மூதுரை மூலமும் உரையும்
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
பதவுரை: துப்பு ஆர்-பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி-திருமேனியையும், தும்பிக்கையான்-துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம்-திருவடிகளை, பூக்கொண்டு-(அருச்சிக்க) மலர் எடுத்துக் கொண்டு, தப்பாமல்-நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு-அடைந்து பூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம்-சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம்-நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள்-பெருமை பொருந்திய செந்தாமரைப் பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம்-அருட் பார்வை உண்டாகும்; மேனி-அவர் உடம்பு, நுடங்காது-(பிணிகளால்) வாட்ட முறாது.
விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும்.
நூல்
பயன் கருதாது அறஞ்செய்க
1. நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி என்று
தருங்கொ லெனவேண்டா-நின்று தளரா
வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே
தான்தருத லால்.
பதவுரை: நின்று-நிலைபெற்று, தளரா-சோராமல், வளர்-வளர்கின்ற, தெங்கு-தென்னை யானது, தாள் உண்ட நீரை-தன் அடியால் உண்ட தண்ணீரை, தலையாலே-தன் முடியாலே, தான் தருதலால்-(சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால், ஒருவற்கு – (நற்குணமுடைய) ஒருவனுக்கு, நன்றி செய்தக்கால்-உதவி செய்தால், அந்நன்றி-அவ்வுதவியை, என்று தருங்கொல்-அவன் எப் பொழுது செய்வானோ, என வேண்டா-என்று ஐயுற வேண்டுவதில்லை.
நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம். (1)
நல்லவர்க்குச் செய்த உதவி
2. நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம் கல்மே லெழுத்துப்போற் காணுமே-அல்லாத ஈரமிலா
நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மே
லெழுத்திற்கு நேர்.
பதவுரை: நல்லார் ஒருவர்க்கு-நற்குணமுடைய ஒருவர்க்கு, செய்த உபகாரம்-செய்த உதவியானது, கல் மேல் எழுத்துப்போல்-கருங்கல்லின்மேல் வெட்டப்பட்ட எழுத்தைப்போல, காணும்-அழியாது விளங்கும்; அல்லாத-நல்லவரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு-அன்பில்லாத மன முடையார்க்கு, ஈந்த உபகாரம்-செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு-நீரின்மேல் எழுதப் பட்ட எழுத்திற்கு, நேர்-ஒப்பாக(அழிந்துவிடும்).
நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலை பெற்று விளங்கும், தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும் எ-ம். (2)
இளமையில் வறுமை
3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவி லினியவும்-இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.
பதவுரை: இளமை-(இன்பத்தைத் தரும்) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால்-வறுமை வந்து அடைந்தால், இன்னா-அது துன்பத்தைத் தருவதாகும். இன்னா அளவில்-துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில், இனியவும் – இனியனவாகிய பொருள் களும், இன்னாத – துன்பத்தைத் தருவனவாம்; (அவை) நாள் அல்லா நாள்-(சூடுதற்குரிய) காலமல்லாத காலத்தில், பூத்த நல்மலரும்-மலர்ந்த நல்ல மலரையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும்-(அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத மங்கையின் அழகையும், போலும்-ஒக்கும்.
ஏ : அசை. அழகும் என்பதில் உம்மை தொக்கது.
வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன எ-ம். (3)
மேன்மக்கள் இயல்பு
4. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும்
வெண்மை தரும்.
பதவுரை: பால்-பாலினை, அட்டாலும்-காய்ச்சினாலும், சுவையிற் குன்றாது-அஃது இனிய சுவையிற் குறையாது; சங்கு-சங்கினை, சுட்டாலும்-சுட்டு நீறாக்கினாலும், வெண்மை தரும்-அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல), மேன் மக்கள்-மேலோர், கெட்டாலும்-வறுமை யுற்றாலும், மேன் மக்களே-மேலோராகவே விளங்குவர்; நண்பு அல்லார்-நட்பின் குணமில்லாத கீழோர், அளவளாய் நட்டாலும்-கலந்து நட்புச் செய்தாலும், நண்பு அல்லர்-நண்பராகார்.
பால் சங்கு என்னும் இரண்டும் மேன் மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவரென்பது உவமைகளாற் புலனாகின்றது.
ஏ : தேற்றப் பொருட்டு.
மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர் கலந்து பழகினாலும் நண்பராகார் எ-ம். (4)
காலமறிந்து நடத்தல்
5. அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி எடுத்த
கருமங்க ளாகா-தொடுத்த உருவத்தால்
நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தா
லன்றிப் பழா.
பதவுரை: தொடுத்த-கிளைத்த, உருவத்தால் நீண்ட – வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள் எல்லாம்-உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி-பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா-பழுக்கமாட்டாவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும்-அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், ஆகுநாள் அன்றி-முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த கருமங்கள்-மேற்கொண்ட காரியங்கள்; ஆகா-முடியாவாம்.
எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான் முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும் எ-ம். (5)
மானம் இழந்து வாழாமை
6. உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ-கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.
பதவுரை: கல் தூண்-கருங்கற் கம்பமானது, பெரும்பாரம் தாங்கின்-பெரிய பாரத்தைச் சுமந்தால், பிளந்து இறுவது அல்லால்-பிளந்து முரிவதல்லாமல், தான் தளர்ந்து வளையுமோ-தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது; அதுபோல), உற்ற இடத்தில்-மானக்கேடு உண்டானவிடத்தில், உயிர் வழங்கும் தன்மையோர்-தம் உயிரைவிடும் குணமுடையோர், பற்றலரை-பகைவரை, கண்டால் – பார்த்தால், பணிவரோ-வணங்குவரோ? (வணங்கார்).
ஓ இரண்டும் எதிர்மறை.
மானமுடையவர் ஆபத்து வந்தபோது உயிரை விடினும் விடுவரேயன்றி மானத்தை விடார் எ-ம். (6)
அறிவு செல்வம் குணம்
7. நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.
பதவுரை: நீர் ஆம்பல்-நீரிலுள்ள அல்லியானது, நீர் அளவே ஆகும்-நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும். (அதுபோல) நுண் அறிவு-கூரிய அறிவானது, தான் கற்ற-தான் படித்த, நூல் அளவே ஆகும்-நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம்-தான் அடைந்த செல்வ மானது, மேலை-முற்பிறப்பிற் செய்த, தவத்து அளவே ஆகும்-தவத்தின் அளவாகவே இருக்கும் குணம்-குணமானது, குலத்து அளவே ஆகும் – (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும்.
ஆம் மூன்றும் அசைநிலை.
ஒருவருக்கு அறிவு நூலினளவாகவும், செல்வம் தவத்தினள வாகவும், குணம் குலத்தினள வாகவும் இருக்கும் எ-ம். (7)
நல்லார் தொடர்பின் நலம்
8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ டிணங்கி யிருப்பதுவும் நன்று.
பதவுரை: நல்லாரை-நற்குணமுடையோரை, காண்பதுவும்-பார்ப்பதும், நன்றே-நல்லதே; நல்லார்-நல்லவருடைய, நலம் மிக்க-பயன் நிறைந்த, சொல்-சொல்லை, கேட்பதுவும்-கேட்டலும், நன்றே-நல்லதே; நல்லார்-நல்லவருடைய, குணங்கள்-நற்குணங் களை, உரைப்பதுவும்-பேசுதலும், நன்றே-நல்லதே, அவரோடு-அந் நல்லவருடன், இணங்கி இருப்பதுவும்-கூடியிருத்தலும், நன்று-நல்லதே.
ஏ. மூன்றும் தேற்றம்.
நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும் எ-ம். (8)
தீயார் தொடர்பின் தீமை
9. தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார் குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ டிணங்கி
யிருப்பதுவுந் தீது.
பதவுரை: தீயாரை-தீக்குணம் உடையவரை, காண்பதுவும் – பார்ப்பதும், தீதே-தீயதே; தீயார்-தீயவருடைய, திருஅற்ற-பயன் இல்லாத, சொல்-சொல்லை, கேட்பதுவும்-கேட்டலும், தீதே-தீயதே; தீயார்-தீயவருடைய, குணங்கள் – தீய குணங்களை, உரைப்பதுவும்-பேசுதலும், தீதே-தீயதே, அவரோடு-அத் தீயவருடன், இணங்கி இருப்பதுவும்-கூடியிருத்தலும், தீதே-தீயதே.
ஏ மூன்றும் தேற்றம்.
தீயாரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமும் உண்டாகும் எ-ம். (9)
நல்லாரால் எல்லார்க்கும் நலம்
10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
பதவுரை: நெல்லுக்கு-நெற்பயிருக்கு, இறைத்த நீர் இறைக்கப் பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழி ஓடி – கால்வாய் வழியாகச் சென்று, ஆங்கு-அவ்விடத்திலுள்ள, புல்லுக்கும் பொசியும்-புல்லு களுக்கும் கசிந்தூறும்; (அதுபோல), தொல் உலகில் – பழைமையாகிய இவ்வுலகத்தில், நல்லார் ஒருவர் உளரேல்-நல்லவர் ஒருவர் இருப்பா ராயின், அவர் பொருட்டு-அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் – அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும்.
ஏ, ஆம் இரண்டும் அசை.
நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர் எ-ம். (10)
துணை வலிமை வேண்டும்
11. பண்டு முளைப்ப தரிசியே யானாலும் விண்டுமி
போனால் முளையாதாம்-கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல்.
பதவுரை: பண்டு முளைப்பது-(உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பது, அரிசியே ஆனாலும்-அரிசியே யாயினும், உமி விண்டு போனால்-உமி நீங்கிப்போனால், முளையாது-(அவ்வரிசி) முளை யாது; (அதுபோல), கொண்ட-பெற்ற, பேர் ஆற்றல் உடையார்க்கும், பெரிய வல்லமையை உடைய வர்க்கும், அளவு இன்றி-துணைவலி யில்லாமல், ஏற்ற கருமம்-எடுத்துக்கொண்ட செயலை, செயல் ஆகாது-செய்து முடித்தல் இயலாது.
மிக்க வல்லமை யுடையவர்க்கும் ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணைவலி வேண்டும் எ-ம். (11)
உருவமும் குணமும்
12. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்.
பதவுரை: தாழை மடல் பெரிது-தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது, மகிழ் கந்தம் இனிது-மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே (தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது, கடல் பெரிது-சமுத்திரம் பெரிதாயிருக்கிறது, மண் நீரும் ஆகாது-ஆயினும் அதிலுள்ள நீர் (உடம்பழுக்கைக்) கழுவுவதற்குத் தக்க நீருமாகாது; அதன் அருகு சிற்றூறல்-அதன் பக்கத்தே சிறிய மணற்குழியிற் சுரக்கும் ஊற்றுநீர், உண் நீரும் ஆகும்-குடிக்கத்தக்க நீருமாகும்; (ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-(ஒருவரை) உருவத்தினாலே சிறியவரென்று (மதியாமல்) இருக்க வேண்டா.
மண்ணுதல்-கழுவுதல், ஏ : அசை.
உருவத்தாற் பெரியவர் குணத்தாற் சிறியவராதலும் உருவத்தாற் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு; எ-ம். (12)
அறிவற்றவனின் இழிவு
13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.
பதவுரை: கவை ஆகி-கிளைகளை உடையனவாகியும், கொம்பு ஆகி-கொம்புகளை உடையனவாகியும், காட்டு அகத்து நிற்கும்-காட்டினுள்ளே நிற்கின்ற, அவை-அந்த மரங்கள், நல்ல மரங்கள் அல்ல-நல்ல மரங்கள் ஆகா; சவை நடுவே-கற்றோர் சபையின் நடுவே, நீட்டு ஓலை-(ஒருவர்) நீட்டிய ஓலையை, வாசியா நின்றான்-படிக்கமாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறிய மாட்டாதவன்-பிறர் குறிப்பை அறிய மாட்டாதவனுமே, நல்மரம்-நல்ல மரங்களாம்.
ஏ இரண்டும் அசை.
கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்தினுங் கடையாவர்; எ-ம். (13)
போலி அறிவின் புன்மை
14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
பதவுரை: கல்லாதான்-கற்கவேண்டியவற்றை (முறைப்படக்) கல்லாதவன், கற்ற கவி-(கற்றோர் கூறுவதைக் கேட்டு) ஒரு கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல், கானம் மயில் ஆட-காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆட, கண்டு இருந்த வான் கோழி-அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது, தானும் அதுவாகப் பாவித்து-தன்னையும் அம்மயிலாகவே நினைத்துக் கொண்டு, தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்-தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போலும்.
ஏ : அசை.
கல்லாதவன் கற்றவனைப்போல் நடித்தாலும் கற்றவனாகான் எ-ம். (14)
தீயோர்க்கு உதவுதல் கேடு தரும்
15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல்-பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங்
கல்லின்மே லிட்ட கலம்.
பதவுரை: வேங்கை வரிப்புலிநோய்-வரிகளை யுடைய வேங்கைப் புலியின் விடநோயை, தீர்த்த-போக்கிய, விடகாரி-விட வைத்தியன், ஆங்கு-அப்பொழுதே, அதனுக்கு-அப்புலிக்கு, ஆகாரம் ஆனால்போல்-இரையானாற்போல, பாங்கு அறியா-நன்றியறிவில்லாத, புல் அறிவாளர்க்கு-அற்ப அறிவினருக்கு, செய்த உபகாரம்-செய்யப்பட்ட உதவி, கல்லின் மேல் இட்ட கலம்-கல்லின் மேலே போடப்பட்ட மட்கலம்போல (அழிந்து, செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.)
தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும்.
விஷகாரி என்னும் வடமொழி விடகாரி என்றாயிற்று. அதற்கு விடத்தை அழிப்பவன் என்பது பொருள். கல்லின் மேலிட்ட கலம் என்பதற்குக் கல்லின்மேலே தாக்கிய மரக்கலம் போலும் எனப் பொருள் சொல்லினும் பொருந்தும் எ-ம். (15)
அடக்கத்தின் சிறப்பு
16. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் வாடி
யிருக்குமாங் கொக்கு.
பதவுரை: கொக்கு-கொக்கானது, மடைத் தலையில்-நீர் மடையினிடத்து, ஓடும் மீன் ஓட – ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருக்க, உறு மீன்-(இரையாதற்கேற்ற) பெரிய மீன், வரும் அளவும்-வரும் வரையும், வாடி இருக்கும் – அடங்கி யிருக்கும்; (அதுபோல) அடக்கம் உடையார்-தக்க பகைவர் வரும் வரையும் அடங்கியிருப்பவரை, அறிவு இலர் என்று எண்ணி-அறிவில்லாதவ ரென்று கருதி, கடக்க-அவரை வெல்லுவதற்கு, கருதவும் வேண்டா-நினைக்கவும் வேண்டுவதில்லை.
அடக்கமுடையவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும் எ-ம். (16)
உண்மை உறவினர்
17. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.
பதவுரை: அற்ற குளத்தின்-நீர்வற்றிய குளத்தி னின்றும், அறு-நீங்குகின்ற, நீர்ப்பறவைபோல்-நீர்வாழ் பறவைகள்போல, உற்றுழி-வறுமை வந்தபொழுது, தீர்வார்-நீங்குவோர், உறவு அல்லர்-உறவினராகார்; அக்குளத்தில்-அந்தக் குளத்திலுள்ள, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல-கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, ஒட்டி உறுவார்-நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே, உறவு-உறவினராவர்.
போலவே என்பதிலுள்ள ஏகாரத்தை உறுவார் என்பதனுடன் சேர்க்க.
வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப் போரே உறவினராவர் எ-ம். (17)
தாழ்ந்தாலும் மேன்மக்களே சிறந்தவர்
18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்
றல்லாதார் கெட்டாலங் கென்னாகும்-சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால்.
பதவுரை: சீரியர் கெட்டாலும்-மேன்மக்கள் வறுமை யுற்றாலும், சீரியரே-மேன்மைக் குண முடையோரே யாவர்; சீரியர் அல்லாதார் கெட்டால்-கீழ்மக்கள் வறுமையுற்றால், அங்கு என் ஆகும்-அப்பொழுது அவரின் குணம் யாதாகும், சீரிய பொன்னின் குடம் உடைந்தால்-சிறந்த பொன்னா லாகிய குடம் உடைந்தாலும், பொன் ஆகும்-பழைய பொன்னேயாகிப் பயன் தரும்; மண்ணின் குடம் உடைந்தக்கால்-மண்ணலாகிய குடம் உடைந்தால், என் ஆகும்-அது யாது பயனுடையதாம். மற்று: அசை.
மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்றார்; கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையில ராவர் எ-ம். (18)
ஆசையால் பயனில்லை
19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி-தோழி நிதியுங்
கணவனும் நேர்படினும் தந்தம் விதியின்
பயனே பயன்.
பதவுரை: ஆழ் கடல் நீர்-ஆழமாகிய கடலின் நீரை, ஆழ அமுக்கி முகக்கினும்-அழுந்தும்படியாக அமிழ்த்திமொண்டாலும், நாழி-ஒரு படியானது, நால் நாழி முகவாது-நான்குபடி நீரை மொள்ளாது; (அதுபோல), தோழி-தோழியே, நிதியும் கணவனும் நேர்படினும்-(பெண்டிர்க்கு) மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும், தம்தம்-அவரவருடைய, விதியின் பயனே பயன்-ஊழினளவாகிய பயனே (அனுபவிக்கப்படும்) பயனாகும்.
தோழி : மகடூஉ முன்னிலை.
வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும், பழவினையின் அளவன்றி மிகுதியாய் அனுபவிக்க முடியாது எ-ம். (19)
மருந்தும் உடன்பிறப்பும்
20. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு.
பதவுரை: வியாதி-நோயானது, உடன்பிறந்தே கொல்லும்-உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது, (ஆதலால்) உடன் பிறந்தார்-உடன் பிறந்தவர் எல்லோரும், சுற்றத்தார் என்று இருக்க வேண்டா-(நன்மை செய்யும்) சுற்றத்தாரென்று கருதி யிருக்க வேண்டுவதில்லை, உடன் பிறவா – உடன் பிறவாத, மாமலையில் உள்ள மருந்தே-பெரிய மலையில் இருக்கிற மருந்தே, பிணி தீர்க்கும்-நோயைப் போக்கும்; அம்மருந்து போல் வாரும் உண்டு-அம் மருந்து போல் (அயலாரா யிருந்தும்) உதவி செய்வாரும் சிலர் உண்டு.
உடன்பிறந்தாருள்ளே தீமை செய்வோரும் அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டு எ-ம். (20)
மனையாளில்லாத மனை
21. இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின்-இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
பதவுரை: இல்லாள் அகத்து இருக்க – (நற்குண நற்செய்கை களையுடைய) மனையாள் வீட்டில் இருக்கின், இல்லாதது ஒன்று இல்லை-(அவ் வீட்டில்) இல்லாத பொருள் ஒன்றுமில்லை, இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின்-மனையாள் இல்லாமற் போயினும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல்-மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினும், அவ் வில் புலி கிடந்த தூறு ஆய் விடும்-அவ் வீடு புலி தங்கிய புதர்போல் ஆய்விடும்.
ஆம் : அசை.
நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு; அஃதல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே யாகும் எ-ம். (21)
ஊழின் வலிமை
22. எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல் முற்பவத்திற் செய்த வினை.
பதவுரை: இரங்கும் மடம் நெஞ்சே-வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு-(நல்ல பயனைப் பெறலாமென்று) நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு, காஞ்சிரங்காய் ஈந்ததேல்-(அது) எட்டிக் காயைக் கொடுத்ததாயின், முற் பவத்தில் செய்த வினை-(அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; கருமம் கருதியவாறு ஆமோ-செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ, எழுதியவாறே காண்-(கடவுள்) விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக.
செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர் நினைத்தபடி முடியா எ-ம். (22)
நல்லார் சினமும் பொல்லார் சினமும்
23. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு
சான்றோர் சினம்.
பதவுரை: கயவர்-கீழோர், கடுஞ்சினத்து-கடுங்கோபத்தால் வேறுபட்டால், கல் பிளவோடு ஒப்பர்-கல்லின் பிளவு போல் திரும்பக்கூடார்; பொன்பிளவோடு ஒப்பாரும் போல்வார்-(அப்படி வேறுபட்டபோது) பொன்னின் பிளவோடு ஒப்பாவாரும் ஒப்பாவர்; (ஒருவர் கூட்டக் கூடுவர்.) சீர் ஒழுகு சான்றோர் சினம்-சிறப்பு மிக்க பெரியோருடைய கோபம்; வில்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறும்-வில்லைப் பிடித்து (அம்பினாலே) நீர் பிளக்க எய்த பிளவுபோல் (அப்போதே) நீங்கும்.
ஏ இரண்டும் அசை.
கோபத்தினால் வேறுபட்டவிடத்துக் கடையாயார் எக்காலத்துங் கூடார்; இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர்; தலையாயார் பிரிந்த அப்பொழுதே கூடுவர் எ-ம். (23)
குணமும் தொடர்பும்
24. நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்
போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.
பதவுரை: கயத்தின்-குளத்தில் உள்ள, நல் தாமரை – நல்ல தாமரைப்பூவை, நல் அன்னம் சேர்ந் தாற்போல்-நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கல்வி யுடையோரைக் கல்வி யுடையோரே விரும்பிச் (சேர்வர்); முதுகாட்டில்-புறங்காட்டில் உள்ள, பிணம்-பிணத்தை, காக்கை உகக்கும் – காக்கை விரும்பும்; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை-கல்வியில்லாத மூடரை, மூர்க்கர்-மூடரே, முகப்பர்-விரும்புவர்.
கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்புச் செய்வர். எ-ம். (24)
கரவுடையவர் ஒளிந்தே நிற்பர்
25. நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
பதவுரை: நாகம்-விடப் பாம்பானது, தான் நஞ்சு உடைமை அறிந்து – தான் விடம் உடையதாயிருத்தலை அறிந்து, கரந்து உறையும் – மறைந்து வசிக்கும்; நீர்ப்பாம்பு-(விடமில்லாத) தண்ணீர்ப் பாம்பானது, அஞ்சா புறம் கிடக்கும் – அஞ்சாமல் வெளியே கிடக்கும்; (அவைபோல்) நெஞ்சில் கரவு உடையார்-மனத்தில் வஞ்சனையை உடையவர், தம்மைக் கரப்பர்-தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர்; கரவு இலா நெஞ்சத்தவர்-வஞ்சனை யில்லாத மனத்தை உடையவர், கரவார்-தம்மை மறைத்துக் கொள்ளார்.
வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனையில்லாதவர் வெளிப்பட்டொழுகுவ எ -ம். (25)
அரசனும் அறிஞனும்
26. மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றஇட மெல்லாம் சிறப்பு.
பதவுரை: மன்னனும்-அரசனையும், மாசு அறக் கற்றோனும்-கசடறக் கற்ற புலவனையும், சீர் தூக்கின்-ஆராய்ந்து பார்த்தால், மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-அரசனைக் காட்டிலும் புலவனே சிறப்புடையனாவன்; மன்னற்கு-அரசனுக்கு, தன் தேசம் அல்லால்-தன் நாட்டிலல்லாமல் (பிற நாடுகளில்), சிறப்பு இல்லை-சிறப்பில்லையாகும்; கற்றோற்கு-புலவனுக்கோ எனில், சென்ற இடம் எல்லாம் சிறப்பு-அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும்.
