இடரீர்! உமக்குஓர் இடம்

பெரிய சோம்பேறி அவன்; எப்படியோ வந்து அந்தக் குடும்பத்தில் ஒட்டிக் கொண்டான். அவன் எப்படி வந்தான், ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்பவற்றைச் சொல்லக்கூட முடியாது. அவனுடைய அதிருஷ்டமோ, இவர்களுடைய துரதிருஷ்டமோ அவனுக்கு இங்கே புகலிடம் கிடைத்தது. அவனைச் சோம்பேறியென்று முதலில் நினைக்கத் தோன்றியது. ஆனால் வரவர அவன் பொல்லாதவன் என்று தெரிந்தது. அவனால் லாபம் ஒன்றும் இல்லா விட்டாலும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொல்லை விளைந்தது. போதாக் குறைக்கு வேறு சில தோழர்களையும் அவன் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். எல்லோரும் மிக்க உரிமையுடையவர்கள் போல இந்தக் குடும்பத்தின் வருவாயில் பங்கு கொண்டு வாழத் தலைப்பட்டனர்.

குடும்பத் தலைவன் அப்பாவி. “இதுவும் நம்முடைய தலையெழுத்து” என்று எண்ணி அந்த அயோக்கியக் கூட்டத்தார் கொடுத்து வரும் அல்லல்களைச் சகித்துக் கொண்டு வந்தான். வரவர அவர்களால் விளையும் துன்பம் கணக்குக்கு மிஞ்சி விட்டது. உடன் பிறந்தவர்களைப் போல உரிமை பாராட்டும் அந்தக் கயவர்களை விட்டு நீங்கினால் நல்லது என்ற உணர்வு மெல்லக் குடும்பத் தலைவனுக்கு உண்டாயிற்று. அப்படிச் செய்ய எளிதில் மனம் வரவில்லை. அவர்களுடன் நெடு நாள் பழகிய பழக்கத்துக்கு அவன் அடிமையாகி விட்டான்.”இவர்களுடைய தொல்லையினின்றும் எப்போது விடுபடுவோம்!” என்று பல சமயங்களில் ஏங்கினாலும், “நம்மை விட்டால் இவர்களுக்குப் போக்கு எங்கே?” என்ற இரக்கமும் சில சமயம் உண்டாகும்.

அவர்களுடைய தீச் செயல்களினால் வரும் துன்பங்களைச் சகித்துத் கொண்டிருந்த நிலையில் முதலில் இருந்தான். அத் துன்பங்கள் மிகுதியாக உறைக்கவே அவற்றி னின்றும் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வு உண்டாயிற்று. இது இரண்டாவது நிலை. இந்த நிலையில், பல காலம் உடன் இருப்பவர்களாயிற்றே என்ற நினைவு தடையாக இருந்தது. ஆயினும் துன்பத்தினின்றும் நீங்கவேண்டும் என்ற நினைவு முறுக முறுக, அதற்கு வழி என்ன என்ற ஆராய்ச்சி தலைப்பட்டது. ”இந்த ஊரிலே நாம் வாழாமல் இவர்களை விட்டு விட்டு வேறு ஊருக்குப் போய் விடுவோம்” என்ற யோசனை உண்டாயிற்று. இது மூன்றாவது நிலை. “எங்கே போவது? பழக்கம் இல்லாத இடத்தில் மீட்டும் யாரேனும் வந்துவிட்டால் என்ன செய்வது?” என்ற ஐயங்கள் இப்போது எழுந்து கலக்கத்தை உண்டாக்கின. அவற்றை ஒருவாறு புறக்கணித்துத் தெளிவு பெற்றான். “எங்கே சென்றால் இத்தகைய கூட்டத்தினரின் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்?” என்ற எண்ணம் வர வர வலிவடைந்தது. பலரைக் கேட்டான். கடைசியில் ஓர் ஊரைத் தெரிந்து கொண்டான். அங்கே சென்றுவிட்டால் இராதென்றும், இன்பம் உண்டாகும் என்றும் கேள்வியுற்றான். மீட்டும் மீட்டும் அந்த ஊரைப் பற்றி விசாரித்துப் பல செய்திகளைத் தெரிந்துகொண்டான்.

எந்த எந்த ஊரிலிருந்தோ நல்லவர்கள் பலர் வந்து தங்கும் ஊர் அது என்பதை அவன் அறிந்தான். பிறருடைய துன்பமாகிய வெப்பத்தைப் போக்கும் மேகத்தைப் போன்ற அன்பர்கள் அந்த ஊரில் வந்து திரண்டு வாழ்கிறார்கள் என்று தெரிய வந்தது.

ஊர் உயர்ந்தது; நல்ல காற்றும் நீரும் உடையது. அங்கே செல்வது என்று உறுதி பூண்டு விட்டான். தான் போய்ப் புக வேண்டிய ஊர் இன்னதென்று நிச்சயம் செய்து கொண்ட நிலை நான்காவது. இப்போது அவனுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. “நாம் துன்பம் இல்லாத இடம் ஒன்றைப் பார்த்துக் கொண்டோம். இதுவரையில் நம்முடன் வாழ்ந்தவர்களுக்கும் ஏதாவது இடம் கிடைத்தால் நல்லது” என்ற கருணைதான் அது. “நம்மால் இடம் பார்த்துக் கொடுக்க முடியாது. அவர்களாகப் பார்த்துக் கொள்ளட்டும். வேறு இடத்திலும் இவர்களால் துன்பந்தானே உண்டாகும்? நாம் ஓர் இடத்தைக் காட்ட இவர்கள் அங்கே போனால், அங்குள்ளவர்கள் படும் துன்பத்துக்கு நாமே ஒரு வகையில் காரணமாகி விடுவோம். அந்தப் பாவத்தை நாம் ஏன் கட்டிக் கொள்ளவேண்டும்?” என்றெல்லாம் அவனுடைய எண்ணங்கள் விரிந்தன. “எப்படிப் போனால் என்ன? நாம் நமக்குப் பாதுகாப்பான இடம் ஒன்றைப் பார்த்துக் கொண்டோம். இனி அவர்கள் தங்களுக்கு ஏற்ற இடத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று முடிவு செய்துகொண்டான்.

கடைசியாக அவர்களைப் பார்த்து இரக்கத்தினால் ஒரு வார்த்தை சொன்னான். “நீங்கள் உங்களுக்கு ஏற்ற இடத்தை நாடிக்கொண்டு புறப்படுங்கள். நான் வேறு ஊருக்குப் போகிறேன். இனி எனக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை” என்று தைரியமாகச் சொன்னான்.

நமக்கு இவ்வுலக வாழ்வில் எத்தனையோ வகையான துன்பங்கள் உண்டாகின்றன. அவற்றை மூன்று வகையாகத் தொகுத்துச் சொல்வார்கள். தாபத்திரயம் அல்லது மூவகைத் துன்பங்கள் என்று வழங்குவார்கள்.

உயிர்களால் வருவன, தெய்வத்தால் வருவன, பிற பொருள்களால் வருவன என்பன அவை. அவற்றை ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதி பௌதிகம் என்று பெயரிட்டுக் கூறுவர். ஒருவன் நம்மை அடிக்கிறான்; நாய் நம்மைக் கடிக்கிறது. இவற்றால் வரும் துன்பத்தைப் போன்றவை ஆதி யாத்மிகம். திடீரென்று நோய் வருதலைப் போன்றன ஆதி தைவிகம். கல்லில் கால் இடறுகிறது; தீயினால் புண் உண்டாகிறது. இத்தகையவை ஆதி பௌதிகம். இந்தத் துன்பங்கள் உயிர்களை வருத்துவதனால் தாபம் என்ற பெயரைப் பெற்றன. மூன்று தாபங்களாலும் துன்புறுகிறவனுக்கு இறைவனுடைய திருவருள் கிடைத்தால் அவை நீங்கும்.

இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்காளத்தியில் ஒருவருக்கு அன்பு உண்டாயிற்று. திருக்காளத்திக்குப் போய் நம்முடைய தாபத்திரயங்களினின்றும் விடுதலை பெற வேண்டும் என்ற துணிவின் மேல் புறப்பட்டு விட்டார். அப்போது, அது காறும் தம்மை வருத்திய துன்பங்களை நோக்கி, “துன்பங்களே! நீங்கள் இனிமேல் வேறிடம் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் காளத்தி காணத் தீர்மானித்துவிட்டோம்” என்கிறார்.

நக்கீரர் என்னும் புலவர் இந்த முறையில் ஒரு பாட்டுப் பாடுகிறார்.

துன்பங்களைப் பார்த்து மரியாதையாகப் பேசுகிறார். “தாபத்திரயமான சகோதரர்களே!” என்பது போல அழைக்கிறார்.

இடரீர்!

[இடர் – துன்பம். அவற்றை உயர்திணையைப் போல வைத்து இடரீர் என்றார். இடரார் என்பதன் விளி இது.]

“இதுவரைக்கும் என்னிடம் நீங்கள் வாழ்ந்தீர்கள். நானும் இடம் கொடுத்தேன். இனிமேல் அப்படி இருக்க வொண்ணாது. உங்களுக்கு ஏற்ற இடம் ஒன்றைத் தேடிக் கொண்டு சரியான காலத்தில் போய்விடுங்கள்.”

உமக்குஓர் இடம் நாடிக் கொண்டு
நடவீரோ, காலத்தால்.

[உமக்கு ஏற்ற ஓர் இடத்தைத் தேடிக்கொண்டு சரியான காலத்தில் புறப்பட்டு விடுங்கள். காலத்தால் நடவீர் என்க. நடவீரோ: ஓ, அசை நிலை. நடக்க மாட்டீர்களா என்று வினாவாகவும் கொள்ளலாம்.]

“சீக்கிரமே புறப்பட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் நெட்டித் தள்ளி விடுவேன்” என்று கூறுவதுபோல் தொனிக்கிறது. “நடவீரோ காலத்தால்” என்ற தொடர். இறைவனை நாடிப் பற்றிக் கொண்டதனால் அவருக்கு அத்தனை உறுதி பிறந்துவிட்டது. அது காறும் தம்மை அடிமை கொண்ட இடர்களைப் பார்த்து, நாயை ஓட்டுவது போல ஓட்டுகிறார்.

“நீங்கள் எங்களை விட்டு எப்படி வாழ்வீர்கள்? எங்கே போகப் போகிறீர்கள்?” என்று துன்பங்கள் கேட்காவிட்டாலும் கேட்டதாகப் பாவித்துச் சொல்கிறார்.

“அதைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். உங்களால் நான் பட்ட துன்பம் போதும். என்னை வதக்கி யெடுத்து விட்டீர்களே! வெப்பு நோய் உடம்புக்குத்தான் வரும் என்பார்கள்.

உங்களால் நான் அடைந்த வெப்பம் உடம்பைப் பற்றியது; உள்ளத்தைப் பற்றியது; உயிரையும் பற்றிவிட்டது. இந்தத் தாபம் நீங்க வேண்டுமே என்று ஏங்கினேன். நான் போகும் இடம் தாபம் நீங்குவதற்கு ஏற்ற இடம். கடலிலே உள்ள நீர் எவ்வளவு மிகுதியாக இருந்தாலும் பயன்படுவதில்லை. அங்கே உண்டாகிறது மேகம். அந்த மேகம் மெல்ல மெல்ல எழுந்து வானை அளந்து சென்று, எங்கே தங்கலாம் என்று நாடி வருகிறது. நான் செல்லும் இடமாகிய காளத்தி மலையில் அது வந்து தங்குகிறது. அங்கே எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்! மேகம் இருந்தாலே போதும், தண்மை உண்டாக. மேகம் சும்மா இருக்குமா? அது நிச்சயமாக மழை பெய்யும். அதனால் என் வெப்பமெல்லாம் தீரும். இந்த மழை மாத்திரமா ? இறைவனுடைய அருள் மழை பொழியும் இடமும் அதுதான்.”

நாங்கள் – கடல்வாய்க்

கருப்பட்டுஓங்கு ஒண்முகில்சேர் காளத்தி
காண ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.

[நாங்கள், இந்தத் தாபம் தீர வழி என்ன என்று ஆராய்ந்து அவ்வழியை உணர்ந்து, கடலினிடத்தில் கருவாகித் தோன்றி மேலே சென்ற நல்ல மேகங்கள் வந்து சேரும் திருக்காளத்தியைத் தரிசிக்க முடிவு செய்தோம். இதை அறிந்து கொள்ளுங்கள்.

கடல்வாய் – கடலில். கருப்பட்டு -கருவாகி; தோன்றி. ஓங்கு – வானத்தில் உயர்ந்து செல்லும். ஒண்மை, இங்கே நன்மை. முகில் – மேகம். ஒருப்பட்டோம் – ஒருங்கே தீர்மானித்தோம். கண்டீர் – உணருங்கள். உணர்ந்து – இதுதான் வழியென்று தெரிந்து கொண்டு, உணர்ந்து ஒருப்பட்டோம்.]

தம்மோடு சார்ந்த அடியார்களையும் அழைத்துக் கொண்டு புறப்படும் நிலையில் சொல்வது போல அமைந்திருக்கிறது பாட்டு. துன்பம் நீங்கும் இடம் என்பதைக் குறிப்பால் புலப்படுத்த முகில் சேர் காளத்தி என்றார்.

மனிதன் விடுகின்ற மூச்சு வானில் கலந்து வெப்பத்தை உண்டாக்குகிறது. அவன் பேச்சு வெளியில் கலந்து பரவுகிறது. வானொலியினால் இந்த உண்மை புலனாகிறது. அமெரிக்காவில் ஒருவர் பேசும் பேச்சை இங்கிருந்தபடியே கேட்கிறோம்.கேட்பதற்குரிய கருவிகளை விஞ்ஞானத்தால் பெற்றிருக்கிறோம். பேச்சின் ஒலியலைகள் எப்போதும் பரவிக் கொண்டே இருக்கின்றன. அதைப் பற்றி நம் காதுக்குக் கேட்கும்படி விஞ்ஞானம் செய்கிறதேயன்றி, ரேடியோவைக் கண்டுபிடித்த பிறகுதான் ஒலியலைகள் படர்கின்றன என்று சொல்ல இயலாது.

இப்படியே, ஒருவன் எண்ணும் எண்ண அலைகளும் பரவுகின்றன. அந்த எண்ணம் வலிமையுடையதாக இருந்தால் அது மற்றவர்களைப் பாதிக்கின்றது. பலர் கூடி நல்ல எண்ணங்களை எண்ணினால் அவ்விடத்தில் குளிர்ந்த எண்ண அலைகள் எழுகின்றன. அவை திரண்டு நிற்கின்ற அந்தச் சூழ்நிலையில் யார் வந்தாலும் அமைதி உண்டாகிறது. அந்தத் தண்மை மேல் எழுந்து மேகத்தைச் சார்ந்து மழையைப் பொழிவிக்கிறது.

நல்லவர்கள் உள்ள இடத்தில் மழை பொழியும் என்ற நம்பிக்கை வெறும் குருட்டு நம்பிக்கை அன்று. நல்லவர்கள் உள்ளத்தில் அன்பு பொங்கி வழியும். அதன் அலைகள் தண்மையாகப் படரும். அவர்களைச் சார்பவர்களும் அவர்களைப் போலவே அன்பர்களாக இருப்பார்கள். அவர்களுடைய எண்ணங்களும் அலை பாய்ந்து தண்மையை உண்டாக்கும். இந்தத் தண்மை மிகுதி ஆக ஆகச் சுற்றிலும் தண்மை விரவும்; மழை உண்டாகும்.

எண்ணத்தினால் தண்மையும் வெம்மையும் உண்டாவதை நாம் நம் அநுபவத்தில் உணரலாம். நமக்குச் சினம் உண்டானால் நரம்புகளில் படபடப்பும் அதனால் உடம்பில் வெப்பமும் உண்டாகின்றன. சினங் கொண்டவனைக் கொதித்தெழுந்தான் என்று அவன் உடம்பில் வெப்பம் உண்டாகும் என்ற குறிப்பும் இருக்கிறது. சாந்தமாக இருக்கும் போது முகத்தில் ஒளி படர்கிறது. உள்ளம் கனமின்றி லேசாக இருக்கிறது. உடம்பு குளிர்கிறது. இது நாம் அனுபவத்தில் அறிந்தது.

அன்பு என்பது எல்லாவற்றினும் சிறந்த பண்பு, இறைவனிடம் வைக்கும் அன்பு அன்பு வகைகளிற் சிறந்தது. அது தண்மையான இயல்பு. அன்பர்கள் திரளாகக் கூடும் இடத்தில் தண்மைச் சூழ்நிலை உண்டாகும்.

காளத்தி இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம்; அவனுடைய அருளை நாடி அன்பர்கள் திரளாக வந்து கூடும் இடம்; உயிர்கள் யாவும் வாழ வேண்டும் என்ற தண்ணிய எண்ணம் எல்லோருக்கும் எழும் இடம். இயற்கையாகவே மலை உள்ள இடம் அது. அதோடு அன்பர்களின் கூட்டத்தால் விளையும் தண்மையும் சேர்கிறது. அத்தகைய இடத்தில் மேகங்கள் வந்து தங்கி மழை பொழிவதில் தடை என்ன? அந்த மழை நிலத்தின் வெப்பத்தை மாற்றிக் குளிர்விக்கிறது. அங்கே நிலவும் அன்புத் தண்மை இறைவனாகிய மேகத்தினின்றும் அருள் மழை பொழியும் படி செய்கிறது. துன்பமாகிய வெம்மையிலே வதங்கியவர்களுக்குத் தாபத்திரங்களினின்றும் விடுதலை பெற்றுச் சாந்தி பெற இதைக் காட்டிலும் சிறந்த இடம் இல்லை யென்றே நக்கீரருக்குத் தோன்றியது.

நக்கீரர் இறைவனுடைய நெற்றிக் கண்ணால் வெதுப் புண்டு தொழு நோய் பெற்று வாடினார். அவர் இறைவன் ஆணைப்படி திருக்காளத்திக்கு வந்து அந்த நோய் நீங்கப் பெற்றார் என்பது புராணக் கதை. அவர் வெப்பு நீங்கிய இடம் இது என்பது அந்தக் கதையில் குறிப்பிக்கப் பெறு கிறது.

இடரீர்! உமக்குஓர் இடம் நாடிக் கொண்டு
நடவீரோ, காலத்தால்; நாங்கள் – கடல்வாய்க்
கருப்பட்டு ஓங்கு ஒண்முகில்சேர் காளத்தி
காண ஒருப்பட்டோம் கண்டீர், உணர்ந்து.

இது கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி என்ற நூலில் உள்ள 44-ஆம் பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *