அனுமனது விசுப ரூபம்

பிறப்பு நிலை கேடு
இவையாவான்; பாவம்
அறத்தினொடு ஐம்பூதம்
ஆவான் – உறற்கரிய
வானாவான் மண்ணாவான்
மன்னுயிர்கள் அத்தனையும்
தானாதல் காட்டினான் தான்

என்று கீதா ரகஸ்யத்தையே உரைக்கின்றார், பெருந் தேவனார், தான் இயற்றிய பாரதத்தில், தேர்தட்டின் மீது திகைத்து வாள்த்தடக்கை வில்நெகிழ வாளா இருந்திட்ட அர்ச்சுனனுக்கு ‘எல்லாம் நானே ஆதலால் பலன் கருதாது உன் கருமத்தைச் செய்’ என்று உபதேசிக்கிறார் பகவான். இந்த கீதோபதேசத்தை, அருச்சுனனைத் தவிர வேறு ஒரு நபரும் அதே சமயத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தான், பார்த்தனுடைய ரதத்தின் கொடியில் அமர்ந்திருந்த அனுமார். அவரோ கீதோபதேசம் கேட்கு முன்பே எல்லாவற்றையும் ‘பாராயணம்’ செய்யும் மனப் பக்குவம் பெற்றிருந்தவர்.

ஆதலால், கீதாவிற்கு விளக்கம் சொல்லுவதில் கீதாச் சிரியனையும் மிஞ்சி விடுகிறார். கீதார்த்தமு என்று தொடங்கும் கீர்த்தனத்தில் பக்த தியாகராஜர். அனுமன், அர்ச்சுனனுடைய தேர்க் கொடியில் வீர புருஷனாக இருந்து கீதோபதேசத்தைக் கேட்டதே ஒரு அழகான கதை. கதை இதுதான்.

சிரஞ்சீவிப் பட்டம் பெற்றவன் அனுமன், ஆதலால் ராமனை விட்டுக் கடைசியாகப் பிரிகிற போது எல்லாக் காலத்திலும் தான் வாழ்ந்தாலும், ராமனுக்கு அத்தகைய நிலைத்த வாழ்வு இல்லையே. ஆதலால் அவனை எப் பொழுதுமே காணும் வாய்ப்புப் பெறுவது எங்ஙனம் என்று ஏங்கியிருக்கிறான்.

அப்போது ராமன், அவனுக்கு அடுத்த யுகத்திலும் ராமனாகவே காட்சி கொடுப்பதாக ஒத்துக் கொண்டு விடுகிறான். அனுமனும் அதே விருப்பத்தோடு அடுத்த யுகத்தில் சேதுக்கரைக்கு வந்து தவம் செய்கிறான். தீர்த்த யாத்திரை புறப்பட்ட அருச்சுனன் அதே சேதுக்கரைக்கு வருகிறான். ராம நாம பஜனம் செய்யும் அனுமனைப் பார்த்து என்ன உங்கள் ராமன் இந்தச் சொத்தைக் கடலை கடப்பதற்கு கல்லாலேயே ஒர் அணை கட்டியிருக்கிறான். நானாகயிருந்தால் என்னுடைய அம்புகளைக் கொண்டே ஒர் அஸ்திரபாலம் அமைத்து அதன் பேரிலே சேனையை நடத்தி கடல் கடந்திருப்பேனே! என்று எகத்தாளமாகப் பேசுகிறான். அனுமனுக்கோ அசாத்திய கோபம். அவனும், “உன் அஸ்திரபாலம் என்னைப் போன்ற ஒருவனைக் கூடத் தாங்க வலியற்றதாக இருக்கும்” என்று மடக்குகிறான்.

அதைத் தான் பார்த்து விடுவோமே என்று அர்ச்சுனன் தன் அம்புகளைக் கொண்டே அரைக்கணத்தில் ஒர் அஸ்திர பாலத்தை அமைத்து விடுகிறான். அனுமனும் உடனே விசுவரூபம் எடுத்து, அந்தப் பாலத்தின் மேல் நடக்க ஆரம்பிக்கிறான். பாலமோ நொறுங்கித் துகள் துகளாகி விடுகிறது. அருச்சுனனுக்கோ அவமானம் தாங்க முடியவில்லை. தன் உயிர் துணைவனான கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே தீப்புகுந்து உயிரை விட்டுவிட விரைகிறான்.

அந்தச் சமயத்தில் வருகிறான் ஒரு வேதியன். அனுமன் அருச்சனன் இருவரையும் பார்த்து அவர்கள் நடத்திய போட்டி விவரங்களைக் கேட்கிறான். ‘என்ன! போட்டி என்றால் மத்தியஸ்தர் ஒருவரை வைத்துக் கொள்ளாமலா போட்டி போடுவது. சரி. நான் மத்தியஸ்தனாக இருக் கிறேன், திரும்பவும் அருச்சனன் பாலம் அமைக்கட்டும்’ என்கிறான்.

அருச்சுனனும் பாலம் அமைக்கிறான், அம்புகளாலேயே திரும்பவும். அனுமனும் தன் விசுவரூபத்துடனே பாலத்தின் பேரில் குதிக்கிறான்; ஓங்கி மிதிக்கிறான். இந்தத் தடவை பாலம் நொறுங்கவில்லை. அசையாது நிற்கிறது. அனுமன் தலைகவிழ்கிறான். அந்சத் சமயத்தில் வேதியனாக வந்து மத்தியஸ்தம் பண்ணியவன், ‘நானே ராமன்’ என்று தன் உருவைக் காட்டுகிறான். அதே நேரத்தில் அருச்சுனனுக்கும் ‘நானே கிருஷ்ணன்’ என்றுக் காட்டி விடுகிறான். ‘எல்லாம் நானே’ என்னும் கீதோபதேசம் அன்றே நடந்துவிடுகிறது இருவருக்கும். கடைசியில் அருச்சுனன் வேண்டிக் கொண்டபடி அனுமனும் பாரத யுத்தம் நடக்கும் போது அவனுடைய தேரில் கொடியாக அமைந்து, வெற்றி பெற உதவுவதாக வாக்களித்து விடுகிறான். திரும்பவும் விரிவாக நடக்கிறது கீதோபதேசம்.

போர்க்களத்தில் குறையாத வீரமும், அசையாத பக்தியும் உடைய அனுமனுமே கேட்கிறான் கீதோபதேசத்தை – அறிதற்கரிய விளக்கங்களை எல்லாம் பெறுகிறான். வீரத்திற்கும், பக்திக்கும் தலை சிறந்த எடுத்துக்காட்டு அனுமன். ஆதலால்தான், ராமாயண பாத்திரங்களிலே தலை சிறந்த ஒரு பாத்திரமாக அனுமன் அமைகிறான்.

“எவனிடம் உன்னிடம் இருப்பது போல் ஞாபகசக்தி, மனத்தெம்போடு கூடிய தைரியம், சிறந்த மதி நலம், ஆழ்ந்த சாமர்த்தியம் எல்லாம் நிறைந்திருக்கிறதோ, அவன், எல்லோரையும் வெல்லும் ஆற்றல் பெறுவான்’ என்று அனுமனைத் தேவர்கள் புகழ்ந்ததாக வான்மீகர் சொல்கிறார். இதைப் போலவே கவிச்சக்கரவர்த்தி கம்பனும், உத்தம கர்ம யோகிக்கு வேண்டிய மூன்று பெரிய பண்புகள் அனுமனிடம் வளர்வதாக குறிக்கின்றான். பிரம்மச்சாரியினுடைய புலனடக்கம், பிரமதேவனைக் காட்டிலும் மேம்பட்ட அறிவு, எல்லாவற்றிற்கும் மேலாக தருமத்தை நிலை நிறுத்தத் துடிக்கும் ஊக்கம், எல்லாம் நிறைந்திருந்தது அனுமனிடம். மாணியாம் வேடம் தாங்கி,

மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணியாய் உலகுக்கு எல்லாம்
அறம் பொருள் நிரப்பும் அண்ணல்

என்பதுதானே கம்பன் உருவாக்கிக் காட்டும் அனுமன். அனுமன் ஒரு நவவியாகரண பண்டிதன். அவன் கல்லாத கலையே இல்லை. அவன் செய்யாத தொண்டும் இல்லை. கடல் கடந்து இலங்கை சென்று அசோக வனத்திடை தவம் செய்யும் தவமாம் தையலைக் கண்டு தொழுகிறான். ராமனுடைய பண்ணையில் அவன் ஏவின வேலையைச் செய்யும் பண்ணையாளாக, கூவின சத்தத்திற்கெல்லாம் பணி செய்யும் வேலைக்காரன் என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அத்தகைய தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்ததற்காக மகிழ்கிறான். அந்த மகிழ்ச்சியில் பேசுகிறான் சீதையிடம்.

வண்ணக் கடலின் இடை இடந்த
மணலிற் பலரால் வானரங்கள்
எண்ணற்கரிய படைத்தலைவர்
இராமற்கு அடியார் யான் அவர் தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்
ஏவல், கூவல் பணி செய்வேன்

இப்படி அடங்கி ஒடுங்கிப் பேசும் அனுமன் பேரில் தான், ராமனும் சுக்ரீவனும் எத்தனை நம்பிக்கை வைத் திருக்கிறார்கள். தென்திசை நோக்கிச் செல்லும் அனுமன், சீதையை, சீதை இருக்கும் இடத்தைக் கட்டாயம் கண்டு வருவான் என்று நம்புகிறான் காகுத்தன். ஆனால் அனுமனுடைய ஆற்றலை எல்லாம் நன்கு அறிந்த அந்த கவி குலக் கோமகனாகிய சுக்ரீவனோ, சீதையைக் கண்டு விட்டால், சும்மா வெறுங்கையோடு வரமாட்டான், கொண்டு வந்து விடுவான் என்றே நம்புகிறான்.

ஆனால் இதே நம்பிக்கை சீதைக்கு முதலில் அனுமனிடம் உண்டாக வில்லை. இத்தகைய சிறிய உருவம் படைத்த அனுமன் எப்படி இந்த கடலைக் கடந்தான் என்று சந்தேகிக்கிறாள். அனுமனோ நான் இக்கடலை கடந்தது காலினால்தான் என்று விளக்குகிறான். சீதைக்கோ அதிசயத்திலும் அதிசயமாகத் தோன்றுகிறது. சீதையின் சந்தேகத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை அனுமன்.

அதுவரை அடங்கி ஒடுங்கி நின்ற அனுமன் தன் விசுவ ரூபத்தையே காட்டுகிறான். அனுமனோ பெரிய யோகி, அதனால் பல சக்திகள் வாய்ந்தவன். ஆதலால் அவன் விண்ணிற்கும் மேலே விரிந்திருக்கும் வான் முகட்டையும் முட்டும் வகையில் உயர்ந்த உருவம் உடையவனாகி விடுகிறான்.

இப்படி அண்ட முகடு அளவும் வளர்ந்தவனைக் கண்டு அன்று உலகெலாம் அளந்த நாயகனான திரி விக்கிரமனுமே நாணம் அடைகிறான், தன்னால் இவ்வளவு பெரிய உருவை அன்று எடுக்க முடியாது போயிற்றே என்று. அனுமனுடைய அறிவை, ஆற்றலை, பக்தியை எல்லாம் எப்படி எப்படி எல்லாமோ பாராட்டியிருக்கிறர்கள் கவிஞர்கள். அத்துடன் அவன் எடுத்த அந்த பேருருவை – விசுவ ரூபத்தையுமே கற்பனை பண்ணி மகிழ்ந்திருக்கிறார்கள். எண்ணரிய சக்திகளை யெல்லாம் ஒழுக்கத்தின் உயர்வால் பெற்ற ஒருவன் மக்கள் சிந்தனையில் எவ்வளவு உயர்ந்து விடுகிறான் என்பதைத் தானே இப்படி விசுவரூபமாகக் காட்டி விளக்குகிறார்கள் கலைஞர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *