திருக்கடவூர் அபிராமி

“இந்தப் பைத்தியம் இங்கே கண்ணை மூடிக் கொண்டு நிற்கிறதே! சரபோஜி மகாராஜா இங்கே வந்திருக்கிறார். கோயிலுக்கு வருவாரென்று தெரிகிறது. இந்தப் பைத்தியம் அம்பிகை சந்நிதியில் எதையாவது உளறிக் கொண்டிருக்குமே!” என்றார் ஒருவர்.

“உளறினால் உமக்கு என்ன? மகாராஜா வந்தால் யாராவது இவரைக் கழுத்தில் கைகொடுத்து நெட்டித் தள்ளுகிறார்கள். மகாராஜா வரும் வரையில் இவரை இங்கே நின்றிருக்கும்படி செய்வார்களா, என்ன?” என்றார் மற்றவர்.

திருக்கடவூரில் அபிராமியம்மையின் சந்நிதியில் தம்மை மறந்த நிலையில் நின்றுகொண்டிருந்தார் அபிராமிபட்டர். உடம்பில் பளிச்சென்ற திருநீறு; நெற்றியில் திருநீற்றுக்கு இடையே இரண்டு புருவத்துக்கும் நடுவில் அகலமான குங்குமக்கீற்று – இந்தக் கோலத்தோடு நின்றிருந்தார். அவரைப் பற்றியே அந்த இரண்டு பேர்வழிகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். அபிராமிபட்டர் காதில் அந்தப் பேச்சு விழவில்லை. அவர் தாம் இந்த உலக நினைவிலேயே இல்லையே!

தேவியைத் தீவிரமாக உபாசனை புரிவதில் சிறந்தவர் அபிராமிபட்டர் யந்திரங்களை வைத்து மந்திர பூர்வமாகத் தந்திரநெறியில் அம்பிகையை வழிபட்டு வந்தார். பரம்பரையாக அம்பிகையை உபாசிக்கும் குடும்பம் அது. அவரோ அந்த உபாசனையில் மிகவும் முறுகியவர். பூஜை செய்வதும், கோயிலுக்கு வந்து அம்பிகையைத் தரிசிப்பதும் அவருடைய வாழ்வின் முக்கியமான வேலைகள்.

கொஞ்சம் சோதிடம் பார்ப்பார். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்வார். சிலர் அவரிடத்தில் அன்பு வைத்துப் பழகினார்கள். சாதுக்களுக்கு அவர் சிறந்த பக்தர் என்பது தெரியும்.

அவர் யாரிடமும் அதிகமாகப் பேசுவதில்லை. அபிராமியின் திருவருளுக்கு இலக்காகி அத்தேவியினுடைய தியானத்தால் உண்டாகும் இன்பப்போதையிலே அவர் மிதந்து கொண்டிருப்பார். ஆகையால் யாராவது ஏதாவது கேட்டால் அதைக் கவனிக்காமல் வேறு எதையாவது சொல்வார். இதனால் சிலர் அவரைப் பைத்திய மென்று எண்ணிவிட்டார்கள். பலர், “ஏதோ தூர்த்தேவதையை வழிபடுகிறார். அதனால் தான் அப்படி இருக்கிறார்” என்றனர். அம்பிகையின் சந்நிதானத்தில் சில சமயங்களில் தம்மை மறந்து கூத்தாடுவார். சுலோகங்களை இசைப்பார். புதிய பாடல்களைப் பாடுவார். தமிழில் பக்திச் சுவை ததும்பும் பாடல்களை இயற்றும் ஆற்றல் அவருக்கு இருந்தது. யாராவது பார்த்து நகைப்பார்களே என்ற நினைவு அவருக்கு இல்லை. அம்பிகையை நினைந்து அலறுவார்; தேம்பித் தேம்பி அழுவார். நகரிகமாக வந்து நின்று சுற்று முற்றும் பார்த்துத் தீபாராதனை ஆகும்போது கன்னத்தில் அடித்துக்கொண்டு, அம்பிகையின் குங்குமப் பிரசாதத்தை வாங்கி இடது கையில் வைத்துக்கொண்டு, நுனிவிரலால் சிறிது எடுத்து நெற்றியில் நிதானமாகவும் ஒழுங்காகவும் இட்டுக் கொண்டு, பாக்கிக் குங்குமத்தை அருகில் உள்ள தூணின்மேல் தடவிவிடும் மகாஜனங்களின் இடையில் அவர் பைத்தியக்காரராகத் தோற்றியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அபிராமிபட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரை அவ்விடத்தை விட்டுப் போகும்படி சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. கடவுளின் சந்நிதானத்தில் வணங்கும் சுதந்தரத்தைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

சரபோஜி மன்னர் ஆலய தரிசனம் செய்யும் பொருட்டு வந்தார். அவர் வந்தால் தனியாகவா வருவார்? ஒரு பட்டாளம் ஜனங்களுடன் வந்தார். ஆலயத்தில் அப்போது ஒரு புதிய பரபரப்பு எங்கும் உண்டாயிற்று. குருக்கள் மார் சுறுசுறுப்பாக ஓடினார்கள். மாலை தொடுப்பவர்கள் படபடப்பாக இருந்தார்கள். வாத்தியக்காரர்கள் ஜாக்கிரதையாக இருந்தார்கள்.அரசர் சுவாமி சந்நிதிக்குப் போய் விட்டு அம்பிகையின் சந்நிதிக்கு வந்தார்.

இந்த அல்லோல கல்லோலத்துக்கு இடையே அபிராமி பட்டர் ஒன்றையும் உணராமல் ஒளியாய், ஒளிரும் ஒளிக்கு இடமாய், எண்ணில் ஒன்றும் இல்லா வெளியாய், வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மையின் அடித்தாமரையிலே ஈடுபட்டு நின்றார். அப்போது சரபோஜி மன்னர் அங்கே வந்தார். அவரைக் கண்டு யாவரும் வழிவிட்டு விலகி நின்றனர். இந்த அந்தணர் மாத்திரம் விலகாமல் நின்றார். அவர் இந்த உலகத்தில் இருந்தால் தானே? குருக்கள் முதலியவர்கள் அவரை உறுத்து உறுத்துப் பார்த்தார்கள். அவர் கண்ணை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர்கள் பார்த்த பார்வை அவருக்கு என்ன தெரியும்?

சரபோஜி மன்னர் உடன் வந்த ஒருவரிடம், ”இவர் யார்?” என்று கேட்டார். கொஞ்சம் ஜோஸ்யம் தெரிந்தவர். ஒருமாதிரி. ஏதோ சிறு தெய்வ உபாசனை உள்ளவர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்” என்று மெல்லச் சொன்னார் அந்த மனிதர். அதைக்கேட்ட சரபோஜி மன்னர் அபிராமி பட்டரை ஏற இறங்கப் பார்த்தார். அந்தப் பக்தசிரோமணி மன்னர் தம்மைப் பார்ப்பதை உணர்ந்தாரா? இல்லை.

விசேஷ அர்ச்சனை ஆயிற்று.மணி அடித்தார்கள். தீபாராதனை ஆயிற்று. யாவரும் ஆரவாரம் செய்து கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். அந்தக் கோஷத்தினால் அபிராம பட்டரின் தியானம் கலைந்தது. கண்ணை விழித்துப் பார்த்தார். அம்பிகை சந்நிதியில் ஒரேகூட்டம். எதிரே சரபோஜி மன்னர் நின்று கொண்டிருந்தார்.

விழித்தவுடன் அரசர் அவரிடம், “இன்று என்ன திதி?” என்று ஒரு கேள்வி கேட்டார். சந்திர மண்டிலத்தில் அமுதமயமாய் வீற்றிருக்கும் அம்பிகையைத் தம் அகக்கண்ணில் தரிசித்து அங்கே சூழும்சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற திருக்கோலத்தில் ஈடுபட்டிருந்த பட்டர் காதில் மன்னரின் வார்த்தைகள் அரைகுறையாகவே விழுந்தன. “பௌர்ணமி” என்ற வார்த்தைகள் அவர் வாயினின்று நழுவின. அவர் பூர்ண சந்திர மண்டிலத்தை உள்ளே கண்டவர் அல்லவா?

அன்று அமாவாசைக்கு மறுநாள்; பிரதமை. அபிராமி பட்டரோ பௌர்ணமி என்று சொன்னார்.

அப்படிச் சொன்னவுடன் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டுச் சிரித்தார்கள். சரபோஜி அரசரும் சற்றுத் திகைத்தார். “அவர் ஒரு மாதிரி” என்று ஒருவர் சொன்னது உண்மை என்று எண்ணலானார்.

தரிசனம் செய்த மன்னர் தாம் தங்கியிருக்கும் மாளிகைக்குப் போய்விட்டார். அபிராமி பட்டருக்கு மெல்ல மெல்ல உலக நினைவு வந்தது. அப்போது தாம் தவறிப் போய்ப் பௌர்ணமி என்று சொன்னது தெளிவாயிற்று. ‘அடடா என்ன காரியம் செய்து விட்டோம்! முன்பே பைத்தியக்காரப் பட்டம் கட்டியிருக்கிறார்கள். இப்போது அரசர் முன்பு அதை உறுதி செய்து விட்டோமே!’ என்று வருந்தினார். அடுத்த கணம் அவர் மனம் அம்பிகையை நினைந்தது.”தாயே! எல்லாம் உன் செயல். நன்றே செயினும் தீதே வரினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை. உன் சந்நிதியில் என்னிடம் தோன்றிய வார்த்தை என் முயற்சியால் வந்தது அல்ல. இதனால் வரும் நன்மை தீமைகள் என்னைச் சார்வன் அல்ல. எல்லாம் உன் திருவிளையாடல்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றார். அவர் மனம் இன்னும் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த நிலை மாறுவதற்காக அபிராமியம்மையைத் துதிக்கத் தொடங்கினார். புதிய செய்யுட்களால் அந்தாதியாகப் பாமாவை தொடுக்கலானார். ஒவ்வொன்றாகப் பாடல் வந்து கொண்டிருந்தது.

ஆலயத்திலிருந்து சென்ற மன்னருக்கு அபிராமி பட்டரின் உருவம் மனசை விட்டுப் போகவே இல்லை. அவர் நெடுநேரம் புறவுலகத்தையே மறந்து நின்றதைக் கவனித்தவராதலின் அவரைப் பைத்தியமென்று துணியக்கூடவில்லை. இந்த நிலையில் அவருக்குச் சற்று உறக்கம் வந்தது. அந்த உறக்கத்தில் சின்னஞ் சிறிய கனவு ஒன்றை அவர் கண்டார். எங்கும் இருள் கவிந்திருக்கிறது. அமாவாசை இருட்டு. அப்போது திடீரென்று ஒரு சோதி தோன்றுகிறது. எதிரே அம்பிகையின் தோற்றம். அம்மை தன் காதுத் தோட்டில் ஒன்றை எடுத்து வானில் விசுறுகிறாள். அது நேரே கீழ்த்திசையில் சென்று நிற்கிறது. என்ன ஆச்சரியம்! பூரண சந்திரன் உதயமாகி விட்டான்.அம்பிகையின் தாடங்கம் சந்திரனைப் போல ஒளிவிடுகிறது.

உலகத்தை மூடியிருந்த இருள் இப்போது இல்லை. பால் போன்ற வெண்ணிலவு வீசுகிறது. குன்றும் மலையும், ஆறும் குளமும், காடும் மேடும், முள்ளும் மலரும், மரமும் செடியும் அந்த நிலவொளி யில் ஒரு மோகன சோபையைப் பெற்றுத் திகழ்கின்றன.

அமாவாசையாகிய அன்று பெளர்ணமி வந்துவிட்டதா என்ன? அரசர் கணநேரம் இந்த யோசனையில் ஆழ்ந்தபோது அவர் அருகே அபிராமி பட்டர் தோன்றுகிறார். “அதோ அதோ! பூர்ண சந்திரன்!” என்று வானத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

அம்பிகையைத் தரிசித்த ஆனந்தத்தில் மூழ்கி நின்ற மன்னர் அபிராமி பட்டரை அடி பணியச் செல்கிறார்.

கனவினிடையே மன்னர் விழித்துக் கொண்டார். கனவிலே கண்ட நிலவொளி இன்னும் தம்மைச் சூழ்ந்து விரிந்திருப்பது போன்ற பிரமை அவருக்கு இருந்தது. கனவேயானாலும் அம்பிகையைத் தரிசித்தார் அல்லவா? அதனால் உண்டான புளகம் இன்னும் அடங்கவில்லை. மெல்ல மெல்ல இந்த இன்ப மயக்கம் தெளிந்தது. எழுந்து அமர்ந்தார். அபிராமி பட்டர் ஒரு மகான் என்ற நினைவு அவருக்கு உண்டாயிற்று. கனவிலே பட்டரை வணங்கினார் அரசர். நனவிலும் வணங்க வேண்டும் என்ற கருத்து உண்டாயிற்று. அதில் வேகமும் இருந்தது. அரசர் அபிராமி பட்டர் வீட்டை நோக்கிப் புறப்பட்டுவிட்டார்.

அரசர் அந்தச் சிறுகுடிலில் நுழைந்தார். அவர் நுழைவதற்கும் அபிராமி பட்டர் 79-ஆவது பாட்டை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அந்தப் பாடலை மீட்டும் சொல்லித் துதித்தார்.

விழிக்கே அருள் உண்டு அபிராம
வல்லிக்கு; வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு; அவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க
ளே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்
மோடுஎன்ன கூட்டு இனியே?

[அபிராம வல்லியின் விழியில் அருள் உண்டு; வேதம் சொன்னவாறு அத்தேவியை வணங்க எமக்கு மனம் உண்டு; அவ்வழி இருக்கவும் பழிதரும் வழிகளிலே திரிந்து கொடிய பாவங்களையே செய்து பாழான நரகக் குழியில் ஆழும் இழிதகை யோருடன் இனி நமக்கு என்ன உறவு வேண்டும்?]

என்ற பாடல் அது.

சரபோஜி மன்னர் உள்ளே வந்து நின்றார். அபிராமிபட்டர் எழுந்தார். “சுவாமி! தாங்கள் எழுந் திருக்க கலாகாது. இன்று தங்களை அவமதித்த பெரும் பாவத்தைச் செய்தேன். ஆனாலும் தங்களைத் தரி சித்த புண்ணியத்தால் அம்பிகையின் தரிசனம் கிடைத்தது” என்று சொல்லியபடியே அரசர் அபிராமிபட்டர் திருவடியில் பணிந்தார். பட்டர் ஒன்றுமே விளங்காமல் விழித்தார். உடன் வந்தவர்களும் திடுக்கிட்டுப் போயினர். அரசர் தாம் கண்ட கனவைச் சொன்னார். “உங்கள் பெருமையைக் கனவிலே கண் டேன். அம்பிகை உங்களுக்காக அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கினாள். இந்தப் பேதைக்கும் தன் காட்சியை நல்கினாள். என் உள்ளத்தில் படர்ந்த இருளை ஓடச் செய்தாள். நீங்கள் அதற்கு வழிகாட்டினீர்கள்” என்று கூறி உருகினார்.

அபிராமிபட்டர் அம்பிகையின் திருவருளை எண்ணி உருகினார். “தாயே ! நீ எப்படி யெல்லாம் என்னை ஆட்டுவிக்கிறாய்!” என்று துதித்தார்.

கூட்டிய வாஎன்னைத் தன் அடி
யாரில்; கொடியவினை
ஓட்டிய வாஎன்கண் ஓடிய
வா! தன்னை உள்ளவண்ணம்
காட்டிய வா! கண்ட கண்ணும்
மனமும் களிக்கின்றவா !
ஆட்டிய வாநடம்! ஆடகத்
தாமரை ஆரணங்கே!

[பொற்றாமரையில் எழுந்தருளிய தேவி, என்னைத் தன் அடியார்களில் ஒருவனாகச் சேர்த்தியவாறு என்ன வியப்பு!என் கொடிய பாவங்களை ஓட்டியவாறு என்ன ஆச்சரியம்! எனக்கு அருள் செய்யும் பொருட்டு என்னிடம் ஓடிவந்தவாறு என்னே தன்னை உள்ளபடி நான் தரிசிக்கும் வண்ணம் காட்டி யருளியது என்னே! அப்பெருமாட்டியின் தரிசனம் செய்த என் கண்ணும் மனமும் களிக்கின்றவாறு என்னே! என்னைத் தேவி கூத்தாட்டியவாறு என்ன வியப்பு! ]

என்று பாட்டு வந்தது. அரசர் அங்கேயே அமர்ந்து விட்டார். அபிராமியின்மேல் அதுகாறும் 80 பாடல்கள் நிறைவேறி யிருந்தன. “மற்றவற்றையும் நிறைவேற்ற வேண்டும். அவற்றை நான் கேட்கும்படி கிருபை பாலிக்க வேண்டும் ” என்று வேண்டிக் கொண்டார் மன்னர். அப்படியே அபிராமி பட்டர் மேலே இருபது பாடல்கள் பாடி அபிராமி அந்தாதியை முடித்தார்.

அரசர் விடைபெற்றுச் சென்றார்; பிறகு தஞ்சைக்குப் போனார். அபிராமி பட்டரும் அவருடைய பரம்பரையினரும் பெறும் வண்ணம் சில நிலங்களை வழங்கினார். அபிராமிபட்டர் அபிராமியின் தியானத்தில் மாறாமல் நின்றார். அவர் பாடிய அந்தாதி பக்தர்கள் உள்ளத்தில் இன்றும் நின்று நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *