சமரச தீபம்
திரு.வி. கலியாணசுந்தரனார்

சமரச தீபம்‌

சாதிநிற மொழிநாடு சமயவெறிச்
சண்டையெலாந்‌ தாண்டிச்‌ தாண்டி ,
நீதியிலே விளங்குகின்ற நின்மலமாய்‌
நித்தியமாய்‌ நிறையாய்‌ அந்தம்‌
ஆதிநடு வில்லாத அகண்டிதமாய்‌
ஆனந்த அறிவாய்‌ நின்று
போதலொடு வரவற்ற பூரணமே
சுதந்திரமே போற்றி போற்றி
                                                    — திரு.வி.க.

சகோதரிகளே! சகோதரர்களே! 

இச்சமரச மகாநாடு ஈண்டுக்‌ கூடுமாறு முயன்று உழைத்த கெழுதகை நண்பர்கட்கும்‌, உழுவலன்பர்கட்கும்‌ எனது நன்றியறிதலைச்‌ செலுத்துகிறேன்‌. இம்மகாநாட்டில்‌ தலைமை ஏற்றுக்‌ கடனாற்றும்‌ பேற்றைச்‌ சிறியேற்கு நல்கிய உங்கட்கும்‌ எனது வணக்கம்‌ உரியதாக. 

இவ்வூழி, மகாநாட்டு ஊழி என்று கூறல்‌ மிகையாகாது. இந்நாளில்‌ உலகில்‌ பலதிற மகாநாடுகள்‌ கூடுகின்றன. அவற்றினிடையே ஓரு பாங்கர்‌ இச்சிறு மகாநாடுங்‌ குழுமி யிருக்கிறது. “இக்கூட்டம்‌ பயனற்றது” என்று கருதுவோருமுளர்‌; “இது பித்தர்‌ ஈட்டம்‌” என்று எள்ளி நகையாடுவோருமுளர்‌; இன்னும்‌ வேறு வேறு வழியில்‌ இதைக்‌ குறை கூறுவோருமுளர்‌. இவர்‌ அனைவர்க்கும்‌ இம்மகாநாட்டின்‌ இன்றியமையாமை நாளடைவில்‌ புலனாதல்‌ ஓருதலை. பல்லாற்றானும்‌ உலகை அலைத்துவரும்‌ மறத்துறைகளை வீழ்த்தி, அறத்துறைகளை நிலைபெறுத்தவல்லது சமரச சன்மார்க்கம்‌ ஒன்றே என்று உலகம்‌ உணருநாள்‌ சேய்மையில்‌ இல்லை. 

சமரச சன்மார்க்கத்துக்குரிய ஓரு சில நோக்கங்களைக்‌ குறிக்கொண்டு, ஈண்டியுள்ள இம்மகாநாட்டில்‌, சமரச சன்மார்க்கத்தின்‌ பெற்றியை விரித்துரைத்தல்‌ அநாவசியம்‌. ஆயினும்‌, அது குறித்துச்‌ சில உரை பகர்ந்து மேலே செல்கிறேன்‌.

சமரச சன்மார்க்கம்‌  சமரசம்‌ யாண்டுளதோ ஆண்டுச்‌ சன்மார்க்கமும்‌ உண்டு; சன்மார்க்கம்‌ ஒன்றே சன்மார்க்கம்‌ யாண்டுளதோ ஆண்டுச்‌ சமரசமும்‌ உண்டு. ஆகவே சமரசத்தைச்‌ சன்மார்க்கமென்று, சன்மார்க்கத்தைச்‌ சமரசமென்றுங்‌ கொள்ளலாம்‌. உலகிலுள்ள பன்மார்க்கங்கள்‌ சமரசங்‌ கூட்டாமை யானும்‌, சமரசங்‌ கூட்டுதலானும்‌, உலகம்‌ சன்மார்க்கத்தைச்‌, “சமரச சன்மார்க்கம்‌” என்று வழங்கி வருகிறது. சன்மார்க்கத்தில்‌ சமரசம்‌ பொலிதலால்‌, அதனைச்‌ “சமரசம்‌” என்னும்‌ அடையின்றிச்‌ “சன்மார்க்கம்‌” என்று கொள்வது சாலும்‌; சமரச சன்மார்க்கம்‌ என்று விளக்கமாகக்‌ கோடலும்‌ பொருந்தும்‌. 

பன்மையில்‌ ஒருமை

“உலகம்‌ பலவிதம்‌” என்பது பழமொழி. பலதிறப்பட்ட உலகில்‌ சமரசம்‌ எங்ஙனம்‌ நிலவும்‌ என்று சிலர்‌ கருதலாம்‌. “உலகம்‌ பலவிதம்‌” என்பது எவரும்‌ அறிந்ததொன்று. ஆனால்‌, அப்பன்மை, ஒருமைச்‌ சமரசத்தைக்‌ கூட்டாது என்று கோடல்‌ தவறு. உலகையும்‌ உலகிலுள்ள பல பொருள்களையும்‌ உற்று நோக்குழிப்‌ பன்மை வழி, ஒருமை நிலவலையே, அவை அறிவுறுத்தல்‌ காணலாம்‌. நமது யாக்கையை எடுத்துக்‌ கொள்வோம்‌. பல உறுப்புக்கள்‌ சேர்ந்த ஒன்றே யாக்கை என்பது. பன்மை உறுப்புக்களிடை ஒருமை யாக்கை ஓளிர்தல்‌ கருதற்பாலது. பல செடி கொடி மரம்‌ முதலியவற்றால்‌ ஆக்கப்‌ பட்ட ஓன்று, காடு என்று வழங்கப்படுகிறது. எனவே, பன்மையில்‌ ஒருமை மிளிர்தலே நியதி என்க. அவ்வொருமை தேறாது, பன்மையில்‌ மட்டும்‌ பார்வை செலுத்தல்‌ இடர்‌ விளைக்கும்‌. ஆதலால்‌, பன்மையில்‌ ஒருமை காண்டலே அறிவுடைமை. 

உலகை உற்று நோக்குவோம்‌. உலகம்‌, நாடு, மொழி, இனம்‌ முதலியவற்றால்‌ ஆக்கப்பட்டிருத்தலைக்‌ காண்கிறோம்‌. நாடு ,மொழி, இனம்‌ முதலிய பன்மைகளில்மட்டும்‌ கருத்தைப்‌ பதித்து, அதனதன்‌ அளவில்‌ சமரசங்கொண்டு, மக்கள்‌ வாழ்வு நடத்தப்‌ புகுங்கால்‌, பொறாமையும்‌ போரும்‌ பிணக்கும்‌ நிகழ்கின்றன. 

நாடு, மொழி, இனம்‌ முதலிய வேற்றுமைகள்‌ இல்லா தொழியுமோ? ஒருபோதும்‌ அவை யில்லாதொழியா. அவை யாவும்‌ இயற்கையில்‌ அமைந்திருப்பன. அவை எங்ஙனம்‌  ஒழியும்‌?

வேற்றுமையுள்ள மட்டும்‌ பொறாமை, போர்‌, பிணக்கு நிகழல்‌ இயல்பு என்று சிலர்‌ முடிவு காண்கிறார்‌. அம்முடிவு பொருந்திய தொன்றன்று. யாக்கையில்‌ உறுப்பு வேற்றுமைகள்‌ இருக்கின்றன. இவ்வேற்றுமை கொண்டு, உறுப்புக்கள்‌ ஒன்றோ டொன்று பிணங்கின்‌, யாக்கை நிலை என்னாம்‌? யாக்கையின்‌ நலனுக்கு உறுப்புக்கள்‌ யாவும்‌ ஓன்றி உழைக்கின்றன. ஒன்றிய உழைப்பால்‌ உறுப்புக்களும்‌ நலனுறுகின்றன. 

நாடு, மொழி, இனம்‌ முதலிய வேற்றுமைகொண்டு, மக்கள்‌ ஒருவரோடொருவர்‌ பிணங்கிப்‌ போரிடுவரேல்‌, உலகில்‌ அமைதி நிலவாது. அமைதியின்மை, பிணங்கிப்‌ போரிடும்‌ மக்கட்கும்‌ இன்பமூட்டாது. மக்கள்‌ பிணங்கிப்‌ போரிடாது ஓன்றி வாழவரேல்‌, அவர்களிடை இசைந்த இன்பம்‌ செறியும்‌. 

மக்கள்‌ வாழ்வின்‌ நோக்கம்‌ என்னை? இன்பம்‌ நுகர்வதன்றோ? வீண்‌ போராலும்‌ பிணக்காலும்‌ எற்றுக்கோ பெறற்கரிய இன்பத்தை அருமை மக்கள்‌ இழத்தல்‌ வேண்டும்‌? வேற்றுமைகளினிடையே ஓற்றுமை காணின்‌ இன்பம்‌ நுகரலாம்‌. ஒற்றுமையுணர்வு, வேறு பாடுகளால்‌ போரையும்‌ பிணக்கையும்‌ உண்டுபண்ணாது; அவைகளினிடை அன்பும்‌ ஆர்வமும்‌ உண்டுபண்ணும்‌. ஆதலால்‌, வேற்றுமையில்‌ ஒற்றுமை காணவே மக்கள்‌ முயலல்வேண்டும்‌.

சத்‌ மார்க்கம்‌

ஒற்றுமையுணர்வை உலகிற்‌ கூட்டவே பல பெரியோர்‌ ஆங்காங்கே தோன்றிச்‌ சன்மார்க்க போதனை செய்தனர்‌. சன்மார்க்கம்‌ என்பது, சத்தெனுஞ்‌ செம்பொருளை யுணர்த்தும்‌ மார்க்கமாகும்‌. சத்‌ – உண்மை. அல்லது கடவுள்‌; மார்க்கம்‌ – நெறி. உண்மைநெறி அல்லது கடவுள்‌ நெறியே சன்மார்க்க மென்பது. இச்சன்மார்க்கமே உலகில்‌ சமயம்‌ என்னும்‌ பெயரால்‌ வழங்கப்பட்டு வருகிறது. நாடு, மொழி, இனம்‌ முதலிய வேற்றுமைகளில்‌ நிலைபேறாக நின்று, வேற்றுமையுணர்வில்‌ பழுத்த மக்கள்‌, சன்மார்க்க மெனுஞ்‌ சமயத்தையும்‌ கூறிட்டு, வேறுபடுத்திப்‌ போர்களைக்‌ கிளப்பினார்கள்‌.

ஒரே கடவுள்

உலகிலுள்ள சமயங்கள்‌ யாவும்‌ சத்தெனுஞ்‌ செம்பொருள்‌ ஒன்றையே குறிக்கொண்டு நிற்கின்றன. அவ்வந்நாட்டார்‌, தத்தம்‌ மொழியில்‌ கடவுளைப்‌ பல பெயரால்‌ போற்றுகிறார்‌. அப்போற்றலில்‌ மொழி வேற்றுமையன்றிப்‌ பொருள்‌ வேற்றுமை யில்லை. ஆங்காங்குத்‌ தோன்றிய அருளாளர்‌ அறிவுறுத்திய சத்‌    மார்க்கம்‌, பின்னை நாளில்‌ அவரவர்‌ பெயரால்‌ பலப்பல சமயங்களாக வழங்கப்பட்டது. அப்பெயர்‌ வேற்றுமைகள்‌ உலகில்‌ சமயப்‌ போர்களாக முடிந்திருக்கின்றன. நாடு, மொழி, இனம்‌ முதலிய வேற்றுமைகளுள்‌ சமயமும்‌ ஓன்றாகக்‌ கொள்ளப்பட்டது. மக்கள்‌ அறியாமையால்‌, பல சமயங்களைக்‌ கற்பித்துக்கொண்டாலும்‌, அச்சமயங்களின்‌ உள்ளக்கிடக்கை ஒரு பொருளையே பற்றி நிற்றல்‌ வெள்ளிடைமலை. இது குறித்து, “மனித வாழ்க்கையும்‌ காந்தியடிகளும்‌” என்னும்‌ நூலின்‌ இறுதியில்‌ சிறிது விரித்துக்‌ கூறியுள்ளேன்‌. விரிவு ஆண்டுக்‌ காண்க. ‘போதிய ஓய்வு கிடைப்பின் சன்மார்க்கத்தைப் பற்றி விரிந்த தனி நூலும்‌ ஒன்று எழுத எண்ணி யிருக்கிறேன்‌.

எந்நாட்டாரும்‌, எம்மொழியினரும்‌, எவ்வினத்தாரும்‌, எல்லாரும்‌ சத்தெனுஞ்‌ செம்பொருளாம்‌ ஒரு கடவுளையே பல்வேறு பெயரால்‌ போற்றுகிறார்‌. நாடு, மொழி, இனம்‌ முதலியவாற்றால் வேறுபட்டார் போல வாழும்‌ மக்களை, ஓற்றுமைப்படுத்தவல்லது, சத்துக்குரிய மார்க்கம்‌ ஒன்றே என்று அறுதியிட்டுக்‌ கூறலாம்‌. அதலால்‌, நாடு, மொழி, இனம்‌ முதலிய வேற்றுமைகளில்‌ ஒற்றுமை கண்டு, இன்பம்‌ நுகர்தற்கு, மக்கள்‌ சன்மார்க்கத்தைக்‌ கடைப்பிடித்தொழுகல்‌ வேண்டும்‌. அவ்வொழுக்கத்தான்‌ ஒருமை இன்பம்‌ நுகரலாம்‌.