
ஒளவையார் அருளிச் செய்த
கொன்றை வேந்தன்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
அவர்கள் எழுதிய உரையுடன்
கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக்குறித்து எத்துணையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுக்கள் புறநானூறு முதலிய சங்கநூல்களிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்கநூல்கள் தெரிவிக் கின்றன. எனினும், ‘சங்ககாலத்து ஒளவையாரும் வேறு, கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு’ என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும்.
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர் களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவை யென்னும் பெயரை அறிந்திருப்பர். அப் பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதிநூல்களே யாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையாரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தே யிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துக்களும் ஆத்தி சூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர் களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம் பருவத்தினர் சுலபமாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக அவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச் சிறிய சொற்றொடர்களாலும் கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும் ஆக்கப் பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்று கருத்துப்பற்றியதாகும். மிக்க இளம் பருவத் தினராயிருக்கும் பொழுதே பிள்ளை களின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதிய வைக்க வேண்டுமென்னும் பெருங்கருணையுடனும் பேரறிவுடனும் ‘அறஞ்செய விரும்பு’ ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் இவற்றின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலக முள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண் மக்களில் ஒருவ ரென்னும் பெருமை தமிழ் நாட்டிற்கு உரியதாகின்றது.
தொல்காப்பியச் செய்யுளியலுரையில் இந் நூற் கடவுள் வாழ்த்து,
‘கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோ நாமே’
என்ற உருவுடன் பேராசிரியராலும் நச்சினார்க்கினியராலும் காட்டப்பெற்றுள்ளது.
இங்ஙனம்,
ந. மு. வேங்கடசாமி நாட்டார்.