
பொய்கையார் அருளிச் செய்த
களவழி நாற்பது
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
அவர்கள் எழுதிய உரையுடன்
களவழி நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்க்கீழ் கணக்கு என எண்ணிவருகின்றனர். கீழ்க்கணக்கியற்றியோருட் கபிலர், கண்ணஞ் சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலாயினார் சங்கத்துச் சான்றோரென்பது ஒருதலையாகலின், அவற்றுட் பலவும் அக்காலத்தின வெண்பதில் இழுக் கொன்று மின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட் டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில்,
‘வனப்பியல் தானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’
என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் உரைக்குமாற்றான் அறியப் படுவது. அவை அம்மை யென்னும் வனப்புடைய வாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தினராவர்.
‘அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு
ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்’
என்பது பன்னிருபாட்டியல்.
கீழ்க்கணக்கு நூல் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணை மொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. இதனை,
‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’
என்னும் வெண்பாவானறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை’ என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணை யெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். வெண்பாவின் சொற்கிடக்கை முறை அதற்கேற்ற தன்றென்க. சிலர் ஐந்திணை ஐந்து நூலெனக்கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்தல் செய்வர். அவர், ‘திணைமாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவ துண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகு மென்பர். ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய’ ‘மெய்ந்நிலைய’ ‘கைந்நிலையோடாம்’ ‘நன்னிலையவாம். என்றிங்ஙனம் பாட வேற்றுமையும் காட்டுவர்.
இனி, களவழி நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய பொய்கையா ரென்பார். இவர் இது பாடியதன் காரணம் இந்நூலிறுதியில் இதன் பழைய உரையாளரால் எழுதப் பட்டிருக்கும் தொடரால் விளங்கும். அது, ‘சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கா லிரும்பொறையும் (திருப்?) போர்ப் புறத்துப் பொரு துடைந்துழிச் சேரமான் கணைக்கா லிரும்பொறையைப் பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழி நாற்பது முற்றிற்று’ என்பது.
இச்செய்தி, கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியத்தில்
“களவழிக் கவிதை பொய்கையுரை செய்யவுதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்”
என்றும், விக்ரம சோழனுலாவில்
‘மேதக்க பொய்கை கலிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்’
என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
சோழனொருவன் ஒரு சேரமன்னனை வென்ற வெற்றிச் சிறப்பைப் பாடியதே களவழி நாற்பது என்பதற்கு இதன் கண்ணேயே சான்றுகள் உள்ளன. செய்யுள்தோறும் சோழனது வென்றி கூறப்படுதல் வெளிப்படை. அவன் ‘செங்கண்மால்’ ‘செங்கட்சினமால்’ என்று பல பாடல்களிற் குறிக்கப்படுதலின் அவனது பெயரும் பெறப்படுவதாயிற்று. ‘கொங்கரையட்ட களத்து’ என்றும், ‘வஞ்சிக்கோ வட்ட களத்து’ என்றும் வருதலின், வெல்லப் பட்டோன் சேரனென்பது போதருவதாயிற்று. ‘காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்’ என்கையால் வென்றுகொண்ட இடம் கழுமலம் என்பதாயிற்று.
புறநானூற்றிலே,
‘குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுரை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே’
என்னுஞ் செய்யுளின்கீழ் வரையப்பட்டுள்ள குறிப்பால், செங்கணா னொடு பொருதான் சேரமான் கணைக்காலிரும்பொறை யென்பது தெரிகின்றது. அது, ‘சேரமான்கணைக் காலிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்பது’ ‘குழவியிறப் பினும்’ என்னும் இச் செய்யுள், தமிழ்நாவலர் சரிதையில்,
‘சேரன் கணைக்கா லிரும்பொறை செங்கணானாற் குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு’ என்னும் தலைப்பின்கீழ்க் காணப்படுகிறது. செய்யுளின் பின்னே, ‘இது கேட்டுப் பொய்கையாற் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட் டரசளித்தான்’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. இங்ஙனம் இரு குறிப்பும் வேறுபடுவதன் காரணம் புலப்படவில்லை. இவ் விரண்டினுள்ளே புறநானூற்றுக் குறிப்பே வலியுடைய தென்று கொள்ளின், அது பரணி, உலா முதலியவற்றுடன் முரணாமைப் பொருட்டு, துஞ்சினான் கணைக்கா லிரும்பொறை யாகச் சிறைவீடு செய் தரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன் என்று கொள்ளவேண்டும். சேரமான் கொக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடிய இரண்டு பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. நற்றிணையில் அவர் பாடிய பாட்டு ஒன்றும் அவனைக் குறிப்பிடு கின்றது. அவ்வேந்தன் கணைக்கா லிரும்பொறை யின் வேறாகிச் சோழனாற் சிறைப்பட்டவனாயின், அவனை விடுவித் தற்குக் களவழி நாற்பது பாடப் பட்டதென்று கோடல் அமையும்.
இனி, சிலர் நல்லிசைப் புலவராகிய பொய்கையாரையும், திருமாலடியாருள் ஒருவராகிய பொய்கை யாழ்வாரையும் ஒருவராகக் கொண் டுரைத்துப் போந்தனர். அது திரிபுணர்ச்சியின்பாற் பட்ட தென்பதும், சங்கத்துச் சான்றோரை ஆழ்வாராக்குதற்கு ஒரு சிறிதும் இயைபின்றென்பதும் செந்தமிழ்ச் செல்வி இரண்டாஞ் சிலம்பினுள் ‘பொய்கையார்’ என்னும் தலைப்பின்கீழ் யானெழுதிய கட்டுரையா னறிக.
கடைச்சங்கப் புலவருள் ஒருவராகும் பொய்கையாராற் பாடப்பட்ட இந்நூல், கி. பி. 250 -ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டதாகா தென்பது ஒருதலை. களவழி கொண்ட சோழன் செங்கணானைக் கரிகாலனுக்கு முன்வைத்துக் கூறுகின்றது பரணி. உலாவானது கரிகாலனை யடுத்துப் பின்வைத்தோதுகிறது. இவற்றுள் எது உண்மையாயினும் செங்கணான் கடைச்சங்க நாளில் விளங்கிய மன்னன் என்பதில் இழுக்கொன்றுமில்லை. அவன் கழுமலங் கொண்டமை களவழியானும், வெண்ணியினும், அழுந்தையினும் ஏற்ற மன்னரை வெற்றிகொண்ட செய்தி திருமங்கையாழ்வா ரியற்றிய பெரிய திருமொழியிலுள்ள திருநறையூர்ப் பதிகத்தானும் அறியப்படுகின்றன. இவ் வேந்தர் பெருமானே திருத்தொண்டர் புராணத்திற் கூறப்பட்ட சிவனடியார் களில் ஒருவராகிய கோச் செங்கட் சோழர் என்பர். திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் எழுந்தருளி யுள்ள இறைவனை வழிபட்ட சிலந்தி கோச்செங்கட் சோழராகப் பிறந்த வரலாற்றினைப் பெரியபுராணம் இனிது விளக்குகின்றது. திருநெறிந்தமிழ் வேதமாகிய தேவாரம் முதலிய வற்றிலும் இவ்வுண்மை விதத்தோதப்படுகிறது. இவ்வரசர் பெருந்தகை சிவனார் மேவுந் திருக் கோயில்கள் பற்பல சமைத்த பரிசும் திருமுறைகளிற் பேசப்படுகின்றது. திருமங்கை யாழ்வாரும் ‘இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற் கெழின்மாட மெழுபதுசெய் துலகமாண்ட – திருக்குலத்து வளச்சோழன்’ என்று இதனைப் பாராட்டுவாராயினர். இவ்வாற்றால் இம்மன்னரது பெருமை அளப்பரிய தொன்றாதல் காண்க.
இனி, இந்நூலாசிரியர் பொய்கை யென்னும் நாட்டிற் பிறந்தமையால் இப்பெய ரெய்தினரென ஒரு சாராரும், பொய்கை யென்னும் ஊரிற் பிறந்தமையாலெனப் பிறிதொரு சாராரும் கூறுப. இவ்வாசிரியர் ‘கானலந்தொண்டி அஃதெம்மூர்’ என்று புறத்திலே கூறியிருப்பதனால் மேற்கடற் கரையிலுள்ள தொண்டி நகரம் இவரது பிறப்பிடம் என்று உணரலாகும். அன்றித் தம்பாற் பேரன்புடையவனான சேரமானது பதியாதல் குறித்து அங்ஙனம் கூறினாரென்னினும் அமையும்.
களவழி நாற்பது என்னும் இந்நூல் செங்கட் சோழரது போர்க்கள வென்றியைத் தனித்தெடுத்துக் கூறுதற் கெழுந்தது. ‘கூதிர் வேனில்’ என்னும் புறத்திணை யிற் சூத்திரத்து ‘ஏரோர் களவழியன்றிக் களவழித் – தேரோர் தோற்றிய வென்றியும்’ என்பதனால் களவழி இருவகைப்படும் என்க. இவற்றுள் முன்னது, உழுதொழிலாளர் விளையுட் காலத்துக் களத்தின்கட் செய்யுஞ் செய்கை; என்றது, நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரிதிரித்துச் சுற்றத்தோடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலர் முகந்து கொள்ள வரிசையின் அளிப்பது; பின்னது, அரசர் போக்களத்துச் செய்யுஞ் செய்கை; என்றது நாற்படையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாண்மடலோச்சி அதரிதிரித்து . . அட்ட கூழ்ப் பலியைப் பலிகொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும், ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகர்ந்து கொள்ளக் கொடுத்தல். களவழி – களத்தினிடம், களத்திடத்து நிகழ்ச்சியைப் பாடும் செய்யுளைக் களவழி யென்றது ஆகுபெயர். பிற்கூறிய களவழிச் செய்யுளைப் புலவர் தேரேறி வந்து பாடுவரென்ப. இவ்வாற்றால் இதன் இலக்கணம் ஓர்ந்துகொள்க.
இந்நூலின்கண்ணே யானைப்போர் மிகுத்துக் கூறப்படு கின்றது. திருக்கார்த்திகைத் திருவிழா குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலானது சொற்செறிவும், பொருட் செறிவும் வாய்ந்த பாக் களாலாயது. பழைய உரையாசிரியர்களால் தொல்காப்பியவுரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பட்டப்பெற்ற பெருமையினையுடையது. இதிலுள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் பொருட்கேற்ற பெற்றி இவ்வாசிரியர் அமைத்திருக்கும் உவமைகள் கற்போர்க்குக் கழிபேரின்பம் விளைப்பன.
இந்நூற்குப் பழையவுரை யொன்றுண்டு. அது செய்யுட் பொருளைப் பொழிப்பாக வெடுத்துரைப்பது; விசேடக்குறிப்பு யாதும் கொண்டிராதது. மற்ற இதற்குச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்களால் பதப்பொருளும், இலக்கணக் குறிப்புக் களுமாக எழுதப்பெற்ற உரையொன்றுண்டு. அதிலுள்ள இலக்கணக் குறிப்புக்கள் பெரும்பாலும் இக்காலத்துக்கு வேண்டப் பெறாதனவாயும், வழுவுள்ளனவாயும் தோன்றின; பதப்பொருளும் பலவிடத்துத் தவறான பாடத்தின் மேலெழுந்தும், மூலத்தொடு மாறுபட்டும் வழுவியிருந்தமை புலனாயிற்று. இவ்வேதுக் களாற்றான் நல்லிசைப் புலவர் செய்யுட்கு உரைகாணுந்திறன் ஒரு சிறிதும் வாய்க்கப்பெறாத யானும் இதற்கோர் உரை யெழுதுமாறு நேர்ந்தது. என் சிற்றறிவிற் கெட்டியவாறு பழைய பொழிப்புரையை முற்றிலும் தழுவிப் பதப் பொருள் கூறியும், இன்றியமையாத மேற்கோள்களும், இலக்கணங்களும் காட்டியும் இவ்வுரையினை வகுத்தமைக்கலானேன். பல சுவடிகள் பார்த்துப் பாடவேற்றுமையுங் காட்டப்பெற்றுள்ளது. இதில் காணப்படும் பிழைகளைப் பொறுத் தருளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கின்றேன்.
இங்ஙனம்,
ந. மு. வேங்கடசாமி நாட்டார்.