உத்தமன் கோயில்

தரிசாகக் கிடக்கிறது ஒரு நிலம். அதில் கள்ளியும் எருக்கும் படர்ந்திருக்கின்றன. பாம்புப் புற்றும் ஒருபால் இருக்கிறது. அந்த இடத்துக்கு யாருமே போவதில்லை. கிணறு வெட்டினால் பாதாளம் வரைக்கும் சென்றால்தான் தண்ணீரைக் காணலாம். அந்த நிலத்தைப் பற்றி யாருக்கு என்ன கவலை இருக்கும்?

திடீரென்று ஒருநாள் அதற்கு மதிப்பு உண்டாயிற்று. அந்தப் பக்கத்தில் வெறும் வெளியாக இருந்த நிலங்களையும் இந்த நிலத்தையும் நில நூல் வல்லவர்கள் ஆராயத் தொடங்கினார்கள். நில மகளின் வயிற்றை அகழ்ந்து பார்க்கும் விஞ்ஞானிகள் அவர்கள். அங்கே தங்கம் கொடியோடிக் கிடக்கிறதென்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள்; ஆராய்ச்சி நடத்தினார்கள்.

ஆராய்ச்சியின் முடிவில் அந்த நிலப்பரப்பின் கீழே தங்கம் இருக்கிறது என்று தெளிவாகத் தெரிய வந்தது. பின்னும் பல ஆராய்ச்சியாளர்களும், அரசாங்க அதிகாரிகளும் வந்தார்கள். அந்த இடத்தைச் சுற்றி மதில் எடுத்தார்கள். கள்ளியும் முள்ளும் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தன. இதற்குமுன் இருந்த கள்ளிக்காடா அது? தங்கச் சுரங்கம் அல்லவா?

தங்கம் அங்கே புதியதாக உண்டாகவில்லை. மக்கள் இதுவரை அதை வெறும் கள்ளிக்காடாக எண்ணியிருந்தார்கள். அறிஞர்கள் அதன்கீழ் உள்ள மதிப்புள்ள பொருளை இப்போது கண்டு கொண்டமையால் அந்த நிலத்தின் மதிப்பு உயர்ந்துவிட்டது. இந்த மதிப்பு நிலத்துக்காக வந்தது அன்று; அதற்குள்ளே இருக்கும் பொருளாகிய தங்கத்தால் வந்தது. தங்கம் இருப்பது தெரியாத வரையில் மதிப்பு உண்டாக வில்லை; தெரிந்தபிறகே மதிக்கத் தொடங்கினார்கள்.

இந்த உடம்பு கள்ளிக்காட்டைப் போலத்தான் இருக் கிறது. புழுவும் அழுக்கும் பொதிந்த இடம் இது. சற்றே சிந்தித்தால் உடம்பைக் காட்டிலும் அருவருக்கத்தக்க பொருள் ஒன்றும் இல்லை என்று சொல்லலாம். அருவருக்கத்தக்க அழுக்குகளும் ஆபாசங்களும் உடம்பிலிருந்து உண்டா கின்றவைகளே.

பல பெரியார்கள் இந்த உடம்பை அருவருத்துப் பாடி யிருக்கிறார்கள். “இதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது?” என்று சொல்லியுள்ளார்கள்.

“புறந்தோல்போர்த் தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடில்”

என்று மாணிக்க வாசகர் சொல்கிறார்.

இந்த உடம்புக்குள்ளேதான் உயிர் வாழ்கிறது. மனிதனுக்கு எல்லாப் பொருள்களிலும் சிறந்தது உயிர். அது குடியிருக்கிற வீடு இது என்ற நினைவினால் நாம் இதைச் சோறு போட்டுக் காப்பாற்றுகிறோம். ஞானிகளோ இது சில காலம் குடியிருக்க வந்த ஓட்டைக் குடில் என்று அருவருக் கிறார்கள்.

உடம்பு உயிர் வாழும் இடம் என்பதோடு, உயிர்க்குயிராகிய இறைவன் வாழும் திருக்கோயில் என்ற உண்மையையும் தெரிந்து கொண்டால் உடம்பின் அருமை புலப்படும். தங்கம் உள்ள நிலத்தைப் பாதுகாப்பது போல இதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். தங்கம் உள்ள நிலம் என்று அறிந்தவர்கள் நிலத்தைப் பாதுகாப்பதோடு நின்று விடுவார்களா? அதில் உள்ள தங்கத்தை அகழ்ந்து எடுத்துப் பயனடைவார்கள்.

உடம்பினுக்குள்ளே உத்தமனாகிய இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த பின் அந்த உடம்பைப் பாதுகாப்பதோடு நில்லாமல் அந்த உத்தமனைக் கண்டு இன்புற முயல்வார்கள். நாம் உடம்பைப் பாதுகாப்பது, உடம்பினால் வரும் சிறிய இன்பங்களைக் கருதி. யோசிகள் இறைவன் ஆலயம் இது என்று பாதுகாத்து அவனது தரிசனத்தைச் செய்ய முற்படுவார்கள்.

உடம்பால் ஆன பயனைப் பெற்றபிறகு இந்த உடம்பை நீத்துவிட அவர்கள் சித்தமாக இருப்பார்கள். நிலத்தின் அடியிலிருந்த தங்கத்தையெல்லாம் வெட்டி எடுத்து பிறகு அந்த நிலத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு பாதுகாக்க மாட்டார்கள். சிவயோகிகள் உடம்பை எப்படிப் பாதுகாக்க வேண்டுமோ அப்படி மிகவும் கவனமாகப் பாதுகாப்பார்கள். உடம்பு போய் விடும் காலம் வந்தால் அதற்காக வருந்த மாட்டார்கள். கரும்பை ஆலையில் ஆட்டிச் சக்கையை எறிந்து விடுவது போல, உடம்பினால் ஆன பயனைப் பெற்ற பின்பு இதனை உதைத்துத் தள்ளுவதில் அவர்களுக்குத் துக்கமே இராது.

நாமோ? உடம்பை உடம்புக்காகவே பாதுகாக்கிறோம். உடம்பு எத்தனை நாளைக்கு இருந்தாலும் நமக்குப் போதாது. தேகமே நமக்குச் சொர்க்கம்.

திருமூலர் பெரிய சிவயோகி. அவர் உடம்பைப் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ வகை செய்து கொண்டார். “இந்த நாற்ற உடம்பை எதற்காக இவ்வளவு காலம் வைத்திருக்கிறீர்கள்?” என்று அவரைக் கேட்டால் அவர் என்ன விடை சொல்வார்? இந்தப் பாட்டைத்தான் சொல்வார்.

உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்;
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.

(உடம்பை முன்பு குறைபாடுடையதென்று எண்ணியிருந்தேன். இப்போது உடம்புக்குள்ளே இருக்கும் உயர்ந்த பொருள் இன்ன தென்பதைத் தெரிந்து கொண்டேன். உடம்புக்குள்ளே உத்தமனாகிய இறைவன் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கிறான் என்று உணர்ந்து, இவ்வுடம்பையான் உலகில் இருந்து பாதுகாக்கிறேன்.

இழுக்கு – குறைபாடு; இழிவு; இங்கே இழுக்குடைய பொருள் என்று கொள்ளவேண்டும். ஓம்புகின்றேன் – பாதுகாக்கிறேன்.)

திருமூலர் கைலையில் வாழ்ந்த சித்தர். திருவாவடு துறைக்கு வந்து ஓர் இடையன் உடம்பிற் புகுந்து கொண்டார். அதில் இருந்தபடியே யோகம் செய்து பல காலம் வாழ்ந்தார். “இந்த உடம்பில் இருந்துகொண்டு ஏன் பாதுகாக்கிறீர்கள்?” என்று கேட்பதற்கு நியாயம் இருக்கிறதல்லவா?

ஊற்றைச் சரீரம் என்று எண்ணாமல் உத்தமன் கோயில் என்று பாதுகாத்ததைச் சொல்லும் இப்பாடல் மூன்றாந் தந்திரத்தில் சரீர சித்தி உபாயம் என்ற பகுதியில் வரும் இரண்டாவது பாட்டு.

ஓம் நமசிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *