
வள்ளுவரும் குறளும்!
கி. ஆ. பெ. விசுவநாதம்
தோற்றுவாய்
அன்பும் பிரியமுமுள்ள தாய்மார்களே!
பெரியோர்களே!!
அன்பர்களே!!!
உங்கள் அனைவருக்கும் இந்த நல்ல நாளிலே எனது தாழ்மையான வணக்கம். கோவை அனுப்பர் பாளையம் திருவள்ளுவர் படிப்பகத்தின் மூன்றாவது ஆண்டு விழா, பெரியோர்களாகிய உங்கள் முன்பு இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்குபெறும் பேறு எனக்குக் கிடைத்தமைக்காக உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை ஒரு பெரும்பேறாகவும் கருதுகிறேன். திருவள்ளுவர் படிப்பகம் மூன்று ஆண்டுகளாக இந்நகரில் நடந்து வருவதும், ஆங்கிலம் படித்து அலுவல்களிலே இருக்கின்ற நல்ல தமிழ் இளைஞர்கள் இதிற் பங்கு பெற்றுத் திருக்குறள் வகுப்பை நடத்தி அதிற் படித்து வருவதும், எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்திகளாகும்.
முன்னுரை
திருவள்ளுவர் படிப்பகத்தையும், திருவாளர்கள் சி.கே.சுப்பிரமணிய முதலியார், சி.எம். இராமச்சந்திரன் செட்டியார், அ. கந்தசாமிப் பிள்ளை போன்ற பழம் பெரும் புலவர்களையும் கொண்டது இந்த நகரம். சிறந்த புலவர்களைக் கொண்டு திருக்குறள் வகுப்பை நடத்திக் கொண்டு வருகின்ற வள்ளுவரும் குறளும் கழகத்தைச் சேர்ந்த நீங்கள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் தெரிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். என்றாலும் என்னை அழைத்து இதைச் சொல்லும்படி செய்ததைவிட, ஒரு புலவரை அழைத்துச் சொல்லச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. மற்றும் என்னை ஏன் அழைத்துச் சொல்லச் சொன்னீர்களென் றால், திருக்குறள் புலவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, புகையிலை வியாபாரிகளுக்கும் சொந்தம் என்று காட்டுவதற்காக அழைத்திருக் கிறீர்கள் என்றே நான் கருதினேன். அது உண்மையானால், புலவர்களிடத்தி லிருந்து திருக்குறளைக் கொள்முதல் செய்து பொது மக்களிடம் விற்பது தான் வியாபாரிகளின் கடமையாக இருக்கும்.