகும்.

55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.

பதவுரை: பெற்றமும் – எருதுகளும், கழுதையும் – கழுதைகளும், மேய்ந்த அப் பாழ் – மேய்ந்த அப் பாழ் நிலமானது, பொன் தொடி- பொன்னாலாகிய வளையலை (அணிந்த), மகளிரும் – மாதர் களையும், மைந்தரும் – ஆடவர்களையும், கூடி – பொருந்தி, நெல் பொலி – நெற் குவியல்களையுடைய, நெடுநகர் – பெரிய நகரம், ஆயினும் ஆகும் – ஆனாலும் ஆகும்.

பொழிப்புரை: எருதும் கழுதையும் மேய்ந்த அப் பாழ் நிலம் பொன் வளையணிந்த மாதரையும் மைந்தரையும் உடையதாய் நெற்பொலி மிக்க பெருநகரமாயினும் ஆகும்.

மேல், பாழாயினுமாகும் என்றதைச் சுட்டி ‘அப்பாழ்’ என்றார். மைந்தர் – புதல்வர் என்னலுமாம். கூட என்பது கூடியெனத் திரிந்த தாகவும் கொள்ளலாம்.

56. மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி
யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி
யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.

பதவுரை: மண அணி அணிந்த – மணக்கோலம் பூண்ட, மகளிர் – பெண்கள், ஆங்கே – அப்பொழுதே (அவ்விடத்திலேயே), பிண அணி அணிந்து – (கணவர் இறத்தலால்) பிணத்திற்குரிய கோலத்தைப் பூண்டு, தம் கொழுநரைத் தழீஇ – தம் கணவருடம்பைத் தழுவி, உடுத்த ஆடை – முன்பு உடுத்த கூறையே, கோடி ஆக – கோடிக் கூறை யாக, முடித்த கூந்தல் – பின்னிய கூந்தலை, விரிப்பினும் விரிப்பர் – விரித்தாலும் விரிப்பர்.

பொழிப்புரை: மணக்கோலம் பூண்ட மகளிர் அப்பொழுது அவ்விடத்தே கணவர் இறத்தலால் பிணத்திற்குரிய கோலம் பூண்டு, அவருடம்பைத் தழுவி, முன்பு உடுத்த கூறையே கோடியாகப் பூவுடன் முடித்த கூந்தலை விரித்து அழுதாலும் அழுவர்.

கோடி – புது உடை; இறந்த உடம்பிற்கு இடும் உடை; மங்கல நாண் இழந்த மகளிர் உடுக்கும் உடை “மன்றங்கறங்க மணப் பறையாயின” என்னும் நாலடியார்ச் செய்யுள் இந்நிலையாமையை உணர்த்துவது.

57. இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே.

பதவுரை: இல்லோர் – பொருளில்லாதவர், இரப்பதும் – யாசிப்பதும், இயல்பே இயல்பே – இயற்கையே இயற்கையே.

பொழிப்புரை: வறியவர் இரப்பது இயற்கையே யன்றிப் புதுமை யன்று. இரப்பதும் என்பதிலுள்ள உம்மையும் பின் ஈவதும் என்பதிலுள்ள உம்மையும் ஒன்றையொன்று தழுவியுள்ளன. அடுக்கு வற்புறுத்தலைக் குறித்தது.

58. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே.

பதவுரை: இரந்தோர்க்கு – யாசித்தவர்க்கு, ஈவதும் – கொடுப்பதும், உடையோர் கடனே – பொரு ளுடையவர் கடமையே.

பொழிப்புரை: வறியராய் இரப்பவர்க்கு ஈவது பொருளுடையவர் கடமையே.

இவ்விரு வாக்கியத்தும் ஏ : தேற்றம்.

59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லா மில்லை யில்லில் லோர்க்கே.

பதவுரை: நல்ல ஞாலமும் – நல்ல பூவுலகையும், வானமும் வானுலகையும், பெறினும் – பெற்றாலும், எல்லாம் – அவை யாவும், இல் – (மாண்புள்ள) மனைவியரை, இல்லோர்க்கு – இல்லாதவர்க்கு, இல்லை – இல்லையாம்.

பொழிப்புரை: பூவுலகத்தையும் தேவருலகத்தையும் பெற்றாலும், மாண்புள்ள மனைவியில்லாதவர்க்கு அவற்றால் யாதும் பயனில்லை.

ஏ : அசை.

60. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே.

பதவுரை: தறுகண் – அஞ்சாமையையுடைய, யானை – யானையானது, தான் பெரிது ஆயினும் – தான் பெரிய உருவத்தை உடையதாயினும், சிறுகண் – சிறிய கணுக்களையுடைய, மூங்கில் கோற்கு – மூங்கில் கோலுக்கு, அஞ்சும் – அஞ்சாநிற்கும்.

பொழிப்புரை: அஞ்சாமையுடைய யானை உருவத்தாற் பெரிய தாயினும் சிறிய கணுக்களையுடைய மூங்கிற்கோலுக்கு அஞ்சும்.

வலிமையும் பெருமையும் உடையவரும் தம்மை யாள்வோர் சிறியர் (இளைஞர்) ஆயினும் அவருக்கு அஞ்சி நடப்பர் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. கோற்கும் என்னும் உம்மை தொக்கது. ம் : விரித்தல் விகாரம். ஏ : அசை.

61. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே.

பதவுரை: குன்று உடை – மலைகளையுடைய, நெடுங் காடு ஊடே- நீண்ட காட்டினுள்ளே, வாழினும் – வாழ்ந்தாலும், புல்தலை – சிறிய தலையுடைய, புல்வாய் – மானானது, புலிக்கு அஞ்சும் – புலிக்கு அஞ்சா நிற்கும்.

பொழிப்புரை: மானானது மலைகளையுடைய பெரிய காட்டிற்குள் வாழ்ந்தாலும் புலிக்கு அஞ்சும்.

62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே.

பதவுரை: ஆரை ஆம் – ஆரைப்பூண்டு படர்ந்த, பள்ளத்து ஊடே – ஆழத்தினுள்ளே, வாழினும் – வாழ்ந்தாலும், தேரை – தேரையானது, பாம்பிற்கு – பாம்பினுக்கு, மிக அஞ்சும் – மிகவும் அஞ்சாநிற்கும்.

பொழிப்புரை: தேரையானது ஆரைப் பூண்டு நிறைந்த பள்ளத்தில் வாழ்ந்தாலும் பாம்பிற்கு மிக அஞ்சும்.

இவ்விரண்டு தொடர்களும், வீரரல்லாதவர் எவ்வகை அரணுக்குள் இருப்பினும் வீரருக்கு அஞ்சுவர் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. ஆரை – நீரிற் படர்வதொரு கீரைப் பூண்டு.

63. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே.

பதவுரை: கொடுங்கோல் மன்னர் – நீதியில்லாத அரசர், வாழும் நாட்டில் – வாழுகின்ற நாட்டைப் பார்க்கிலும், கடும்புலி வாழும் – கொடிய புலி வாழுகின்ற, காடுநன்று – காடு நல்லது.

பொழிப்புரை: கொடுங்கோலரசர் ஆட்சிபுரியும் நாட்டி லிருப்பதைப் பார்க்கிலும், கொடிய புலி வாழும் காட்டிலிருப்பது நல்லது.

அவ்வரசர் நாட்டிலே குடிகளுக்கு அச்சமும் கவலையும் அளவின்றியிருக்கு மென்க.

64. சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேயம் நன்றே.

பதவுரை: சான்றோர் இல்லா – பெரியோர் இல்லா, தொல்பதி – பழைமையாகிய நகரத்தில், இருத்தலின் – குடியிருப்பதைப் பார்க்கிலும், தேன் தேர் – தேனை ஆராய்ந்து திரியும், குறவர் – குறவருடைய, தேயம்- மலைநாட்டில் இருப்பது, நன்று – நல்லது.

பொழிப்புரை: அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் இல்லாத பழைமையான நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும் குறவர் வசிக்கும் மலைப்பக்கத்தில் இருப்பது நல்லது.

அப் பதியிலிருப்போர்க்கு இம்மை மறுமை யின்பங்கள் இல்லையா மென்க. ஏ: அசை. இரண்டிலும் ஏ தேற்றமுமாம்.

65. காலையு மாலையும் நான்மறை யோதா அந்தண ரென்போ ரனைவரும் பதரே.

பதவுரை: காலையும் மாலையும் – காலைப் பொழுதிலும் மாலைப் பொழுதிலும், நான்மறை – நான்கு வேதங்களையும், ஓதா – ஓதாத, அந்தணர் என்போர் அனைவரும் – மறையோர் என்று சொல்லப் படுவோர் எல்லாரும், பதரே – பதரேயாவர்.

பொழிப்புரை: காலையிலும் மாலையிலும் வேதம் ஓதாத அந்தண ரென்று சொல்லப்படுவோர் அனைவரும் பதர்போலப் பயனில் லாதவரே யாவர்.

நான்மறை : இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன : வேறு வகையாகவும் கூறுவர். பதர்போல ஒதுக்கத் தக்கவரென்க. ஏ : தேற்றம்; பின் வருவனவும் அது.

66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே.

பதவுரை: குடி அலைத்து – குடிகளை வருத்தி, இரந்து – பொருள் வாங்கி, வெங்கோலொடு நின்ற – கொடுங்கோலொடு பொருந்தி நின்ற, முடி உடை இறைவன் ஆம் – மகுடத்தையுடைய அரசனாகிய, மூர்க்கனும் – கொடியவனும், பதரே – பதரேயாவன்.

பொழிப்புரை: கொடுங்கோலனாய்க் குடிகளை வருத்திப் பொருள் வாங்கும் தீய அரசனும் பதர்போல்பவனே யாவன். அரசர் களுக்குள் அவன் பதர் என்றுஞ் சொல்லலாம்.

67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து அதன்பய னுண்ணா வணிகரும் பதரே.

பதவுரை: முதல் உள – முதலாகவுள்ள, பண்டம் கொண்டு – பொருளை வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து – வியாபாரஞ் செய்து, அதன் பயன் – அதனால் வரும் இலாபத்தை, உண்ணா – அனுபவியாத, வணிகரும் – வைசியரும், பதரே – பதரேயாவர்.

பொழிப்புரை: முதற்பொருளை வைத்துக்கொண்டு வாணிகஞ் செய்து அதனால் வரும் இலாபத்தை அனுபவியாத வணிகரும் பதரே யாவர்.

முதலையிழத்தல் கூடாதென்க.

68. வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே.

பதவுரை: வித்தும் – விதையும், ஏரும் – (உழுதற்குரிய) ஏரும், உளவாய் இருப்ப – உள்ளனவாகி யிருக்கவும், அங்கு – அவ்விடத்தில், எய்த்து இருக்கும் – இளைத் திருக்கும், ஏழையும் – அறிவில்லாதவனும், பதரே – பதரேயாவன்.

பொழிப்புரை: விதையும் ஏரும் இருக்கவும் உழுது பயிரிடாமற் சோம்பியிருக்கும் அறிவிலியாகிய வேளாளனும் பதரே யாவன்.

அங்கு : அசையுமாம்.

69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே.

பதவுரை: தன் மனையாளை – தன் மனைவியை, தாய் மனைக்கு – (அவளின்) தாய் வீட்டிற்கு, அகற்றி – போக்கி, பின்பு – பின்னே, அவள் பாரா – அவளை நோக்காதிருக்கிற, பேதையும் – அறிவில் லாதவனும், பதரே – பதராவான்.

பொழிப்புரை: தன் மனைவியைப் பிறந்தகத்திற்குப் போக்கி விட்டுப் பின்பு அவளை யேற்றுக்கொள்ளாமலேயிருக்கிற அறிவில்லாதவனும் ஆடவருள் பதராவன்.

70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப் பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே.

பதவுரை: தன் மனையாளை – தன் மனைவியை, தனி – தனியே மனை இருத்தி – வீட்டில் இருக்கச் செய்து, பிறர் மனைக்கு – பிறர் வீட்டுக்கு, ஏகும் – செல்லுகின்ற, பேதையும் – அறிவில்லாதவனும், பதரே – பதரேயாவன்.

பொழிப்புரை: தன் மனைவியை வீட்டில் தனியே, இருக்கச் செய்து, பிறர் மனைவியை விரும்பி அயல் வீட்டுக்குச் செல்லும் அறிவில்லாதவனும் பதரேயாவன்.

71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.

பதவுரை: தன் ஆயுதமும் – தனது தொழிற்குரிய கருவியையும், தன் கையில் பொருளும் – தனது கையிலுள்ள பொருளையும், பிறன் கையில் கொடுக்கும் – அயலான் கையில் கொடுத்திருக்கும், பேதையும் அறிவிலானும், பதரே – பதரேயாவன்.

பொழிப்புரை: தன் தொழிற் கருவியையும் தன் கைப் பொருளையும் பிறர் கையில் கொடுத்துவிட்டுச் சோம்பியிருக்கின்ற அறிவில்லாதவனும் பதரே யாவன்.

தன் ஆயுதத்தையும் பொருளையுங் கொண்டு தொழில் செய்ய வேண்டுமென்க. பிறர் என்பதற்கு ஒரு சம்பந்தமு மில்லாதவர் என்றும் கூறலாம்.

72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பதவுரை: வாய்ப் பறை ஆகவும் – வாயே பறை யாகவும், நாகடிப்பு ஆகவும் – நாவே குறுந்தடி யாகவும் (கொண்டு), சாற்றுவது ஒன்றை – (அறிவுடையோர்) சொல்வது ஒன்றை, போற்றி – (மனம் புறம் போகாமல்) பாதுகாத்து, கேண்மின் – கேளுங்கள்.

பொழிப்புரை: வாயே பறையாகவும் நாவே குறுந்தடியாகவுங் கொண்டு அறிவுடையோர், சாற்றுகின்ற உறுதிமொழியைக் குறிக்கொண்டு கேளுங்கள்.

கடிப்பு – பறையடிக்கும் கோல். சான்றோர்கள் பறைசாற்றுவது போல உலகத்தார்க்கு உறுதிப் பொருளை அறிவுறுத்துவரென்க.

73. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே.

பதவுரை: பொய் உடை ஒருவன் – பொய்ம்மையுடைய ஒருவன், சொல்வன்மையினால் – வாக்கு வன்மையால், மெய்போலும் மெய்போலும் – (அவன் கூறும் பொய்) மெய்யே போலும் மெய்யே போலும்.

பொழிப்புரை: பொய்ம்மையுடைய ஒருவன் கூறும் பொய்ம் மொழி அவன் பேச்சு வன்மையால் உண்மைபோலவே தோன்றக் கூடும்.

சொற்சாதுரியத்தில் மயங்கிப் பிறர் கூறும் பொய்யை மெய் யென்று கொள்ளலாகா தென்க. இருமுறை கூறியது வற்புறுத்து தற்கு. ம் : விரித்தல், மேல் வருவதற்கும் இங்ஙனம் உரைத்துக் கொள்க.

74. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே.

பதவுரை: மெய் உடை ஒருவன் – மெய்ம்மையுடைய ஒருவன், சொலமாட்டாமையால் – (திறம்படச்) சொல்லமாட்டாமையால், பொய்போலும் பொய் போலும் – (அவன் கூறும் மெய்) பொய்யே போலும், பொய்யே போலும்.

பொழிப்புரை: உண்மையுடைய ஒருவன் கூறும் மெய்ம்மொழி அவனது சொல்வன்மை யின்மையால் பொய்போலத் தோற்றக் கூடும்.

75. இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே இருவரும் பொருந்த வுரையா ராயின் மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிநின் றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாளா கும்மே.

பதவுரை: இருவர் தம் சொல்லையும் – (வாதி எதிரி யென்னும்) இருவருடைய சொற்களையும்; எழுதரம் கேட்டு – ஏழு முறை கேட்டு (உண்மை யுணர்ந்து), மனுமுறை நெறியின் – மனு நீதி வழியால், இருவரும் பொருந்த – இருவரும் ஒத்துக்கொள்ள, உரையார் ஆயின் – (முடிவு) சொல்லாரானால், வழக்கு இழந்தவர் தாம் – (நீதியின்றி) வழக்கினை இழந்தவர், மனம் – மனமானது, உற மறுகி நின்று – மிகவும் கலங்கி நின்று, அழுத கண் நீர் – அழுத கண்ணீரானது, முறை உற – முறையாக, தேவர் மூவர் – மூன்று தேவர்களும், காக்கினும் – காத்தாலும், வழி வழி – (அவர்) சந்ததி முழுதையும், ஈர்வது – அறுப்பதாகிய, ஓர்வாள் ஆகும் – ஒரு வாட்படையாகும்.

பொழிப்புரை: இரு திறத்தினர் சொல்லையும் ஏழு முறைகேட்டு ஆராய்ந்து உண்மையுணர்ந்து நீதி வழுவாது இருவரும் மனம் பொருந்தும்படி முடிவு சொல்லாராயின், அநீதியாக வழக்கிலே தோல்வி யுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது அயன்அரி அரன் என்னும் மும்மூர்த்தியும் முறையாகப் பாதுகாத் தாலும் முடிவு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும்.

இது நீதி செலுத்தற்குரிய அவையினரும் நீதிபதியும் அரசனும் என்பவர்களை நோக்கிக் கூறியது. சொல்வன்மையாலும் சொல மாட்டாமையாலும் பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் தோன்றக்கூடுமாகலின், ‘எழுதரங் கேட்டு’ என்றார். ஏனைத் தேவரும் மூவரும் என்று கூறினும் பொருந்தும், முற்றும்மை தொக்கது. தம், தாம் என்பன சாரியை; ம்: விரித்தல்.

“அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை” என்னுந் திருக்குறளில் இதன் கருத்து அமைந் துள்ளது.

76. பழியா வருவது மொழியா தொழிவது.

பதவுரை: பழியா வருவது – நிந்தையாக வருங் காரியம், மொழியாது ஒழிவது – பேசாது விடத்தகுவது.

பொழிப்புரை: பின் பழியுண்டாகுஞ் செய்தியைப் பேசாது விடவேண்டும்.

பழியாக என்பது ஈறுகெட்டது.

77. சுழியா வருபுன லிழியா தொழிவது.

பதவுரை: சுழியா – சுழித்து, வரு புனல் – வருகின்ற வெள்ளத்திலே, இழியாது ஒழிவது – இறங்காது தவிர்க.

பொழிப்புரை: சுழித்து வருகின்ற நீர்ப் பெருக்கிலே இறங்காது ஒழிக.

உயிர்க்கிறுதி விளைக்கும் காரியத்திற் புகலாகா தென்க. சுழியா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஒழிவது : வியங்கோள்.

78. துணையோ டல்லது நெடுவழி போகேல்.

பதவுரை: துணையோடு அல்லது – துணையினோ டல்லாமல், நெடுவழி- தூர வழியில், போகேல் – செல்லாதே.

பொழிப்புரை: தூரமான இடத்திற்குத் துணை யின்றிப் போகாதே.

79. புணைமீ தல்லது நெடும்புன லேகேல்.

பதவுரை: புணைமீது அல்லது – தெப்பத்தின்மேல் அல்லாமல், நெடும் புனல் – பெரிய வெள்ளத்தில், ஏகேல் – செல்லாதே.

பொழிப்புரை: தெப்பமின்றிப் பருவெள்ளத்திற் செல்லாதே. பிறவியைக் கடக்கலுறுவார்க்குத் தக்க துணையும் பற்றுக்கோடும் வேண்டுமென்க.

80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே.

பதவுரை: எழில் ஆர் முலை – அழகு பொருந்திய தனங்களையும், வரி விழியார் – நீண்ட கண்களையும் உடைய மாதர்களின், தந்திரம்- உபாயங்களுள், இயலாதன – பொருந்தாதனவற்றை, கொடு – கைக்கொண்டு, முயல்வு ஆகாது – முயலுதல் கூடாது.

பொழிப்புரை: மாதர்மேல் வைத்த காதலால் அவர் கூறும் உபாயங்களிற் பொருந்தாதனவற்றை மேற்கொண்டு முயலுதல் கூடாது.

வரி – இரேகையுமாம். தந்திறம் என்ற பாட மிருப்பின் அவர் விடயத்தில் என்று பொருள் கொள்க.

81. வழியே யேகுக வழியே மீளுக.

பதவுரை: வழியே ஏகுக – (செவ்விய) வழியிலே செல்க, வழியே மீளுக – (செவ்விய) வழியிலே திரும்புக.

பொழிப்புரை: நேர்மையான வழியிலே செல்க, நேர்மையான வழியிலே திரும்புக.

யோகப் பயிற்சி செய்வோர் சுழிமுனையாகிய வழியிலே சென்று திரும்பிப் பயிலுக என்றும், பிறவாறும் இதற்குக் கருத்துரைத்தலும் ஆம்.

82. இவைகா ணுலகிற் கியலா மாறே.

பதவுரை: இவை – கூறப்பட்ட இவை, உலகிற்கு உலகிலுள் ளோர்க்கு, இயல் ஆம் – நடத்தற்குரிய, ஆறு நன்னெறிகளாம்.

பொழிப்புரை: இந்நூலிற் கூறிய இவையெல்லாம் உலகத்தார் நடத்தற்குரிய வழிகளாம்.

இந்நூலிற் சொல்லிவந்த நீதிகளெல்லாம் ‘இவை’ எனத் தொகுத்துச் சுட்டப்பட்டன. காண் : முன்னிலையசை.

வாழ்த்து

வாழிய நலனே வாழிய நலனே.

பதவுரை: நலன் – எல்லா நன்மைகளும், வாழிய – வாழ்க, நலன் – எல்லா நன்மைகளும், வாழிய – வாழ்க.

பொழிப்புரை: எல்லா நலங்களும் வாழ வேண்டும்; எல்லா நலங்களும் வாழ வேண்டும்.

நலங்களாவன : மழை, பயிர், பசு, அறம் முதலியன. நன்மை வாழவேண்டு மென்றமையால் தீமை ஒழிய வேண்டுமென்பது மாயிற்று. மகிழ்ச்சியால் இருமுறை கூறினார்.

ஏ : அசை.

நறுந்தொகை மூலமும் உரையும் முற்றிற்று.