
காலை முதல் இரவு வரை
ஒரு பொருளினிடம் அன்பு வைத்துவிட்டால் அதைப் பற்றியே எப்போதும் நினைக்கத் தோன்றுகிறது. ஒருவரிடம் எல்லையற்ற பற்று உண்டானால் அவருடைய விருப்பு வெறுப்புகளை உணர்வதும், அவருடைய திருக்கோலத்தை எண்ணுவதும், அவர் பேச்சைச் சிந்திப்பதுமாகவே காலம் போகும். தான் விரும்பிய காதலனை ஓர் இளம் பெண் மணந்து கொள்கிறாள். அவன் இன்னும் அவளைத் தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போகவில்லை. அவனை அவள் நேரில் காணாவிட்டாலும் எப்போதும் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். அவனுடைய வடிவத்தை எண்ணி எண்ணி இன்புறுவாள். தனக்குப் புதிதாகப் பிறந்த முதற் குழந்தையைப் பார்த்துத் தாய் பூரித்துப் போகிறாள். அந்தக் குழந்தை உதயமாவதற்கு முன்பிருந்தே அவள் கற்பனை விரிகிறது; இனிப் பிறக்கப்போகும் குழந்தைக்கு இன்ன இன்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொள்கிறாள்.
காதல் மிக்கவர்கள் எதையாவது கண்டால் தம் காதலரோடு அப் பொருளுக்கு ஒப்புமை இருப்பதாக எண்ணி மகிழ்வார்கள். இதை, “எம் மெய்யாயினும் ஒப்புமை கோடல்” என்ற மெய்ப்பாடாகத் தொல்காப்பியம் சொல்கிறது.
இத்தகைய நிலையில் இருந்தவர் காரைக்காலம்மையார். தம்முடைய கண்ணிற் கண்ட பொருள் ஒவ்வொன்றும் அவருக்கு எம்பெருமானை நினைப்பூட்டின. எந்த நிகழ்ச்சியிலும் அவர் இறைவனைக் கண்டார்.
அன்று அவர் வானத்தையே நோக்கிக் கொண்டிருந் தார். கதிரவன் கீழ்த்திசையில் தோற்றுவது முதல், அவன் மறைந்து இருள் பரவ, இரவு மெல்ல மெல்ல அடியெடுத்து வைப்பது வரையில் கூர்ந்து கவனித்தார்.
விடியற் காலையில் கிழக்கு வெளுத்தது. கதிரவன் தோன்றினான். வானம் முழுவதும் அவனுடைய ஒளி படர்ந்தது. அந்த இளஞ் சூரியனைக் கண்கொண்டு பார்க்க முடிந்தது. கீழ்வானத்தில் வெண்மையும் லேசான செம்மையும் படர்ந்து ஒளிமயமாக இணைந்து நின்றன. அந்தக் காட்சியை நோக்கினார். “எம்பெருமான் திருமேனி இப்படித்தானே சுடர்விட்டு விளங்கும்? கண்ணால் காணும் இளஞ்சிவப்பாக, பவளத்தைப் போலத் தோற்றுவதல்லவா?” என்று அவர் எண்ணினார்
காலையே போன்றிலங்கும் மேனி
என்று பாடினார்.
கதிரவன் மெல்ல மெல்ல வானவளைவிலே ஏறினான்; உச்சி முகட்டுக்கு வந்தான். மேற்கே நிழல் படிய நின்றிருந்த பொருள்களின் உச்சியில் அவன் சுடர் வீசினான். நிழல் அவரவர்கள் அடியில் ஒளித்துக் கொண்டன. நடு நிலையில் நிற்பாருக்கு எல்லாம் புலனாவதுபோல எங்கும் அவன் சுடர்க்கரங்கள் பாய்ந்து பொருள்களைப் புலனாகச் செய்தன. இப்போது கதிரவன் வீசிய கதிரில் தூய வெள்ளொளியே பரந்தது. காரைக்காலம்மையார் இந்தக் கடும் பகலாகிய வேளையைக் கண்ணை அகல விரித்துப் பார்த்தார். வெண்மையொளி அவருக்கு இறைவனுடைய திருமேனியிலே உள்ள வெண்ணீற்றை நினைப்பூட்டியது.
கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு
என்று பாடினார்.
பின்பு மெல்ல மெல்லப் பகலவன் வான முகட்டி லிருந்து இறங்கினான். மேற்றிசையின் விளிம்புக்கு இறங்கி வந்தான். பரந்த நிலப்பரப்பைத் தன் கதிரால் அளந்து ஆட்சி புரிந்த அவனை இப்போது யாரோ போகும்படி ஆணையிட்டு விட்டார்கள். அதனால் அவனுக்குத் தீராத சினம் உண்டாகிவிட்டதோ! அவன் உருவத்தைப் பார்த்தால் ஒரே சிவப்பு. அவன் வீசிய சுடர்க்கற்றையும் குங்குமக் கீற்றுக்கள். அவற்றால் எழுந்த செவ்வொளியோ ரத்தக் குழம்பு போலச் செக்கச் செவேலென்று மேற்குத் திசையிலே படர்ந்திருக்கிறது.
மாலையின் உருவத்தை அந்தச் செக்கர் வானத்திலே அம்மையார் கண்டார். அவர் குங்குமக் குழம்பை நினைக்க வில்லை. குருதி வெள்ளத்தையும் நினைக்கவில்லை. ‘எம்மெய் யாயினும் ஒப்புமை கோடும் நிலையில் இருப்பவர் அல்லவா அவர்? அவருக்கு அப்போதும் இறைவனுடைய நினைவுதான் எழுந்தது. ”ஆ! எம்பெருமானுடைய சடா பாரம் இப்படித்தானே செக்கச் செவேலென்று விரிந்திருக்கும்?” என்ற எண்ணமும் அதனோடு அவர் உள்ளக்கிழியில் அப்பெருமானுடைய சடைக்கற்றையும் விரிந்தன.
மாலையின்
தாங்கு உருவே போலும் சடைக்கற்றை
என்று பாடினார்.
செக்கர் வானம் இப்போது மறைந்துவிட்டது. மெல்ல மெல்ல இருள் பரவியது. இரவு தன் ஆட்சியைத் தொடங்கியது. கன்னங்கறேலென்று மைக்குழம்பு பூசியது போல வெளியிலே இருள் செறிந்தது. ஒரு நாளாகிய காலக் கூறுபாட்டில் காலை, பகல், மாலை, இரவு என்பன உறுப்புக்கள். முன் மூன்றும் இறைவனுடைய அங்கங்களை நினைப்பூட்டின. இந்த இரவும் அப்படியே ஒன்றை நினைவுறுத்தியது. இப்போது நிறைந்து செறிந்து நிற்கும் இருட்டு இறைவனுடைய திருக்கழுத்தில் உள்ள கறுப்பை நினைக்கச் செய்தது. அவன் இருள் மணிமிடற்றன் அல்லவா?
மற்று அவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.
இறைவன் காலமே உருவாக நிற்பவன். “ஞால மேபிறவேய்வை வந்துபோம், காலமே” என்று மாணிக்க வாசகர் பாடினார். காலமே இறைவன் திருவுருவமாக இருந்தால் காலத்தின் கூறுபாடுகள் அவனுடைய திருவுருவக் கூறுபாடுகளாக உள்ளவை என்று சொல்வது பொருத்தந்தானே?
காரைக்காலம்மையார் விரிந்த காலத்தையே இறைவனாகக் கண்டார். ஒவ்வொரு நாளையும் அவனாகக் கண்டார். அந்த நாளிலும் காலை, பகல், மாலை, இரவு என்ற வேளைகளில் உண்டாகும் தோற்றங்களில் இறைவனுடைய திருவுருவப் பகுதிகளைக் கண்டு களித்தார். காலை முதல் இரவு வரையில் இறைவனையே எண்ணி வாழும் வாழ்வு அம்மையார் வாழ்வு.
காலையே போன்று இலங்கும் மேனி ; கடும்பகலின் வேலையே போன்று இலங்கும் வெண்ணீறு;- மாலையின் தாங்கு உருவே போலும் சடைக்கற்றை; மற்றுஅவற்கு வீங்குஇருளே போலும் மிடறு.
[அவனுக்குக் காலையைப் போல விளங்கும் திருமேனி; கடுமையான நண்பகலாகிய வேளையைப் போல விளங்கும் திரு மேனியிற் பூசிய வெண்ணீறு; மாலை தாங்கும் செவ்வுருவைப் போலத் தோற்றும் சடையின் தொகுதி மிக்க இருளைப் போலத் தோற்றும் நீலகண்டம். அவற்கு என்பதை ஒவ்வொன்றனோடும் சேர்த்துக் கொள்க. அவன் என்றது உலகறி சுட்டாய்ச் சிவபெருமானைக் குறித்தது, “அவனன்றி ஓரணுவும் அசையாது” என்பது போல. காலையே முதலியவற்றிலுள்ள ஏகாரங்கள் அசை நிலைகள். கடும்பகல்- மத்தியான்ன நேரம்; நண்பகல். கடும் பகலாகிய வேலை; இன்: வேண்டா வழிச்சாரியை; வேலை-வேளை; சிறுபொழுது. அவற்கு – அவனுக்கு. வீங்கு – மிக்க. மற்று: அசை நிலை. மிடறு – கழுத்து.]
இது காரைக்காலம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதியில் 65-ஆவது பாட்டு.


