விகட சக்கர விநாயகர்

விநாயகப் பெருமான் ஒரு சமயம் விசுவரூபம் எடுத்தார். அந்தத் திரு உருவத்தை நமக்குக் காட்டுகிறார் கச்சியப்ப சிவாசாரியார். எப்படிக் காட்டுவது? இவ்வளவு அடி உயரம் என்று அளந்து காட்ட முடியாது. அதனை ஒரு வகையில் நமக்குப் புலப்படும் படியாகச் செய்கிறார்.

சூரிய மண்டலம் எல்லாவற்றையும் விட மேலே இருப்பது. அதற்குக் கீழேதான் சந்திர மண்டலம் இருக்கிறது. விநாயகப் பெருமான் சூரிய மண்டலத்திற்கும் மேலே வளர்ந்திருக்கிறார். சூரியன் அவரது இடுப்புக்கு நேராக இருக்கிறான். விநாயகப் பெருமான் தம் இடுப்பில் உதரபந்தனமாக பெல்ட்டைப் போல – நாகப் பாம்பை அணிந்திருக்கிறார். அந்த நாகப்பாம்பை இடுப்பைச் சுற்றிக் கட்டி ஒரு முடி போட்டிருக்கிறார். நாகப் பாம்பின் தலை அவரது இடுப்பில் எடுப்பாய் இருக்கிறது. அந்தப் பாம்பின் வாய்க்குப் பக்கத்தில் சூரியன் இருக்கிறான். விநாயகப் பெருமான் அவ்வளவு உயரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது தாமரை நாயகனாகிய சூரியன் விநாயகப் பெருமான் இடையில் கட்டியிருக்கிற நாகப் பாம்பின் வாயில் உள்ள மாணிக்கத்தைப் போல ஒளிவிடுகிறான்.

“தாமரை நாயகன்
அகடு அசக்கு அரவின் மணியா உறை”

என்று சொல்கிறார் கச்சியப்ப சிவாசாரியார். ‘சூரியன், வயிற்றிலே உதர பந்தனமாகக் கட்டிய பாம்பின் மாணிக்கம் போலத் தங்குகிறது’ என்பது பொருள்.

விநாயகப் பெருமானை விகட சக்கரன் என்று சொல்கிறார். காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கிற விநாயகருக்கு விகட சக்கர விநாயகர் என்று பெயர்.

தக்கன் யாகம் செய்தபோது சிவபெருமானை அழையாமல் செய்தான். அதனால் சிவபெருமான் வீரபத்திரதேவரை உண்டாக்கித் தக்க யாகத்தை அழிக்கும்படி விடுத்தான். அப்போது திருமால் தம் சக்கராயுதத்தை வீசினார். அதை வீரபத்திரக் கடவுள் அணிந்திருந்த வெண்தலை ஒன்று கவ்விக் கொண்டது. சக்கரப் படை இல்லாமல் திருமால் தவித்தார். அவர் தமது சேனாதிபதியாகிய விஷ்வக் ஸேனரை அனுப்பி அந்தச் சக்கரத்தை மீட்டுவரச் சொன்னார். விஷ்வக்ஸேனர் வீரபத்திர தேவர் முன் வந்து கோமாளிக் கூத்து ஆடினார். அந்தக் கூத்துக்கு விகடக் கூத்து என்று பெயர். அப்படி ஆடும்போது எல்லோரும் நகைத்தார்கள். வெண்தலை மாலையும் நகைத்தது. அப்போது அதன் வாயில் இருந்த சக்கரம் கீழே நழுவி விழுந்தது. அந்தச் சக்கரத்தை விநாயகப் பெருமான் எடுத்து வைத்துக் கொண்டார். ‘இவரிடமிருந்து அதை வாங்குவதற்கு என்ன வழி?’ என்று விஷ்வக்ஸேனர் எண்ணினார். விநாயகப் பெருமானோ அதே விகடக் கூத்தைத் தம் முன்னே ஆடவேண்டுமென்று கேட்டார். அப்படியே விஷ்வக்ஸேனர் ஆட, சக்கரத்தைக் கொடுத்ததனால் இவருக்கு விகட சக்கர விநாயகர் என்ற திருநாமம் வந்தது.

இது காஞ்சிபுராணத்தில் வருகிற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *