
கடவூர் அபிராமி
மார்க்கண்டன் கதை பிரசித்தமானது. பதினாறு வயது வரையே வாழும் வரம் பெற்ற சிறந்த புதல்வனை மிருகண்டு முனிவன் இறை அருளால் பெறுகிறான். அந்தப் புதல்வன் மார்க்கண்டன் பதினாறு வயது முடிகிறபோது, கடவூருக்கு வருகிறான். அங்குக் கோயில் கொண்டுள்ள அமிர்த கடேசுவரரை லிங்கத்தில் ஸ்தாபித்து பூசை செய்கிறான். அவன் அப்படிப் பூசை செய்து கொண்டிருக்கும் போது குறித்த பதினாறு வயது நிரம்பி விடுகின்றது. வந்து விடுகிறான் காலன். மார்க்கண்டன் மீது பாசக்கயிற்றையும் வீசுகின்றான். ஆனால் மார்க்கண்டனோ, தான் பூஜித்த லிங்கத்தையே கட்டிப் பிடித்துக் கொள்கிறான். அப்போதும் விடுகிறானில்லை காலன். இறைவனுக்கோ காலன் மேல் கடுங்கோபம். ‘எந்த நியதிக்கும் விதிவிலக்கு என்பது கிடையாதா? என்னையே கட்டிப் பிடித்திருக்கிற நேரத்திலுமா இவன் தன் கடமை தவறாது அவன் உயிர் கவர வரவேணும்’ என்று எண்ணுகிறான். லிங்கத்திலிருந்தே கிளம்பி எழுந்து காலனை எட்டி உதைத்து விலக்குகிறான். இப்படிக் காலனைக் காய்ந்த காலசம்ஹாரர் கடவூரில் பிரதான மூர்த்தியாக இன்று விளங்குகிறார். இறைவன் தன் சக்தியை எல்லாம் வெளிப்படுத்திய வீரட்டத் தலங்கள் எட்டு. அவைகளில் எல்லாம் மிக்க சிறப்பு வாய்ந்தது திருக்கடவூர்.
ஆனால் இங்குள்ள கால சம்ஹாரரையும் விட மிக்க புகழ் பெற்றவராக அங்குக் கோயில் கொண்டிருப்பவள் தான் அன்னை அபிராமி. ஆயுள் விருத்தியை விரும்புபவர், காலனைக் காய்ந்த கடவூர் உறை உத்தமனை வழிபட்டால், வாழ்க்கையில் இடர் பட்டு இன்னல் உறுபவர்கள் எல்லாம் உத்தமியாம் அபிராமியை வழிபடுகிறார்கள். சரஸ்வதி தேவியே அன்னை அபிராமியைப் பூஜித்து அருள் பெற்றாள் என்றாள் அதிகம் சொல்வானேன்?
இந்த அபிராமி இடத்திலே அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் ஒரு பட்டர். பக்தி முற்றி உன் மத்தராகவே ஆகிவிடுகிறார். இதைக் கண்டு அர்ச் சகர்கள் எல்லாம் அவரை வெறுக்கிறார்கள். இவர் ஒரு நாள் அபிராமியின் சந்நிதியில் அமர்ந்து அன்னையை வழிபட்டுக் கொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் தஞ்சையில் இருந்து அரசு புரிந்த மராத்திய மன்னன் காவேரி சங்கம ஸ்நானம் முடித்துவிட்டுக் கடவூருக்கு வருகிறான். கோயிலுள் நுழைந்து அங் குள்ள இந்தப் பட்டரைப் பார்த்து, இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை வரை இருக்கிறது என்று கேட்கிறான். எங்கோ ஞாபகமாக இருந்த பட்டர், இன்று பௌர்ணமி அல்லவா ? என்று எதிர் கேள்வி போடுகிறார். அரசன் பக்கத்தில் இருந்த மற்றைய பட்டர்கள் இதுதான் சமயம் என்று, இவன் ஒரு பயித்தியக்காரன். அரசரிடமே நிறைந்த நாளாம் அமாவாசையைப் பௌர்ணமி என்கிறானே என்று தூபம் போடுகின்றனர். பட்டர் விழித்துக் கொள்கிறார்; உடன் தான் செய்த தவறை உணர்கிறார்.
ஆனால், அன்னை அபிராமி பிழையெல்லாம் தவிர்க்கப் பணிப்பவள் அல்லவா ? அவளேதான் இதற்குப் பரிகாரம் தேட வேண்டும் என்று எண்ணுகிறான். அபிராமியின் அருளால் பட்டர் பாடவே ஆரம்பித்து விடுகிறார் :
உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்
உணர்வு உடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்
போது மலர்க் கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்
குங்குமம் தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத்துணையே
என்ற முதற் பாடல் உதிக்கின்றது அவரது நாவிலே. பாடல்கள் வளர்ந்தோங்கிக் கொண்டே செல்கின்றன. எழுபத்து எட்டுப் பாட்டுக்கள் முடிகின்றன. இப்படி எழுபத்து ஒன்பதாவது பாட்டு:
விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்
பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்
தம்மோடு என்ன கூட்டுஇனியே
என்று அவர் பாடி முடித்தாரோ இல்லையோ. அவர் தன் நம்பிக்கையை இழந்துவிட அபிராமி விரும்பவில்லை. அந்த மாலை நேரத்திலே தன் காதிலிருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்திலே வீசி எறிந்து விட்டாள். அந்தத் தாடகமே வான வீதியிலே பூரண சந்திர வடிவமாகக் காட்சி அளிக்கிறது. ஆம். அமாவாசை அன்றே பௌர்ணமி நிலவு உதிப்பதைக் கண்டு அரசன் அர்ச்சகர்கள் எல்லாம் வியக்கின்றனர். பட்டரின் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரது மன்னிப்பை வேண்டுகின்றனர். அவரோ அபிராமியின் அருளை நினைந்து, நினைந்து மேலும் மேலும் பாடுகிறார். நூறு பாட்டுக்கள் பாடித் தான் தன் அந்தாதித் தொடையை முடிக்கிறார். இப்படி இவர் பாடிய பாடல்கள் தான் அபிராமி அந்தாதி. அன்று முதல் இந்தப் பட்டரே அபிராமி பட்டர் என்றும் பெயர் பெற்று விடுகிறார். பாடல்கள் எல்லாம் மிகவும் அருமையானவை. தேவியைத் தொழுவதற்கு ஏற்ற பாசுரங்களாக அமைந்தவை. இன்னலுற்று இடர்படுவார் இந்தப் பாடல்களைப் பாடி அன்னை அபிராமியை வழிபட்டால் எல்லா நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை. அபிராமியின் கடைக் கண் நோக்கினால் மக்கள் பெறும் பேறுகள்தான் எத்தனை எத்தனை. அதையுமே சொல்கிறார் அபிராமி பட்டர்:
தனந்தரும் கல்வி தரும்,
ஒருநாளும் தளர்வு அறியா
இனந்தரும் தெய்வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவருக்கே
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே
என்பதுதான் அந்தப் பாட்டு.
அன்னை அபிராமியின் திருஉருவம் மிகவும் அழகு வாய்ந்தது. மூன்றடி உயரத்திலே அழகான தொரு பீடத்திலே நான்கு திருக் கரங்களோடு நின்று கொண்டிருக்கிறாள். அபயம் வரதம் முத்திரைகள் தாங்கிய இரண்டு கைகள் போக மற்றைய இரண்டு கரத்திலும் மாலையும் மலரும் தாங்கி அழகொழுக நிற்கிறாள். என்றைக்குமே அவள் அலங்காரம் பிரமாதம்தான். அதிலும் சோமவாரத்திலும் சுக்கிரவாரத்திலும் அவள் திருக்கோலம் பன் மடங்கு பல்கிப் பெருக அலங்கரித்து மகிழ்கின்றனர். சின்னஞ்சிறு பெண்ணாய், வழிபடும் அடியவர் துயர் துடைக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்னையாய் அவள் காட்சி கொடுப்பாள் பக்தர்களுக்கெல்லாம். இப்படி எல்லாம் அருளாட்சி செய்து அன்பர் துயர் துடைக்கும் தேவியாக இருப்பதனால்தான் கரும்பினிற் கட்டி போன்ற கடவூர் வீரட்டைனாரை விடவும் புகழ் பெற்றவளாக விளங்குகிறாள். இந்தக் காலத்தில் யார் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். இருக்கின்ற நாட்களில் நோய் நொடியில்லாது, இன்னல் இடர் இல்லாமல் வாழ்வதைத்தானே விரும்புவார்கள். ஆம் அதை அருளுபவள்தானே அன்னை அபிராமி.


