
சித்தி வேழம்
அரண்மனை வாசலில் யானையைக் கட்டியிருப்பார்கள். அரனுடைய மனையாகிய கோயிலிலே கூடத் திருவாசலில் ஒரு யானை இருக்கிறது. அரண்மனை வாசல்யானை மதம் கொள்ளும்; துதிக்கையாகிய ஒரே கையை உடையது. அரன் கோயில் வாசலில் உள்ள யானை மதத்தை அழிப்பது; ஐந்து கைகளை உடையது. அந்த யானை கடவுள் வரிசையைச் சேர்ந்தது. கணபதியாகிய ஆனைமுகக் கடவுளே அந்த யானை.
சைவர்கள் எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கிவிட்டே செயலிற் புகுவது வழக்கம். நூலாசிரியர்கள் சைவர்களாக இருந்தால் கணபதிக்கு ஒரு துதி பாடி விட்டுப் பின்பு நூலை நடத்துவார்கள். வேறு வகையிலும் விநாயகருடைய துதிகளாகப் பல பாடல்கள் தமிழில் இருக்கின்றன. அவை புலவர்களின் கற்பனைக்கும் கவியாற்றலுக்கும் ஏற்றபடி வெவ்வேறு சுவையுடன் அமைந்திருக்கும்.
ஒரு புலவர் சித்தி விநாயகராகிய யானையைப் பாடித் துதிக்கிறார். அவரை நேரே துதிக்காமல், ‘சித்தி விநாயகக் கடவுளை வணங்கிப் பாவங்களைப் போக்கிக் கொள்வோம்’ என்று படர்க்கையில் வைத்துச் சொல்கிறார்.
சித்தி விநாயகரைச் சித்தி வேழம் என்று அவர் பாடுகிறார். விநாயகக் கடவுள் யானை முகத்தை உடையவரே யானாலும், உம்புக்குள் சிறந்ததாகிய முகத்தைக் கொண்டு அவரை யானையென்று கூறுவது வழக்கமாகிவிட்டது. புலவர் விநாயகரை யானையென்று சும்மா சொல்லி விடவில்லை. யானை கட்டும் கூடம், அதைக் கட்டும் தறி, சங்கிலி, அதற்கு இடும் கவளம் ஆகியவற்றோடு கொண்டுவந்து நிறுத்து கிறார்.
இந்த யானை உலகத்தில் உள்ள யானையைப் போல, மனிதன் கட்டிய யானைப் பந்தியில் வளர்வது அன்று. இது மிகப் பெரிய யானைதான். ஆனாலும் மிகச் சிறிய இடத்திலும் நுழைந்து கொள்ளும். இதற்குப் புதிய கூடத்தைக் கட்ட வேண்டும் என்பது இல்லை. இருக்கிற இடத்தைக் கொடுத்தாலே போதும். அன்பர்கள் தம்மிடம் உள்ள சிறிய இடத்தில் இந்த யானையைக் கட்டிப் போடுகிறார்களாம். அந்தக் கூடம் எது தெரியுமா? அன்பினால் நினைக்கும் உள்ளந்தான். உள்ளம் சிறிதா, பெரிதா? அது நுட்பமாக இருப்பதால் சிறியதென்றே சொல்ல வேண்டும். அணு என்று தர்க்க நூல் கூறுகிறது. ஆனால், அது கொள்ளுகிற ஆசையைப் பார்த்தால் அதற்குச் சமமான விரிவை உடைய பொருள் ஒன்றுமே இல்லையென்று தோன்றுகிறது.
உள்ளமாகிய கூடத்தில் அன்பர்கள் சித்தி வேழத்தை வளர்க்கிறார்கள். அதைக் கட்டுவதற்கு ஒரு முளை வேண்டும் அல்லவா? விடாமுயற்சியாகிய முளையை அடிக்கிறார்கள். அந்த முளையிலே கட்டிப் போடச் சங்கிலி வேண்டும். இந்த யானை மிகவும் விருப்பத்தோடு கட்டப்படும் சங்கிலி ஒன்று இருக்கிறது. அது அன்பு. அன்பு இருந்தால் தான் இந்த வேழத்தைக் கட்டலாம். உள்ளமாகிய கூடத்தில் ஊக்கமாகிய தறியை நட்டு, அன்பென்னும் சங்கிலியினால் சித்தி வேழத்தைக் கட்டிப் போடுகிறார்கள் அன்பர்கள்.
உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும் தறிநிறுவி
உறுதி யாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி
இடைப்படுத்தி.
அன்பு என்னும் சங்கிலித் தொடரை அந்த யானையால் தள்ள முடியாதாம். அதனால் அதை உறுதியாகக் கட்டி விடலாமாம்.
யானைக்குக் கூடம் கட்டி முளையடித்துச் சங்கிலியால் பிணித்துவிடலாம். சாது யானையாக இருந்தால் இப்படிச் செய்வது எளிதாக இருக்கும். ஆனால், வேறு ஒரு சங்கடம் இருக்கிறது. சாதுவான யானையால் யாருக்கும் தீங்கு இல்லை. அது கட்டுத்தறியை முறிக்காது. மதம் கொள்ளாது. ஆனால், அது தீனி தின்னாமல் இருக்க முடியாதே! ‘ஆனையைக் கட்டித் தீனி போட ஆராலே முடியும்?’ என்று ஒரு பழமொழி வழங்குகிறது. ஏழைக்கு ஒரு யானையைப் பரிசாக அளித்து விட்டால், அதைக் காட்டிலும் துன்பம் வேறு வேண்டாம் அவனுக்கு.
ஒரு புலவன் மிக்க வறுமையினால் ஓர் அரசனிடம் போய் அவனைப் பாடினான். “நாள்தோறும் உண்ணும் உணவுக்கே வழி இல்லாமல் திண்டாடுகிறேன்” என்றானாம். அந்த அரசன் அவனை உபசரித்துச் சில நாள் வைத்திருந்து, ஊருக்குப் போகும் போது ஒரு யானையை வழங்கி, “இதைக் கொண்டு போம்” என்றானாம். அதைக் கண்டவுடன் புலவனுக்கு வியப்பும் அச்சமும் உண்டாயின. “எனக்கா இந்த யானை?” என்று கேட்டான். “ஆம்” என்றான் அரசன். “நான் ஒரு வாய்க்கே சோறு இல்லாமல் திண்டாடுகிறேன். இந்த நால்வாய்க்கு உணவு தேடி எப்படிக் கொடுப்பேன்!” என்றான் புலவன். நால்வாய் என்பதற்கு யானை என்று பொருள். தொங்கும் வாயையுடைமையால் அந்தப் பெயர் வந்தது. நான்கு வாய்கள் என்ற பொருள் உடையதைப் போலவும் அந்தப் பெயர் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு புலவர் நயமாகப் பேசினார். அதைக் கேட்ட மன்னன், உடனே உணவுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தானாம்.
யானைக்கு உணவளித்துப் பாதுகாப்பது எவ்வளவு அருமை என்பதை இந்தக் கதை தெரிவிக்கிறது.
இந்தச் சித்தி வேழத்துக்கு யார் தீனி போடுவது? பிள்ளையாருக்குத் ‘தொப்பையப்பன்’ என்பது ஒரு பெயர். எத்தனை நிவேதனம் செய்தாலும் வாரிச் சுருட்டி வயிற்றுக்குள் திணிக்கும் இயல்புடையவர் அவர். அவருக்கு உணவு போட்டுக் கட்டுமா?
சித்தி வேழத்தைக் கண்டு அப்படி அஞ்சவேண்டிய தில்லையாம். அதற்குக் கவளமாகக் கொடுக்க நாம் எதையும் தேட வேண்டியதில்லை. இருக்கிற பொருளையே கொடுக்கலாம். நம்மிடம் மிகுதியாக இருக்கும் பொருளைக் கொடுத்தால் மகிழ்ந்து உண்ணும் இந்த யானை.
நம்மிடம் இருக்கும் அந்தப் பொருளால் நமக்கு இன்பம் இல்லை; துன்பந்தான் விளைகிறது. உண்மையைச் சொல்லப் போனால் அந்தப் பொருள் நம்மிடம் இருப்பதனால்தான் நமக்கு எல்லா வகையான துன்பங்களும் விளைகின்றன. மேலும் மேலும் பிறந்து பிறந்து சாவதற்குக் காரணமே அந்தப் பொருள்தான். அதற்குப் ‘பசுபோதம்’ என்று பெயர். நம்மை அறியாமல் நம்மிடம் இருந்து பல தீவினைகளைச் செய்யச் செய்து அலைக்கழிக்கிறது. இறைவனை உணரமாட்டாமல், இந்த உலக வாழ்வே நித்தியம் என்று நினைக்கச் செய்கிறது. செம்பிலே களிம்பு இருப்பது போல நம்மிடம் இது இருக்கிறது. இது கழன்று போனால் நமக்கு இன்பம் உண்டாகும். இந்தக் கள்ள வினைப் பசு போதத்தையே, சித்தி வேழத்துக்கு கவளமாக இட்டுவிட்டால் இரண்டு நன்மைகள் உண்டாகின்றன. ஒன்று, நமக்குத் துன்பம் தரும் பொருள் நம்மை விட்டுப் போகிறது;மற் றொன்று, சித்திவேழத்துக்குக் கவளம் கிடைக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவது போன்ற செய்கை இது.
‘இதென்ன, வேடிக்கையாக இருக்கிறதே! அழுகற் பழம் ஐயருக்கு என்பது போல, நமக்கு வேண்டாதது ஒன்றை விநாயகருக்குக் கொடுப்பதாவது? அதனால் அவருக்குக் கோபம் பிறக்காதா? கவளம் இடும்போது கல்லையிட்டால் யானை நெடுநாள் வைத்திருந்து இட்டவனைச் சாடும் என்று கேட்டிருக்கிறோமே! நமக்கு வேண்டாத, அழுக்கான பண்டத்தைச் சித்தி வேழம் ஏற்றுக்கொள்ளுமா?’
இவ்வாறு பல கேள்விகள் எழுவதற்கு இடம் உண்டு. ஆனால் உண்மையாக, நமக்குத் தீங்கு பயக்கின்ற கள்ளமாகிய வினைகளுக்குக் காரணமாகிய பசுபோதத்தை (சிற்றறிவை)க் கவளமாக்கி விட்டால் இந்த யானை மகிழ்ச்சியோடு உண்ணும். ‘இவனுக்கென்று வேறு ஒன்றும் சொந்தமாக இல்லை. பல காலமாக இவன் வைத்திருப்பது இந்த அழுக்கு மூட்டைதான். இதை விடாமல் பற்றிக் கொண்டிருந்தான். இப்போது அந்தப் பற்றை நீக்கிக் கொடுத்துவிட்டானே! என்று எண்ணிக் களிப்புடன் உண்ணுமாம்.
நல்ல உணவை மிகுதியாக உண்டு வளரும் களிற்றுக்குக் கொழுப்பு அதிகமானால் மதம் உண்டாகும். அந்த மதம் பிறருக்குத் தீங்கை உண்டாக்கும். இந்தத் தெய்வ யானையும் நாம் அளிக்கும் பசுபோதக் கவளத்தை உண்டு களிப்பை அடையும்; அதனால் அதற்கும் மதம் வெள்ளம் போல உண்டாகும். அது கருணை யென்னும் மதம். கருணையினால் நமக்கு நன்மையே யன்றித் தீங்கு இல்லை.
……தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணை என்னும்
வெள்ளதம் பொழிசித்தி வேழம்.
(தறுகட்பாசக் கள்ள வினைப் பசுபோதம் – கொடுமையை யுடைய பாசமாகிய கள்ளத் தன்மையை யுடைய வினைக்குக் காரண மாகிய ஜீவபோதம்: சிற்றறிவு அல்லது அறியாமை.)
நாம் அளிப்பது, நமக்குக் கொடுமையைச் செய்யும் அழுக்குப் பண்டம். அதைப் பெற்றுக்கொள்வதோடு மிகவும் உவகையை அடைந்து அந்த யானை தருவதோ, நமக்கு எல்லா நன்மைகளையும் அளிக்கும் கருணை! இப்படியும் நடக்குமா?
இதில் வியப்பு ஒன்றும் இல்லை. உயர்ந்த சாதி ரோசாச் செடியை ஒரு தோட்டத்தில் ஒருவன் வளர்க்கிறான். அதற்கு நாற்றமுள்ள எருவைக் கொண்டுவந்து போடுகிறான். அதனை ஏற்றுக்கொண்ட அச் செடி மிகவும் மணமான மலரை அளிக்கின்றது. ‘நான் இன்ன எரு வைத்தேன்; செடி பூத்துக் குலுங்குகிறது’ என்று தோட்டக் காரன் மகிழ்ச்சியுடன் சொல்கிறான். ஓரறிவுடைய செடிக்கு நமக்குப் பயன்படாத நாற்றப் பொருளை அளித்தால், நேர் மாறான மணமுள்ள மலரை அது நமக்கு அளிக்கிறது. அப்படியானால், ஞானமயமான கணபதி நாம் அளிக்கும் பசு போதத்தைப் பெற்று, நமக்குக் கருணையைத் தருவதில் என்ன வியப்பு இருக்கிறது?
உள்ளமெனும் கூடத்துள் ஊக்கமெனும்
தறிநிறுவி உறுதி யாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி
டைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைந்து வரு வினைகள் தீர்ப்பாம்.
[நினைந்து – தியானம் செய்து. வருவினைகள் – வருகிற பாவத்தின் விளைவுகளை தீர்ப்பாம் – போக்குவோமாக.]
இது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற் புராணத்தில் வரும் பாட்டு.


