
அஞ்சுள ஆனை
ஒருவன் பெரிய காட்டுக்குள் சிக்கிக்கொண்டான். அந்தக் காட்டில் வாழும் கொடிய பிராணிகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை. பாம்பு, தேள், பூரான் ஆகியவை எங்கும் நெளிகின்றன. முள்ளும் கல்லும் குண்டும் குழியும் எங்கும் இருக்கின்றன. இவற்றினின்றும் எப்படியோ தப்பி மீளலாம் என்றால், எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கும் யானைகள் ஐந்து இருக்கின்றன. அவை இந்தக் காட்டை விட்டு அவனை வெளியிலே போகாத படி சுற்றி நின்று பிளிறுகின்றன. உலகத்துக்கு எட்டு யானைகள் காவல் என்றால், இந்தக் காட்டுக்கு ஐந்து யானைகள் காவல், காவல் என்று மட்டும் சொன்னால் போதாது. அவற்றின் ராஜ்யம் இக்காடு என்றே சொல்ல வேண்டும்.
காட்டைவிட்டுப் போக வேண்டுமானால் இந்த ஐந்து யானைகளையும் அடக்க வேண்டும். இல்லையானால் காட்டிலே கிடந்து நலிய வேண்டியதுதான்.
இத்தகைய காட்டில் வாழ்ந்த வேறு சிலர் யானைகளை அடக்கி விட்டுக் காட்டினின்றும் புறப்பட்டுத் தாம் நினைத்த இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள். ஒரு பெரிய தலைவனுடைய வீடு காட்டுக்கு அப்பாலே இருக்கிறதாம். காட்டு வாழ்க்கையை நீத்துச் சென்றால் அந்த மாளிகையிலே வாழலாம். காட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் அச்சத்தால் நடுங்க வேண்டும். அந்த மாளிகையில் அச்சம் இல்லை; துன்பம் என்பதே இல்லை. “இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்று அங்கே சென்று சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
யாரும் அஞ்சும் அந்த யானைகள் அஞ்சையும் எப்படி அடக்குவது? யானை அங்குசத்துக்கு அடங்கும். இந்தக் காட்டு யானைகள் சாமான்யமான அங்குசத்துக்கு அடங்குமா? இவற்றை அடக்குவதற்கென்று அஞ்சு அங்குசங்கள் இருக்கின்றன; சாமர்த்தியமுடையவர்கள் அவற்றைப் பெறும் வகையில் பெற்று ஐந்து யானைகளையும் அடக்கிக் காட்டினின்றும் விடுதலை பெற்று அந்தப் பெருங்கணக்கெடுத்து செல்வனுடைய மாளிகையில் வாழத் தலைப்படுகிறார்கள்.
உடம்புதான் அந்தக் காடு. காட்டில் இருக்கும் மரஞ்செடி கொடிகளையும் விலங்குகளையுமாவது விடலாம். உடம்பில் இருக்கும் நரம்பு ஊன் முதலியவற்றையும், இதற்குள் வாழும் தீய குணங்களையும் அள விட்டுக் கூற முடியாது. ஐந்து பொறிகளாகிய யானைகள் இந்தக் காட்டில் வாழ்கின்றன. அவற்றின் ஆட்சிக்குள் அடங்கி ஆன்மா உடம்பில் சிறைப்பட்டுக் கிடக்கின்றது.
அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன.
(உடம்பாகிய காட்டில் வாழ்பவைகளாகிய பொறிகள் என்னும் யானைகள் ஐந்து உள்ளன.)
இந்த அஞ்சையும் அடக்கும் அங்குசம் அஞ்செழுத்தாகிய பஞ்சாட்சரம். பஞ்சாட்சரத்தை உச்சரித்துச் செபித்தலால் மனம் ஒருமைப்படும். இறைவனுடைய திருவருட் கருணை கிடைக்கும். அதனால் பொறிகளின் விளையாட்டு அடங்கும். ஐந்து எழுத்துக்களும் சேர்ந்த தொடராகப் பஞ்சாட்சரம் இருந்தாலும் ஒவ்வோர் எழுத்தும் தனித் தனிப் பொருளை உடையது; அதனால் ஒவ்வோரெழுத்தும் ஒவ்வொரு சொல்லேயாகும். இக்காரணத்தால் ஐந்தெழுத்தை, “அஞ்சு பதம்” என்றும் சொல்வதுண்டு.
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன.
(பொறிகளாகிய ஐந்து யானைகளுக்கும் திருவைந் தெழுத்துக்கள் அங்குசமாக உதவுபவை.)
இறைவன் இருக்கும் முத்தி வீட்டை அடையாமல் உடம்பாகிய காட்டினில் உயிர்கள் வாழ்கின்றன. காட்டைக் கடந்தால் வீட்டை அடையலாம். அந்த வீட்டுக்கு உடையவன் உலகத்துக்கெல்லாம் முதல்வன். உலகம் ஐந்து பூதங்களால் ஆனது. கீழிருந்து பார்த்தால் தத்துவங்களின் வரிசையில் பஞ்ச பூதங்கள் முதலில் நிற்கின்றன. அவற்றை முதலாகக் கொண்ட தத்துவங்கள் எல்லாம் தோற்றும்போது ஆதியாக நிற்பவன் இறைவன்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்று திருக்குறள் முதற் செய்யுளில் அறிவிக்கிற உண்மை அல்லவா அது?
அத்தகைய ஆதியின் அகமாகிய முத்தியென்னும் வீட்டை, ஐம்புலனை வென்று அருள் பெற்றவர்கள் அடைவார்கள்.
அஞ்சு பூதங்கள் முதலிய தத்துவங்களுக்கு முதல்வனாகிய இறைவன் உள்ள இடம் முத்தி. அது துன்பமில்லாத இன்ப நிலையம். அவ்விடத்தை அடைய முடியாமல் உயிர்கள் உடம்பாகிய காட்டில் இருந்து வாழ்கின்றன. காட்டை விட்டுப் போக முடியாமல் ஐம்பொறிகளாகிய யானைகள் தடுத்துக் காவல் செய்கின்றன. திருவைந்தெழுத்தாகிய அங்குசத்தைக் கொண்டு அந்த யானைகளை அடக்கி வென்றவர்களே காட்டை விட்டு நீங்கி இறைவனுள்ள இடத்தை அடைய முடியும்.
அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன;
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன;
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புகல் ஆமே.
(காட்டில் வாழ்வனவாகிய யானைகள் ஐந்து இருக்கின்றன. அந்த அஞ்சுக்கும் அங்குசமாக இருப்பவை அஞ்செழுத்துக்கள். அஞ்சு யானைகளையும் ஒருங்கே அடக்க வல்லவர்களுக்கே ஐம் பூதங்கள் முதலாகிய தத்துவங்களுக்கு முதல்வனாகிய இறைவனது வீடாகிய முத்தியை அடைதல் சாத்தியமாகும்.
ஆனை என்றது பொறிகளை. அடவி-காடு; உடம்பாகிய காடு. கூட – ஒருங்கே. தடுக்க-தம்மைப் புறம் போகவிடாமல் ஊறு செய்வதைத் தடுக்க. அஞ்சு ஆதி-அஞ்சு பூதம் முதலிய தத்துவங்கள்; அன்மொழித்தொகை. தத்துவங்கள் ஒடுக்க முறையில் ஐந்து பூதங்களிலிருந்து தொடங்குவதால் அஞ்சு ஆதி என்றார். ஆதி-அவற்றிற்கு மூலமாகிய தலைவன்; எல்லாத் தத்துவங்களுக்கும் ஆதியாய் நிற்பவன். முப்பத்தாறு தத்துவங்களில் முதல் தத்துவம் சிவம்; இறுதித் தத்துவம் பிருதுவி. தோன்றும் முறையில் சிவதத்துவம் ஆதி. ஒடுங்கும் முறையில் பிருதுவி தத்துவம் முதல். ஆதியினுடைய அகம், முத்தி. புகல் ஆம்-புகுதல் கை கூடும்.)
நாலாந் தந்திரத்தில் திருவம்பலச் சக்கரம் என்ற பகுதியில் 64-ஆம் பாட்டாக உள்ளது இது.


