
எல்லாம் வல்ல சித்தர்
அபிடேக பாண்டியனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் வேண்டிய பொருளைத் தருவதற்காக இறைவன் எல்லாம் வல்ல சித்தராக உருக்கொண்டு வந்தார். வட்டமாகிய மயிர்ச் சடையும், நீறு பூசிய நெற்றியும் குண்டலம் தரித்த செவியும், புலித் தோல் ஆடையும், காலில் சிலம்பும் பாதுகையும் கொண்டு புன்முறுவல் பூத்த முகத்தினராய் அங்காடித் தெருக்களும் மாளிகைச் சந்திப்புகளும் தேர் வீதிகளும் செல்வாராயினர். ஓர் இடத்திலேயும் தங்க இருப்புச் கொள்ளாமல் விருப்பப்படியே திரிந்து சென்றார்.
முதியவரை இளைஞர் ஆக்கினார். ஆடவரை மகளிர் ஆக்கினார்; மலடியைக் கரு உயிர்க்கச் செய்தார்; ஊமை, குருடு, செவிடு, முடம் இப்பிணிகளைத் தீர்த்து வைத்தார்;
வெள்ளி செப்பு ஈயம் பித்தளை இவற்றைச் செம்பொன் ஆக்கினார். செல்வரை ஏழையாக்கினார்; ஏழையர் செல்வர் ஆயினர். எட்டி மரம் இனிய காய்களைத் தரச் செய்தார். கல்லாதவரைக் கற்றவர் ஆக்கினார்; இல்லாதவரை வள்ளல்கள் ஆக்கினார். எல்லாம் தலைகீழாகச் செய்து காட்டினார்.
பாண்டிய நாட்டு மக்கள் இப்புதுமைகளை விழித்த கண் மூடாமல் பார்த்துத் திகைப்படைத்தனர். அவரவர் தாம் விரும்பிய பொருளைச் சித்தர்பால் கேட்டுப் பெற்றனர். கிழவர்கள் வாலிபர்கள் ஆயினர்; கிழவிகள் குமரிகள் ஆயினர்; மூப்பை ஒழித்துவிட்டு இளமையாக்கினார்; பேசாத குழந்தைகளைப் பேசவைத்தார். நோயாளிகள் நலம் பெற்று நல்வாழ்வு பெற்றனர்.
இந்த அதிசயத்தை அரசனுக்கு அறிவித்தனர்; அரசன் ஒற்றர்களை அனுப்பிச் சித்தரை அழைத்து வரும்படி ஏவினான். சென்றவர்கள் திரும்பவே இல்லை; அதே போல அமைச்சர்களை அனுப்பி வைத்தான்; அவர்களும் ஒரு சிலர் திரும்பவில்லை; கற்றவரை அனுப்பி அரசன் அழைப்பதாகச் சொல்லி அனுப்பினான்.
“நாமார்க்கும் குடியல்லோம்” என்று சொல்லி, வர இயலாது என்று சொல்லி அனுப்பினார். சென்ற அமைச்சர் சிலர் திரும்பி வந்து அரசனிடம் சித்தரின் விசித்திரமான போக்குகளை எடுத்துக் கூறினர். ஆற்றல்மிகு அறிஞராகிய சித்தரைத் தாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசன் அடக்கத்தை மேற்கொண்டான். சித்தரின் வருகையால் மக்கள் நன்மை பெற்றதை அவனால் உணர முடிந்தது.
அபிடேக பாண்டியன் சித்தரை அவமதித்துவிட்டோமோ என்று கதி கலங்கினான். தானே சென்று அவரைக் காண அரண்மனை விட்டு வெளியேறி வந்தான்; இதனை அறிந்த சிவபெருமான் இந்திர விமானத்துக்கு வடமேற்குத் திசையில் வந்தருளினார்.
அன்று பொங்கல் திருநாள் ஆகையால் மக்கள் மகிழ்ச்சி பொங்க எங்கும் குழுமி இருந்தனர். அவரை மொய்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களை விலகச் செய்து அரசன் சித்தரை அணுகினான்.
“நீர் யார்? ஊர் எது? சொந்த நாடு யாது? உறவினர் யார்? இங்கு வந்தது எதற்காக?” என்று வரிசையாகக் கேட்டான்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்; எமக்கு எந்த நாடும் சொந்த நாடே, காசி நகரத்தில் தங்குவது வழக்கம்; யாசித்து வாழ்க்கை நடத்துவது எங்கள் தொழில்; சித்து விளையாடி மக்களை மகிழ்விப்பது எங்கள் திறமை; வேதம் முதலிய கற்றவன் யான்; ஏதம் எது வந்தாலும் நீக்கித் தருவோம்; எல்லாம் வல்ல சித்தர் என்று என்னை அழைப்பார்கள்” என்றார்.
பாண்டியன் இவருடைய இறுமாப்பைச் சிதற அடிப்பேன் என்று சொல்லிக் கொண்டான்; அதற்குத் தக்க உபாயம் தேடிக் கொண்டிருந்தான்; அந்தச் சமயத்தில் கழனியிலிருந்து கரும்பு ஒன்றைக் களமன் ஒருவன் கொண்டு வந்து தந்தான்; கமுகு போன்று பருத்துத் திரண்டகணுக்களை உடைய அந்தக் கரும்பைப் பக்கத்தில் விமானத்தில் இருந்த கல்லானை அடுத்து செய்ய முடியுமா என்று கேட்டான்
ஆழம் தெரியாமல் காலை விட்டவன் கதியாயிற்று. வேழத்திடம் தந்த கரும்பை உயிர் பெற்று எழுந்து கடித்துத் தின்று அதை முறுக்கி வீழ்த்தியது. மதம் கொண்ட யானையாக அது மதர்த்து எழுந்தது. சித்தரின் திருக்குறிப்பை அறிந்து கல்யானை பாண்டியனின் முத்து மாலையை இழுத்துப் பறித்துக் கொண்டது. கஞ்சுக மாக்கள் கைத்தடி கொண்டு துதிக்கை உடைய யானையைத் தாக்க ஓங்கினர்; அது முத்து மாலையைச் சத்தம் செய்யாமல் வாயில் போட்டுக் கொண்டது; பாண்டியன் சினந்து சித்தரை உருத்துப் பார்த்தான். காவலனின் குறிப்பு அறிந்த ஏவலர் சிலர் சித்தரை அடிக்க ஓங்கிய கை அசையாமல் நின்றுவிட்டது. அவர்கள் அடியெடுத்து நகர்த்த மாட்டாமல் பதுமை என நின்றனர்; இந்தப் புதுமை கண்டு விதிர் விதிர்ப்பை அடைந்தனர்; அன்பும், அச்சமும் தோன்றத் துன்பம் தந்தமைக்கு வருந்திச் சித்தரிடம் மன்னிப்புக் கேட்டான்.
அவர் அவனைப் பார்த்துச் சிரித்து “இவை எல்லாம் எம் சித்து விளையாடல்; உம்மோடு பரிகசித்து விளையாட வந்தோம். நீ வேண்டுவது கேள்” என்றார். யானை தான் விழுங்கிய முத்துமாலையைத் திருப்பி அவன் கையில் கொடுத்தது.
“பொன்னும் பொருளும் மானுடர் முயன்று பெறுவன; கல்வி கற்று அறிவது; ஆட்சி வீரத்தால் விளைவது; செல்வம் தொடர்ந்து வருவது; எல்லாம் உடைய எனக்குக் கட்டி அணைக்க மனைவி உண்டு; என்னை எட்டி உதைக்கக் குழந்தைகள் இல்லை. மக்கட் செல்வம் தந்து என் துக்கத்தைப் போக்குவீர்” என்று கேட்டுக் கொண்டான்.
சித்தர் அருளால் நன் மகனைப் பெற்று விக்கிரமன் எனப் பெயரிட்டு அவனைப் பெரியோன் ஆக்கி ஆட்சியை ஒப்படைத்தான். பற்றுகள் நீங்கிப் பரமன் திருவடியில் விழுந்து சிவசக்தியோடு தானும் கலந்து முத்தியை அடைந்தான்.
ஓம் நமசிவாய ஓம்


