ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி

மன்றலின் வந்து
மணித்தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை
வீரனும் ஆர்வத்து
இன்துணை அன்னமும்
எய்தி யிருந்தார் ஒன்றிய போகமும்
யோகமும் ஒத்தே

என்று கவிச் சக்ரவர்த்தி கம்பன் ராமனும் சீதையும் மணக் கோலத்தில் இருப்பதை நினைந்து பாடு கின்றான். இப்படி இருவரும் போகமும் யோகமும் ஒன்றிய நிலையில் இருந்தார்கள் என்று சொல்லுவது பொருந்துமா என்று நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் எழுகின்றது. இதுபோலவே, யோகம் போகம் இவற்றின் உண்மைகளைக் குறித்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறாள் அன்னை பார்வதி. கேள்வியைத் தன் கணவனிடமே கேட்டிருக்கிறாள். அதற்கு விடை சிவபெருமான் அன்னையிடம் ‘நீ பூலோகத்தில் ஞான தலத்தையடைந்து தவஞ்செய். அங்கு நான் வந்து உபதேசிக்கிறேன்’ என்று சொல்கிறார். அப்படியே ஞான பூமியை நாடி வருகிறாள் அன்னை. காவிரிக் கரையிலே முனிவர்கள் எல்லாம் இருந்து தவம் செய்யும் ஓர் அழகிய காவினைக் கண்டு அங்கேயே தவம் செய்ய முனைகிறாள். இன்பத்தைத் தருகின்ற முத்தியின் தன்மையைத் தெரிந்துகொள்ள வந்தவள் ஆதலின், இனிய சுவையுடைய நீரையே திரட்டி லிங்கத் திருவுரு அமைத்துக் கொள்கிறாள். இந்த அப்புலிங்கத்திற்கும் அபிஷேகம் முதலியன செய்து ஆராதனை பண்ணுகிறாள். இவள் தன் தவத்திற்கு இரங்கி அண்ணல் இந்த காவிற்கு வந்து, அவளது சந்தேகத்திற்கு விளக்கம் கூறுகிறார். அவர் கூறியது இதுதான்: ‘உலகங்கள் எல்லாம் என் அருள் வழியே நடப்பன. நடனத்தைப் பிறருக்குக் கற்பிக்க விரும்பும் நடன ஆசிரியன் முதலில் தானே நடனம் ஆடிக் காட்டுதல் போல உலக மக்களுக்கு யோக நிலையையும், போக நிலையையும் பயிற்றுவிக்க நானே நடத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. உலகிலுள்ள ஆன்மாக்களெல்லாம் போகத்தை நுகர உன்னை மணந்து தழுவி போகியாகவும், யோக சித்தி பெற்று மெஞ்ஞானத்தை அடைந்து முத்தி அடைவதற்காகப் போகியாக இருந்த நான் யோகியாகவும் இருக்கிறேன்’ என்கிறார். ஆம், யோக நிலையில் இருக்கும் ஆண்டவனே போகியாகவும் காட்சிதரும் ரகசியம் இதுதான் என்று அன்னை அறிகிறாள்; நாமும் தெரிகிறோம்.

இப்படி அகில அண்டங்களுக்குத் தாயாகிய அன்னை வந்து நீர் உருவத்தில் இறைவனை வழி பட்ட இடம்தான் ஆனைக்கா. இந்த இடம் ஆனைக்கா என்று ஏன் அழைக்கப்படுகிறது?அதைத் தெரிய வேண்டாமா? கைலையிலுள்ள இரண்டு கண நாதர்கள் ஏதோ சாபம் பெற்ற காரணத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் வந்து பிறக்கிறார்கள் இந்த ஞான பூமியிலே. அன்னை அகிலாண்டேஸ்வரி ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபடுகிறார்கள். லிங்கமோ ஒரு நல்ல நாவல் மரத்தடியில் காவிரிக் கரையில் இருக்கிறது. ஆற்றின் தண்ணீரைத் தன் துதிக்கையாலே மொண்டு கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறது யானை. மரத்தின் தழைகள் இறைவன் மேல் விழாதவாறு நூல் பந்தல் இடுகிறது சிலந்தி. யானை இப்படி நூல் பந்தல் போடுவது தக்கதன்று என்று நினைக்கிறது. ஆதலால் தன் துதிக்கையாலேயே நூல் பந்தலைச் சிதைத்து விடுகிறது. சிலந்திக்கு யானை மீது கோபம். ஆதலால் யானையின் துதிக்கையுள் நுழைந்து கபாலம் வரை ஏறி யானையைக் கடிக்கிறது. யானை துடி துடித்து விழுந்து இறக்கிறது. துதிக்கையுள் சென்ற சிலந்தி யும் வெளியே வர இயலாமல் மடிகிறது. இறைவன் இவர்கள் பக்தியை மெச்சி இவர்களுக்கு முத்தி அளிக்கிறான். சிலந்தியாய் இருந்தவன் அடுத்த பிறவியிலே கோச் செங்கட் சோழ மன்னனாகப் பிறக்கிறான். யானை மீது கொண்டிருந்த பகையை மறக்காமலே யானை ஏற இயலாத மாடக் கோயில்கள் எழுபது கட்டுகிறான். ஆனால் இறைவனோ ஆனை வழி பட்ட இந்த ஸ்தலத்தையே ஆனைக்காவாக ஆக்கி விடுகிறான். எழுபது கோயில்களுக்குச் சென்று படியேறி இறைவனை வழிபட இயலா விட்டாலும், ஒரு கோயிலையே தன்னுடையதாக ஆக்கிக்கொள்கிறது யானை. ஆம், அகிலாண்ட நாயகியோடு கோயில் கொண்டுள்ள ஆனைக்கா அண்ணலையே அபயமாகக் கொண்டு வாழ்கிறது.

அகில அண்டங்களையும் அந்த அண்டங்களில் உள்ள அகில சராசரங்களையும் பெற்று வளர்க்கும் அன்னை அகிலாண்ட நாயகி என்று பெயர் பெறுவதில் வியப்பில்லை தான். ஆனால் இந்த அகிலாண்டகோடி யீன்ற அன்னையைத் தான் பின்னையும் கன்னியென மறை பேசுகின்றது. அந்தப் பேச்சுக்கு ஏற்பவே அவள் இன்னும் ஆனந்த ரூப மயிலாக, அழகிய கன்னிப் பெண்ணாகவே காட்சி அளிக்கிறாள். இந்த அகிலாண்டேஸ்வரியைத்தான் கச்சியப்ப முனிவர்.

எண்ணிறந்த தாயர் வயிற்றிலிருந்து
பிறந்திடும் துயரம் அனைத்தும் நீங்க
மண்ணிறந்து, புனலிறந்து, வயங்கிய
செந்தீயிறந்து, வளியினோடு விண்ணிறந்து,
பெருங்கருணைத் தாயாகி
தனது அகட்டில் விரவ வைத்து
கண்ணிறந்த கவின்காட்டும் அகிலாண்ட
நாயகியைக் கருத்துள் வைப்பாம்.

என்று பாடி மகிழ்கிறார். அன்னையின் அழகும் அருள் பெருகும் திருவிழியும் காண்பவரது கண்ணையும் கருத்தையும் கவர்வன. தொழுவார் பிறவித் துயரை எல்லாம் துடைக்க வல்ல பெருமாட்டி அவள்.

அட்டசித்தி நலன் அன்பருக்கு அருள
விருது கட்டிய பொன் அன்னமே
அண்டகோடி புகழ் காவை வாழும்
அகிலாண்ட நாயகி என் அம்மை

என்று தாயுமான சுவாமிகள் தெரியாமலா பாடுகின்றார்.

உலகிடை அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பது பழமொழி. ஆம், அன்று அந்தச் சீகாழிப் பிள்ளையும் அழுத போதுதானே, அன்னை வந்து ஞானப் பால் ஊட்டிச்சென்றிருக்கிறாள். ஆனால் குழந்தைகள் அழாமலே, பால் நினைந்து ஊட்டும் தாயர் எத்தனை எத்தனை பேர். அத்தகைய தாயரில் ஒருவராக அகிலாண்டேஸ்வரி இருக்க வேண்டும். பிள்ளைகள் அழும் வரை அவள் காத்திருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறார் ஒரு பக்தர். ஆம், அழுதால் பால் கிடைக்கும் என்று குழந்தைக்குத் தெரிந்தாலும், அதற்கு அழத்தெரிய வேண்டாமா? அழுதால் உன்னைப் பெறலாமே என்று சொல்வதை விட, நினைத்தால் உன்னைப் பெறலாம் என்ற நிலையையே அன்னை அருள வேண்டும். அப்படி அருள் பெற்றவரே பாடுகிறார்:

உலகிடை அழுதபிள்ளை பால்குடிக்கும்
உண்மை என்று உரைப்பதற்கு ஏற்ப
இலகு சீகாழி மழவு அழ அளித்தாய்
இன்முலைப்பால். அழாவிடினும்
அலகு அற இறங்கி அளிப்பவர் இலையோ
அத்தகு மழவியான். அருள்வாய் கலகமில்
கழகம்சூழ் திருவானைக்கா
அகிலாண்ட நாயகியே

என்பது பாட்டு. ஆம், அழாமலே இந்த அன்னையின் அருளைப் பெறலாம் என்று தான் சொல்லுகிறேன் நானும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *