நறுந்தொகை
கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன்
சரணஅற் புதமலர் தலைக்கணி வோமே.
நூற் பயன்
வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி
குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை
தன்னாற் குற்றங் களைவோர் குறைவிலா தவரே.
நூல்
1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும்.
2. கல்விக் கழகு கசடற மொழிதல்.
3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
4. வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும்.
5. மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை.
6. 2 வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல்.
7. 3 உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல்.
8. மந்திரிக் கழகுவரும்பொரு ளுரைத்தல்.
9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை.
10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.
11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல்.
12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்.
13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.
14. அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல்.
15. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை.
16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே.
17. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க்
கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும்
அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.
19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.
20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர்.
21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்.
22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.
23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது.
24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.
25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது.
26. புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது.
27. கலக்கினும் தண்கடல் சேறா காது.
28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய்.
29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே.
30. பெருமையுஞ் சிறுமையுந் தான்றர வருமே.
31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே.
32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே.
33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.
35. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினுங் கற்கை நன்றே.
36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே.
37. நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே.
38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்.
39. அறிவுடை யொருவனை யரசனும் விரும்பும்.
40. அச்சமுள் ளடக்கி யறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப்
பெறுதலி னக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்றே.
41. யானைக் கில்லை தானமுந் தருமமும்.
42. பூனைக் கில்லை தவமுந் தயையும்.
43. ஞானிக் கில்லை இன்பமுந் துன்பமும்.
44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும்.
45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்.
46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை.
47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை.
48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை.
49. உடைமையும் வறுமையு மொருவழி நில்லா.
50. குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.
51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர் அறக்கூழ்ச் சாலை யடையினு மடைவர்.
52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினு மாளுவர்.
53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினு மழிவர்.
54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும்.
55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.
56. மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி
யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி
யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
57. இல்லோ ரிரப்பதும் இயல்பே யியல்பே.
58. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே.
59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லா மில்லை இல்லில் லோர்க்கே.
60. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே.
61. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே.
62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே.
63. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே.
64. சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேயம் நன்றே.
65. காலையு மாலையும் நான்மறை யோதா அந்தண ரென்போர் அனைவரும் பதரே.
66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே.
67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து அதன்பய னுண்ணா வணிகரும் பதரே.
68. வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே.
69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே.
70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப் பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே.
71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.
72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.
73. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே.
74. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே.
75. இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே
இருவரும் பொருந்த வுரையா ராயின் மனுமுறை
நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிநின்
றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி யீர்வதோர் வாளா கும்மே.
76. பழியா வருவது மொழியா தொழிவது.
77. சுழியா வருபுனல் இழியா தொழிவது.
78. துணையோ டல்லது நெடுவழி போகேல்.
79. புணைமீ தல்லது நெடும்புன லேகேல்.
80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே.
81. வழியே யேகுக வழியே மீளுக.
82. இவைகா ணுலகிற் கியலா மாறே.
வாழ்த்து
வாழிய நலனே வாழிய நலனே.