அரசனிலும் புலவனே சிறப்புடையவன் எ-ம். (26)
பல்வகைக் கூற்றங்கள்
27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.
பதவுரை: கல்லாத மாந்தர்க்கு-கல்வியறி வில்லாத மாக்களுக்கு, கற்று உணர்ந்தார் சொல்-கற்றறிந்தவருடைய உறுதி மொழி, கூற்றம் – இயமனாம்; (துன்பஞ் செய்யும் என்றபடி); அல்லாத மாந்தர்க்கு-(தருமத்தில் விருப்ப முடையர்) அல்லாத மனிதர்க்கு, அறம்-தருமமே, கூற்றம்-இயமனாகும், மெல்லிய வாழைக்கு-மெல்லிய வாழை மரத்துக்கு, தான் ஈன்ற காய் கூற்றம்-அஃது ஈன்ற காயே இயமனாம்; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்-இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி, கூற்றம்-(கணவனுக்கு) இயமனாவள்.
கற்றறிந்தவருடைய உறுதிமொழியினாலே கல்லாதவருக்கும், தருமத்தினாலே பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளாலே கணவனுக் கும் துன்பம் விளையும் எ-ம். (27)
கெட்டாலும் மனவிரிவு குறையார்
28. சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங் கந்தங் குறைபடா தாதலால்-தந்தந் தனஞ்சிறிய ராயினுந்
தார்வேந்தர் கேட்டால் மனஞ்சிறிய
ராவரோ மற்று.
பதவுரை: மெல் சந்தனக் குறடு – மென்மையாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும்-தான் தேய்ந்து போன காலத்திலும், கந்தம் குறைபடாது-மணம் குறையாது; ஆதலால்-ஆதலினாலே, தார் வேந்தர்-மாலையை அணிந்த அரசர்கள், தம்தம் தனம் சிறியர் ஆயினும்-தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்தவரானாலும், கேட்டால்-அவ்வறுமையினாலே, மனம் சிறியர் ஆவரோ-மனஞ் சுருங்கினவராவாரோ (ஆகார்).
தார்-சேனை; மனம்-மன வலிமை என்று பொருள் கூறுதலும் ஆம்.
அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மன விரிவு (தளராத் தன்மை)குன்றார் எ-ம். (28)
நிலையில்லாத வாழ்வு
29. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமு மெல்லாம்-திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து போம்போ தவளொடு போம்.
பதவுரை: மருவு இனிய சுற்றமும்-தழுவிய இனிய உறவும், வான் பொருளும்-மேலாகிய பொருளும், நல்ல உருவும்-நல்ல அழகும், உயர்குலமும் எல்லாம்-உயர்வாகிய குலமும் என்னும் இவை யெல்லாம், திருமடந்தை ஆம் போது-சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும்-அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது-அவள் நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம்-அவளுடனே நீங்கிப் போகும்.
திருமடந்தை-இலக்குமி, ஆகும் போகும் என்பன ஆம் போம் என்றும், பொழுது என்பது போது என்றும் விகாரப்பட்டன.
சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையனவல்ல எ-ம். (29)
அறவோர் அருள் உள்ளம்
30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்.
பதவுரை: மரம்-மரங்களானவை, மாந்தர் குறைக்கும் தனையும்-(தம்மை) மனிதர் வெட்டு மளவும், குளிர்நிழலைத் தந்து மறைக்கும்-(அவருக்குங்) குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும் (அதுபோல), அறிவு உடையோர்-அறிவுடையவர்; சாம்தனையும்-(தாம்) இறந்து போமளவும், தீயனவே செய்திடினும்-(பிறர் தமக்குத்) தீங்குகளையே செய்தாராயினும், தாம் அவரை ஆம் தனையும் காப்பர் – தாம் அவரையும் தம்மாலே ஆகுமளவும் காப்பார்.
ஆம் : அசை. கண்டீர் : முன்னிலையசை.
அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் எ-ம். (30)
மூதுரை மூலமும் உரையும் முற்றிற்று.