
கன்னிக்குமரி
நீலத்திரைக்கடல் ஓரத்திலே-நின்று
நித்தம் தவம் செய்குமரி எல்லை
என்றே தமிழ் நாட்டின் தெற்கெல்லையைக் குறிப்பிடுகிறார் பாரதியார். அந்தக் குமரி முனையிலே தான் அன்னை பகவதி கன்னியாக நின்று தவம் செய்து கொண்டிருக்கிறாள். இந்த அம்மை பகவதி யைப்பற்றி எத்தனையோ ரஸமான கதைகள். பரத கண்டத்தையே ஆண்ட ஆதிப் பரத மன்னனது புதல்வர் எட்டுப்பேர்; ஆனால் குமரி என்று ஒரே புதல்வி. ஏழு அண்ணன்மாருக்கு ஒரு தங்கை வள்ளி என்றால், எட்டு அண்ணன்மாருக்கு ஒரு தங்கையாகக் குமரி பிறக்கிறாள், வளர்கிறாள். எட்டு ஆண் மக்களுக்கும் ஒரு பெண் மகளுக்கும் நாட்டைப் பங்கிட்டுக் கொடுக்கிறான் பரதன். குமரி இருந்து ஆண்ட இடமே இன்றைய குமரிமுனை என்கிறது ஒரு கதை.
அன்னை செய்யும் தவத்தைக் குறித்தும் ஒரு புராணக்கதை. வாசுதேவரையும் தேவகியையும் கம்சன் சிறையில் அடைத்து விடுகிறான். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை யெல்லாம் கொன்று தீர்க்கிறான், அப்படிப்பிறக்கும் குழந்தை ஒன்றினாற் தான் அவனுக்கு மரணம் என்று சோதிடர்கள் கூறிவிடுவதால். ஏழு குழந்தைகளை இப்படிப் பலியாகக் கொடுத்த தேவகிக்குக் கண்ணன் பிறக்கிறான் சிறையில். வசுதேவருக்கு இந்தப் பிள்ளையைக் காப்பாற்றவேண்டும் என்று தோன்றுகிறது. இரவோடு இரவாக யமுனையைக் கடந்து, கோகுலத்தில் யசோதையிடம் கண்ணனைச் சேர்த்து விடுகிறார். அங்கு பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் பக்கத்தில் விட்டு விடுகிறார். கம்ஸன் வந்து இந்தப் பெண் பிள்ளையே, தேவகியின் குழந்தை என்று எண்ணி அதனைக் கொல்ல முயல்கிறபோது, அந்தத் தெய்வக் குழவி அவனை இகழ்ந்து உதைத்துத் தள்ளிவிட்டு அந்தரத்திலே மறைகிறது. இப்படி மறைந்த குழந்தையே திருமாலின் தங்கையான எல்லாம் வல்ல சக்தி. அந்தச் சக்தியே பகவதி என்னும் திருநாமத்தோடு இந்தத் தென் சமுத்திரக்கரையில் நின்று, கையில் இலுப்பைப்பூ மாலை தாங்கி சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்கிறவள். என்றும் கன்னியாக-குமரியாக இருந்து தவம் செய்யும் பகவதியைத்தான் இன்றும் குமரி என்று வந்தித்து வணங்குகிறோம்.
இதை யெல்லாம் தூக்கியடிக்கும் வேறொரு கதையும் உண்டு. பாகன் மூகன் என்று இரண்டு அசுரர்கள் தேவர்களுக்கு இடுக்கண் செய்கிறார்கள். தேவர்கள் முறையிட இறைவன் தன்னுடைய சக் தியை இரு கூறாக்கி இரண்டு பெண் தெய்வங்களாக உருவாக்குகிறார். வட கோடியில் கங்கைக்கரையில் காளியாகவும், தென் கோடியில் கடற்கரையில் குமரியாகவும் இரு சக்திகளும் நின்று நம்மைக் காக்கின்றன. பாகனுடனும் மூகனுடனும் போர் புரிந்து வெல்கிறார்கள். தேவர்கள் இடுக்கண் தீர்கின்றன.
தாணு, மால், அயன் என்ற திரிமூர்த்திகளும் இணைந்த ஒரு மூர்த்தியாக, சிவபெருமான் கோயில் கொள்கிறார் சுசீந்திரம் என்னும் தலத்தில். இந்த மூர்த்தி அன்னை பகவதியின் அழகைப் பற்றிக் கேள்விப் படுகிறார். அத் தலத்தில் உள்ள கன்னி அம்பலத்தில் தேவர்களை எல்லாம் கூட்டித் தன் கருத்தை வெளியிடுகிறார். குமரி செய்யும் தவத்தால் மகளிர் இனமே உய்யும் என்றாலும், இறைவன் விருப்பத்திற்கு எதிர் சொல்லத் துணிவில்லை. ஆனால் நாரதருக்கு மட்டும் இத் திருமணத்தை இடைநின்று தடுத்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் குமரியை மணம் பேசச் செல்கிறார். குமரியின் சம்மதத்தையும் பெற்று வருகிறார். வந்தவர் திருமணம் நடக்க ஒரு பெரிய நிபந்தனையையும் போடுகிறார். பெண்ணுக்குப் பரிசமாகக் சாம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு, கண் இல்லாத தேங்காய் இப்படி இன்னும் பல பொருள்களைக் கொண்டு வர வேண்டும் என்கிறார். அத்துடன், திருமண முகூர்த்தம் சூரிய உதயத்தில் என்றும், அதற்கு ஒரு நாளிகைக்கு முன்னமேயே மணமகன் மணவறைக்கு வந்துவிட வேண்டும் என்றும் நிபந்தனை. இறைவன் இதற்கெல்லாம் அஞ்சவில்லை. கேட்ட பொருள்களை எல்லாம் வண்டி வண்டியாக முன் கூட்டியே அனுப்பி வைக்கிறார். ஐந்து மைல் தூரத்தைக் கடக்க அர்த்தராத்திரியே புறப்பட்டுவிடுகிறார். ஆனால் இந்த நாரதர் பார்த்தார். அவர் திருமண மண்டபம் வந்து சேரும் முன்பே சேவல் உருவெடுத்துச் சூரிய உதயத்தை அறிவிக்கும் உதயராகத்தை- கொக்கரக்கோ-கோ என்று கூவி விடுகிறார். சரி விடிந்து விட்டது முகூர்த்த நேரம் தவறிவிட்டது என்ற அவமானத்தோடு சுசீந்திரத்திற்கே திரும்பி விடுகிறார் இறைவன். இப்படி பகவதி-தாணுமாலயன் திருமணம் தடைப்பட்டு விடுகிறது. அன்னை பகவதியோ என்றும் கன்னியாக கிழக்கு நோக்கி தவக் கோலத்தில் நின்றுவிடுகிறாள். அவளுக்கு வந்த பரிசுப் பொருள்களான பொன்னும் மணியும், நெல்லும் கரும்புமே இன்றும் குமரிக் கரையில் பல நிற மணலாகவும், பலவிதக் குன்றுகளாகவும் பரந்து கிடக்கின்றன.
என்ன அழகான கதை. அன்னைக்கும் அத்தனுக்கும் தலம் தோறும் திருக்கல்யாணம் நடத்தி அந்தக் கல்யாண கோலத்தை எல்லாம் கண்டு மகிழ்ந்த தமிழன். அன்னையைத் தவக் கோலத்திலேயே நிறுத்திப் பார்க்க எண்ணுகிறான். கணவன் மனைவி பிள்ளை குட்டிகள் என்று ஏற்பட்டு விட்டால் அன்னைக்கு உலக மக்களைப்பற்றி அவர் தம் குறை களைப்பற்றி யெல்லாம் கவலைப்பட நேரம் ஏது? ஆதலால் அவள் கன்னிப் பெண்ணாக, எண்ணியதை எல்லாம் பெறும் தவம் செய்யும் தெய்வமாக இருந்தால், வேண்டுவோர் வேண்டுவன எல்லாம் கொடுக்க இயலும் அல்லவா? அதற்கு வேண்டிய அன்பையும் அருளையும் அவள் செய்யும் தவமே அவளுக்குக் கொடுக்கும் அல்லவா? ஆதலால் அன்னை பகவதி என்றும் கன்னியாக, அழகான குமரிப் பெண்ணாகவே நின்று தவம் செய்து மக்களுக்கு அருள் புரிகிறாள் என்பது கலைஞன் கற்பனை. அதிலும் நாட்டின் தென் கோடியில் கிழக்கு நோக்கி நின்றாலும் அவள் கடைக்கண் நோக்கு வட இமயம் வரை நீண்டு செல்கிறதல்லவா? அதனால் நாடு முழுவதுமே செழிப்புற்று நாட்டு மக்கள் எல்லாம் நலம் பெறுகிறார்கள் என்பதுதானே கருத்து.
இக் குமரித்துறை கங்கைத் துறையைப் போலும், காவிரித் துறையைப் போலும் புனிதமானது. அதனால் அப்பர்
கங்கை ஆடில் என்?
காவிரி ஆடில் என்?
பொங்கு நீர்க் குமரித்
துறை ஆடில் என்?
எங்கும் ஈசன்
எனாதவர்க்கு இல்லையே
என்று பாடுகிறார். எங்கும் ஈசன் இருக்கிறான் என்று நம்புபவர்கள் தான் கங்கையையும், காவிரியையும் ஏன் குமரியையுமே போற்றக் கூடும். அத் துறை களில் உள்ள இறைவன் இறைவி திரு உருவங்களை வணங்கி அருள் பெறுதலும் கூடும்.


