கங்கைப் புராணம்

காசியில் கங்கை ஓடுகிறது. அந்தக் கங்கையில் நீராடினால் பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இந்த நாட்டில் பல காலமாக இருந்து வருகிறது. தம்முடைய இறுதிக் காலத்தில் காசிக்குச் சென்று அங்கே உயிர் நீத்துவிட வேண்டும் என்றும், அங்கேயே ஜலசமாதி அடைந்துவிட வேண்டும் என்றும் பல பெரியவர்கள் எண்ணி அங்கே போய் வசிக்கின்றார் கள். காசியின் மகிமையையும், கங்கையின் சிறப்பையும் பலர் விரித்துச் சொல்லியிருக்கிறார்கள். எத்தகைய பாவம் செய்தாலும் ஒரு முறை கங்கையில் நீராடினால் அது போய்விடும் என்று புராணங்கள் விரிக்கின்றன. பிரம்மஹத்தி தோஷமாக இருந்தாலும் கங்கையில் நீராடினால் போய்விடுமாம்.

கங்கையின் புராணத்தை அதன் கரையிலேயே பலர் படித்தும் விரித்தும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதில் எத்தனை நம்பிக்கையோ! ஆண்டவனே அறிவான்.

ஒரு நாள் பார்வதியும், பரமேசுவரனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி, “இந்தப் புராணத்தில் கங்கையில் நீராடியவர்களுக்கு எல்லாப் பாவங்களும் போய்விடும் என்று சொல்லியிருக்கிறதே! இது உங்களுக்குச் சம்மதந்தானா?” என்று கேட்டாள்.

”ஆம்; அதில் சந்தேகம் என்ன?” என்றான் இறைவன்.

“அப்படியானால் இங்கே வந்து மூழ்குகிறவர்கள் எல்லோருக்கும் மோட்சத்தில் இடம் இருக்குமா?” என்று பார்வதி கேட்டாள்.

“கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோரும் உண்மையாகவே தம்முடைய பாவம் போகும் என்ற நம்பிக்கை உடையவர்கள் என்று நினைக்கக் கூடாது. எவன் சத்தியமாக அதை நம்பு கிறானோ அவனுக்கே பயன் உண்டு. அப்படி நம்புகிறவர்கள் மிகவும் குறைவு. இதை வேண்டுமானால் உனக்குக் காட்டுகிறேன்” என்றான் இறைவன்.

உடனே இறைவனும் இறைவியும் முதியவர்களாகக் கோலம் கொண்டார்கள். கங்கைக் கரைக்குச் சென்றார்கள். கிழவன் மெல்லக் கங்கையில் இறங்கி நீராட முயன்றான். அப்போது தடுக்கி விழுபவனைப் போல நடித்துக் கங்கை நீரோட்டத்தில் மிதந்தான். அம்பிகையாகிய கிழவி, “ஐயோ, ஐயோ!” என்று கத்தினாள். பலர் ஓடி வந்தார்கள்.”ஒரு பாவமும் இதுவரை செய்யாமல் இருக்கிற யாராவது ஒருவர் என்னுடைய கணவரை கரையேற்ற மாட்டாரா?” என்று கெஞ்சினாள்.

வந்தவர்களில் பல பேர் ஒன்றும் புரியாதவர்களைப் போலத் தயங்கினார்கள்.”யார் இதுவரையில் ஒரு பாவமும் செய்யாதவரோ அவர்தான் அவரைப் போய் எடுக்க முடியும். இல்லா விட்டால் அவர் கீழே அமிழ்ந்து விடுவார். ஒரு பாவமும் செய்யாதவராக உங்களில் யாராவது இருந்தால் உடனே போய் என் கணவரைக் கரையேற்றுங்கள்” என்று புலம்பினாள் கிழவி.

கங்கைப் புராணத்தைத் தினந்தோறும் படித்துக் கொண்டிருந்த அந்தணர், ‘நாம் எத்தனையோ பாவம் செய்திருக்கிறோமே’ என்று சும்மா இருந்துவிட்டார். புராணத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களோ தாங்கள் பாவம் எதுவுமே செய்யாதவர்கள் என்று சொல்லும் தைரியம் இல்லாமல் நின்றார்கள். அங்கே இருந்தவர்கள் எல்லாருமே தங்களைப் பற்றி நம்பிக்கை இல்லாமல், ஒன்றுமே செய்வதற்கு இல்லையே!’ என்று வருத்தத்தோடு நின்றார்கள்.

அப்போது யாரோ ஒரு முரடன் ஓடி வந்தான். “ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள் அம்மா?” என்று கேட்டான்.

ஒரு பாவமும் செய்யாதவனாக இருந்தால் அதோ மிதக்கிறாரே என் கணவர், அவரைக் கரையேற்ற முடியும். யாராவது எனக்கு உதவி செய்ய முன்வரமாட்டார்களா?” என்று மறுபடியும் கிழவி புலம்பினாள்.

உடனே அந்த ஆள் கங்கையில் ஒரு முழுக்குப் போட்டான். “கங்கையில் மூழ்கினால் எல்லாப் பாவங்களும் போய்விடும். நான் மூழ்கிவிட்டேன். இப்போது ஒரு பாவமும் இல்லாதவன் நான். இதோ நான் போய் உன் கணவரைக் கரையேற்றுகிறேன்” என்று சொல்லி நீந்திப் போய்க் கிழவரை இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தான். முதியவர்களாக வந்த இறைவனும் இறைவியும் மறைந்துவிட்டார்கள்.

இறைவன் அம்பிகையைப் பார்த்து, ‘பார்த்தாயா? கங்கையில் ஒரு தடவை மூழ்கினால் எல்லாப் பாவமும் போகும் என்று அந்தப் பௌராணிகர் எத்தனை பேர்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்! அவருக்கே அதில் நம்பிக்கை இல்லையே! இருந்தால் அவர் அல்லவா முதலில் வந்து என்னை இழுத்துப் போட்டிருக்க வேண்டும்? சொன்னவருக்கும் நம்பிக்கை இல்லை; கேட்டவர்களுக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் ஒரு நூலையும் படிக்காமல் முரடனாக இருந்த ஒருவனுக்குத்தான் அந்த நம்பிக்கை உண்மையாக இருந்தது. ஆகவே அவன் செய்தது பலித்தது” என்று சொன்னாராம்.

“துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வார்”

என்பது திருமூலர் வாக்கு.

தாம் உணர்ந்தவற்றைப் பிறருக்கு உரைத்தும் அதில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது கொஞ்சமும் பயன் அளிக்காது. இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெறும் முயற்சியில் மாத்திரம் அன்று; உலக இயலில் வெற்றிபெற வேண்டுமானாலும் தம்முடைய கொள்கையில் தமக்கே நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஐயம் உள்ளவர்களுக்கு அந்தக் கொள்கை பயன் அளிப்பது இல்லை.

“சம்சய ஆத்மா விநச்யதி”

என்பது கீதை, எத்தனை படித்தாலும் படித்தவர்கள் உணர்ந்து கொள்வது ஒரு பகுதிதான். உணர்ந்து கொண்டாலும் சந்தேகம் இல்லாமல் தெளிவு அடைந்து கொள்வது மிகவும் சுருங்கிய பகுதியே. அப்படித் தெளிவு கிடைப்பதிலும் அநுபவத்தில் அவற்றைக் கொண்டு வருவது மிகமிகச் சிறிய பகுதியே. அது தான் உண்மையாகத் தெளிந்து கொண்டதாகும். சிறிதளவு அனுபவம் கூட இல்லாமல் கடல் போன்ற கல்வியறிவு இருந்தாலும் அத்தகையவர்களுக்குப் படித்த நூல்களால் ஒரு சிறிதும் பயன் இல்லை. அவர்கள் பேசுகின்ற ஞானத்தினாலும் பயன் இல்லை. அவர்களைவிடப் படிக்காமல் ஒரு துளியாவது அனுபவம் பெற்றவன் ஆயிரம் மடங்கு சிறந்தவன்.

ஓம் நமசிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *