சூரசம்ஹாரம் வரலாறு

முருகனுடைய வரலாறுகள் பலப்பல. அவற்றில் சிறப்புடையது அவன் தேவர்களுக்கு இடையறாது இடையூறு செய்த சூரபதுமன், சிங்கமுகன், பானுகோபன் முதலியவர்களை எல்லாம் கொன்று குவித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்ததே. அசுரர்கள் என்றால் ஏதோ விகார உருவம் படைத்தவர்கள் என்பது மாத்திரம் அல்ல. நமது உள்ளத்திலே உதிக்கும் அகங்காரம், காமம், குரோதம் முதலியவைகளைத் தான் உருவகப்படுத்தி அசுரர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அசுரர்களைத் தொலைத்து சூரசம்ஹாரம் நடத்துவதற்கு, முருகன் அருள் பாலிக்கத்தானே வேண்டும்.

சூரசம்ஹாரம் புராணங்களில் எல்லாம் ஒரே விதமாகக் கூறப்படவில்லை. ‘ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன, ஆதலால் இக்கதையும் அனந்தமாம்’ என்று சொல்லி கந்த புராண ஆசிரியர் இத்தனை கதைகள் அந்தப் புராணங்களில் இருப்பதற்கு சமாதானம் சொல்லி விடுகிறார். ஆனால் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் கதைதான் கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. கதை இதுதான்.

பிரம்மாவின் புத்திரன் தக்கன் ஒரு வேள்வி செய்கிறான். அந்த வேள்வியிலே தன் மருமகன் ஆம், தாக்ஷாயணியின் கணவன், சிவபிரானுக்கு அழைப்பில்லை. அங்கு அவன் கௌரவிக்கப்படவும் இல்லை. இது தெரியாமல், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், முதலிய தேவர்கள் எல்லாம் அந்த வேள்விக்குச் சென்று விடுகிறார்கள். இது காரணமாக சிவனுடைய அம்சமான வீரபத்திரனால் இவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள். காணும் காணாததற்கு, சூரபதுமன் முதலிய அசுரர்களாலே துன்புறுத்தவும் படுகிறார்கள். தேவர்கள் தங்கள் துயரம் தாங்க முடியாமல் சிவபிரானிடமே சென்று முறையிடுகிறார்கள். சிவபெருமானும் அவர்கள் துன்பத்தை நீக்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன்னுடைய ஐந்து திருமுகங்களோடு அதோ முகமும் கொள்கிறார். ஆறு திருமுகத்தில் உள்ள ஆறு நெற்றிக் கண்களில் இருந்து ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயு ஏந்திச் சென்று அக்னியிடம் கொடுத்து விட்டுத் தப்பித்துக் கொள்கிறான். அக்னியும் அந்தப் பொறிகளின் வெம்மையைத் தாங்காது கங்கையிலேயே விட்டு விடுகிறான். கங்கை இந்தப் பொறிகளை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அங்கு ஆறு பொறிகளும் ஆறு திருக் குழந்தைகளாக மாறுகின்றன. இது நடந்தது வைகாசி மாதத்தில் விசாக நாளில். இப்படித்தான் விசாகன், பிறக்கிறான் இவ்வுலகிலே.

ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கிறார்கள். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையொடு சரவணப் பொய்கைக்கு வருகிறார். அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து அணைக்கிறாள். தன் மார்பகத்தில், ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறான். கந்தன் எனப் பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்று எல்லோராலும் அருமையாக அழைக்கப்படுகிறான்.

அருவமும் உருவம் ஆகி
அநா தியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து அங்கு
உதித்தனன் உலகம் உய்ய

என்று அறுமுகனது அவதாரத்தைக் கூறுகிறது கந்த புராணம்

இப்படி எல்லாம் பிறந்து கந்தன் வளர்கின்ற போது சூரபதுமனும் தேவர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறான். உடனே கந்தன் தன் கடமையைச் செய்ய முனைகிறான். தன் தந்தையின் கட்டளைப்படி அவனுடன் புறப்படுகிறார்கள் நவவீரர்களும் மற்றவர்களும் எண்ணிறந்த படைக்கலங்களை ஏந்திக் கொண்டு. அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து ஆசி கூறி அனுப்புகிறாள். இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கானவர்கள் நரகாசுரனும், கிரௌஞ்சமலையும் தான். இவர்களை வெற்றி காணுவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லைதான். அதன் பின் தன் சேனா வீரர்களுடன் மண்ணியாற்றின் கரையை அடைந்து, அங்கு சிவனை எழுந்தருளச் செய்து வணங்கி, தன் படைக்கலங்களை இன்னும் பெருக்கிக் கொள்கிறான். சேயன் அமைத்த சிற்றூர் சேய்ஞலூர் என்று பெயர் பெறுகிறது. அங்கிருந்து புறப்பட்ட முருகன் நவவீரர்களுடன் நேரே வந்து விடுகிறான் திருச்செந்துருக்கு. ஏன்? அதை அடுத்த வீரமகேந்திரத் தீவில் கட்டிய கோட்டையைத் தானே தன் கேந்திர ஸ்தானமாகக் கொண்டு சூரபதுமன் ஆட்சி புரிகிறான். நவவீரர்களில் சிறந்த வீரபாகுத் தேவரைத் தூதனுப்புகிறான், சிறையிலிருக்கும் தேவர்களை எல்லாம் விடுதலை செய்யச் சொல்லி, சூரபதுமன் இணங்கவில்லை. போருக்கே புறப்பட்டு விடுகிறான் தன் இளைஞரோடும் வீரரோடும். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும் சிங்கமுகாசுரனையும் கொன்று குவிக்கிறான். ஆறுநாள் நடக்கிறது போர். கடைசியில் போர் முருகனுக்கும் சூரபதுமனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரிலே அன்னை தந்த வேலைப் பிரயோகித்து, சூரசம்ஹாரத்தையே முடிக்கிறான். வேற்படையால் இருகூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறை தன் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். இப்படி, மணம் புரிந்த தெய்வயானையையும் வள்ளியையும் தனக்கு மிகவும் உகந்த இடமான திருச்சீரலைவாய்க்கே கூட்டி வந்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறான் பக்தர்கள் எல்லாம் கண்டு களிக்க.

கொங்கை குறமங்கையின்
சந்த மணம் உண்டிடும்
கும்ப முனி கும்பிடும்
தம்பிரானே.

ஓம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *