இரட்டை விலங்கு

தாமரைப் பூவாகிய அழகிய பீடத்தில் சதுர் முகப் பிரமன் வீற்றிருக்கிறான். காலையில் செய்ய வேண்டிய ஔபாசனத்தையும் வேதபாராயணத்தையும் செய்தாகிவிட்டது. கலைமகள் அருகிருந்து தான் செய்யவேண்டிய உதவிகளைச் செய்ய, நெறி முறை வழுவாமல் செய்யவேண்டிய வைதிக காரியங்களைக் குறைவின்றி நிறைவேற்றிய பிரமதேவனுக்குச் சிறிது பசித்ததுபோலும்! தன்னுடைய கணக்குச் சுருணையை எடுத்துவரச் சொல்லிப் பார்க்க உட்கார்கிறான்.

எத்தனையோ காலம் ஆயிற்று இந்த நான்முகன் பதவி பெற்று. தினமும் பொழுது விடிந்தால் ஆன் மாக்களை உடம்பென்னும் சிறையில் போட்டு, அவரவர்கள் தலையில் எழுதும் உத்தியோகத்தைச் செய்து வருகிறான். ஒரு முகத்தைப் போல ஒரு முகம் இருப்பதில்லை. ஒருவன் வாழ்க்கையைப் போல மற் றொருவன் வாழ்க்கை இருப்பதில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவன் செய்துவரும் சிருஷ்டிகள் அத்தனையும் ஒன்றுபோல் ஒன்று இல்லை. எல்லாம் வெவ்வேறு வகை; வெவ்வேறு உருவம். பேதம் இல்லாத சிருஷ்டியே இல்லை. பேதமயம் ஜகத்தாக நிற்கும் படி படைப்புத் தொழிலிலே ஈடுபட்டுக் கிடக்கிறான் பிரமதேவன்.

கணக்குச் சுருணையை எடுத்துப் புரட்டிப் பார்க்கிறான். அன்று புதுக் கணக்குப் போடும் சந்தர்ப் பம். எந்த எந்த உயிரை எப்படி எப்படிப் பிறக்கச் செய்கிறது என்று யோசிக்கிறான். நான்கு தலைகளையும் எட்டுக்கைகளால் அமுக்கி அமுக்கி யோசிக்கிறான். அந்த அந்த உயிர்களின் பூர்வ ஜன்ம சரித்திரத்தை எடுத்துப் பார்க்கிறான். அந்தச் சரித்திரத்தில் உள்ள லாப நஷ்டக் கணக்கைக் ‘கறாராக’க் கணக்குப் பண்ணுகிறான். புண்ணியம் இத்தனை, பாவம் இத்தனை என்ற லாப நஷ்டக் கணக்குப் பார்த்து முடிவு கட்டுவதில் நான்முகன் மிகவும் கெட்டிக்காரன்.

பழங்கணக்குகளைப் பார்த்துப் பார்த்து, அடுத்த படி என்ன பிறப்பு அளிப்பது என்று யோசித்து யோசித்து முடிவு கட்டி, தனியே பட்டோலையில் அந்த முடிவை எழுதிக் கொள்கிறான்.

‘இவன் கோவில் தர்ம சொத்தைக் கொள்ளை யடித்தவன். சரி, இவனை வௌவாலாகப் பிறக்கும் படி செய்யவேண்டும்.’

‘இவன் தர்மம் செய்கிறவனைச் செய்யாதே என்று தடுத்தவன். இவன் கையில்லாத முடவனாகப் பிறக்கட்டும்.’

‘இவன் நல்லவர்களைக் கடுமையான சொற்கள் கூறிக் கண்ணீர் விடச் செய்தவன். இவனுக்கு ஊமைப் பிறப்பைக் கொடுப்போம்.’

‘இவன் தான் மணந்த மனைவிக்கு இன்பந்தரா மல், ஒழுக்கக் கேடுள்ளவனாக வாழ்ந்தான். இவனுக்கு அலியாகப் பிறக்கும் பிறப்புத்தான் ஏற்றது. இப்படியாக அவன் கணக்குப்போட்டு முடிவு கட்டுகிறான்.

கட்டைப் பார்த்தால் பிரம்மாண்டமாக இருக்கிறது. ‘இன்றைக்குள்ளே முடிவு கட்டவேண்டிய தொகை அதிகமாக இருக்கிறதே !’ என்ற யோசனை அவனுக்கு வருகிறது. தன் வேலையை வேகமாகக் கவனிக்கத் தொடங்குகிறான். வீட்டுக்குப் போகவேண்டிய அவசரத்தில் வேலை பார்க்கும் குமாஸ்தாவைப் போல, அவன் வெகு வேகமாகத் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

அன்று அவன் பட்டோலையில் புதிய பிறவி கொடுத்துப் பதிந்த ஜீவன்களுள் ஒரு ஜீவன் பூவுலகத்தில் உள்ள ஒருவன். அவன் பல பாவங்களைப் பண்ணினவன் என்று சொல்வதற்கில்லை; புண்ணியங்களையும் செய்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் முருகனை நம்பி வாழ்ந்திருக்கிறான். முருகன் அடியார் கூட்டத்தில் ஒருவனாக இருந்து வாழ்நாளைப் போக்கியிருக்கிறான்.

நான்முகன் அவசரத்தில் அவனுக்கும் மறு பிறவி ஒன்றைக் கொடுத்து விட்டான். தவறு; பெரிய தவறு; முருகனுடைய அடியார்களுக்கு மறுபிறவி இல்லை. அவர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்துத் தீர்மானம் செய்யும் அதிகாரம், தன் வாழ்நாள் ஆனதும் வேறு பிரமாவுக்கு இடங் கொடுத்து மாண்டுபோகும் இந்த நான்முகனுக்கு இல்லை. பட்டோலையில் முருகன் அடியார் பெயரே காணக்கூடாது. அவன் அவர்கள் பெய ரைப் பயபக்தியோடு உச்சரித்து உருகலாமே ஒழிய, அவர்களைத் தன்னுடைய தராசிலே வைத்து நிறுப்பதாவது! ஏதோ போதாத வேளை; நிறுத்து எடை போட்டு முடிவுகட்டி அடுத்த பிறவி இன்ன தென்றுகூட எழுதி விட்டான்.

எல்லாம் அறியும் சர்வஞ்ஞனான முருகவேளுக்கு இந்தச் செய்தி தெரிந்து விடுகிறது. அடியார்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் அதை முன் கூட்டியே அறிந்து விலக்கும் பேரருளாளன் அல்லவா அவன்? பிரமதேவன் செய்த பேதைமைச் செயலை நினைத்துப் புன்முறுவல் பூக்கிறான். “முட்டாள்; முன்னாலே நம்மை அவமதித்துப் பட்ட தண்டனை மறந்து விட்டது போலும்! இப்போது நம்முடைய அடியானை அலட்சியம் செய்து மற்ற ஜீவர்களோடு சேர்த்துவிட்டான். நமக்குப் பண்ணும் அபரா தத்தை நாம் பொறுத்தாலும் பொறுப்போம். நம் அடியாருக்குச் செய்வதைக் கணநேரமும் பொறுக்க மாட்டோம். ஆரங்கே?” என்று அழைத்தான் கருணைவாரிதி. லட்ச வீரர்களுள் ஒருவன் கை கட்டி வாய்புதைத்து வந்து முன்னே நின்றான். “அந்த நான்முகனை இங்கே இழுத்து வா. நம்முடைய அடியான் ஒருவனைப் பிறப்பெடுக்கும் கூட்டத்தாரிலே சேர்த்துப் பட்டோலையில் எழுதியிருக்கிறான். என்ன துணிச்சல்! போ; சீக்கிரம் போய் இழுத்து வா. பக்தனுக்கு அபசாரம் செய்தவனைக் கண நேரம் கூடத் தண்டனை கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது” என்று கண்ணிலே சிவப்பூர உத்தரவிட்டான் எம்பெருமான்.

வீரன் ஓடினான். சத்திய லோகத்துக்குப் போய்ப் பிரமதேவன் இல்லத்தை அடைந்தான். பிரமதேவன் கணக்குச் சுருணையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். வீரன் அவன் முன்னே போய்ப் படபடப்போடு நின்றான். தலை நிமிர்ந்து பார்த்த கமலாசனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கனல் கொப்புளிக்கும் கண்ணோடு நிற்கும் வீரனைக் கண்டு, “என்ன விசேஷம் ?” என்று விநயத்தோடு கேட்டான்.

“எழுந்திரையா, எழுந்திரு. உன்னுடைய கணக்குச் சுருணையை அதோ அந்த ஓம குண்டத்தில் போட்டுப் பொசுக்கு. வா, என்னுடன்.”

“என்ன செய்தி? எங்கே வரவேண்டும் ?” என்று நடுங்கிக் கொண்டே கேட்டான் நான்முகன்.

“அங்கேதான்; அன்றைக்கு உன் காலில் விலங்கு போட்டுத் தலையில் குட்டுக் குட்டிச் சிறையில் அடைத்தாரே, அவரிடம். அதெல்லாம் இப்போது மறந்து விட்டது போலும்!”

மறையோன் தத்தளித்தான். இன்னும் அவனுக்கு விஷயம் விளங்கவில்லை. “எதற்காக இவ்வளவு படபடப்பு ?” என்று மெல்லக் கேட்டான்.

“புறப்படையா! எங்கள் பெருமானை அவமதித்துப் பட்ட சுகம் உனக்குத் தெரிந்ததுதானே? அடியார்களைப் பாதுகாக்கும் வேலையைத் தொண்டாகப் பூண்ட பெருமான் குமாரக் கடவுள் என்பதை நீ அறியவில்லையோ ? அவர் கையில் உள்ள வேல் சாமானியமானதா? அது தனிச் சிறப்புள்ள வேல். பொங்கிய கடல் வாய்விட்டு அலறச்செய்த வேல். பளபளத்து வந்த கிரவுஞ்சகிரியைப் படுசூரணமாக்கிய வேல். அந்த வேலைக் கையிலே பிடித்த எம் கோனுக்கு உன்னுடைய காரியம் தெரிந்துவிட்டது. நீ எப்படி முருகனடியார் பெயரைப் பட்டோலையில் இடலாம் ?’”

சுருணையைக் கட்டிவைத்து விட்டுக் கவலை முகத்தில் தேங்கப் பிரமதேவன் புறப்பட்டுவிட்டான். ‘ஐயோ! வேகத்தில் நான் எந்த மகானுபாவனையோ பிறக்கிறவர்கள் வரிசையிலே சேர்த்து விட்டேன் போலிருக்கிறது’ என்று நினைக்கிறான். யோசித்துப் பார்க்கிறான். உடம்பெல்லாம் வேர்க்கிறது. கால் தன் பாட்டில் நடந்துகொண்டிருக் கிறது.

இருவரும் முருகன் சந்நிதியை அடைந்தார்கள். “ஏ பிரமதேவா! நம்முடைய அடியார்களிடம் உன்னுடைய கை வேலையைக் காட்டக்கூடாதென்பது உனக்குத் தெரியாதோ?” முருகன் படப்படப்புடன் கேட்டான்.

“சுவாமி, நன்றாகத் தெரியும்.”

“அப்படியானால் ஏன் இன்று ஓர் அடியவனை உன் பட்டோலையில் எழுதினாய்?”

“அவசரத்தில் அறியாமல் செய்ததாக இருக் கும். அபசாரத்தைப் பொறுத்தருள வேண்டும்”

“பொறுப்பதாவது! இப்படியே விட்டுவிட்டால் உனக்கு நினைவு இராது. இப்போது உனக்குக் கொடுக்கும் தண்டனை உன் ஞாபகத்திலே இருக்கவேண்டும். அப்போதுதான் நீ மறு முறை இத்தகைய தவறு செய்யமாட்டாய்.”

“சுவாமியின் திருவுள்ளம் அதுவானால் இந்தப் பாவி எப்படி மாற்றமுடியும்?” – பிரமதேவன் அழாக் குறையாக விடை சொன்னான்.

”வீரா, கொண்டு வா விலங்குகளை. போன தடவை நம்மை அவமதித்ததற்காக இவனுக்கு ஒரு விலங்கு போட்டோம். இப்போது இரண்டு விலங்கு போடவேண்டும். நமக்குச் செய்யும் அபசாரத்தை விட நம் அடியாருக்குச் செய்யும் அபசாரம் இரண்டு பங்கு தண்டனைக்கு உரியது என்று தெரிந்து கொள்ளட்டும்” என்று வடிவேற் பெருமான் கட்டளை யிட்டான்,

அடுத்த கணத்தில் இரண்டு விலங்குகள் வந்து விட்டன. பிரமதேவன் கண்ணீர் மாலை மாலையாக வழிய நின்றான். “மாட்டு விலங்குகளை” என்று ஆண்டவன் உத்தரவிட்டு விட்டுச் சற்று அந்தப்புரம் போய் வரலாம் என்று புறப்பட்டான்.

வீரன் பிரமதேவன் காலில் இரண்டு விலங்குகளையும் பூட்டிவிட்டான். அடுத்தபடி என்ன செய்வ தென்று உத்தரவுக்குக் காத்துக் கொண்டு நின்றார்கள் யாவரும்.

முருகன் மீண்டும் வந்து சிங்காதனத்தில் அமர்ந்தான். விலங்கு பூண்ட பிரமதேவன்மேல் கண்ணை ஓட்டினான். உடனே, “சே சே! இப்படியா பூட்டுவது ? காலுக்கு இரட்டை விலங்கு பூட்டிவிட்டாயே. பட்டோலையில் எழுதிய கைக்கு அல்லவா ஒரு விலங்கு பூட்டவேண்டும்? காலுக்கு ஒன்று, கைக்கு ஒன்று – இப்படி இரட்டை விலங்கு பூட்டு. அப்போது தான் இவனுக்குப் புத்தி வரும்” என்று ஆண்டவன் ஆணையிட்டான். பிரமதேவன் இரட்டை விலங்கு பூண்டான்; காலில் அல்ல; காலில் ஒன்று, கையில் ஒன்று – ஆக இரட்டை விலங்கு. பாவம் ! அடியவன் இன்னும் பிறவி எடுக்கவில்லை. அவனைப் பிறக்கும்படி ஏற்பாடு செய்து எழுதியதற்கு இரு விலங்கு !

அருணகிரிநாதப் பெருமான் திருவுள்ளத்தில் இந்தக் காட்சி தோன்றியதோ என்னவோ, தெரியாது. அவர் திருவாய் மலர்ந்தருளிய கந்தர் அலங்காரத்தில் அற்புதமான பாட்டு ஒன்று வருகிறது. அந்தப் பாட்டைப் படித்துச் சிந்தித்து ஆழ்ந்த போது இருவிலங்கு பூண்ட பிரமதேவன் என் கண் முன் நின்றான். பாட்டு இதுதான்.

பங்கே ருகன்எனைப் பட்டோ
லையில் இடப் பண்டுதளை
தன்காலில் இட்டது. அறிந்தில
னோ?தனி வேல்எடுத்துப்
பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ்
சிலம்பு புலம்பவரும்
எம்கோன் அறியின் இனிநான்
முகனுக்கு இருவிலங்கே.

[பங்கேருகன் – பிரமதேவன். பட்டோலை – கணக்கெழுதும் ஓலை. தளை – விலங்கு. பொங்கு ஓதம் – பொங்கும் கடல். வாய் விட – அலற. பொன்னஞ் சிலம்பு – வெண் பொன்னாலாகிய கிரவுஞ்ச மலை.]

குட்டிச் சிறையிருத்தின அப்போது முருகனைப் பார்த்து மரியாதை செய்யாமல் மேலே நடந்தது பிரமன் கால். அப்போது போட்ட விலங்கு காலுக்கு. இப்போது குற்றம் செய்தது கை; அதற்கும் சேர்த்துப் போடுவதுதானே முறை?

கடிந்தாரைச் சொல்லிஅழு
கால்விலங்கு போட்டுவைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள்விலங்கு போட்டுவைப்போம்

என்று தம் அன்புக் குழந்தையைத் துன்புறுத்துகிறவருக்குக் கைவிலங்கும் கால்விலங்கும் போடப்புகும் தாயைப் போல, முருகனும் கால் விலங்கும் கை விலங்கும் போடுவதுதானே பொருத்தமானது? ? அந்தக் குழந்தையினிடம் பெற்ற தாய்க்கு இருக்கும் கருணையை விட, எக்காலத்தும் எவ்விடத்தும் எவ் வுயிருக்கும் தாயாக இருக்கும் முருகனுடைய கருணை சிறந்தது அல்லவா?

ஓம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *