
ஆவி வாழும் வீடு
சின்ன வீட்டை ஒருவர் கட்டினார்; மண்ணினால் எடுத்த வீடு; கூரை வேய்ந்த வீடு. மரம், மண், தென்னங்கீற்று இந்த மூன்றையும் வைத்துக்கொண்டே அவர் இதைக் கட்டிவிட்டார். இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தால், தரையிலே இது நிற்பதற்கும், நிழல் தருவதற்கும் என்ன என்ன பொருள்கள் இருக்கின்றன என்பதை எளிதிலே கண்டுகொள்ளலாம்.
வீட்டின் கூரையைத் தாங்க முக்கியமாக இரண்டு கால்களை நட்டிருந்தார். இரண்டு பக்கமும் கைமரங்களை வைத்து அவற்றின் குறுக்கே வரிசையாகக் கோல்களைப் பரப்பி னார். சுற்றிச் சுவரெடுத்திருந்தார். மண்ணையும் தண்ணீரையும் கலந்து குழைத்த சுவர் அது. மேலே கூரை வேய்ந்திருந்தார்.
இந்தச் சின்ன வீட்டுக்கு முன் வாசல் ஒன்று, பின் வாசல் ஒன்று. ஏழு சன்னல்கள் வைத்தார். இதற்குமேல் அந்த வீட்டுக்கு வெள்ளையடித்து வர்ணம் பூசி அழகுபடுத்தினார். அதைக் கட்டும்போது பார்த்தால் கண்ணுக்கு நன்றாகவே இருக்கவில்லை. இப்போது கட்டி முடிந்த பிறகு பார்த்தால் வீடு கண்ணைப் பறிக்கிறது. உள்ளே ஒருவரைக் கொண்டு வந்து குடியும் வைத்துவிட்டார். அவர் மகாசாமர்த்தியக்காரர். குடிபுகுந்தவர் அல்ல; வீட்டைக் கட்டினவரைச் சொல்கிறேன்.
திருநாவுக்கரசர் இதுபோன்ற ஒரு வீட்டைப் பற்றிச் சொல்கிறார். அந்த வீட்டைக் கட்டினவர் ஒருவர். குடியிருப்பவர் ஒருவர். ஆனால் குடியிருக்கிறவர் அதனைத் தம்முடையதாக நினைத்து ஏமாந்து போகிறார். எந்தச் சமயத்திலும் அவர் வீட்டை விட்டு ஓடிப் போக வேண்டியிருக்கும். அதை மறந்துவிட்டு அந்த வீட்டுக்கு அலங்காரம் செய்து, அழகு பார்க்க ஆரம்பிக்கிறார். தாம் அதில் வாழ்கிற வரைக்கும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாதோ? அது தாமே கட்டினது போலவும், தமக்கே உரியது போலவும் எண்ணிக்கொண்டு அந்த வீட்டை அலங்காரம் செய்யத் தொடங்குகிறார். அது மாத்திரம் அல்ல. வீட்டுக்கு எசமானர் ஒருவர் இருக்கிறார் என்பதையே அடியோடு மறந்துவிட்டு, அதற்குக் கொடுக்க வேண்டிய வாடகையையும் கொடுக்காமல் காலம் கழிக்கிறார்.
வீட்டுக்காரர் அந்த வீட்டைக் கட்டித் தந்தவர் குடியிருக்கிறவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். ‘இந்த மனிதன் இந்த வீட்டிலே இருந்துகொண்டு தான் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்யட்டும் என்று இதைக் கட்டிக் கொடுத்தேன். இவன் வீட்டை அழகு படுத்துவதிலே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறானே!’ என்று நினைக்கிறார். அவர் இந்த ஒரு வீட்டை மாத்திரமா கட்டியிருக்கிறார்? கோடிக்கணக்கான வீடுகளைக் கட்டி அங்கங்கே மனிதர்களைக் குடி வைத்திருக்கிறார்.
சிலர் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொண்டு பல நாள் அதில் வாழ்கிறார்கள். வேறு சிலருடைய வீடுகள் அடிக்கடி பழுதுபட்டுப் போகின்றன. மழைக்கு ஒழுகுகின்றன. எலி, பெருச்சாளிகள் தொந்தரவு வேறே.
ஒருவரை ஒரே வீட்டில் இருக்கும்படி விடுவதில்லை அந்த முதலாளி. மாற்றி மாற்றிப் புதிய புதிய வீடு கட்டிக் கொடுக்கிறார். பழைய வீடுகளை இடித்துத் தள்ளிவிடுகிறார். அதை இடிக்கிறபோது மனிதர்கள் கண்டு, “ஐயோ! இவ்வளவு நாளும் வாழ்ந்த வீட்டை இடிக்கிறாரே!” என்று வருந்துகிறார்கள். அழக்கூட அழுகிறார்கள். முதலாளி வேறு வீட்டில் குடியேற்றி விடுகிறார்.
இப்படியெல்லாம் நிகழும் வீடு இன்னதென்று இதற்குள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உயிர் வாழும் உடம்பைத்தான் அப்பர் சுவாமிகள் வருணிக்கிறார். இந்த வீட்டை மறைக் காட்டிலே இருக்கிற முதலாளி கட்டினார். ஆவியை இந்த வீட்டிலே குடிவைத்து, வாழும்படி செய்தார்.
இந்த வீட்டுக்கும் கால்கள் உண்டு. மற்றவர்கள் கட்டும் வீடுகள் ஒரே இடத்தில் உள்ள வீடுகள். இந்த வீடோ அங்கும் இங்கும் செல்லும் வீடு. மேல் நாடுகளில் இடம் விட்டு இடம் மாறும் வகையில் சில வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள் என்று பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. இந்த வீடும் அந்த வீடுகளைப் போல இயங்கும் வீடு. இரண்டு கால் படைத்த வீடு இது. இரண்டு கைகளும் உண்டு. வீட்டுக்கு இரண்டு பக்கமும் அமைக்கும் கை மரங்களைப் போல இவை இருக்கின்றன. குறுக்கே போடும் கழிகளைப் போல இங்கும் எலும்புகளை அடுக்கியிருக்கிறார். அவற்றிற்கு மேலே ஊனை வேய்ந்திருக்கிறார். அதற்கு மேல் தோலைப் பரப்பி மூடியிருக்கிறார். சுவர் எடுக்கத் தண்ணீர் வேண்டும். இற்கும் உதிரம் என்ற நீரைக் கொண்டு தசைகளைக் குழைத்துச் சுவர்களை எடுத்திருக்கிறார். இதற்கும் மலஜலம் கழிக்கும் இரண்டு வாசல்கள் இருக்கின்றன. கண் இரண்டு, காது இரண்டு, மூக்குத் துளைகள் இரண்டு, வாய் ஒன்று ஆக ஏழு ஜன்னல்கள் வைத்திருக்கிறார். இதிலே குடியிருக்கிறவர் ஆவி (உயிர்) என்பவர்.
ஊனும் எலும்பும் தோலும் கொண்டு இந்த வீட்டைக் கட்டினார். ஆனால் ஊன் முதலியவற்றைத் தனித்தனியே கண்டால் எத்தனை அருவருப்பாக இருக்கிறது! எலும்பும் இறைச்சியும் இரத்தமும் ஒரே குவியலாக வைத்திருந்தால் பயமாகக்கூட இருக்கும். முதலாளியின் சாமர்த்தியம் இந்த வீட்டைக் கட்டுவதிலேகூட அதிகமாகப் புலப்படவில்லை. இவ்வளவு அழகற்றதும், அருவருக்கத்தக்க பண்டங்களை வைத்துக் கட்டினதும் ஆகிய வீட்டைக் கொஞ்சங்கூட அருவருப்பு இல்லாமல் பார்க்கப் பார்க்க அழகாகத் தோன்றும் படி பண்ணிவிட்டார்; அதுதான் ஆச்சரியம்! இதைக் கண்ட மற்றவர்கள் இந்த வீட்டினரிடம் ஆசை கொள்ளுகிறார்கள். உள்ளே வாழ்கிறவனோ, விடமாட்டேன் என்கிறான். அத்தனை மோகம் இதன்மேல்.
இப்படி இதனிடம் ஒருவிதமான கவர்ச்சியை வைத்திருக்கிறார் மறைக்காடனார். கண்டு மயக்கும்படி உள்ள இந்த வீட்டிலே வாழ ஆவிக்கு ஆசை அளவற்றதாக இருக்கிறது. ‘வெறும் குருதியும் நரம்பும் எலும்பும் கூடின கூட்டந்தானே இந்த உடம்பு?’ என்ற நினைவு யாருககும் வருவதில்லை. இதனிடம் தனி மோகங்கொண்டு அழகு செய்கிறார்கள். மற்றவர் உடம்பைக் கண்டும் மால் (ஆசை) கொள்ளுகிறார்கள்.
இந்த மாலை வைத்தது நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.
கால்கொடுத்து இருகை ஏற்றிக்
கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து
தோல்படுத்து உதிர நீரால்
சுவர்எடுத்து இரண்டு வாசல்
ஏல்வுடைத் தாஅ மைத்துஅங்கு
ஏழுசா லேகம் பண்ணி
மால்கொடுத்து ஆவி வைத்தார்
மாமறைக் காட னாரே.
ஓம் நமசிவாய ஓம்


