கார் நாற்பது மூலமும் உரையும்


தோழி தலைமகட்குப் பருவங் காட்டி வற்புறுத்தது.

1. பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெய றாழ
வருது மெனமொழிந்தார் வாரார்கொல்
வானங் கருவிருந் தாலிக்கும் போழ்து.

பதவுரை: பொருகடல் வண்ணன் – கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால், மார்பில் புனை தார் போல் – மார்பில் அணிந்த பூமாலைபோல, திருவில் – இந்திர வில்லை, விலங்கு ஊன்றி – குறுக்காக நிறுத்தி, தீம் பெயல் தாழ – இனிய பெயல் வீழாநிற்க, வருதும் என மொழிந்தார் – வருவோம் என்று சொல்லிப்போன தலைவர். வானம் – மேகமானது. கரு இருந்து – கருக்கொண்டிருந்து, ஆலிக்கும் போழ்து – துளிகளைச் சொரியாநிற்கையில், வாரார் கொல் – வாராரோ? (வருவார்) என்றவாறு.

பொருகடல் – வினைத்தொகை, புனைதார் என்க. திரு – அழகு, விரும்பப்படும் தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு: ‘திருவிற் கோலி’ என ஐங்குறு நூற்றுள் வருவதுங் காண்க. விலங்கு – குறுக்கு; ‘விலங்ககன்ற வியன் மார்ப’ என்பது புறம். ஆக என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது. நீலநிற முடைய வாளின்கண் பன்னிறமுடைத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில் நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிற மலர்த்தாரினைப் போலும் என்க. தாழ – நிகழ்கால வினையெச்சம். வருதும் – தனித்தன்மைப் பன்மை. வருவர் என்பது கிறிப்பாற் போந்தது. (1)

இதுவுமது

2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு
நேர்சினை யீனக் – கொடுங்குழாய் இன்னே
வருவர் நமரென் றெழில்வான மின்னு
மவர்தூ துரைத்து.

பதவுரை: கொடுங்குழாய் – வளைந்த குழையை யுடையாய், கடுங்கதிர் நல்கூர – ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த, கார் செல்வம் எய்த – கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த, நெடுங்காடு- நெடிய காடெல்லாம், நேர்சினை ஈன – மிக்க அரும்புகளை யீன, எழில் வானம் – எழுச்சியுடைய முகில், நமர் இன்னே வருவர் என்று – நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று, அவர் தூது உரைத்து- அவரது தூதாய் அறிவித்து, மின்னும் – மின்னாநின்றது எ-று.

கடுங்கதிர் – அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்து வதெனக் கோடலும் ஆம். ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வ மெனப் படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார். கார் – ஆகுபெயர். முதலடியிற் பொருள் முரண் காண்க. நேர் – ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. கொடுமை – வளைவு. கொடுங் குழை – காதணி. எழில் – அழகுமாம். செயவெனெச்சம் மூன்றும் மின்னும் என்னும் வினைகொண்டன. (2)

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது.

3. விரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற் றண்புறவி னாலி – புரள உருமிடி
வான மிழிய வெழுமே நெருந
லொருத்தி திறத்து.

பதவுரை: வரிநிறப் பாதிரி வாட – வரி நிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாட, வளிபோழ்ந்து – காற்றினால் ஊடறுக்கப் பட்டு, அயிர்மணல் – இளமணலையுடைய, தண் புறவின் – குளிர்ந்த காட்டின்கண், ஆலி புரள – ஆலங்கட்டிகள் புரள, உரும் இடிவானம் – இடி இடிக்கும் முகில், நெருநல் – நேற்று முதலாக, ஒருத்தி திறத்து – தமித்திருக்கும் ஒருத்தி மாட்டு (அவளை வருத்துவான் வேண்டி,) இழிய – மழை பெய்ய, எழும் – எழாநின்றது எ- று.

பாதிரி – ஆகுபெயர்; அது வேனிற்பூ ஆகலின் வாட என்றார். வாட என்றமையின் அது முல்லைக்கண் மயங்காமையோர்க. ‘புன்காற் பாதிரி வரிநிறத் திரள்வீ’ என அகத்தினும் வரிநிறம் கூறப்பட்டமை காண்க. போழ்தல் – ஊடறுத்தல்; ‘வளியிடை, போழப் படாஅ முயக்கு’ என முப்பலினும் இப்பொட்டாயது இது. நீர்திரண்ட கட்டி. உழிய எனப் பாடங் கொள்ளுதல் சிறப்பு; உழிதர என்க. நெருநல் எழும் என முடிக்க. நேற்றுமுதல் தமிமையால் வருந்துவாள் எனினும் மையும். பாதிரி வாட ஆலி புரள வானம் வளி போழ்ந்து ஒருத்தி திறத்து எழும் என வினை முடிவு செய்க. (3)

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது

4. ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப் பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து.

பதவுரை: ஆடும் மகளிரின் – கூத்தாடும் மகளிர் போல, மஞ்ஞை – மயில்கள், அணிகொள – அழகுபெற, காடும் – காடுகளும், கடுக்கை – கொன்றைகள், கவின் பெற – அழகு பெற, பூத்தன – அலர்ந்தன; பாடு வண்டு – பாடுகின்ற வண்டுகளும், ஊதும் – அப்பூக்களை ஊதாநிற்கும்; (ஆதலால்) பணைத்தோளி- மூங்கில் போலும் தோளையுடையாய், பருவம் – இப்பருவ மானது, வாடும் பசலை – வாடுகின்ற நின் பசலைக்கு, மருந்து – மருந்தாகும் எ-று.

மகளிரின் என்பதில் இன் உவமப் பொருவு. மஞ்ஞை கார் காலத்திற் களிப்புமிக்கு ஆடதலின் ஆடுமகளிரை உவமை கூறினார். காடும் – உம்மை எச்சப்பொருளது. பூத்தன என்னும் சினைவினை முதலொடும் பொருந்திற்று; காடு முதலும் கடுக்கை சினையுமாகலின். வாடும் – காரணகாரியப் பொருட்டு. (4)

இதுவுமது

5. இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை
யீண்டைப் பவழஞ் சிதறி யவைபோலக்
கோபந் தவழுந் தகைய புறவு.

பதவுரை: பகழிபோல் – அம்புபோலும், உண் கண்ணாய் – மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை – இவ்விடத்து, பவழம் சிதறியவைபோல் – பவழம் சிந்தியவை போல, புறவு – காடுகள், கோபம் தவழும் தகைய – இந்திர கோபங்கள் பறக்குந் தகைமையை உடைய வாயின; (ஆதலால்) இகழுநர் சொல் அஞ்சி – இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி, சென்றார் – பொருள் தேடச் சென்ற தலைவர், வருதல் – மீளவருதல், பொய் அன்மை – மெய்யாம் எ – று.

தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ் செய்யா தார்க் குளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல் லஞ்சி’ எனப் பட்டது. வடிவானும் தொழி லானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை – மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் சிதறியவை என்றமை யால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழ வடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை – குற்றுகரம் ஐகாரச் சாரியை யேற்றது. கோபம் – கார்காலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர். (5)

இதுவுமது

6. தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய்
வருந்தல் கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

பதவுரை: வடு இடை – மாவடுவின் நடுவே, போழ்ந்து – பிறந்தாற் போலும், அகன்ற கண்ணாய் – பரந்த கண்களையுடையாய், கடிது இடி வானம் – கடுமையாய் இடிக்கும் முகில், நெடு இடை சென்றாரை- நெடிய வழியிற் சென்ற தலைவரை, நீடன்மின் என்று – காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி, உரறும் – முழங்காநிற்கும்; (ஆதலால்) தொடிஇட ஆற்றா – வளையிடுதற்கு நிரம்பாவாய், தொலைந்த – மெலிந்த, தோள் நோக்கி – தோள்களைப் பார்த்து, வருந்தல் – வருந்தாதே எ – று.

ஆற்றா – எதிர்மறை வினையெச்சமுற்று. தொடி யிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; ‘தொடியொடு தொல்கவின் வாடிய தோள்’ என்பது முப்பால். போழ்ந்தால் என்பது போழ்ந்து எனத் திரிந்துநின்றது. உவமவுருபு தொக்கது. நெடுவிடை – மருபின்பாற்படும்; நெட்டிடை என்பதே பயின்ற வழக்காகலின். (6)

இதுவுமது

7. நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை.

பதவுரை: தளர் இயலாய் – தளர்ந்த இயல்பினை யுடையாய், நச்சியார்க்கு – தம்மை விரும்பியடைந் தார்க்கு, ஈதலும் – கொடுத்தலும், நண்ணார் – அடையாத பகைவரை, தெறுதலும் – அழித்தலும், தற்செய்வான் – தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து, (அவற்றின் பொருட்டு) சென்றார் – பொருள் தேடச் சென்ற தலைவரை, பொச் சாப்பு இலாத – மறப்பில்லாத, புகழ் – புகழையுடைய, வேள்வித் தீப்போல – வேள்வித் தீயைப்போல, எச்சாரும் – எம்மருங்கும், மின்னும் – மின்னாநிற்கும், மழை – வானமானது, தரூஉம் – கொண்டு வரும் எ-று.

அறஞ் செய்தற்கும் பகைதெறுதற்கும் பொருள் காரணமாதலை ‘அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும் . . . தருமெனப், பிரிவெண்ணிப் பொருள் வயிற் சென்ற நங்காதலர்’ என்னும் பாலைக்கலி யானு மறிக. தற்செய்வான் சென்றார் – பன்மை யொருமை மயக்கம்; சில சொற்கள் வருவிக்கப்பட்டன. ‘தளிரியலாய்’ என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும். பொச்சாப்பின்றிச் செய்தலாற் புகழுண்டாம் ஆகலின் ‘பொச் சாப்பிலாத என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு; ‘பொச் சாப்பார்க்கில்லை புகழ்மை’ என்பது திருவள்ளுவப் பயன். வேள்வித்தீ உவமம். அது மழைக்குக் காரணமென்பதற்கு ஞாபகமாகவும் உள்ளது. (7)

இதுவுமது

8. மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும்
தண்ணிய லஞ்சனந் தோய்ந்தபோற் காயாவும்
நுண்ணரும் பூழ்த்த புறவு.

பதவுரை: பெண் இயல் நல்லாய் – பெண் தகைமையையுடைய நல்லாய், மண் இயல் ஞாலத்து – மண்ணானியன்ற உலகத்து, மன்னும் புகழ் வேண்டி – நிலைபெறும் புகழை விரும்பி, பிரிந்தார்- பிரிந்து சென்ற தலைவர், வரல் – மீண்டு வருதலை, கண் இயல் அஞ்சனம் – கண்ணிற்கு இயற்றப்பட்டமையை, தோய்ந்தபோல் – தோய்ந்தவை போல, காயாவும் – காயாஞ் செடிகளும், நுண் அரும்பு ஊழ்த்த – நுண்ணிய அரும்புகள் மலரப்பேற்ற, புறவு – காடுகள். கூறும் – சொல்லா நிற்கும் எ-று.

பெண் இயல் – நாண் முதலியன; ‘அச்சமு நாணு மடனு முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரியவென்ப’ என்று தொல்காப்பியம் கூறுவதுங் காண்க. காயா மலர் அஞ்சனந் தோய்ந்தாற் போலும் என்பதனை, ‘செறியிலைக் காயா அஞ்சன மலர’ என்னும் முல்லைப் பாட்டானும் அறிக. ஊழ்த்தல் – மலர்தல்; ‘இணரூழ்த்து நாறாமலர்’ என்பது திருக்குறள். புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க. (8)

இதுவுமது

9. கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்கேற்
றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து.

பதவுரை: கண்மலர்போல் பூத்தன – கண்மலர் போலப்பூத்தன வாகிய, கருவிளை – கருவிளம்பூக்களும், கார்க்கு ஏற்று – கார்ப் பருவத்திற் கெதிர்ந்து, எரி வனப்பு உற்றன – தீயினது அழகை யுற்றனவாகிய, தோன்றி – தோன்றிப் பூக்களும், வரிவளை முன் கை இறப்ப – வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இன்சொல் பலவும் உரைத்து – இனிய சொற்கள் பலவும் மொழிந்து, துறந்தார் – பிரிந்து சென்ற தலைவர், வரல் – வருதலை, கூறும் – கூறாநிற்கும் எ-று.

கருவிளை – கருங்காக்கணம்பூ; அது கண் போலும் என்பதனைக் ‘கண்ணெனக் கருபிளை மலர’ என்னும் ஐங்குறு நூற்றானு மறிக. தோன்றிப்பூச் செந்நிற ஒளியுடையது; ‘சுடர்ப் பூந்தோன்றி’ என்பது பெருங்குறிஞ்சி, ‘தோடார் தோன்றி குருதி பூப்ப’ என்றார் பிறரும். உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல் கூறும் என முடிக்க, (9)

இதுவுமது

10. வானேறு வானத் துரற வயமுரண் ஆனேற்
றொருத்த லதனோ டெதிர்செறுப்பக் கான்யாற்
றொலியிற் கடுமான்றே ரென்றோழி மேனி
தளிர்ப்ப வரும்.

பதவுரை: என் தோழி – எனது தோழியே, வான்ஏறு – இடியேறு, வானத்து உரற – முகிலின்கண் நின்று ஒலிப்ப, வய – வலியினையும், முரண் – மாறு பாட்டினையும் உடைய, ஆன் ஏறு ஒருத்தல் – எருமையின் ஆணாகிய ஒருத்தல், அதனோடு – அவ்விடியேற்றுடன்; எதிர் செறுப்ப – எதிராகி வெகுள, கடுமான்தேர் – விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், கான் யாற்று ஒலியின் – காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினை உடைத்தாய், மேனி தளிர்ப்ப – நின்மேனி தழைக்க, வரும் – வாரா நிற்கின்றது எ-று.

வய – வலி; ‘வயவலியாகும்’ என்பது தொல் காப்பியம். ஆன் என்னும் பெயர் எருமைக் குரித்தாதலும் ஒருத்தல் என்னும் பெயர் அதன் ஆணுக்குரித்தாதலும் தொல்காப்பிய மரபியலானறிக; இடபம் எனினும் ஆம். தேரொலி அருவியொலி போலும் என்பதனை ‘அருவியினொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்’ என்னும் பதிற்றுப்பத்தானும் அறிக. செயவெனெச்சம் முன்னைய விரண்டும் நிகழ்விலும், பின்னையது எதிர்விலும் வந்தன. (10)

இதுவுமது

11. புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு

பதவுரை: வணர் – குழற்சியையுடைய, ஒலி – தழைத்த, ஐம்பாலாய் – கூந்தலையுடையாய், அணர்த்து எழு – மேனோக்கி யெழும், பாம்பின் தலைபோல் – பாம்பினது படத்தைப் போல, புணர் கோடல் – பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற – பூங்கொத்துக் களை யீன்ற, புறவு – காடுகள், புணர்தரு – (இம்மை மறுமை யின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் – பொருளை, தருபாக்கு – கொண்டுவர, சென்றார் – பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் – விரைந்து வருதலை, கூறும் – கூறாநிற்கின்றன எ – று.

தருபாக்கு – வினையெச்சம், வணர் – வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி – தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும்பீலி’ என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் – ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன; குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஓரோப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்’ என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க. (11)

இதுவுமது

12. மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய் ஐயந்தீர்
காட்சி யவர்வருதல் திண்ணிதாம் நெய்யணி
குஞ்சரம் போல விருங்கொண்மூ வைகலு
மேரும் வலம்.

பதவுரை: மை எழில் – கருமையும் அழகும் பொருந்திய, உண் கண் – மையுண்ட கண்களையுடைய, மயில் அன்ன சாயலாய் – மயில் போலும் சாயலினை யுடையாய் நெய் அணி குஞ்சரம் போல – எண்ணெய் பூசப்பட்ட யானைகள்போல, இருங்கொண்மூ – கரிய மேகங்கள், வைகலும் – நாடோறும், வலம் வரும் – வலமாக எழாநின்றன; (ஆதலால்) ஐயம் தீர் காட்சி – ஐயந்தீர்ந்த அறிவினையுடைய, அவர் – நம் தலைவர், வருதல் திண்ணிது – மீள வருதல் உண்மை எ – று.

சாயல் – மென்மை; உரிச்சொல் ஐயந்தீர்ந்த எனவே திரிபின்மையும் பெற்றாம். காட்சி – அறிவு. காட்டியவர் எனக் குறிப்புவினைப் பெயராக்கலும் ஒன்று பொய் உள்ளீடில்லாததாகலின் உண்மையைத் ‘திண்ணிது’ என்றார். ஆம் – அசை. இருமை – கருமை; பெருமையுமாம். ஏர்தல் – எழுதல்; ‘பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு’ என்பது முல்லைப் பாட்டு. (12)

இதுவுமது

13. ஏந்தெழி லல்குலா யேமார்ந்த காதலர் கூந்தர்
வனப்பிற் பெயறாழ – வேந்தர் களிறெறி
வாளரவம் போலக்கண் வௌவி ஒளிறுபு
மின்னு மழை.

பதவுரை: எழில் – அழகினையுடைய, ஏந்து அல்குலாய் – ஏந்திய அல்குலையுடையாய், ஏம் ஆர்ந்த காதலர் – தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின், கூந்தல் – சரிந்த கூந்தலினது, வனப்பின் – அழகு போல, பெயல் தாழ – மழை பெய்ய, மழை – முகில், வேந்தர் களிறு எறி – அரசர்யானையை வெட்டி வீழ்த்துகின்ற, அரவம் – ஒலியினையுடைய, வாள் போல – வாளிளைப்போல, கண் வௌவி- கண்களைக் கவர்ந்து, ஒளிறுபு – ஒளிவிட்டு, மின்னும் – மின்னா நின்றது; (ஆதலால் நம் காதலர் வருவர்) எ – று.

ஏம் – ஏமம்; கடைக்குறை காதலர் – ஈண்டு மகளிரை உணர்த்திற்று. ‘அரவம்’ என்றமையால் மழைக்கு முழக்கம் வருவித்துக் கொள்ளப் படும். மழையின் மின்னுக்கு வாள் உவமமாதலை ‘அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய லாடவர், கழித்தெறி வாளி னழிப்பன விளங்கு, மின்னுடைக் கருவியை யாகி நாளுங், கொன்னே செய்தியோ அரவம் – மழையே’ என்னும் அகப்பாட்டானும் அறிக. கண் வௌவல் – கண்வழுக்குறச் செய்தல். ஒளிறுபு – செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். காதலர் வருவரென்பது வருவிக்கப்பட்டது. (13)

இதுவுமது

14. செல்வந் தரல்வேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்.

பதவுரை: வயங்கிழாய் – விளங்காநின்ற அணிகளை யுடையாய், முல்லை – முல்லைக்கொடிகள், இலங்கு – விளங்குகின்ற, எயிறுஈன – மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை, நறு தண்கார் – நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனிய நகும்- மெல்ல இனியவாக மின்னாநின்றன; (ஆதலால்) செல்வம் தரல்வேண்டி – பொருள் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்ற- பிரிந்து சென்ற, நம் காதலர் – நமது தலைவர், வல்லே வருதல் – விரைந்து வருதலை, தெளிந்தாம் – தெளிய அறிந்தாம் எ – று

வல்லே என்பதில் ஏகாரம் அசை; தேற்றமும் ஆம். தெளிந்தாம் – உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. எயிறு போலும் அரும்பினை எயிறென்றார். ‘முல்லையெ யிறீன’ என்பது ஐந்திணையெழுபது. நறு – நல்ல; இஃதிப்பொருட்டாதலைப் ‘பொலனறுந் தெரியல்’ என்பதானும் அறிக. (14)

இதுவுமது

15. திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர் குருந்தின்
குவியிண ருள்ளுறை யாகத் திருந்தி னிளிவண்டு
பாட விருந்தும்பி இன்குழ லூதும்
பொழுது.

பதவுரை: திருந்திழாய் – திருந்திய அணிகளை யுடையாய், குருந்தின் – குருந்த மரத்தின், குவி இணர் உள் – குவிந்த பூங் கொத்துக்களின் உள்ளிடமே, உறை ஆக – தமக்கு உறையிடமாக இருந்து, திருந்து இன் இளி – திருந்திய இனிய இளியென்னும் பண்ணை, வண்டுபாட – வண்டுகள் பாட, இரும் தும்பி – கரிய தும்பிகள், இன்குழல் ஊதும்பொழுது – இனிய குழலை ஊதா நிற்கும் இக்காலத்தில், காதலர் – நம் தலைவர், தீர்குவர் அல்லர் – நம்மை நீங்கியிருப்பாரல்லர் எ – று.

திருந்து இழை என்னும் இரு சொல்லும் தொக்க வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைப் பெயர் விளி யேற்றுத்திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற்பெயர் உறையும் இடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம். இளி – பஞ்சம சுரம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, மயிலாடரங்கின் மந்திகாண் பன காண்’ என்பது மணிமேகலை. (15)

இதுவுமது

16. கருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் – பெருந்தோள் செயலை
யிளந்தளி ரன்னநின் மேனிப் பசலை
பழங்கண் கொள.

பதவுரை: பெருந்தோள் – பெரிய தோளினை யுடையாய், செயலை – அசோகினது, இளந்தளிர் அன்ன – இளந்தளிர் போன்ற, நின்மேனி – உன் உடம்பினது, பசலை – பசலையானது, பழங்கண் கொள – மெலிவு கொள்ளவும், கருங்குயில் – கரிய குயில்கள், கையற- செயலற்றுத் துன்பமுறவும், மா மயில் – பெரிய மயில்கள், ஆல – களித்து ஆடவும், பெருங் கலிவானம் – பெரிய ஒலியையுடைய முகில்கள், உரறும் – முழங்காநிற்கும் எ – று.

கையறல் – ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார் காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை. ஆல – அகல; ஆட. பசலை – காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் நிறவேற்றுமை. பழங்கண் – மெலிவு; ‘பழங்கணும் புன்கணும்’ மெலிவின் பால’ என்பது திவாகரம். பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி. (16)

இதுவுமது

17. அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறொடு பௌவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல்.

பதவுரை: பேதை – பேதாய், வானம் – மேகமானது, பௌவம் பருகி – கடல் நீரைக் குடித்து, பறைக்குரல் ஏறொடு – பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்புசவட்டி – பாம்பு களை வருத்தி, அறைக்கல் – பாறைக் கற்களையுடைய, இறுவரை மேல் – பக்க மலையின்மேல், உறைத்து – நீரைச்சொரிந்து; இருள் கூர்ந்தன்று – இருள்மிக்கது; (ஆதலால்) நுதல் – உனது நெற்றி, பிறைத்தகை – பிறை மதியின் அழகை, கொண்டன்று – கொண்டதே எ – று.

இறுவரை – பக்கமலை சவட்டி – வருத்தி; ‘மன்பதை சவட்டுங் கூற்றம்’ எனப் பதிற்றுப்பத்திலும் இச்சொல் இப்பொருளில் வந்துள்ளமை காண்க; இது ‘கடிசொல்லில்லைக் காலத்துப் படினே’ என்பதனாற் போந்தது. பௌவம் – ஆகுபெயர். உறைத்தல்- துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று – கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினை முற்று. இருள் கூர்ந்தன்று – ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று. (17)

இதுவுமது

18. கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே நல்லிசை
யேறொடு வான் நடுநிற்பச் செல்வர் மனம்போற்
கவினீன்ற நல்கூர்ந்தார் மேனிபோற்
புல்லென்ற காடு.

பதவுரை: கல்பயில் – மலைநெருங்கிய, கானம் கடந்தார் – காட்டைக் கடந்து சென்ற தலைவர், வர – வரும்வகை, ஆங்கே – அவர் வருங்காலம் வந்த பொழுதே, வானம் – மேகங்கள், நல் இசை – மிக்க ஒலியையுடைய, ஏறொடு – உருமேற்றுடனே, நடு நிற்ப – நடுவுநின்று எங்கும் பெய்தலால், நல்கூர்ந்தார் மேனிபோல் – வறுமையுற்றார் உடம்புபோல, புல்லென்ற – (முன்பு) பொலி விழந்த, காடு – காடுகள், செல்வர் மனம் போல் – பொருளுடையார் மனம் போல, கவின் ஈன்ற – அழகைத் தந்தன எ – று.

நல் – ஈண்டு மிக்க என்னும் பொருளது; ‘நன்று பெரிதாகும்’ என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கற்பாலது. கடந்தார் வர ஆங்கே வானம் நடுநிற்பக் காடு கவினீன்ற என வினைமுடிவு செய்க; வர நடுநிற்ப ஆங்கே கவினீன்ற என முடிப்பினும் அமையும். (18)

வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது.

19. நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன – பைங்கோற் றொடிபொலி முன்கையாள் தோடுணையாவேண்டி நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு.

பதவுரை: நாஞ்சில் வலவன் – கலப்பைப் படை வென்றியை யுடையவனது, நிறம்போல – வெண்ணிறம் போல, பூஞ்சினை – பூங்கொம்பினையும், செங்கால் – செவ்வியதாளினையு முடைய, மராஅம் – வெண் கடம்புகள், தகைந்தன – மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு – என் மனம், பைங்கோல் தொடி – பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி – விளங்குகின்ற, முன்கையாள் – முன்னங்கையையுடையாளின், தோள் – தோள்கள், துணையா வேண்டி – எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது – நெடிய காட்டுவழியைக் கடந்து சென்றது எ – று.

நாஞ்சில் வலவன் – பலராமன்; அவன் வெண்ணிற முடைய னென்பதனையும், கலப்பைப் படையால் வெற்றியுடைய னென்பதனையும் ‘கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக் கொடி யோனும்’ என்னும் புறப்பாட்டானு மறிக. மராஅம் – வெண்கடம்பு; ‘செங்கான் மரா அத்த வாலிணர்’ என்னும் திருமுருகாற்றுப்படையானும் மராஅம் செங்காலும் வாலிணரு முடைத்தாதல் காண்க. ‘ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்’ எனப் பாலைக்கலியிலும் வெண்கடம்பின் பூங்கொத்திற்குப் பலராமன் உவமை கூறப்பட்டிருத்தல் ஓர்க. தகைதல் – மலர்தல்; இஃதிப் பொருட்டாதலைப் ‘பிடவுமுகை தகைய’ (ஐங்குறுநூறு) என்புழிக் காண்க. நெடுவிடைக்கு முன்புரைத்தாங் குரைத்துக் கொள்க. (19)

இதுவுமது

20. வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன ஆறும்
பதமினிய வாயின – ஏறோ டருமணி நாக
மனுங்கச் செருமன்னர் சேனைபோற்
செல்லு மழை.

பதவுரை: வீறுசால் – சிறப்பமைந்த, வேந்தன் – அரசனுடைய, வினையும் – போர்த்தொழில்களும், முடிந்தன – முற்றுப்பெற்றன; ஆறும் – வழிகளும், பதம் இனிய ஆயின – செவ்வி யினியவாயின; மழை – மேகங்கள், அருமணி – அரிய மணியை யுடைய, நாகம் – பாம்புகள், அனுங்க – வருந்தும் வகை, ஏறொடு – உருமேற்றுடனே, செருமன்னர் சேனை போல் – போர்புரியும் வேந்தரின் சேனை போல, செல்லும் – செல்லாநிற்கும்; (ஆதலால் நாம் செல்லக் கடவேம்) எ – று.

இடியோசையால் நாகம் வருந்துதலை ‘விரிநிற நாகம் விடருள தேனும்; உருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்’ என்னும் நாலடியானறிக. ‘முதிர்மணி நாக மனுங்க முழங்கி’ என்னும் திணைமொழியைம்பதும் ஈண்டு நோக்கற்பாலது. அணியணியாய் விரைந்து சேறலும் முழங்கலும் அம்பு சொரிதலும் பற்றிச் சேனை உவமமாயிற்று. (20)

இதுவுமது

21. பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி – நறுநுதற் செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய் முள்ளெயி றேய்ப்ப வடிந்து

பதவுரை: பொறிமாண் – எந்திரச் செய்கைகளான் மாட்சி மைப்பட்ட, புனை திண் தேர் – அலங்கரிக்கப்பட்ட திண்ணிய தேர், போந்த வழியே – வந்த வழியிதே, சிறு முல்லைப் போது எல்லாம் – சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம், வடிந்து – கூர்மையுற்று, செவ்வி நறுநுதல் – செவ்விய அழகிய நெற்றியையும், செல்வ மழைத் தடங்கண் – வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சில்மொழி – சிலவாகிய மொழியினையு முடைய, பேதைவாய் – மடவாளது வாயின்கண் உள்ள, முள் எயிறு- கூரிய பற்களை, ஏய்ப்ப – ஒவ்வாநிற்கும் எ – று.

சின்மொழி – மெல்லிய மொழியுமாம், ‘முள்ளெயி றொக்க வடிவு பட்டு’ என்று பொருளுரைத்து, ‘நின்றது’ என்னும் பயனிலை தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர். இப்பொருளில் ‘ஏய்ப்ப’ என்பது வினையெச்சம். (21)

இதுவுமது

22. இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய – நல்லார் இளநலம்
போலக் கவினி வளமுடையார் ஆக்கம்போற்
பூத்தன காடு.

பதவுரை: இளையரும் – சேவகரும், ஈர்ங்கட்டு அயர – குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, உளை அணிந்து – தலை யாட்டம் அணிந்து, புல்உண் – புல்லினையுண்ட, கலிமாவும் – மனஞ் செருக்கிய குதிரையையும், பூட்டிய – தேருடன் பூட்டு தலைச் செய்ய, காடு – காடுகள், நல்லார் – நற்குணமுடைய மகளிரின், இள நலம் போல – இளமைச் செவ்விபோல, கவினி – அழகுற்று, வளம் உடையார் – வருவாயுடையாரது, ஆக்கம் போல் – செல்வம்போல, பூத்தன – பொலிவுற்றன எ – று.

இளையர் – சேவகர்; ஏவலாளர் ஈர்ங்கட்டயர என்பதற்கு அழகிதாகக் கட்டியுடுத்தலைச் செய்ய என்றனர் பழையவுரை காரர். உளை – தலையாட்டம்; சாமரை யெனவும்படும்; இது கவரிமான் மயிராற் செய்து குதிரையின் தலையிலணியப்படுவது. பூட்டிய – செய்யிய என்னும் வினையெச்சம். இளநலம் என்புழி நலம் வடிவுமாம். வளம் வருவாயாதலை ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’ என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையானறிக. பூத்தல் – பொலிதல்; மலர்தலுமாம். (22)

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது.

23. கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந் தண்டுளி
யாலி புரளப் புயல்கான்று கொண்டெழில்
வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி யூடு நிலை

பதவுரை: ஒண்டொடி – ஒள்ளிய வளைகளை யணிந்தவளே, புறவு எல்லாம் – காடெங்கும், கண்திரள் முத்தம் கடுப்ப – இடந் திரண்ட முத்தையொப்ப, தண்துளி – குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலி- ஆலங்கட்டிகளும், புரள – புரளும் வகை, புயல் – மேகம், கான்று கொண்டு – மழை பொழிந்து கொண்டு, எழில் – அழகினையுடைய, வானமும் கொண்டன்று – வானத் திடத்தையெல்லாம் கொண்டது; (ஆதலால்) ஊடு நிலை – பிணங்குந்தன்மை, எவன்கொல் – எற்றுக்கு எ-று.

கண்டிரள் முத்தம் என்றது மேனி திரண்ட முத்தம் என்றபடி – அகத்திலும், பிறாண்டும் ‘கண்டிரண் முத்தம்’ என வருதலுங் காண்க. கொல் ஓ – அசைநிலை. தலைவர் வருவர்; இனிப் பிணங்குதல் வேண்டா என்பது குறிப்பு. (23)

வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது

24. எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
மெல்லவுந் தோன்றும் பெயல்

பதவுரை: கல் ஓங்குகானம் – முலைகள் உயர்ந்த காடுகள், களிற்றின் மதம் நாறும் – யானையின்மதம் நாறாநிற்கும்; கார் வானம் – கரிய வானத்தின்கண், பெயல் – மழை, மெல்லவும் தோன்றும் – மென்மை யாகத் தோன்றாநிற்கும்; (ஆதலால்) பல் இருங்கு கூந்தர் – பலவாகிய கரிய கூந்தலையுடையவள், பணிநோனாள் – ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப்பொறுக்கமாட்டாள்; நெஞ்சே – மனமே, எல்லா வினையும் கிடப்ப – எல்லாத் தொழில் களும் ஒழிந்து நிற்க; எழு – நீ போதற்கு ஒருப்படு எ – று.

கிடப்ப – வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத் தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார் காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி – பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க. (24)

பருவங்கண்டழிந்த தலைமகன் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது.

25. கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன சேர்ந்தன
செய்குறி வாரா ரவரென்று கூர்ந்த
பசலை யவட்கு

பதவுரை: ஈர்ந்தண் புறவில் – குளிர்ச்சி மிக்க காட்டில், கருங்கால் வரகின் பொரிபோல – காரிய தாளினை யுடைய வரகினது பொரியைப்போல, தெறுழ்வீ – தெறுழினது மலர்கள், அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன – அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; செய்குறி சேர்ந்தன – (தலைவர்) செய்த குறிகள் வந்துவிட்டன; (ஆதலால்) அவர் வாரார் என்று – தலைவர் இனி வரமாட்டா ரென்று, அவட்கு – தலைவிக்கு, கூர்ந்த – பசலை மிக்கது எ – று.

ஈர்ந்தண் – ஒரு பொருளிருசொல். தெறுழ்: காட்ட கத்த தொரு கொடி. கூர்ந்தது என்பதில் ஈறு கெட்டது. (25)

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது.

26. நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலைநாள்
விளக்கிற் றகையுடைய வாகிப் புலமெலாம்
பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு
வந்த மழை.

பதவுரை: சிலமொழி – சிலவாகிய மொழியினை யுடையாய், தோன்றி – தோன்றிப்பூக்கள், நலம்மிகு கார்த்திகை – நன்மை மிக்க கார்த்திகைத் திருவிழாவில், நாட்டவர் இட்ட – நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த, தலைநாள் விளக்கின் – முதல் நாள் விளக்கைப் போல், தகை உடையவாகி – அழகுடையனவாகி, புலம் எலாம் – இடமெல்லாம், பூத்தன – மலர்ந்தன; மழை தூதொடு வந்த – மழையும் தூதுடனே வந்தது எ – று.

கார்த்திகை நாளில் நீரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டை நாள் தொட்டுள்ளது; ‘குறு முயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மகலிருணடு நாண், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் றுவன்றிய, விழவுடனயர வருகதிலம்ம’ அகநானூற்றிலும், ‘கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கு’ எனக் களவழிநாற்பதிலும், துளக்கில் கபாலீச் சுரத்தான்றொல் கார்த்திகைநாள் . . . . . . விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ எனத் தேவாரத் திலும், ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன’ எனச் சிந்தா மணியிலும் இத்திருவிழாக் கூறப்பெற்றுமை காண்க. தலைநாள் – திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத்திங்களிற் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம்; முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப் பட்டவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். வந்த – ‘கூர்ந்த’ என்புழிப்போல் ஈறு கெட்டது. (26)

ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூறி வற்புறுத்தது.

27. முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் – பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்
பள்ளியுட் பாயும் பசப்பு.

பதவுரை: வானம் – மேகம் முருகியம்போல் – குறிஞ்சிப் பறைபோல், முழங்கி இரங்க – முழங்குதலைச் செய்ய, கானம் – காட்டின்கண், குறுகுஇலை பூத்தன – குருக்கத்தியிலை விரிந்தன; பிரிவு எண்ணி – (நம் காதலர்) பிரிதலை நன்றென்று நினைத்து, உள்ளாது அகன்றார் என்று – நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, ஊடுயாம் பாராட்ட – நாம் ஊடுதலைப் பாராட்டுவதால், பசப்பு – பசலைநோய், பள்ளியுள் பாயும் – படுக்கை யிடத்தில் பரவும் எ – று.

முருகு இயம் – குறிஞ்சிப் பறை விசேடம்; முருகனுக்கு இயக்கப்படுவது; தொண்டகம், துடி என்பனவும் குறிஞ்சிப் பறைகள். முழங்கி இரங்க – ஒரு பொருளிருசொல். குருகு குருக்கத்தி; முருக்கென் பாரும் உளர். இலையென்றமையால் பூத்தலாவது தழைத்தல் எனக் கொள்க. ஊடு – முதனிலைத் தொழிற் பெயர் இகரம் சந்தியால் வந்தது. பள்ளியுட்பாயும் என்றது படுக்கையிற் கிடக்கச் செய்யும் என்னும் குறிப்பிற்று. (27)

வினைமுற்றிய தலைமகன் நெஞ்சொடு சொல்லியது

28. இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்
பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர் கவ்வை
யழுங்கச் செலற்கு

பதவுரை: இமிழ் இசை – ஒலிக்கும் இசையினை யுடைய, வானம் – முகில், முழங்க – முழங்குதலைச் செய்ய, குமிழின் பூ – குமிழின் பூக்கள், பொன் செய் குழையின் – பொன்னாற் செய்யப் பட்ட குழைபோல், துணர் தூங்க – கொத்துக்களாய்த் தொங்க, நெஞ்சே – மனமே, காதலி ஊர் – நம் காதலியது ஊருக்கு, கவ்வை அழுங்க – அலர் கெடும் வகை, செலற்கு – நாம் செல்வதற்கு,சுரம் – காடுகள், தண்பதம் செவ்வி உடைய – குளிர்ந்த பதமும் செவ்வியும் உடைய வாயின எ – று.

இமிழ் இசை – இனிய இசையுமாம். சுரம் – காடு; அரு நெறியுமாம். கவ்வை அலர்; ஊரார் கூறும் பழி மொழி. அழுங்கல்- வருந்துதல்; ஈண்டு இலவாதல். (28)

இதுவுமது

29. பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் – பகை கொண்ட லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய சுரம்.

பதவுரை: பொங்கரும் – சோலைகளெல்லாம், ஞாங்கர் – பக்கங்களில், மலர்ந்தன – பூத்தன; கானம் – காட்டின் கண்ணே, தங்கா – தங்குதலின்றித் திரியும், தகை வண்டு – அழகையுடைய வண்டுகள், பாண்முரலும் – இசைப்பாட்டைப் பாடா நின்றன; பகை கொண்டல் – பகைத் தெழுந்த மேகம், எவ்வெத்திசைகளும் – எல்லாத் திசைக்கண்ணும், வந்தன்று – வந்தது; சுரம் – காடுகளும், செவ்வி உடைய – தட்பமுடையவாயின; (ஆதலால்) நாம் சேறும் – நாம் செல்லக்கடவேம் எ – று.

பொங்கர் – இலவுமாம். பகைகொண்டல் – வினைத் தொகை. சேறும் என்றது நெஞ்சை உளப்படுத்தி; தேர்ப்பாகற்குக் கூறியதுமாம். (29)

இதுவுமது

30. வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ – விரைநாற ஊதை யுளரு
நறுந்தண்கா பேதை பெருமட நம்மாட்
டுரைத்து

பதவுரை: வரைமல்க – மலைகள் வளம் நிறைய – வானம் சிறப்ப- வானகம் சிறப்பெய்த, இருநிலம் – பெரியபூமியை, உறை போழ்ந்து – துளிகளால் ஊடறுத்து, தீம்பெயல் தாழ – இனிய மழை வீழாநிற்க, விரை நாற – நறுமணம் கமழா நிற்க, ஊதை – காற்றானது, பேதை பெருமடம் – காதலியது பெரிய மடப்பத்தை, நம்மாட்டு உரைத்து – நமக்குத் தெரிவித்து, நறுந்தண் கா – நறிய குளிர்ந்த சோலையில், உளரும் – அசையாநிற்கும் (ஆதலால் நீ விரையத் தேரைச் செலுத்துவாய்) எ – று.

உறை – நீர்த்துளி; மூன்றன்தொகை. ஊதை – குளிர் காற்று. உளர்தல் – அசைதல்; பேதை பெருமடம் – தலைவர்வாராரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை. (30)

வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது.

31. கார்க்சே ணிகந்த கரை மருங்கி னீர்ச்சேர்ந்
தெருமை யெழிலே றெறிபவர் சூடிச் செருமிகு
மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி திருநுதற்
கியாஞ்செய் குறி

பதவுரை: எருமை எழில் ஏறு – எருமையினது எழுச்சியை யுடைய ஆண், கார்ச்சேண் இகந்த – மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த, கரை மருங்கின் – கரையின் பக்கத் திலுள்ள, நீர்ச்சேர்ந்து – நீரையடைத்து, எறி – எறியப்பட்ட, பவர் – பூங்கொடிகளை, சூடி – சூடிக்கொண்டு, செருமிகு மள்ளரில் – போரின்கண் மறமிக்க வீரரைப் போல, செம்மாக்கும் செவ்வி – இறுமாந்திருக்கும் காலமே, திருநுதற்கு – அழகிய நெற்றியை யுடையாளுக்கு, யாம் செய்குறி – நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்; (ஆதலால் விரைந்து தேர் செலுத்துவாய்) எ – று.

சேண் – ஆகாயம்; தூரமும் ஆம். எழில் – அழகுமாம். எறி – துணித்த எனினும் பொருந்தும். பவர் – கொடி, ‘அரிப்பவர்ப் பிரம்பின்’ எனக் குறுந்தொகையும், ‘நெடுங்கொடியுழிஞைப் பவரொடு மிடைந்து, எனப் புறநானூறும் கூறுதல் காண்க. மள்ளர்- வீரர்; போர்வீரர் வெட்சி, வஞ்சி முதலிய மாலைகளைச் சூடித் தருக்கி யிருக்குமாறு போலக் கடாக்கள் பூங்கொடிகளைச் சூடிக் கொண்டு தருக்கியிருக்கும் என்க. ‘மள்ளரன்ன தடங் கோட் டெருமை, மகளிரன்ன துணையொடு வதியும்’ (ஐங்குறுநூறு) என்றார் பிறரும். குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. (31)

இதுவுமது

32. கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற்
படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு

பதவுரை: கெடாப் புகழ்வேட்கை – அழியாத புகழை விரும்பு கின்ற, செல்வர் மனம்போல் – செல்வரது மனத்தைப் போல, படா மகிழ் வண்டு – கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள், கானம் – காட்டின்கண், பிடா – பிடவமாகிய, பெருந்தகை – பெருந்தகையாளிடத்து, நன்கு – நன்றாக, பாண்முரலும் – இசைப் பாட்டினைப் பாடாநிற்கும்; பாக – பாகனே, கார் ஓடக் கண்டு – மேகம் ஓடுதலைக் கண்டு, தேர் கடாவுக – தேரை விரையச் செலுத்துவாயாக எ – று.

இப்பாட்டு நான்கடியிலும் முதற்கண் அளபெடை வந்தன; கடாவுக என்று பாட மோதுவாருமுளர். கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு; ‘கொடுஞ் செலவெழிலி’ என்றார் பிறரும். புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்கு மென்க. பிடவம் – ஒரு செடி; வள்ளன்மை யுடையாரிடத்துப் பாண் மக்கள் பரிசில் கருதிப்பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன் கொளக் கருதிய வண்டுகள் பாடினவென் றுரைக்கப் பட்டது. பெருந்தகை என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது. நற்கு – வலித்தல் விகாரம். (32)

இதுவுமது

33. கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி குடமலை
யாகத்துக் கொள்ளப் பிறைக்கும் இடமென
வாங்கே குறிசெய்தேம் பேதை மடமொழி
யெவ்வங் கெட

பதவுரை: கடல்நீர் முகந்த – கடலினது நீரை முகந்த, கமம் சூல் எழிலி – நிறைந்த சூலினையுடைய மேகம், குடமலை ஆகத்து – மேற்குமலையிடத்து, கொள் அப்பு இறைக்கும் – தான் கொண்ட நீரினைச் சொரியும், இடம் என – சமய மென்று, ஆங்கே – அப்பொழுதே, பேதை – பேதையாகிய, மடமொழி – மடப்பத்தினையுடைய மொழியையுடையாளது, எவ்வம் கெட – வருத்தம் நீங்க, குறி செய்தேம் – (மீளுங் காலத்திற்குக்) குறி செய்தேம்; (ஆதலால் தேரினை விரையச் செலுத்துக) எ – று.

சூல் போறலின் நீர் சூலெனப்பட்டது; ‘கார் கோண் முகந்த கமஞ்சூன் மாமழை’ என்பது திருமுருகாற்றுப்படை. ஆகம் – அகம் என்பதன் நீட்டல்; மார்பு எனினும் ஆம். கொள்ளப் பிறக்கும் என்பது பாடமாயின் தாரை கொள்ளத் தோன்றும் எனப் பொருளுரைக்கப்படும்; பிறவாறுரைத்தல் பொருந்து மேற் கொள்க. இடம், ஆங்கு என்பன காலத்தை உணர்த்தின. (33)

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது

34. விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்
பெருவிறல் வானம் பெருவரை சேருங்
கருவணி காலங் குறித்தார் திருவணிந்த ஒண்ணுதல்
மாதர் திறத்து.

பதவுரை: பெருவிறல் வானம் – மிக்க பெருமையை யுடைய மேகம், விரிதிரை வெள்ளம் – விரிந்த அலையை யுடைய கடலினது நீரை, வெறுப்பப் பருகி – நிறைய உண்டு, பெருவரை சேரும் – பெரிய மலையை அடையா நிற்கும், கரு அணி காலம் – கருக்கொள்ளுங் காலத்தை, திரு அணி – தெய்வவுத்தியென்னும் தலைக் கோலத்தை யணிந்த, ஒள்நுதல் – ஒள்ளிய நெற்றியை யுடைய, மாதர் திறத்து – காதலியிடத்து, குறித்தார் – (தலைவர் தாம் மீண்டுவருங் காலமாகக்) குறிப்பிட்டார் எ -று.

வெறுத்தல் – செறிதல், நிறைதல்; உரிச்சொல். கெடுப்பதும் எடுப்பதும் ஆகிய எல்லாம் வல்லது மழை யாகலின் ‘பெருவிறல் வானம்’ என்றார். கருஅணி காலம் – மழை சூற்கொள்ளும் கார்காலம். திரு – சீதேவி என்னுந் தலையணி; இது தெய்வ வுத்தியென்றுங் கூறப்படும்; ‘தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து’ என்பது திருமுருகாற்றுப்படை. (34)

இதுவுமது

35. சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர வென்றி
முரசி னிரங்கி யெழில்வானம் நின்று
மிரங்கு மிவட்கு.

பதவுரை: சென்ற நம் காதலர் – வினைவயிற் பிரிந்து சென்ற நம் தலைவர், சேண் இகந்தார் என்று எண்ணி – நெடுந்தூரத்தைக் பாருந்திய பசப்பு நோயுடனே, இடும்பை பல கூர – பல துன்பங் களும் மிகப்பெறு தலால், இவட்கு – இவள் பொருட்டு, எழில் வானம் – எழுச்சியையுடைய முகில்,வென்றி முரசின் இரங்கி- வெற்றியை யறிவிக்கும் முரசின் ஒலியைப்போல இடித்து, நின்றும் – வானின்கண் இருந்தும், இரங்கும் – பரிவுறாநிற்கும் எ -று.

முரசின் என்பதில் இன் உவமப்பொருவு. நின்றும் என்பதற்குச் சலியாது நின்று என்று பொருள் கூறுவாருமுளர். வானின்கண் உள்ள மேகமும் இரங்கு மியல்பினாள் திறத்துத் தலைவர் இரங்கி வாராதது என்னை யென்றபடி. (35)

வினைமுற்றி மீளுந் தலைமகன் பாகற்குச் சொல்லியது.

36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்பப்
ஈர்ந்தண் டளவந் தகைந்தன – சீர்த்தக்க செல்வ
மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர்
நல்விருந் தாக நமக்கு.

பதவுரை: ஈர் தண் – குளிர்ச்சி மிக்க, தளவம் – செம்முல்லைப் பூக்கள், சிரல் – சிச்சிலிக் குருவியின், வாய் – வாய் போலும், வனப்பின ஆகி – அழகுடை யனவாகி, நிரல் ஒப்ப – வரிசை பொருந்த, தகைந்தன – அரும்பின; (ஆதலால் இப்பொழுது) சீர்த்தக்க – சிறந்த, செல்வம் – செல்வத்தையுடைய, மழை மதர்க்கண் – மழைபோற் குளிர்ந்த மதர்த்த கண்களையும், சில் மொழி – சிலவாகிய மொழியினையு முடைய, பேதை – காதலியது, ஊர் – ஊரானது, நமக்கு நல்விருந்து ஆக – நமக்கு நல்ல விருந்தயரும் இடமாகக் கடவது எ-று.

சிரல் – மீன்குத்திக் குருவி. தளவம் – செம்முல்லை; அதன் அரும்பு சிரலின் வாய்போலும் என்பதனை ‘பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை’ என்னும் ஐங்குறுநூற்றானும் அறிக. ஈர்ந்தண் – ஒருபொருளிரு சொல். சீர்த்தக்க – ஒரு சொன்னீர்மைத்து. செல்வத்தை யுடைய பேதை என்க; செல்வமழை எனினும் ஆம். விருந்து – ஆகுபெயர். தலைவன் வினைமுற்றி மீண்ட பின் காதலியுடன் விருந்தயரும் வழக்க முண்டென்பதைனை ‘வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து, மாலை யயர்கம் விருந்து’ என்னும் முப்பாலானும் அறிக. (36)

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது

37. கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி இருங்க
லிறுவரை யேறி யுயிர்க்கும் பெரும்பதக்
காலையும் வாரார்கொல் வேந்தன் அருந்தொழில்
வாய்த்த நமர்.

பதவுரை: கருங்கடல் மேய்ந்த – கரிய கடலின் நீரைக் குடித்த, கமம்சூல் – நிறைந்த சூலினையுடைய, எழிலி – மேகம், இரு – பெரிய, கல் – கற்களையுடைய, இறுவரை – பக்கமலையின்மேல், ஏறி உயிர்க்கும் – ஏறியிருந்து நீரைச் சொரியும், பெரும்பதக் காலையும்- மிக்க செவ்வியையுடைய காலத்தும், வேந்தன் – அரசனது, அருந்தொழில் – போர்த் தொழில், வாய்த்த – வாய்க்கப்பெற்ற, நமர் – நம் தலைவர், வாரார் கொல் – வாராதிருப்பாரோ எ-று.

கடல் – ஆகு பெயர், சூல் என்றதற்கேற்ப உயிர்க்கும் என்றார். உயிர்த்தல் – நீரைக் காலுதல்; ஒலித்தல் எனினும் ஆம். வாய்த்த என்றதனால் தப்பாது வென்றிருப்பரென்பது குறிப்பித்தவாறாம். போர்த் தொழிலும் முற்றுப்பெற்றுக் காலமும் செவ்வியை உடைத்தாயவழித் தலைவர் வராாதிரார் என்று கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தாளென்க. (37)

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது

38. புகர்முகம் பூழிப் புரள வுயர்நிலைய வெஞ்சின
வேழம் பிடியோ டியைந்தாடுந் தண்பதக் காலையும்
வாரா ரெவன்கொலோ ஒண்டொடி
யூடு நிலை.

பதவுரை: உயர்நிலைய – உயர்ந்த நிலையினை யுடைய, வெம் சினம் வேழம் – கடிய கோபத்தினை யுடைய ஆண் யானைகள், புகர்முகம் – புள்ளியினை யுடைய முகம், பூழி புரள – புழுதியிற் புரளும் வகை, பிடியோடு – பெண்யானைகளுடன், இயைந்து ஆடும் – கூடி விளையாடும், தண்பதக் காலையும் – குளிர்ந்த செவ்வியையுடைய காலத்தும், வாரார் – நம் தலைவர் வாராராயினார்; (ஆதலால்) ஒள்தொடி – ஒள்ளிய தொடியினை யுடையாளே, ஊடுநிலை – அவருக்காக நீ பிணங்குந் தன்மை, எவன்கொல் – என்னை எ-று.

வேழம் பிடியோடியைந்தாடும் என்றது தலைவர் வருதற்கு ஏதுக் கூறியவாறு. குறித்த பருவம் வந்தும் வாராமையாற் பொய்ம்மையும் வேழம் பிடியோடியைந் தாடுதல் கண்டும் வாராமையால் அன்பின்மையும் உடையராயினார்பால் ஊடுதலாற் பயனென்னை என்று தோழி கூறினாளென்க. வாரார்கொல்லோ என இயைத்து வருவர் என்று கூறி ஆற்றுவித்தாள் எனப் பொருள் கொள்ளலும் ஆம். (38)

இதுவுமது

39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த
கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி இரும்புன
மேர்க்கடி கொண்டார் பெருங்கௌவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.

பதவுரை: அலவன் கண் ஏய்ப்ப – ஞெண்டினது கண்ணினை யொப்ப, அரும்பு ஈன்று – அரும்பினை யீன்று, அவிழ்ந்த – பின் மலர்ந்த, கருங்குரல் – கரிய பூங்கொத்தினையுடைய, நொச்சி – நொச்சியினது, பசுந்தழை சூடி – பசிய தழையைச் சூடிக்கொண்டு, இரும்புனம் – பெரிய புனங்களை, ஏர்க்கடி கொண்டார் – உழவர் புதிதாக ஏருழுவிக்கத் தொடங்கினார்கள்; (ஆதலால்) நம் ஊர் – நம் ஊரின்கண், அவர்க்கு – நம் தலைவர்க்கு, பெருங் கௌவை ஆகின்று – பெரிய அலராயிற்று. எ – று.

நொச்சியின் அரும்பு ஞெண்டின் கண்ணுக்கு உவமையாதலை ‘நொச்சி மாவரும் பன்ன கண்ண, எக்கர் ஞெண்டினிருங்கிளைத் தொகுதி’ என்னும் நற்றிணை யானும் அறிக. ஏர்க்கடி கொள்ளுதல் – புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்’ என்றும், ‘பொன்னேர்’ என்றும் வழங்குவர். ஆகின்று – உடம்பாட்டு முற்று. (39)

பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது

40. வந்தன செய்குறி வாரா ரவரென்று நொந்த
வொருத்திக்கு நோய்ரீர் மருந்தாகி இந்தின்
கருவண்ணங் கொண்டன் றெழில்வானம்
நந்துமென் பேதை நுதல்.

பதவுரை: மென்பேதை – மெல்லிய பேதையே, செய்குறி – தலைவர் செய்த குறிகள், வந்தன – வந்துவிட்டன; அவர் வாரார் என்று – தலைவர் வருகின்றிலர் என்று, நொந்த ஒருத்திக்கு – நோதலுற்ற ஒருத்தியாகிய நினக்கு, நோய்தீர் மருந்து ஆகி – நோயைத் தீர்க்கும் மருந்தாகி, எழில்வானம் – அழகிய முகில், இந்தின் கருவண்ணம் – ஈந்தின் கனியினிறம் போலும் கருநிறத்தை, கொண்டன்று – கொண்டது; நுதல் நந்தும் – நினது நுதல் இனி ஒளிவளரப் பெறும் எ-று.

இச்செய்யுளைத் தலைவர் மீண்டனரென்று தோழி மகிழ்ந்து தன் நெஞ்சிற்குக் கூறியதாகக் கொண்டு, என் பேதை எனப் பிரித்துப் படர்க்கையாக உரைப்பாரும் உளர், ஈந்து இந்தெனக் குறுகியது; ‘முந்நீரை யிந்துருவின் மாந்தியிருங் கொண்மூ’ என்பது திணைமாலை நூற்றைம்பது. ஈந்து – ஈச்சமரம். (40)

கார் நாற்பது மூலமும் உரையும் முற்றிற்று.