ஊடலும் ஆடலும்

அப்பர் சுவாமிகள் காட்டும் கற்பனைக் காட்சிகளில் மற்றொன்று. இந்தக் காட்சியில் முக்கியமான பாத்திரங்கள் இறைவனும் கங்கையும் உமாதேவியாரும் ஆவர்.

பகீரதனுடைய வேண்டுகோளுக்குக் கங்கை எளிதில் இணங்கவில்லை. பல காலம் தவம் செய்த பிறகு கங்கை தோன்ற, “என்னுடைய முன்னோர்களின் என்பு மேல் பாய வேண்டும்” என்று பகீரதன் அவளை வேண்டினான். அப்போது கங்கை வானுலகில் மாத்திரம் உலா வந்து கொண்டிருந்தாள். பகீரதனுடைய முன்னோர்கள் ஒரு முனிவரின் சாபத்தால் பாதாளத்தில் எரிந்தனர். அவர்கள் உடம்பு எரிந்து இப்போது என்பாகிக் கிடந்தன. வானுலகத்தில் உலவும் கங்கை பாதாளத்துக்கு வருவதாவது! அது எத்தனை இழிசெயல்! வான் நதி என்ற பெயருடன் தேவருடைய தொடர்பு பெற்று வாழும் அப் பெருமாட்டி பூவுலகத்துக்கே இழியவில்லையே! அப்படியிருக்கப் பாதாளத்துக்கு இறங்கி வருவது என்பது நடக்கிற செயலா?

கங்கையின் உள்ளத்தில் கருணை இருந்தால், பாதாளம் என்ன, அதற்கும் கீழே இறங்கி வரலாம். ஆனால் அவள் உள்ளத்தே அகந்தைதான் இருந்தது. தவத்துக்கு எப்போதும் ஒரு வலிமை உண்டு. தன்னை நோக்கித் தவம் செய்த பகீரதனிடம், “நான் அங்கே வரமுடியாது” என்று சொன்னால் அவன் செய்த தவம் அவளைத் தீய்த்துவிடும். ஆதலின் போக்கு ஒன்று காட்ட எண்ணினாள். “நான் பாதாளத்துக்கு வருவேன். ஆனால் நேரே வர இயலாது. என்னை யாரேனும் தாங்கி விட்டால் வருவேன்” என்றாள். மேல் மாடியிலிருந்து கீழே இறங்கும் அரச குமாரிக்குக் கைலாகு கொடுக்க யாரேனும் முன் வருவதைப் போல ஒருவர் வேண்டுமென்று அவள் விரும்பினாள் போலும்!

பகீரதன் தவம் செய்வதற்கு அலுக்காதவன். முன்பு பிரமனை நோக்கித் தவம் செய்தான்; அப்பால் கங்கையை நோக்கித் தவம் செய்தான். இப்போது கங்கையைத் தாங்கிக் கொள்ள யாரைக் கெஞ்சுவது என்று எண்ணிப் பார்த்தான். மறுபடியும் பிரமனை நோக்கித் தவம் செய்தான். பிரமதேவன் தோன்றி, “கங்கையைத் தாங்குவது என்பது நம்மால் முடியாது; பரமசிவனைக் குறித்துத் தவம் செய்வாயாக!” என்று கூறிவிட்டான். மறுபடியும் அவன் சிவபிரானை நோக்கித் தவம் புரிந்தான்.

இறைவன் பகீரதன்முன் எழுந்தருளினான். அவனுடைய தவத்தை உணர்ந்து இறைவனுக்கு மிக்க கருணை உண்டாயிற்று. கருணை மிகுதியினால் தன்னுடைய அடியார்களைக் காக்க எவ்வளவோ தூரம் இறங்கி வருகிறவன் அவன். இப்போது மற்றவர்கள் இறங்குவதற்கும் துணை செய்ய முன் வந்தான்.

கங்கை இறங்க முடியாமல் நிற்கவில்லை; இறங்க விருப்பம் இல்லாமல் இருந்தாள். அவளுக்கு அகந்தை நிரம்பியிருந்தது. பகீரதன் தவத்தை மெச்சி, “கங்கையை நான் தாங்குகிறேன்” என்று கூறியருளினான் இறைவன். மீட்டும் பகீரதன் தவம் செய்து கங்கையை வருவித்தான்; சிவபிரான் ஏற்றுக் கொள்வதாக அருளியதைக் கூறினான்.

கங்கையோ தன்னை ஏற்பார் யாரும் இருக்கமாட்டார் என்ற எண்ணத்தோடு இருந்தாள். இறைவன் ஏற்பதை அவள் விரும்பவில்லை. இறைவனுடைய பேராற்றலை அவள் மறந்தாள். தன் ஆற்றலைக் காட்ட வேண்டுமென்று ஆயிரமுகமாகப் புறப்பட்டாள். இறைவனுக்கு அடங்காதவர் யார்? ஆரவாரத்தோடு வந்த கங்கையை இறைவன் ஒரு சடையிலே அடக்கிவிட்டான். அதற்கு முன் அடங்காப் பிடாரியாக இருந்த கங்கை கணவன் முன் நிற்கும் மனைவியைப் போல அடங்கி ஒடுங்கி நின்றாள். ஆற்றின் உருவில் அகங்கார வெம்மை யோடிருந்த அவள் கருணைப் பெருங்கடலிலே கலந்து வெம்மை நீங்கினாள். பிறகு இறைவன் அங்கிருந்து கீழே விட்டான். பூவுலகத்துக்கு வந்து அப்பால் பாதாளவுலகத்துக்கும் பகீரதனைப் பின்பற்றிச் சென்றாள். அவள் முன்பு இருந்த இருப்பென்ன! இப்போது மாறிய வகை என்ன!

கருணை மயமான இறைவனுடைய தொடர்பினால் அவளுக்கும் கருணை உண்டாகிவிட்டதால், அழைத்த இடத்துக் கெல்லாம் வருகிறேன் என்பவளைப் போலப் பகீரதனைப் பின்பற்றிப் போனாள்.

இறைவன் தன் சடையில் கங்கையைச் சுமந்திருக்கவில்லை. அவள் அவனுக்கு ஒரு பாரம் அல்லவே! அவளைப் பூப்போலச் சூடியிருக்கிறான். அவனுடைய திருமுடியிலே கங்கை அடக்கமே உருவான பெண்ணாக விளங்குகிறாள்.

இறைவன் தன் திருமுடியிலே கங்கையை ஏற்கும் போது அவள் ஆரவாரத்தோடு வந்தாள் அல்லவா? அந்த ஆரவாரம் உமாதேவியின் காதில் விழுந்தது. ‘இதென்ன பேரிரைச்சல்?’ என்று அம்மை ஆராய்ந்தாள். உண்மை விளங்கியது. “நான் ஒருத்தி இங்கே இருக்க, என்னை அறியாமல், என்னிடம் கூறாமல் வேறு ஒருத்தியைச் சடைமேல் வைப்பதாவது!” என்று அப்பெருமாட்டிக்குக் கோபம் உண்டாயிற்று.

இறைவன் தன் கருணைத் திருவிளையாடலைப் புரிந்து விட்டு உமாதேவியை அணுகினான்.

எம்பெருமாட்டி அவனோடு பேசவில்லை; ஊடல் கொண்டாள்.

சூடினார் கங்கை யாளைச்
சூடிய துழனி கேட்டுஅங்கு
ஊடினாள் நங்கை யாளும்.

கங்கையின் ஆற்றலையும் அகங்காரத்தையும் அடக்குவது எளிதாக இருந்தது இறைவனுக்கு. ஆனால் உமாதேவியின் ஊடலை நீக்குவது அத்தனை எளிதன்று. அதனை நீக்க வழி என்ன என்று ஆராய்ந்தான். நல்ல பாட்டைக் கேட்டால் உருகுவது எல்லோருக்குமே இயல்பு. உமாதேவி அன்பர்களுடைய பாட்டிலும் கலைமகளின் வீணை யொலியிலும் மனம் ஈடுபடுவது வழக்கம். அம்பிகையே இசையில் வல்லவள். பலகால் உமாதேவி ஊடல் கொண்டதுண்டு. அதனைத் தீர்க்க இறைவனும் பல முறைகளை மேற்கொண்டிருக்கிறான். இப்போது தன் தேவியின் ஊடலைத் தீர்க்க இன்னிசையைப் பயன்படுத்தத் திருவுளங் கொண்டான். எப்போதும் சாமவேதத்தை இசைத்துக் கொண்டிருப்பவன் அவன். ஆகவே இப்போது இன்னிசை எழுப்பிச் சாமகானம் செய்தான்; தாளத்தோடே பாடத் தொடங்கினான். அப்படிப் பாடும்போது அவனுக்கு உற்சாகம் வந்து விட்டது. பாட்டுப் பாடுவதை மட்டுமா அவன் அறிவான்? ஆடவும் தெரிந்தவன் அல்லவா? அதில் அவன் வல்லவன் ஆயிற்றே! நடனத்துக்கு அரசன் என்று அவனை வணங்குகிறோம். ஆதலின் சாம வேதத்தைத் தாளத்தோடு பாடப் பாட அவனுக்கு ஆடவேண்டு மென்ற நோக்கமும் உண்டாயிற்று; ஆடத் தொடங்கினான்.

இறைவியின் ஊடல் நீங்கும் அறிகுறி தோன்றியது; அவனுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. சாம வேதம் பாடின தாளத்தோடே கூத்தாடினான்.

…….ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம்;
பாடிய பாணி யாலே
ஆடினார்.

(பாணி – தாளம்.)

உமாதேவியாகிய பராசக்தி இறைவனோடு ஒன்றியும் இருப்பாள்; வேறு பிரிந்தும் நிற்பாள். சக்தி இறைவனது அருளின் உருவம். அப்பெருமாட்டி ஊடல் கொண்டால் இறைவனுக்கு இன்பம் இல்லை என்பது ஒரு குறிப்பு. இறைவனிடம் அருள் ஒன்றாவிட்டால் உலகுக்கே இன்பம் இல்லை. அருள் வழி நின்று உலகம் இயங்குகிறது. அந்த அருளாணை ஊடுதலாவது, வெளிப்படாமல் நிற்பது. சக்தி ஊடுதலின்றி இறைவனோடு கூடினால் உலகுக்கு இன்பம் உண்டாகும். இறைவன் அந்த அருளை மேற்கொண்டான் என்பதனையே உமாதேவியின் ஊடலை நீக்கினான் என்று கதையாகக் கொள்வார்கள்.

இறைவன் பாடியும் ஆடியும் உமாதேவியின் ஊடலை நீக்கிவிட்டான். அந்த இறைவன் யார் தெரியுமா? . “கெடில் நதியினால் வரம்பு கட்டப்பெற்ற எங்கள் திருவதிகை வீரட்டத்தில் உள்ள பெருமான்” என்கிறார் அப்பர். இறைவன் அருள் வெளிப்பட்டு அவனை இவ்வளவும் இறங்கிவரச் செய்தது. இல்லையானால் அவன் குணங்குறி கடந்த நிலையில் இருப்பான். இங்கே வரமாட்டான். உமாதேவி ஊடல் நீங்காமல் இருந்தால் அவன் வெளியே எங்கே வரப்போகிறான்? அவள் ஊடல் நீங்கினாள்; நாம் சிவபிரானைத் திருவதிகையிலும் திருத் தில்லையிலும் மற்ற இடங்களிலும் காண்கிறோம்; ஆடுகிறோம்; பாடுகிறோம்.

“சூடினார் கங்கை யாளைச்
சூடிய துழனி கேட்டுஅங்கு
ஊடினாள் நங்கை யாளும்;
ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம்;
பாடிய பாணி யாலே
ஆடினார், கெடில வேலி
அதிகைவீ ரட்ட னாரே.”

[கெடில நதியை எல்லையாக உடைய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளிய சிவபெருமான், கங்கையைத் தம் திருமுடியில் சூடினார்; அப்படிச் சூடும்போது உண்டான ஆரவாரத்தைக் கேட்டு அப்போது உமாதேவி ஊடினாள்; அப்பெருமாட்டியின் ஊடலை ஒழிக்க விரும்பி இறைவனார் சாம வேதத்தைப் பாடினார் அதைப் பாடின தாளத்திற்கு ஏற்பச் சதி மிதித்து ஆடினார்.

சூடுதல் – தலையில் அணிதல். துழனி – ஆரவாரம். மற்றவர்கள், “கங்கையைச் சூடினார்” என்று சொல்லும் ஆரவாரம் என்றும் சொல்லலாம். அங்கு – அப்போது. நங்கையாள் – உமாதேவி. பாண் – தாளம்; பாணியால் பாணிக்கு ஏற்ப. வேலி-எல்லை]

ஓம் நமசிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *