
காக்கையின் உபதேசம்
உடம்பை எடுத்த அனைவருக்கும் பசி என்பது பெரிய பிணி. அதைப் போக்கிக்கொள்ள ஒவ்வொருவரும் பாடுபடு கின்றனர். உடம்போடு பிறந்தது பசி. பசியைப் போக்கும் தானத்தைக் காட்டிலும் சிறந்தது வேறு ஒன்றும் இல்லை.
“உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே”
என்பது புறநானூறு.
பணக்காரருக்கு ஒரு பசி, ஏழைக்கு ஒரு பசி என்பது இல்லை. பசி யாவருக்கும் பொதுவானது. பசித்தவன் யாராக இருந்தாலும் அவனுக்குச் சோறிடுவது சிறந்தது.
”அவர் எனக்குத் தெரியாதவர்; இவர் எனக்குத் தெரிந்தவர்” என்ற வேறுபாடே இன்றி அன்னதானம் செய்யவேண்டும்.
ஆர்க்கும் இடுமின்; அவர்இவர் என்னன்மின்.
(பசித்து வந்தார் யாரானாலும் அன்னம் இடுங்கள்; அவர் இவர் என்று வேறுபாடு கருதவேண்டாம்.)
உண்ணும்போது பிறருக்கும் இட்டு உண்ணுவதே இந்நாட்டு மரபு. தம்முடைய வீட்டில் சோறு சமைக்க உலையில் பானையை வைப்பதே, வந்த விருந்தினர்களுக்கு உணவிட வேண்டு மென்பதற்காக. யாரும் விருந்தாளி இல்லாமல் இருந்தால், “நாமே சமைத்து நாமே உண்பதற்கா பிறந்தோம்? இன்று உலை வைக்கவேண்டாம்” என்று இருப்பார்களாம்.
“தமக்கென்று உலையேற்றார்”
என்று ஒரு புலவர் பாடுகிறார். ஆகவே விருந்தோடு உண்பதையே உணவாகக் கருதுவது சான்றோர் இயல்பு.
“அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே”
என்று இளம் பெருவழுதி என்ற பாண்டியன் கூறுகிறான்.
உணவு சமைத்த பிறகு விருந்தினர் யாரும் இல்லாவிடின், யாரேனும் வரமாட்டார்களா என்று அவர் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். விருந்தினர் வந்தால் அவர்களுடன் இருந்து உண்ணுவார்கள்.
“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பார்”
என்பது வள்ளுவர் வாக்கு.
பார்த்துஇருந்து உண்மின்.
(விருந்தினர் வருவாரா என்று பார்த்து, யாரேனும் வந்த பிறகு அவருடன் இருந்து உண்ணுங்கள்.)
‘இது நாம் பலகாலமாகச் சேமித்து வைத்தபொருள் அல்லவா? இதை இப்படிக் கரைத்து விடலாமா?’ என்ற எண்ணம் உடையவர்கள் அறம் செய்ய மாட்டார்கள்; அந்தப் பொருளை அவர்களும் உண்ணாமல் இழந்து விடுவார்கள்.
”ஊரெல்லாம் புது அரிசிதான் சமைக்கிறார்கள். நாம் இரண்டு வருஷத்துப் பழைய அரிசியைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம். இதைக் கண்டவர்களுக்கு வடித்துக் கொட்டுவதா?” என்று நினைக்கும் நினைப்புச் சான்றோர்களுக்கு இராது.
பழம்பொருள் போற்றன்மின்.
(பலகாலமாக ஈட்டி வைத்துப் பாதுகாக்கும் பழம்பொருளைப் பிறருக்கு உதவாமல் பின்னும் வைத்துப் பாதுகாக்க வேண்டாம்.)
“நாம் நன்றாக வாழவேண்டும். எக்காலத்தும் பசியின்றி வாழவேண்டும்” என்ற ஆசையோடு, பிறருக்கு அளிக்காமல் சிலர் உண்ணுகிறார்கள். “பிறருக்கு அளித்தால் குறைந்துவிடும்” என்று எண்ணுகிறார்கள். அந்தோ பாவம்!
அவர்கள் ஈட்டி வைத்ததை எதிர்பாராதபடி வேறு யாரேனும் அடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள்; அல்லது அப் பொருளை அநுபவிப்பதற்கு முன்னரே அவர்களுடைய ஆயுள் முடிவடைந்து விடுகிறது.
ஒரு மூட்டை அரிசியைக் கடையிலிருந்து காசு கொடுத்து வாங்கிச் செல்கிறவன், ‘இந்த மூட்டை தீரும் வரையில் நான் நிச்சயமாக உயிரோடு வாழ்வேன்’ என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? அந்த நிலையில் அதைப் பிறருக்கு அளிக்காமல் போற்றிப் பாதுகாப்பதன் பயன் என்ன?
உண்மையில் பிறர் பசியைத் தீர்ப்பவன் எந்தக் காலத்தும் மக்களின் அன்புக்கு உரியவனாவான். அவன் ஒருநாளும் பசி என்று வருந்தும் நிலையை அடையமாட்டான். இம்மையிலும் சரி, மறு பிறவிகளிலும் சரி, அவனுக்குப் பசியினால் தீங்கு வராது.
“பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது”
என்பது திருக்குறள்.
ஆதலின், தமக்குப் பசியினால் ஒருகாலும் துன்பம் வரக்கூடாதென்று உணவுப் பொருளின் மீது வேட்கை யுடையவர்கள், தாம் நினைத்தது பலிக்க வேண்டுமானால் பசித்த வருக்கு இட்டு உண்ணவேண்டும். தமக்குப் பசி வந்துவிட்ட தென்று விருந்தினர் இல்லாமல் விரைவில் உண்ணுதல் அறமாகாது. “யாரேனும் வந்துவிடப் போகிறார்களே!” என்று உணவு நேரத்துக்கு முன்பே விரைவில் உண்டுவிட்டுப் பாத்திரத்தை மூடிக் கவிழ்த்து விடுபவர்களைப் பற்றி என்ன சொல்வது? தமக்குப் பசிக்கிற தென்று விரைந்து உண்ணாமல், விருந்தினர் வரவில்லையே என்று பசியோடு காத்திருப்பவர்கள் அறநெறி வழுவாத ஆன்றோர்.
வேட்கை உடையீர்! விரைந்துஒல்லை உண்ணன்மின்.
(உங்கள் பசியைப் போக்கிக்கொள்ளும் ஆசை உடையவர்களே, விருந்தினர் வாரா முன்னர் விரைந்து அவசரமாக உண்ணாதீர்கள்.
வேட்கை-விருப்பம். ஒல்லை-விரைவில்.)
சோறு சமைத்தவுடன் இந்த நாட்டில் காக்கைக்கு ஒரு பிடி சோறு போட்டுப் பின்பே உண்ணுவது வழக்கம். காக்கையைக் கா, கா என்று கூப்பிட்டுச் சோறிடுவார்கள்.
காக்கையைக் கூவி அழைத்துச் சோறு இடுவானேன்? நாய்க்குப் போடலாம்; வேறு பிராணிக்குப் போடலாமே! அதில் ஓருண்மை இருக்கிறது. காக்கையின் அருமையான குணம் ஒன்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் சோற்றைப் போட்டால் காக்கை வேறு ஒரு பிராணியும் அறியாமல் தனியே வந்து உண்ணுவதில்லை. அது சோற்றுக்கு அருகே வந்து உட்கார்ந்து கா, கா என்று கரையும்; தன் இனத்தாரை அழைக்கும். நாலைந்து காக்கைகள் அதன் ஒலியைக் கேட்டுப் பறந்து வரும். அவற்றோடு சேர்ந்து முன்னே வந்த காக்கை சோற்றைக் கொத்தி உண்ணும்.
நாய் சோற்றுக்கு அலைகிறது. ஆனால் அதன் குணம் நேர் விரோதமானது. உண்ட பிறகு எச்சில் இலையை வீதியில் போடுகிறோம். அதை ஒரு நாய் வந்து பார்க்கிறது. அப்போது மற்றொரு நாய் அங்கே வந்தால் போதும்; இது இலையை விட்டுவிட்டு அதன்மேலே பாயும். மனிதன் உணவு உண்ணும் போது காக்கையைப் போல நடக்க வேண்டுமே ஒழிய, நாயைப் போல இருக்கக் கூடாது. காக்கையைப் போல மற்றவர்களுக்கும் இட்டு உண்ணவேண்டும் என்ற நினைப்பு மற்றச் சமயங்களில் இருந்தால் போதாது, சாப்பிடுவதற்கு முன் அந்த நினைப்பு இருக்க வேண்டும். அதனால்தான் சமைத்தவுடனே காக்கைக்குச் சோறு போடுகிறார்கள்.
“காக்கை கரவா கரைந்துண்ணும்”
என்றும்,
“காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்”
என்றும் பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள். திருமூலரும் அதை நினைப்பூட்டுகிறார். “காக்கை தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணுகிறதே! அது எந்தக் காலம்? தெரிகிறதா? நாம் உண்ணுவதற்கு முன் சோறு சமைத்தவுடனே நிகழும் நிகழ்ச்சி அல்லவா அது? அந்தக் காலத்தில் மறவாமல் நினைக்கவேண்டும் உண்மையைக் காக்கை காட்டுகிறது” என்று அறிவுறுத்துகிறார்.
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.
(காகம் தன் இனத்தையும் கூவி அழைத்து உடனுண்ணும் காலத்தை அறிந்து நீங்களும் அதைப் போல இட்டு உண்ணுங்கள்.)
சோறு இடுவதற்குரிய தகுதி பசி ஒன்றுதான். பசித்தவன் யாராக இருந்தாலும் அவனுக்கு இடவேண்டும். அவன் இன்னான் இனியானென்று ஆராய்ச்சி பண்ணுதல் கூடாது. பசித்தவர் வந்து சோறு என்று கேளாவிட்டாலும், நம் வயிறு பசிக்கும் போது பிறரும் இப்படிப் பசியுடையவர் இருப்பாரே என்று அவரைத் தேடவேண்டும். மற்றச் சமயங்களில் பசித்தோரை நினைக்கா விட்டாலும், நம் வயிறு பசியை நினைவூட்டும்போது, நம் வயிற்றுப் பசியை மாத்திரம் எண்ணாமல், அதுவே நினைப்புக் குறியாகக் கொண்டு பிறர் பசியை எண்ணி, பசியுடையார் யாரேனும் வரமாட்டார்களா என்று பார்த்து, வந்த பிறகு உண்ண வேண்டும். இதைப் பறவையாகிய காக்கை அறிவுறுத்துகிறது.
ஆர்க்கும் இடுமின்; அவர்இவர் என்னன்மின்;
பார்த்திருந்து உண்மின்; பழம்பொருள் போற்றன்மின்; வேட்கை உடையீர்! விரைந்துஒல்லை உண்ணன்மின்;
காக்கை கரைந்துஉண்ணும் காலம் அறிமினே.
இது முதல் தந்திரத்தில் தானச் சிறப்பு என்னும் தலைப்பில் உள்ள பாட்டு.


