சூரிய காந்தம்

உபாத்தியாயர் விஞ்ஞானத்தைப் போதிக்கிறார். ஒளியைப் பற்றிச் சொல்லித் தருகிறார்; கண்ணாடி மூலமாக ஒளிக் கதிர்கள் எப்படிப் பாய்கின்றன என்பதை விளக்குகிறார். புடைத்திருக்கும் பூதக் கண்ணாடியில் கதிர்கள் பாய்ந்தால் அவை ஓரிடத்தில் ஒன்றுபட்டு அதிக உஷ்ணத்தை உண்டாக்கும் என்று ஒரு செய்தியைச் சொல்கிறார். அவர் அதை நிரூபித்துக் காட்டுகிறார். எப்படி?

பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு சிறிது பஞ்சை அதன் முன் வைக்கிறார். பஞ்சு ஒன்றும் ஆகாமல் தன் இயல்பிலே இருக்கிறது. அதே பஞ்சைச் சூரியன் ஒளிவீசும் இடத்துக்குக் கொண்டு போய் அதே பூதக் கண்ணாடிக்குமுன் வைத்துக் காட்டுகிறார். கதிர்கள் ஒன்றுபடும் இடத்தில் வைக்கும்போது பஞ்சு பற்றி எரிகிறது. விஞ்ஞான உண்மை தெரியாதவர்களுக்கு இது செப்பிடு வித்தையைப் போலத் தோன்றும்.

பழைய காலத்திலும் இந்த உண்மை தமிழர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பூதக் கண்ணாடியைக் கதிரவனுக்குமுன் வைத்துக்கொண்டு அதன் எதிரே பஞ்சை வைத்தால் அது எரியும் என்று தெரிந்து கொண்டிருந்தார்கள்.

பூதக் கண்ணாடிக்குச் சூரியகாந்தம் என்று பெயர். சூரியனுடைய கதிர்களை ஓரிடத்தில் செறிந்து கூடச் செய்வதனால் இந்த நிலை உண்டாகிறது. இதனையே சூரியனுக்கு முன்னே சூரியகாந்தம் நெருப்பை உண்டாக்கும் என்று பழங்காலத்தில் சொன்னார்கள்.

சூரிய காந்தம் பஞ்சை இயல்பாகவே எரித்துவிடாது. சூரியனுடைய சந்நிதியில்தான் அது சுட்டு எரிக்கும்.

இந்த உண்மையை உபமானமாக வைத்துக் குருவின் பெருமையை விளக்குகிறார் திருமூலர்.

மும்மலங்களால் பிணிப்புண்ட ஆன்மா பிறப்பு இறப்புக்களில் உழன்று துன்பத்தை அடைகின்றது. மலங்களினின்றும் நீங்கி ஞானம் பெற்றால் பழவினைப் பற்றறுத்து ஆன்மா இறைவனோடு ஒன்றி முத்தியின்பத்தை அடையும். மலங்கள் பஞ்சுபோல எரிந்து விட்டால் இன்பத்தைப் பெறும். அந்த மல நீக்கத்துக்கு அறிவு காரணம். ஆனால் இயல்பான அறிவு மாத்திரம் இருந்தால் மலம் நீங்காது. வெறும் சூரியகாந்தத்தைப் பஞ்சின் முன் காட்டினால் பஞ்சு எரியாது. குருவினுடைய சந்நிதானத்தில் ஆன்மாவுக்கு அறிவு விளக்கம் உண்டாகும். அப்போது மலங்களெல்லாம் பஞ்சு போல எரிந்து விடும். ஆன்மாவுக்கு அறியும் ஆற்றல் உண்டு. ஆனால் அது தானாக அறியாது. அறிவிக்க அறியும் இயல்பை உடையது. அது. குருவின் திருவருளால் அந்த அறிவு தெளிவும் விளக்கமும் பெற்று முதிர்ச்சி அடைகிறது. அந்த ஞானாக்கினியிலே மலங்கள் மூன்றும் முப்புரம் வெந்ததுபோல வெந்து ஒழிகின்றன.

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே;
சூரிய காந்தம்சூழ் பஞ்சைச் சுடமாட்டா;
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்,
ஆரியன் தோற்றமுன், அற்ற மலங்களே.

(சூரிய காந்தமும் அதனை வந்து சாரும் பஞ்சையும் போல உள்ளன அறிவும் மலங்களும்; சூரிய காந்தக் கற்கள் தம்பால் வந்த பஞ்சை இயல்பாகச் சுடும் ஆற்றல் பெறா; ஆனால் சூரியன் முன்னிலையில் சுடும்; அதுபோல் ஞானாசிரியன் முன்னே தோற்றினால் மலங்கள் அற்றுவிடும்.

போலவே என்றது அவாய் நிலையாய், போல உள்ளன, அறிவும் மலங்களும் என்பவற்றை அவாவி நின்றன. மாட்டா என்ற பன்மை சூரியகாந்தக் கற்கள் பலவற்றை நினைந்து வந்தது.

ஆரியன்-ஞானாசிரியன். முன்தோற்ற. மலங்கள் அற்ற; அற்ற-அற்றன. உறுதிபற்றி ‘அற்ற’ என்ற இறந்த காலத்தாற் சொன்னார்; ‘அங்கே போனால் தொலைந்தான்’ என்றது போல.)

‘வெற்று அறிவினால் மலங்களைப் போக்குவது என்பது இயலாது. குருவின் திருவருளால் பரஞானம் தலைப்படும் போது மல நீக்கம் உண்டாகும்’ என்பதை இது தெளிவிக் கின்றது.

இது முதல் தந்திரத்தில் வரும் உபதேசம் என்னும் பகுதியில் 5-ஆம் பாட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *