நாகாசல வேலவன்

அருணகிரி நாதர் பாடிய அற்புதமான நூல்களுள் கந்தர் அநுபூதி, சுருங்கிய உருவத்தில் செறிந்த பொருளை உடையதாய் விளங்குகிறது. முருகனது திருவருளால் பெற்ற அநுபவத்தின் சிறப்பைப் பலபடியாக எடுத்துச் சொல்வது அது. கந்தவேளின் திருவருளால் அநுபூதி பெற்று, விருந் துண்டவன் ஏப்பமிட்டாற் போலத் தம் அநுபவாதி சயத்தைப் பாடியது அநுபூதி. தாயுமானவர்,

கந்தர் அநு பூதிபெற்றுக் கந்தர் அநு பூதிசொன்ன
எந்தை அருள் நாடி இருக்கும்நாள் எந்நாளோ

என்று பாடியிருக்கிறார்.

அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழ், கந்தர் அலங்காரம் முதலியவற்றைப் பாடிய பிறகு, திருவகுப்பையும் கந்தர் அநுபூதியையும் பாடினார் என்பர். இந்தப் பூத உடலைப் பிறர் போக்குமாறு போக்காமல் கிளி உருவம் பெற்று இறைவன் திருக் கரத்தில் அமர்ந்து அநுபூதிப் பாக்களைப் பாடியதாகச் சொல்வதும் உண்டு. மற்றப் பாக்களைப் பாடிய நிலைக்கும் அநுபூதிப் பாடல்களைப் பாடிய நிலைக்கும் வேறுபாடு உண்டு. பூத உடலின் தொடர்பின்றி உயர்ந்த நிலையில் ‘சுக சொரூபம்’ அடைந்த ஏமாப்பில் பாடியது அது.

சூத்திரங்களைப்போல விரிந்த கருத்தும் சுருங்கிய சொல்லமைதியும் உடைய கலிவிருத்தங்களால் ஆனது அநுபூதி. ஐம்பத்தொரு பாடல்களும் ஐம்பத்தொரு நூலுக்குச் சமானமானவை. திருப் புகழ், அலங்காரம், திருவகுப்பு ஆகிய நூல்களில் விரிவாகச் சொல்லப்பெறும் பல செய்திகள் அநுபூதியில் இல்லை. அநுபவத்தையும் தத்துவப் பொருளையும் நுண்ணிய கருத்துக்களையும் செறிவுறக் கொண்டவை அநுபூதி மணிப் பாக்கள்.

பல பல தலங்களுக்குச் சென்று திருப்புகழ்ப் பாக்களைப் பாடிய பெரியார் அருணகிரிநாதர். சைவ சமயாசாரியர்களும், ஆழ்வார்களும் தம்முடைய திருவாக்காற் புனைந்த தலங்கள் சிறப்புப் பெறுவது போல, அருணகிரியார் திருப்புகழால் பெருமை பெற்ற தலங்கள் பல. கந்தர் அலங்காரத்திலும் சில தலங்களைக் குறிப்பிடுகின்றார். அப்படியே திருவகுப்பிலும் தலங்களின் பெயர்கள் வருகின்றன. ஆனால் கந்தர் அநுபூதியில் பல தலங்கள் வரவில்லை. நுண்பொருளைச் சுருங்கச் சொல்லும் அநுபூதியில் உலகுக்குப் புறம்பான மேல் நிலையில் நின்று பாடும் பாடல்களே அமைந்தமையின் உலகில் உள்ள தலங்களின் நினைவு வராதது இயல்பே ஆகும்.

ஆயினும் ஒரே ஒரு தலத்தை மாத்திரம் அநுபூதியில் அருணகிரி நாதர் குறிப்பிடுகிறார்.

கூகா எனஎன் கிளைகூ டிஅழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவித்
தியாகா சுரலோ கசிகா மணியே.

இந்தப் பாட்டில், “நாகாசல வேலவ” என்ற இடத்தில் நாகாசலம் என்ற தலம் வருகிறது. நாகாசலம் என்பது கொங்கு நாட்டிலுள்ள திருச்செங் கோட்டுக்கு ஒரு பெயர். அது மிகப் பழைய தலம். சிலப்பதிகாரத்தில் அதைப் பற்றிய செய்தி வரு கிறது. அங்குள்ள முருகனைச் செங்கோட்டு வேலர் என்று வழங்குவது வழக்கம். “நாகாசல வேலவ” என்ற தொடர் இந்த வழக்கத்தை நினைந்து பாடிய தென்றே தோற்றுகிறது.

அருணகிரி நாதர் அநுபூதி யில் பிற தலங்களில் ஒன்றையும் குறிக்காமல் திருச்செங்கோட்டை மாத்திரம் குறிப்பிடக் காரணம் என்ன? இது ஆராய்ச்சி செய்வதற்குரியது.

அறுபது வயசுக்கு மேல் ஆன ஓர் ஆடவரும் அவருடைய மனைவியும் சென்னையில் வாழ்ந்து வந்தார்கள். நல்ல வசதியான வாழ்க்கை. மூன்றடுக்கு மாடி வீடும் பொருளும் பிற பண்டங்களும் குறைவின்றிப் பெற்றவர்கள். இப்போது இந்த வள வாழ்வில் இருப்பினும் இளமையிலே வறுமைக்கு ஆளானவர்கள். சின்னஞ் சிறு கிராமத்தில் ஓட்டைக் கூரை வீட்டிலே அந்த ஆடவர் வாழ்ந்தவர். அப்போதே அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. அந்தக் கூரை வீட்டில் ஒரு சிறிய அறையிலே அவர் கடிமணம் புரிந்து கொண்டார்.

முதுமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்த அவர்கள் இப்போது தம் கிராமத்துக்குச் சென்றார்கள். பழைய கூரை வீட்டை ஒருவாறு செப்பஞ் செய்திருந்தார்கள். அங்கே போய்த் தாம் முதல் முதல் சந்தித்த அறையில் போய் நின்றார்கள். அப்போது அந்த இருவருக்கும் உண்டான இன்பத்துக்கு எல்லையே இல்லை. பழைய ஞாபகங்களெல்லாம் வந்தன. மாட மாளிகையில் வாழும் இன்பத்தை அநுபவிப்பவர்களானாலும், பழமையின் நினைவு மீதூர, முதல் முதல் இன்பம் பெற்ற அவ்விடம் எவ்வளவோ உயர்வாகத் தோன்றியது அவர்களுக்கு.

இது மனித இயற்கை. அருணகிரி நாதரும் இத்தகைய மன இயல்பிலே பாடிய பாட்டு இது. பல பல தலங்களுக்குச் சென்று பாடிய அப்பெருமான் ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு விண்ணப்பத்தைப் போட்டு வைத்தார். செங்கோட்டிலும் ஒரு விண்ணப்பம் செய்துகொண்டார். அது அப்படியே பலித்துவிட்டது. செங்கோட்டிற் செய்து கொண்ட விண்ணப்பம் பலித்துப் பயன் பெற்ற காலத்தில், குறிப்பிட்ட விண்ணப்பம் போட்ட இடத்தை மறக்க முடியுமா? அந்தக் கிழத் தம்பதிகளைப் போல நன்றியறிவும் பழமை நினைவும் மீதூர, நாகாசலத்தை மறவாமல் பாடினார்.

அவர் என்ன விண்ணப்பம் செய்துகொண்டார்?

தெய்வத் திருமலைச் செங்கோட்டில்
வாழும் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற
வேன்உனை நான்;
ஐவர்க்கு இடம்பெறக் கால்இரண்டு
ஓட்டி அதில்இரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து
காத்தருளே

என்ற கந்தர் அலங்காரப் பாட்டுத்தான் அந்த விண்ணப்பம். “தெய்விக சக்தி பொருந்திய அழகிய மலையாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக் கும் செழித்த சோதி உருவப் பொருளே, கூர்மையை உடைய வேலாயுதத்தைக் கொண்ட தேவா, நீ என் வேண்டுகோளை நிறைவேற்றினால் நான் என்றும் உன்னை மறக்கவே மாட்டேன். ஐந்து இந்திரியங்கள் வாழ்வதற்கு இடம் உண்டாகும்படியாக, இரண்டு காலை வைத்து, அதில் இரண்டு கைகளையும் வைத்த வீடாகிய இந்த உடம்பு, மரணத்தினால் அழிவதற்கு முன்னே நீ எழுந்தருளி வந்து பாதுகாத்து அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

பூவுலகில் இருந்தாலும் தெய்வத்தன்மை உடைய மலை திருச்செங்கோடு என்று சொல்கிறார். அங்கே செங்கோட்டு வேலன் எழுந்தருளி யிருப்பதை, ‘வைவைத்த வேற்படை வானவனே’ என்று குறிக்கின்றார். பூத உடல் இறந்துபட உயிர்பிரிந்து செல்வது இயற்கை. இந்த மாதிரி மரணம் தமக்கு வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். மரணம் சம்பவிக்கு முன்னே வந்து பாதுகாக்க வேண்டு மென்பது அவர் பிரார்த்தனை.

இந்த வேண்டுகோள் பலித்தால் உன்னை மறவாமல் நினைப்பேன் என்றும் சொன்னார்.

பிரார்த்தனை பலித்தது. அருணகிரிநாதர்: பிறர் உடம்பை நீப்பது போல நீத்தார் இலர். பூத உடம்பு மறைய, கிளி உருவைப் பெற்றனர். ‘ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு கைவைத்த வீடு குலையுமுன்’ முருகவேள் அருள் செய்தான்; தெய்வத் திருமலையில் உள்ள வேற்படை வானவனிடம் சமர்ப்பித்த விண்ணப்பம் பயன்பெற்றது. அப்போது சொன்ன வாக்கைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? “மறவேன் உனை நான்” என்று வாக்களித்தாரே! அதை மெய்ப்பிக்க வேண்டுமல்லவா? ஆகவே, பூத உட லுக்குப் புறம்பே, அநுபூதி பெற்று நின்ற நிலையில், மற்றத் தலங்களை மறந்தாலும், திருச்செங்கோட்டை மறக்கவில்லை. ‘தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே, வைவைத்த வேற்படை வானவனே’ என்று விரிவாகச் சொன்னதை ‘நாகாசல வேலவ’ என்று சுருக்கமாகச் சொல்கிறார். அவனை மறவாமல் நினைப்பதொடா? அந்த நினைப்பைப் பாட்டாகப் பாடும் ஆற்றலை அந் தப் பெருமானே அருணகிரி நாதருக்குத் தந்திருக்கிறான். நாலு கவியையும் தியாகம் செய்திருக்கிறான். அப்படி இருக்கையில் மறவாமல் நினைத்துப் பாடுவது தானே நியாயம்? ஆகவே நாகாசல வேலவனை மறவாமல் பாடுகிறார்.

கூகா எனஎன் கிளைகூ டிஅழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவித்
தியாகா சுரலோ கசிகா மணியே.

“நாகாசல வேலவனே ! ஆசு, மதுரம்,விஸ்தாரம், சித்திரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பாடும் திறமையையும் எனக்கு அருளிய பெருமானே! தேவலோக வாசிகளின் சென்னியிலே மணிபோல முடித்தற்குரிய தலைவனே! நீ செய்த உபகாரத்தை என்னென்று சொல்வேன் ! உலகத்தில் ஏனை மாந்தர்கள் திறத்தில் உடம்பை விட்டு உயிர் நீங்கும் போது சுற்றத்தார் யாவரும் கூடிக் கூ கா என அழுது புலம்புவார்கள். அப்படி என் கிளை கூடி அழுது நிற்க, நான் மரணத்தை அடையாமல், உண்மையான உபதேசத்தைச் செய்தவாறு என்ன ஆச்சரியம் !” என்று அவர் பாராட்டி வியக்கிறார்.

‘மற்றவர்கள் இறப்பது போல இறக்கக்கூடாது. அதற்கு முன்னே வேலவன் திருவருளை அடைய வேண்டும்’ என்ற ஆசையைக் கந்தர் அலங்காரப் பாட்டில் வெளியிட்டார்; செங்கோட்டு வேலவனிடத்தில் விண்ணப்பம் செய்து கொண்டார். முருகன் அருள் செய்தான். உடம்பு அழிய உயிர்போகும் நிலை அவருக்கு வரவில்லை. அவர் பெற்ற அருள் அதிசயமானது. அந்த அதிசயத்தை அநுபூதியிலே சொல்கிறார்.

முருகன் அவரை, இந்தப் பொய்வீடு குலையு முன்னே காப்பாற்றினான். அருணகிரி நாதரும் தம் வாக்குப் பிறழாமல் காப்பாற்றிக் கொண்டார். அநுபூதி அடைந்த நிலையில் பிறதலங்களை மறந்தாலும், எண்ணியது எண்ணியவாறே பலித்த இடமாகிய நாகாசலத்தை மறக்கவில்லை.

ஒம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *