நெல்வேலி வடிவன்னை

ஆய்முத்துப் பந்தரின் மெல்லணைமீது
உன் அருகிருந்து
நீ முத்தம் தா என்று, அவர்
கொஞ்சும்வேளை நித்தநித்தம்
வேய்முத்த ரோடு என் குறைகள்
எல்லாம் மெல்லமெல்லச்சொன்னால்
வாய்முத்தம் சிந்தி விடுமோ?
நெல்வேலி வடிவன்னையே

என்று ஒரு பக்தன் பாடுகிறான், திருநெல்வேலியில் நெல்லையப்பருடன் கோயில் கொண்டிருக்கும் காந்தி மதியம்மையைப் பார்த்து. ஆம், மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலிலும், திருநெல்வேலி காந்திமதி அம்மை கோயிலிலும் ஒரு சம்பிரதாயம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் சென்று தொழுவது சொக்கலிங்கத்தையோ, நெல்லையப்பரையோ அல்ல. இரண்டிடங்களிலும் அம்மன் சந்நிதி வழியாக கோயிலுக்குள் சென்று அங்குள்ள மீனாக்ஷியை அல்லது காந்திமதியை வணங்கிவிட்டு, அதன்பின் ஒரு நடை நடந்து பிரகாரங்களைக் கடந்து சென்று தான் இறைவனை வணங்கி வருகிறார்கள். இதைப் பார்த்திருக்கிறான் ஒரு கவிஞன். கவிஞன் என்றால் தான் வறுமையும் உடன் பிறக்குமே. அதனால் அவன் வாழ்வு நிறைவு பெறாமல் குறைகள் நிறைந்திருக்கிறது. இப்படி வாழ்விலே துயறுரும் பக்தன்- கவிஞன் நெல்லையப்பரிடம் தன் குறைகளை எல்லாம் சொல்லிப் பரிகாரம் பெற விரும்புகிறான். இப்படி எண்ணிக் கொண்டே கோயில் வாயிலுக்கு வந்தவன் ஊராரோடு சேர்ந்து காந்திமதியம்மையின் கோபுர வாயில் வழியாக நுழைந்து, ஊஞ்சல் மண்டபம், மணிமண்டபம், நடு மண்டபம் எல்லாம் கடந்து கர்ப்பக்கிரகத்தருகே வந்து சேருகிறான்.

அங்கே நிற்கும் அன்னையைப் பார்க்கிறான். அவளோ தலையில் வயிரமணிமுடி, ராக்கடி எல்லாம் அணிந்தி ருக்கிறாள். மூக்கிலே பொட்டு மூக்குத்தி, புலாக்கு எல்லாம் அழகு செய்கின்றன. மார்பில் நவமணி வடம் பிறழ்கிறது. அடிகளில் மணிச் சிலம்பு ஒலிக்கிறது. வலக்கையை உயர்த்தி அதில் கிளியுடன் கூடி செண்டொன்று ஏந்தி; இடக் கையைத் தாழ்த்தி நிற்கும் அந்த வடிவழகியை ஒரு புதுமணப் பெண்ணாகவே காண்கிறான் கவிஞன். அப்போது தோன்றுகிறது கவிஞனுக்கு: ஏன் இந்தப் பெண்ணின் மூலமாகவே தனது விண்ணப்பத்தை வேணுவன நாதரிடம் சமர்ப்பிக்கலாமே என்று. அப்படி அவள் தனக்காகத் தன் கணவனிடம் பரிந்து பேசு வதற்கு நல்ல சந்தர்ப்பம், வாய்ப்பு எப்போது நேரும் என்பதையும் அவளிடமே முன்கூட்டியே தெரிவிக்கிறான். ஆம், அன்னையிடம் அத்தன் கொஞ்சவரும் வேளையில், தனக்காக அன்னை பரிந்து பேசினால் தன் காரியம் சித்திக்கும் என்பதை உணர்ந்து அழகாகக் குறிப்பிடுகிறான் கவிஞன். இப்படி எல்லாம் உண்மையில் நடக்கிறது என்றல்ல பொருள்.

இறைவனையும் இறைவியையும் மனம் ஒத்த காதலர்கள் என்று கற்பனை பண்ணிக் கொண்டு கவிஞன் பாடுவதிலே ஒரு சுவை காண்கிறோமல்லவா? அந்தச் சுவையை நாம் எல்லாம் அனுபவிப்பதற்காகவே கவிஞன் இப்படி ஒரு நிலையைக் கற்பனை பண்ணுகிறான். கற்பனை அழகாக இருக்கிறது. பாடிப் பாடி மகிழப் பாட்டு ஏற்றதாக அமைந்துவிடுகிறது; நம் உள்ளத்திற்கு ஓர் உவகையையே கொடுக்கிறது.

இந்தப் பாட்டுடைத் தலைவிதான் நெல்வேலி வடிவன்னையாக விளங்கும் காந்திமதியம்மை. திருநெல்வேலியில் வீட்டுக்கொரு காந்திமதி, இல்லை காந்தி கட்டாயம் இருப்பாள். ஆடவர்களும் காந்திமதி நாதனாகப் பெயர் பெறுவார்கள். இந்தக் காந்திமதி அம்மையையும் அந்தச் சாலிவாடீஸ்வரனான நெல்லையப்பரையும் ஐப்பசி மாத விழாவிலே கல்யாண கோலத்திலே காணலாம். கதை எல்லோருக்கும் தெரிந்த கதைதான். அன்னை பார்வதியை அத்தன் பரமேஸ்வரன் மணம் முடிக்கக் கருத்துக் கொள்கிறான். மண ஓலை அனுப்புகிறார்கள் எல்லோருக்கும். மக்களும் முனிவரும், தேவரும் பிறரும், கைலை நோக்கி விரைகின்றார்கள். எல்லோரும் இமயத்திற்கே வந்து சேர்ந்துவிடுகிறார்கள். அவ்வளவு தான். நாட்டின் வடகோடு தாழ்ந்து தென்கோடு தூக்கிக் கொள்கிறது. பார்க்கிறான் இறைவன் நாட் டைச் சமன் செய்ய வேண்டுமே என்று. வந்திருந் தவர்களில் தக்கார் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறான். ஆம், அந்த என்றுமுள தென்தமிழை இயம்பி இசை கொண்ட குருமுனிவன் அகத்தியனையே அழைத்து நாடு சமனாக வேண்டுமானால் நீர் தென் திசை சென்றாக வேண்டும்’ என்கிறான். அகத்தியர் அப் போது ‘நான் மட்டும் திருமணத்தைக் காண வேண்டாமா’ என்று கவல்கிறார். திருமணம் முடிந்த உடனே, அந்தத் திருமணக் கோலத்தில் உமக்குக் காட்சி தருகிறேன் என்கிறான் இறைவன்.

இப்படிச் சொன்ன வாக்கை நிறைவேற்றுவதிலும் ஒரு யுக்தி பண்ணுகிறான். அன்னை அத்தனின் கண்களை ஒரு நாள் பொத்தி விளையாட அதனால் அகிலலோகமே இருளில் ஆழ்ந்து சஞ்சலமுறுகிறது. இந்தப் பழியகல அன்னை கம்பை நதிக்கரை யிலே தவம்புரிகிறாள். அவள் தவத்திற்கு இரங்கி இறைவன் அங்கு எழுந்தருளி காட்சி கொடுக்கிறார். அப்படிக் காட்சி கொடுத்து அவளைத் திருமணம் செய்து அத் திருமணக் கோலத்திலேயே அகத்தியர் முன்பு வந்து நின்று விடுகிறார்கள் இருவரும். அன்னை தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருள்வது, பின்னர் இருவரும் திருமணக் கோலத்தில் உலா வருவதெல்லாம் நெல்லையில் நடக்கும் ஐப்பசித் திருவிழாவில் கண் கொள்ளாக் காட்சியாகும்.

ஏதோ வடிவழகியாக-காந்தி நிறைந்தவளாக மட்டும் இந்த அன்னை விளங்குவதில்லை. நல்ல அருள் நிறைந்தவளாகவும் மக்களுக்கெல்லாம் அருள் புரிபவளாகவும் விளங்குகின்றாள். திருநெல்வேலியை அடுத்த தச்ச நல்லூரில் அழகிய சொக்க நாதபிள்ளை என்று ஒரு புலவர் சமீப காலத்தில் இருந்தார். தாலுகா ஆபிஸில் “காப்பிஸ்ட்” வேலை பார்த்தவர். அவருடைய சம்பளமோ மாதம் பத்து ரூபாய். இவருக்குக் குறையில்லாதிருக்குமா?” அவர் ஒரு நாள் இரவு கோயிலுக்குச் செல்கிறார். காந்திமதியின் சந்நிதிக்கே வந்து அங்கு மணிமண்டபத்தில் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து இரண்டு கைகளையும் சேர்த்துக் குவித்துப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறார். கோவிலுள்ளே சென்று வந்த யாரோ ஒரு பக்தை தன் அன்னையின் பிரசாதமாகப் பெற்று வந்த செண்டு ஒன்றை அவரது விரித்த உள்ளங்கைகளில் போட்டுவிட்டு நகர்கிறாள். ஆனால் அப் புலவருக்கோ, தன்கையில் செண்டு கொடுத்துத் தன்னிடம் கருணை காட்டுகிறவள் அன்னை காந்திமதியே என்ற நம்பிக்கை. அப்படி உறுதியாக நம்பிய உள்ளத்திலே ஒரு பாட்டு எழுகிறது, பாட்டு இதுதான்.

பணம், கொடுக்கு அது உள தேளும்
பாம்பும் போல, பாழ்த்த வறுமையும்
கடனும் படுத்துகின்ற
கணங்கொள், துக்கம் ஒழியும் வண்ணம்
கைச்செண்டு ஈந்த காந்தி மதித் தாய்
என்னைக் கைவிடாளே.

அன்னையின் அருளுக்கு இந்தப் பாட்டைவிட வேறு என்ன சான்று வேண்டும். தமிழ் வளரும் நெல்லையிலே கோயில்கொண்டிருக்கும் அன்னையையே பாட்டுடைத் தலைவியாக வைத்து ஒரு பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் பாடியிருக்கிறார். வருகைப் பருவத்தைப் பாடுபவர்கள் எல்லாம் என்னிடம் வந்தால் இன்ன இன்னது தருவேன் என்று சொல்லிச் சீராட்டி வருக வருக என அழைப்பார்கள். ஆனால் இந்தப் பிள்ளைத் தமிழ் பாடிய கவிஞனோ, நீ என்னிடம் வராவிட்டால் உனக்கு நான் ஒன்றுமே தரமாட்டேன் என்று கோபித்துக், கொள்ளும் பாவனையில் பாடுகிறான். ஆம், கவிஞனுக்குக் கொஞ்சி உறவாட, கோபித்து முறைத்துக்கொள்ள எல்லாம் உரிமையும் உண்டு தானே.

வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்.
மதிவாள் நுதற்குத் திலகமிடேன்
மணியால் இழைத்த பணிபுனையோன்
பேராத ரத்தினோடு பழக்கம்
பேசேன் சிறிதும் முகம் பாரேன்
பிறங்கு முலைப் பால் இனிது
ஊட்டேன் பிரியமுடன் ஒக்கலையில்
வைத்து தேரார்வீதி வலங் காட்டேன்
செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றி
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்தாயே
வருக வருகவே

இப்படிப் பாடிக் கூப்பிட்டுத்தான் பாருங்களேன் அன்னை ஓடி வருகிறாளா, இல்லையா என்றுதான் தெரிந்து கொள்வோமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *