
சங்கரன் கோயில் கோமதி
தாய்தன்னை அறியாத கன்றில்லை
தன் கன்றை
ஆயும் அறியும், உலகின் தாயாகி
ஐய! நீ அறிதி எப்பொருளும்
என்று இறைவன் தாய் ஆகி உலகில் உள்ள மக்களைப் புரக்கும் பான்மையைப் பாடுகிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். தாய்த் தன்மையிலும் தலை சிறந்த தாய்த் தன்மையாக அவன் கருதுவது பசுவிற்கும் கன்றிற்கும் உள்ள தொடர்பைத் தான். ஒரு பசுவின் கன்று தன் தாயை ஆயிரம் பசுக்களிடை நின்றாலும் கண்டு கொள்ளும். அதே போலத் தன் கன்றையும் ஆயிரம் கன்றுகளிடையே இருந்தாலும் தெரிந்துகொள்ளும் ஒரு பசு. இது ஓர் அதிசய அறிவுதானே. அந்த அறிவை உடையவள் உலகு புரக்கும் அன்னை. ஆம், அதனாலே அவளுக்கு ஒரு பெயர் ஆவுடையாள் என்று. ஆ என்றால் பசு. பசுக்களைத் தன் உடைமையாகக் கொண்டு காப்பாற்றுகிறவள் ஆவுடையாள். இந்த ஆவுடையாள் கோயில் கொண்டிருக்கும் இடந் தான் சங்கரன் கோயில். அவளைத்தான் கோமதி என்றும் அழைத்து வந்தித்து வணங்குகிறோம்.
உலகில் உள்ள மக்களுள் சிவனை வழிபடும் சைவர்கள் உண்டு. விஷ்ணுவை வழிபடும் வைணவர்கள் உண்டு. ஏதோ இவர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை மட்டும் வழிபட்டார்கள் என்றில்லை. ஒருவர் மற்றொருவரைக் குறை கூறுவது, அவர்களோடு வாதிடுவது என்றெல்லாம் நெடுகிலும் வைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். ‘அரன் அதிகன்’ என்று சைவன் சொன்னால். ‘இல்லை உல களந்த அரி அதிகன்’ என்றே வாது செய்திருக் கிறான் வைணவன். ‘ஆலம் உண்டான் எங்கள் நீலகண்டன்’ என்று சைவன் வீராப்போடு பேசினால், அண்டம் உண்ட போது அந்த ஆலம் உண்ட கண்டனையும் கூட உண்டான் எங்கள் மால் என்று சளைக்காமலே பதில் சொல்லியிருக்கிறான். மக்களில் மாத்திரம் அல்ல’ நாகர்களிலும் இச் சைவ-வைணவச் சண்டை இருந்திருக்கிறது. சங்கன் பதுமன் என்னும் நாகர் இருவர் இருந்திருக்கின்றனர். இவர்களில் சங்கன் சிவபக்தன், பதுமன் விஷ்ணுபக்தன் இவர்களுக்குள்ளேயும் இந்த வாதம். இப்படிப் பலர் வாதிட வாதிட அன்னை கோமதிக்கே ஆம், பார்வதிக்கே தான் சந்தேகம் வந்துவிட்டது. இருவரும் வேறு வேறு நபர்கள்தானா என்று, இதைக் கேட்டி ருக்கிறாள் இறைவனிடம். அவர் என்ன அவ்வளவு எளிதாக விடை சொல்லி விடுவாரா ? மண்ணுலகத்துப் புன்னை வனத்தில் சென்று தவமிருக்கச் சொல்கிறார். அப்படியே அன்னையும் அங்கு வந்து தவம் கிடக்கிறாள். ஆடி மாதம் பௌர்ணமி யன்று சங்கரனார் சங்கரநாராயணர் உருவில் வந்து அம்மைக்குக் காட்சி கொடுக்கிறார். சங்கரன் கோயிலில் ஆடித் தவசு என்னும் உத்சவம் இந்தச் சங்கர நாராயணர் காட்சியை விளக்க எழுந்ததே. இதனால் அரி, அயன், அரன் எல்லோரும் ஒன்றே. அரியும் அயனும் அரனார் திரு உருவில் அடங்கினவரே என்ற உண்மை நிலை பெற்றிருக்கிறது. ஆம், சங்கனும் பதுமனுமே இச்சங்கர நாராயணன் காட்சியைக் கண்டு உண்மை உணர்ந்து கொள்ளு டிருக்கின்றனர்.
ஐய! நின் கூறே மாலும்
அயன் முதல் தேவும் என்னும்
மெய்உணர் வே எஞ் ஞான்றும்
விளைவுற வேண்டும்.
என்று இருவரும் சேர்ந்தே பாடத் தெரிந்து கொள்கின்றனர்.
சங்கர நாராயணன் திரு உருவைக் கண்ட அன்னை கோமதி அருட் சக்தி நிரம்ப வாய்ந்தவள். அம்மையின் திரு முன் ஒரு மந்திர சக்கரம் பதித்து வைத்திருக்கிறது. அச்சக்கரத்துக்குக் கோமதி யம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதன் அருகில் ஆடாத பேயும் ஆடுகிறது; தீராத நோயும் தீர்கிறது. இச்சக்கரத்தைப் பதித்து அதற்கு அத்தனை சக்தியை அன்னை அருளச் செய்தவர் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் வேலப்ப தேசிகர். இவர் நெற்கட்டும் செவல் ஜமின்தாரான சிவஞான பூலித்தேவரின் குன்ம நோய் தீர்த்தார் என்றும் அந்த ஜமீன்தார் வேண்டுகோளின்படியே மந்திர சக்கரத்தைப் பதித்தருளினார் என்றும் தெரிகிறது.
சங்கரனால் அன்னை கோமதியும், அம்மை கோமதியால் சங்கரனும் இங்கு வரப்பிரசாதிகளாக அமைந்திருக்கின்றனர். புன்னை வனத்திலே புற்றில் இடம் கொண்டவர் சங்கரன். அந்தப் புற்றுமண் இன்று மக்கள் பிணியைத் தீர்க்கும் அருமருந்தாக உதவுகிறது. உடலில் பூசியும் உள்ளே கரைத்துக் குடித்தும் நலம் பெறும் மக்கள் எத்தனையோ பேர். ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமலேயே அருள் புரிகின்றார், இந்த வன்மீக நாதராம் சங்கரன். அன்னை பொதுவாக மக்கள் எல்லோருக்கும் அருள் புரியபவள் தான் என்றாலும் தன் இனத்தாராகிய பெண்களிடத்து விசேஷ சலுகை காட்டுபவளாக இருக்கிறாள். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைப் பேற்றை அருளுகிறாள்; பேய் பிடித்தவர்களாக இருந்தால் பேயை ஓட்டி அவர்களை இன்பமான குடும்ப வாழ்க்கையில் இருத்துகிறாள். தேளும், பாம்பும், பூரானும், பூச்சியும் அன்னையையும் அத்தனையும் நினைப்பவர்கள் பக்கமே வருவதில்லை. மக்களும் தங்களுக்கு இப்பூச்சி பொட்டுகளால் துன்பம் நேராதிருக்க, வெள்ளியினால் தேளும் பாம்பும் செய்து காணிக்கை செலுத்தி வேண்டிக் கொள்ளுகின்றனர். இன்னும்,
அன்னை உமை கௌரி
ஆவுடையும் நீயும் இந்தப்
புன்னை வனம் மேவினது என்
பூசா பலன்தானோ? நின்னைப்
பொரு ளெனவே
நீங்காது உறைந் திருந்து
தன்னை அறிவது என்றோ
சங்கர சதா சிவமே
என்று அன்னை ஆவுடையையும் புன்னை வனத்து ஈசனையும் நினைந்து பாடியிருக்கின்றார் ஒரு புலவர், தான் பாடிய சங்கர சதாசிவ மாலையில். அன்னையின் அருட் சக்தியை உணர்ந்த திருநெல்வேலி அழகிய சொக்கநாத பிள்ளை ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். பாட்டா பாடுகிறார் ? அன்னைக்கே ஒரு சவால் விடுகிறார்:
கேடாய் வரும் நமனைக்
கிட்ட வராதே தூரப்
போடா, என்று ஓட்டி உன்
பொற்கமலத் தாள் நிழற்கீழ்
வாடா என அழைத்து
வாழ்வித்தால் அம்ம !
உனைக் கூடா தென்று ஆர்தடுப்பர்?
கோமதித்தாய் ஈஸ்வரியே!
என்பது பாட்டு. எவ்வளவு உறுதியான உள்ளம். யமனையே தூரப் போடா என்று ஓட்டி, தன் தாள் நிழலுக்கு வாடா என அழைக்க அன்னையால் முடியாதா என்ன? ஆம், அப்படி அழைப்பாள் என்று நம்புகிறான் கவிஞன். நாமும் நம்பலாம். நம்பினார் கெடுவதில்லை. அதுதானே நான்கு மறைத் தீர்ப்பு.


