
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
பிள்ளையார் பட்டியில் அமைந்துள்ள விநாயகர் திருவுருவத்துக்குச் சில சிறப்பியல்புகள் உண்டு. இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து, அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித் தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர், இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். அங்குசமும் பாசமும் இல்லாமலே அடியவரை ஆட்சி கொள்ளும் சக்தி உடையவராக இருக்கிறார். வயிற்றை ஆசனத்தில் படியவிடாமல் அர்த்த பத்மாசனத்திலேயே கால்களை மடித்திருக்கச் செய்து கொள்கிறார். வலக் கரத்தில் மோதகம் தாங்கி, இடக்கரத்தை இடையில் பொருத்தி பெருமிதத் தோற்றத்தோடு காட்சி கொடுக்கிறார். ஆம், ஆதிநாளிலே இப்படி இரண்டு திருக்கரத்தோடு உருவானவர்கள் தான், பின்னர் நான்கு திருக்கரங்களோடு எழுந்து நின்று, நடந்து நடமாடி மூஷிகத்திலும், சிம்மத்திலும், ஏறிச் சவாரி செய்பவராகக் கலைஞன் சிந்தனையிலே வளர்ந்திருக்கிறார். இந்த பிள்ளையாரைப் பற்றித்தான் எத்தனை எத்தனை கதைகள். சிவபுராணம், விநாயக புராணம், காஞ்சிப் புராணம் முதலிய நூல்களில், ஒரு சில கதைகள் ரஸமானவை; நல்ல அனுபவத்தின் அடிப்படையிலே உருவானவை; சிறந்த உண்மைகளை உணர்த்துபவை.
நம் நாட்டின் இதிகாசங்கள், இராமாயணம், பாரதம் என்பதை எல்லோரும் அறிவர், பாரதத்தை இயற்றியவர் வியாசர் என்பதையும் தெரிவோம். அந்த வியாசருக்குக் கற்றுச் சொல்லியாக அமைந்து பாரதத்தையே எழுதியவர் விநாயகர் என்பது வரலாறு. பாரதத்தை எழுதத் திட்ட மிட்டார் வியாசர்.
அதை அவர் சொல்லும் வேகத்தோடு வேகமாய் விரைவாய் எழுத வேண்டுமே. அதற்கு ஒரு ஆள் தேடினார். நல்ல அறிவுடைய பிள்ளை, ஆற்றல் மிகுந்த பிள்ளை, விநாயகரையே தேர்ந்தெடுத்தார். எண்ணா யிரத்து எண்ணுறு சுலோகங்கள் விரைவாகச் சொல்லிக் கொண்டே போனார் வியாசர் எழுதிக் கொண்டே வந்தார் வினாயகர். இடையே எழுதும் கோல் கூர் மழுங்கி எழுத்து வேகம் தடைப்பட்டது.
ஆனால் ஏகாக்கிர சித்தத்தோடு சுலோகங்களைச் சொல்லிக் கொண்டு வந்த வியாசரோ நிறுத்தவில்லை. வினாயகரோ அவரது உணர்ச்சி வேகத்தைத் தடை செய்ய விரும்பவில்லை. எழுத்தாணி கூர் மழுங்கியதை அப் படியே துர எறிந்து விட்டு, தன்னுடைய கொம்புகளில் ஒன்றையே ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டு தொடர்ந்தே எழுதி முடித்தார் பாரதத்தை. நல்ல ரஸமான கதை. “சோர்வில்லாமலே எக்காலத்தும் பிள்ளைகள் படிக்கவும் எழுதவும் வேண்டும்” என்று எடுத்துக் காட்டும் நல்ல பிள்ளையாக அல்லவா பிள்ளையார் அமைந்து விடுகிறார். அதனால் தான் பிள்ளையார் இன்றும் பிள்ளைகளின் தெய்வமாகவே வாழ்கிறார், வணங்கப்படுகிறார்.
பிள்ளைகளுக்கு உகந்தவராக மட்டும் பிள்ளையார் இல்லை. நாட்டு மக்களுக்கும் நல்லவராக நடந்திருக்கிறார். “கங்கை யென்னும் கடவுள் திருநதியையே காவிரியாகத் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்தவரும் அதனால் நாடு நலம் பெறச் செய்தவரும் அவரே தான். கதை இது தான்.
கயிலை மலையிலே திருக்கல்யாணம், பார்வதி தேவிக்கும், பரமசிவனுக்கும். தேவர்களும் மற்றவர்களும் திருமணம் காண கூடிவிட்டார்கள் அங்கே. அதனால் வட நாடு தாழ்ந்து தென்னாடு துக்கி விட்டது. நாடு சமன் செய்யப்பட வேண்டும் உடனே, என்று கருதினார் பரமசிவன். கல்யாணத்துக்கு வந்த விருந்தினர்களைத் திருப்பி அனுப்புவதோ இயலாத காரியம். ஆதலால் தன்னை யொத்த தவவலிமை உடைய அகத்திய முனிவரையே தென் திசை செல்லுமாறு பணித்தார்.
அகத்தியரும், புறப்படும் போது பரமசிவனது திரு முடியில் உள்ள கங்கையை தன் கமண்டலத்தில் ஏந்தி தன்னுடன் கொண்டு வர மறக்கவில்லை. வருகிற வழியில் நித்திய கர்மங்களை முடிக்க வேண்டி தன் கமண்டலத்தைத் தரையில் வைத்தார். சமயம் பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் இது தான் தக்க தருணம் என்று எண்ணி, காக உருவில் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். ஒடிப்பெருகியது கங்கை தமிழ் நாட்டில். காகத்தால் கவிழ்க்கப்பட்ட கங்கைதான் அன்று முதல் காவிரியானாள் தமிழ் நாட்டில். ‘காகம் கவிழ்த்த காவிரிப்பாவை’ எனப் பாடப்பெறும் பேறும் பெற்றாள். இதனால் நாடு வளம் உற்றது. சோழ வளநாடு சோறு பெற்றது. ஆம், எல்லாம் விநாயகர் அருளினால்தான்.
தமிழ் நாட்டில் பிள்ளையாரை வணங்கி வீடு பெற்றவர்கள் கதை அனந்தம் என்றாலும், வாழ்வோடு வாழ்வாக பிள்ளையாருடன் ஒட்டிக் கொண்டவள் ஔவைப் பிராட்டி. இளமையிலேயே பிள்ளையார் வணக்கம் அவள் உள்ளத்தில் ஊன்றி விட்டது.
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்.
என்று தமிழ் நாட்டுப் பிள்ளைகளுக்கெல்லாம் போதித்தவர் அவர் தான்.
“சீதக் களபச் செந்தா மரைப்பூவும்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடி கொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே”
என்றெல்லாம் பாடி விநாயக வணக்கத்தைத் தமிழர்கள் உள்ளத்தில் எல்லாம் ஊன்றச் செய்தவரும் அவரே தான். அவர் முக்தியடைந்ததும் அந்தப் பிள்ளையார் மூலமே தான். கதை நல்ல அற்புதமான கதை.
சேரமன்னர், சேரமான் பெருமாள் நாயனாரும், அவரது தோழர் சுந்தரமூர்த்தி நாயனாரும் நாட்டில் செய்ய வேண்டியவைகளை எல்லாம் செய்து முடித்த பின்னர், கயிலாயம் நோக்கிப் புறப்பட்டனர். இருவரும் சென்றனர் யானைமீதும், குதிரை மீதும் ஏறிக்கொண்டு. செல்லும் வழியில் ஔவையைக் கண்டனர். அந்த அம்மையையும் உடன் வர அழைத்தனர். அம்மையோ அப்போது விநாயகருக்குப் பூசை செய்து கொண்டு இருந்தார். நண்பர் களுடன் எளிதாகக் கயிலாயம் செல்லலாமே என்ற ஆசை ஔவையாருக்கு. ஆதலால் விரைவிலேயே பூசையை நடத்தி விட முனைந்தார். ஔவையாரின் அவசரத்தை அறிந்த பிள்ளையார் ‘ஏன் பாட்டி! இத்தனை அவசரம் இன்று?’ என்று கேட்டார். விஷயத்தைச் சொன்னார் ஔவையார். ‘அடடா அதுதானா? உன் நண்பர்களைப் போகச் சொல். அவர்கள் அங்கு செல்லுமுன் நான் உன்னைக் கைலாயம் கொண்டு சேர்க்கிறேன் என்றார். அவசரப்பட்ட சேரமானும் சுந்தரரும் சென்று விட்டார்கள். அம்மையும் நிதானமாகவே பூசை செய்தார். பூசை முடிந்ததும் அப்படியே அம்மையைத் தன் தும்பிக்கையாலேயே அநாயசமாகத் தூக்கி, கயிலாயத்திலே இறக்கி விடுகிறார் பிள்ளையார். ஔவையாரும் கைலாய வாசலிலே நின்று முன் சென்ற சேரமானையும், சுந்தரரையும் வருக! வருக!’ என வரவேற்கிறார். ‘எப்படி இந்த ஔவையார் தமக்கு முன் கயிலாயம் வந்து சேர்ந்தார்?’ என்று அறியாது திகைத்தனர் இருவரும்.
ஆம், பிள்ளையாரைப் பின் பற்றினால் கயிலாயம் சேர்வது எளிதாகவும் இருக்கும். விரைவாகவும் நடக்கும் என்று தெரிந்தனர், அவர்கள் இருவரும் அன்று. அதையே நாமும் தெரிந்து கொள்கிறோம் இன்று.
இன்னுமொரு கதை. சிதம்பரத்தை அடுத்த திருநாரை யூரிலே உள்ள பிள்ளையார் பொல்லாப் பிள்ளையார். பொல்லா என்பதனால் அவர் ஒரு பொல்லாத பிள்ளை அல்ல. சிற்றுளியால் பொள்ளப்படாத சுயம்பு மூர்த்தி என்பதனால் தான். அவரைப் பொள்ளாப் பிள்ளையார் என்று மக்கள் அழைத்தனர். நாளாவட்டத்தில் பொள்ளாப் பிள்ளை, பொல்லாப் பிள்ளையாகவே மாறிவிட்டார். உலக வழக்கில். ஆனால் இந்தப் பொல்லாப் பிள்ளை செய்த பொல்லாத வேலை காரணமாகவே, நமக்கு தெய்வம் மணக்கும் தேவாரப் பாக்கள் எல்லாம் கிடைத் திருக்கின்றன. திருநாரையூரிலே பிள்ளையாருக்குப் பூசை செய்து வந்தவர் ஒரு அந்தணர். ஒரு நாள் வெளியூர் செல்ல விரும்பியபோது தன் மகனைப் பூசை செய்யும் படி பணித்துவிட்டுச் சென்றிருந்தார். பிள்ளை என்னத்தைக் கண்டான்? பூசையை முடித்து, நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன் வைத்து அவர் அதை உண்ண வேண்டி னான். அசையாது கல்லுப் பிள்ளையாராக இருந்தார் பொல்லாப் பிள்ளையார். பார்த்தான் அந்தணச் சிறுவன். ‘உண்ணுகின்றீரா, இல்லாவிட்டால் உமது திருவடியிலே என் தலையை மோதி உடைத்துக் கொள்ளவா?’ என்றான். இப்படிச் சும்மா பயங்காட்டவில்லை. உண்மையாகவே தன் தலையை மோத முனைந்து விட்டான்.
பார்த்தார் பிள்ளையார். தும்பிக்கையை நீட்டி, வாயைத் திறந்து அவன் தந்த நைவேத்தியத்தை எல்லாம் வாங்கி வாங்கி உண்டார். இதை, ஊர் திரும்பிய தந்தை நம்பவில்லை முதலில். மறுநாள், நிகழும் அற்புதத்தைக் கண்டார். அவ்வளவு தான். பொல்லாப் பிள்ளையாருக்கு அமுதூட்டிய அந்தணச் சிறுவன் நம்பியாண்டார் நம்பியாகி விடுகிறான். சோழ மன்னர் ராஜராஜன் இந்த நம்பியை வந்து கண்டு வணங்குகிறான். அவன் ஆர்வம் தீர, அந்தப் பிள்ளையாரே நம்பியிடம் திருமுறைகள் இருக்கும் இடத்தையும், அதைப் பெறும் வகையையும் எடுத்துரைக்கிறார். சிதம்பரத்திலே சமயகுரவர் மூவரும் கைசாத்திட்டு வைத்திருந்த அறையில் இருந்த திருமுறை அம்பலத்துக்கு வந்து விடுகிறது.
நாட்டுக்கு வேண்டும் அற்புதமான பாக்கள் அனைத்தும் கிடைத்து விடுகிறது நமக்கு. பொல்லாப் பிள்ளை யாரும் திருமுறை கண்ட பிள்ளையார் என்ற புதிய பட்டத்தையும் தட்டிக்கொண்டு போய் விடுகிறார். நாடு நலம் பெற, காகம் கவிழ்த்து காவிரி கொணர்ந்தவரே, மக்கள் உள்ளம் இறைவனிடம் ஈடுபடத் திருமுறைகளை யும் தேடியெடுத்துக் கொடுத்து விடுகிறார்.
கணபதியின் பிள்ளை விளையாட்டிலே சிறந்தது கஜமுகாசுரனை வென்றது தான். அசுர குலத்திலே, மாகத முனிவருக்கும் விபுதைக்கும் மகனாக கஜமுகாசுரன் பிறக்கிறான். வழக்கம் போல் தேவர்களை எல்லாம் துன்புறுத்துகிறான். தேவர்கள் சிவனிடம் முறையிடுகிறார்கள். தேவர் குறை தீர்க்கத் திரு உளம் கொண்ட சிவபிரான், தன்னுடைய அம்சத்திலே கணபதியைச் சிருஷ்டிக்கிறார்.
யானை முகத்தோடும், ஐந்து திருக்கரங்களோடும், மூன்று திருக்கண்களோடும் அவதரித்த இந்தப் பிள்ளையைச் சிவகணங்களுக்கு எல்லாம் தலைவனாக்குகிறார் சிவபெருமான். கணங்களுக்கு எல்லாம் தலைவனாய் அமர்ந்த கணபதி கஜமகாசுரனுடன் போர் தொடுக்கிறார். கஜமுகனே எத்தனையோ மாயைகளை நிகழ்த்தி கடும் போர் புரிகிறான். கடைசியில் பெருச்சாளி வடிவோடு வந்த போது, அவனை அடக்கி அவன் மேலேயே ஆரோகணித்து, தன்னை அன்று முதல் சுமக்கச் செய்து விடுகிறார்.
கஜமகாசுரன் தேவர்களை எல்லாம் அடக்கி ஆண்ட பொழுது, அவன்றன் கொலுவில், அவன் தேவர்களை எல்லாம் அடிமைகளாக நடத்தி, தங்கள் தங்கள் தலையில் மும்முறை குட்டி, இரண்டு கைகளாலும் எதிராக காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்து வந்தான். இப்படி கஜாமகாசுரன் முன்பு செய்து கொண்டதைத்தான், கணபதி கஜமுகாசுரனை வென்று அடக்கிய பின்பும் அவர் முன் செய்யத் தலைப்பட்டனர். இப்படித் தேவர் செய்யும் திருத்தொண்டு கணபதிக்கு உகந்ததாயிருந்தது.
அதனால் தான், இன்றும் கணபதியை வணங்குவோர் தலைகளில் குட்டிக் கொண்டு, காதைப் பிடித்துத் தோப்புக் கரணம் போட்டு வணங்குகின்றனர். ஆணவம் மிகுந் துள்ள ஆடவர் எல்லாம் இப்படி குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதாலேயே, தன் முனைப்பு நீங்கினவர்களாய், என்றும் இறைவனுக்கே ஆட்படும் பேறு பெறுகிறார்கள் அல்லவா? ஆண்டவன் சந்நிதியிலே தன்முனைப்பு நீங்கத்தானே தரையில் விழுந்து வணங்குகிறோம்; தோப்புக்கரணம் போடுகிறோம்.
இன்னும் எத்தனையோ கதைகள் விநாயகரைப் பற்றி. கதைகளைக் கதைகள் என்ற அளவில் மட்டும் படிக்காமல், கதை எந்த அடிப்படையில், எந்த தத்துவத்தை விளக்க எழுதியிருக்கிறது என்று தெரிந்து கொள்வோமானால் – தெரிந்து கொள்ள முயல்வோமானால் – சமய உலகில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்து விடும். தமிழன் கண்ட கடவுள், ஏதோ ஒரு நாளில், ஒரு வருவடித்தில் உருவானவர் அல்ல.
நீண்ட காலமாக கலைஞர்கள் சிந்தித்துச் சிந்தித்து ‘உள்ளக் கிழியில் உரு எழுதி’ அதன் பின் தான் பாக்களில், சித்திரத்தில் சிற்பத்தில் எல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள். அப்படி உருவானவர்களில் தலை சிறந்தவர் தான் ஆனை முகப் பெருமான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதும் ஏன்? கடல் கடந்தும் சென்று மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் இடம் பெற்றிருக்கிறார் அவர். நாட்டுக்கு நாடு அவர் வேறு வேறு திரு உருவங்களில் அமைந்திருக்கிறார் என்றால் அது அந்த அந்த நாட்டு மக்களின் சிந்தனையிலும், கற்பனையிலும் உருவான தோற்றங்கள்தான். ‘கற்பனை கற்பித்த கடவுளாம் கற்பக விநாயகர் அவரவர் தமது தமது அறிவு அறிவு வகை வகை யாகத்தானே கோலம் கொள்ள முடியும்; அருள் பாலிக்க இயலும்.


