நால்வகைச் சங்காரம்

மனிதன் செயலற்றுக் கிடந்தால், “பிணம் போலக் கிடக்கிறான்” என்று கூறுவர். அவன் கைகால் இருந்தும் இயங்காமையால் அப்படிச் சொல்லத் தோன்றுகிறது. மனிதன் தினமும் உறங்குகிறான். அப்போது அவன் செயலற்றுக் கிடக்கிறான். கொலையாளியும் குழந்தையும், குடும்பியும் துறவியும் தூக்கத்தில் ஒரே நிலையை அடைகிறார்கள். ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்களின் மதிப்பில் வேறுபாடு உண்டு. ஆனால் ஒன்றில் ஒன்றைக் கழித்து வந்த பூஜ்யமும், இரண்டில் இரண்டைக் கழித்து வந்த பூஜ்யமும், பூஜ்யத்தை மற்ற எண்களால் பெருக்கி வந்த பூஜ்யமும் ஒரே நிலையை சுழுத்தியவத்தையில் தம்மை மறந்து தூங்குகிறவர்கள் அந்தத் தூக்கத்துக்கு முன்னும் பின்னும் வேறுபட்ட நிலையில் இருந்தாலும் அப்போது செயலற்றுப் பூஜ்யமாக ஒரே நிலையில் இருக்கிறார்கள்.

இறைவன் மனிதனுடைய உடம்புக்கு ஓய்வு கொடுக்கத் தூக்கம் என்ற ஒன்றை அளித்திருக்கிறான். எல்லோரையும் சில மணி நேரம் ஒன்றும் செய்யாமல் துயிலில் ஆழப் பண்ணி விடுகிறான். அப்போது சிறிது நேரத்துக்குச் செத்துப் போனவர்களைப் போலவே ஆகிவிடுகிறார்கள்.

ஒருவிதத்தில் உறக்கமும் சாவும் ஒப்புமை உடையன.

“உறங்கு வதுபோலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

என்பது குறள். மரணத்தை நெடுந்துயில் என்று சொல்வதுண்டு. உயிர்கள் ஒரு நாள் உறங்குவது அற்றை நாளில் பிறந்து வாழ்ந்து அந்த நாள் வாழ்வை முடித்துக் கொண்டு இறந்து விடுவதற்குச் சமானம். மறுநாள் விழிப்பது மீட்டும் பிறப்பதற்குச் சமமானது. மரணத்தை நெடுந்துயில் என்பதற்கு மாறாகத் துயிலைக் குறு மரணம் என்று சொன்னால் தவறு இல்லை.

மரணம் என்பது உடலைப் பெற்றவர்கள் நிலையினின்று சொல்லும் சொல். அதை உண்டாக்கும் கடவுள் நிலையிலிருந்து பார்த்துச் சொன்னால் அது அவன் செய்யும் சங்காரம். மரணம் உயிர்களின்பால் நிகழும் செயல்; அதை அவற்றினிடம் நிகழ்த்தும் செயலுக்குச் சங்காரம் என்று பெயர். இறைவன் சங்காரம் செய்கிறான்; அதனால் உயிர்கள் மரணம் அடைகின்றன.

தாய் தூங்க வைக்கிறாள்; குழந்தை தூங்குகிறது. மக்கள் தூங்குவதாகிய குறு மரணம் அடைகிறார்கள். இறைவன் எல்லோரையும் தூங்கச் செய்வதாகிய சிறிய சங்காரத்தைச் செய்கிறான். உறங்குவது குறு மரணமானால் உறங்கச் செய்வது குறுஞ் சங்காரமாகத்தானே இருக்கும்?

இந்தக் குட்டிச் சங்காரம் ஒவ்வொரு நாளும் நிகழ்கிறது. அதை நித்தசங்சாரம் என்று சொல்லலாம். உயிர்கள் தினந்தோறும் உறங்குவதாகிற குறுமரணம் அடையச் செய்வதாகிய செயலே நித்தசங்காரம்.

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்.

(நித்தசங்காரம் என்பது உயிர்கள் உறங்கும்போது அவ்வுறக்கத்தில் யாவற்றையும் மறந்து நிற்கும் நீண்ட நிலை.

மூடம் என்றது சுழுத்தி நிலையை. அப்போது எல்லாம் மறந்து ஒன்றையும் அறியாமல் இருத்தலின் மூடம் என்றார்.)

சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம் என்று கூறும் முத்தொழிலையும் இறைவன் இயற்றுகிறான். அவை உயிர்களை உடம்புடன் பொருத்திப் படைத்தலும், உடம்புடன் வாழும்படி பாதுகாத்தலும், உடம்பினின்றும் நீக்குதலும் ஆகும். இம்மூன்றும் உயிர்க் கூட்டங்களைச் சாரும் தொழில். சிருஷ்டியால் தோற்றமும், ஸ்திதியால் வாழ்வும், சங்காரத்தால் மரணமும் உயிர்களுக்குச் சம்பவிக்கின்றன.

வாழ்வு விழித்திருப்பதைப் போன்றது; மரணம் உறங்குவதைப் போன்றது. விழித்திருக்கும் நிலையைச் சாக்கிரம் என்று சொல்வார்கள். அதையே வாழ்வுக்கும் ஒரு குறியீடாகக் கொள்ளலாம். அதன்பின் உள்ள அவஸ்தையை வாழ்வுக்குப் பின் வரும் மரணத்துக்கு ஒப்பிடலாம். வாழ்வுக்குப் பின்வரும் நிலை சாக்கிரத்துக்குப் பின் உள்ள நிலை போன்றது; ஆகவே அதைச் சாக்கிராதீதம் என்று சொல்லலாம். அப்போது சங்காரம் நிகழ்கிறது.

முன்னே சொன்னது ஒரு நாளின் முடிவிலே நிகழும் சங்காரம்; இதுவோ வாழ்நாளில் முடிவிலே நிகழும் சங்காரம். இது அந்தச் சங்காரத்துக்கு அடுத்தபடி வைத்து எண்ணக் கூடியது.

வைத்தசங் காரமும் சாக்கிரா தீதமாம்.

(அடுத்தபடியாக வைத்த சங்காரம் சாக்கிரமாகிய வாழ்நாளுக்குப் பின்னதாகிய மரணத்தை நிகழ்த்துவதாம்.

சங்காரம் காரணம்; மரணம் காரியம். காரணத்தைக் காரியமாக உபசரித்தல் என்ற மரபுப்படி சங்காரம் சாக்கிராதீதமாம் என்றார். முன்பு சொன்னது இத்தகையதே. அதீதம் – கடந்தது.)

மரணம் என்பது எல்லோருக்கும் ஒருங்கே நிகழ்வது அன்று. ஒவ்வோருயிரும் தன் வாழ்நாள் முடிந்தபின்பு இறந்து படுகிறது. ஒரு நாளில் ஓய்வுபெற உறக்கம் இருப்பது போல ஒரு வாழ்நாளில் ஓய்வுபெற மரணம் இருக்கிறது. அடுத்தபடி எல்லோருக்கும் பொதுவான ஓய்வுகாலம் ஒன்று உண்டு. அதைச் சர்வ சங்கார காலம் என்பார்கள்.

எல்லா உயிர்களையும் மூல மலத்தில் ஒடுங்கியிருக்கும் படி அந்த மகா சங்கார காலத்தில் இறைவன் செய்வான். துயிலைக் குறுமரணமென்றும், இறப்பை மரணமென்றும் சொன்னால், சர்வ சங்கார காலத்து ஒடுக்கத்தைக் கூட்டு மரணம் என்று சொல்லலாம். வீட்டிலுள்ள எல்லாப் பிள்ளைகளையும் தூங்க வைத்துவிட்டுத் தாய் இளைப்பாறும் காலத்தைப் போன்றது அக்காலம். அந்த மரணம் மூன்றாவது மரணம். அப்போது இறைவன் செய்யும் சங்காரம் முழுமையானது; யாரையும் விட்டுவைக்காமல் எல்லா உயிரையும் ஒடுக்கத்தை யடையச் செய்யும் செயல் அல்லவா? மற்றச் சங்காரங்களில் ஏனைய தொழில்களும் நடந்துகொண்டுதான் இருக்கும். எல்லோரும் தூங்கும்போது சிலர் விழித்துக் கொண்டிருப்பார்கள். சிலர் மரணமடையும் போது எஞ்சியவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சர்வ சங்கார காலத்தில் எல்லா உயிரும் மரண நிலையை அடைகின்றன. ஆதலால் அதுதான் சுத்த சங்காரம் என்று சொல்வதற்குரியது.

சுத்தசங் காரம் தொழில்அற்ற கேவலம்.

(சுத்த சங்காரம் என்பது வேறு எத்தொழிலும் இன்றி இறைவன் பிறருக்கு ஓய்வளித்துத் தானும் தொழிலின்றித் தனி நிற்கும் நிலை.

தொழில் அறுதல் இறைவனுக்கு. கேவலம் – ஆன்மாக்கள் மூலமலத்தில் ஒடுங்கியிருக்கும் நிலை.)

குறுஞ்சங்காரம், தனிச் சங்காரம், சுத்த சங்காரம் என்ற மூன்றுக்கும் மேலே மற்றொரு சங்காரம் உண்டு. அதைச் சங்காரம் என்று குறிப்பதில்லை; அநுக்கிரகம் அல்லது அருளல் என்று ஐந்தாவது தொழிலாகக் குறிப்பிடுவார்கள்.

முன்னே சொன்ன மூவகை மரணங்களில், நித்திய மரணத்தில் உடம்பும் உயிரும் ஒட்டி நின்று, உடம்பு தொழிலின்றி இருக்கிறது; உடம்பு இயங்குதல் ஒழிகிற நிலை அது. இரண்டாவது மரணம் பருவுடம்பு ஒழிகிற நிலை. மூன்றாவது உயிரும் மூலமலமும் ஒன்ற, மற்றவை ஒழிந்த நிலை.

இதற்கு அடுத்த முடிவான நிலை ஒன்று உண்டு. அதுதான் உயிர் மலத்தினின்றும் விடுபடும் நிலை. சீவன் என்ற உணர்வொழிந்து இறைவனுடன் ஒன்றுபடுவது அது. அப்பால் அதற்கு இயக்கம் இல்லை. சீவன் சிவசொரூபமாகும் நிலை யாகிய அதில் சீவன் மரணமடைகிறது. ‘எஞ்ஞான்றுகொல் சாவதுவே’ என்று மணிவாசகர் பேசுவார். இந்த மரணத்தை உண்டாக்குபவன் இறைவன்தான். இது மரணமல்ல; அமுதக் கடலில் ஆழ்ந்தால் மரணம் இல்லை; ஆனால் செயலும் இல்லை. அதுபோன்றது இது. இந்த மரண நிலையை உண்டாக்கும் தொழிலும் ஒருவகைச் சங்காரந்தானே? இது ஆன்மாக்களை முத்தி நிலத்துக்குச் செலுத்தும் சங்காரம்; இதுதான் சிவபிரான் செய்யும் அநுக்கிரகம்; அருள் உளதாகும் நிலைமை.

உய்த்தசங் காரம் சிவன்அருள் உண்மையே.

(ஆன்மாக்களை மீளாத நிலையிற் செலுத்தும் சங்காரம் சிவபிரானுடைய அருள் உளதாகும் நிலைமை.

உய்த்த – செலுத்திய. உண்மை – உளதாம் தன்மை.)

இந்த மரணம் ஒளிமரணம்; அமுதச் சாவு; மாறாத வாழ்வாகிய இறப்பு; அத்துவித நிலை தரும் இன்பத் தூக்கம். இதையே சாசுவத மரணம் என்று சொல்லலாம்.

உயிர் அடையும் நால்வகை மரணங்களையும் அவற்றை நிகழ்த்தும் நால்வகைச் சங்காரங்களையும் இந்தப் பாட்டில் திருமூலர் புலப்படுத்துகிறார். அந்த நான்கு மரணங்களுக்கும் வேறுபெயர், துயில், இறப்பு, ஒடுக்கம், முத்தி என்பன.

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்;
வைத்தசங் காரமும் சாக்கிரா தீதமாம்;
சுத்தசங் காரம் தொழில்அற்ற கேவலம்;
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

இது இரண்டாந் தந்திரத்தில் சங்காரம் என்ற பகுதியில் வரும் ஐந்தாவது பாட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *