சகலகலாவல்லி மாலை நூலின் வரலாறு

காசி மடத்தின் மூல ஆசிரியராகிய குமரகுருபரர் காசியில் எழுந்தருளியிருந்தார். அங்கே ஒரு மடத்தை நிறுவ வேண்டுமென்று அவர் எண்ணினார். அப்போது நவாபு ஒருவர் காசியை ஆண்டு கொண்டிருந்தார். மடம் கட்ட வேண்டுமானால் காசியில் இடம் வேண்டும். கங்கைக் கரையில் நல்ல இடத்தில் ஒரு மடம் கட்ட வேண்டுமானால் அதற்கு நவாபின் அனுமதி வேண்டும். எனவே, நேரில் போய் நவாபைப் பார்க்கலாம் என்று குமரகுருபரர் எண்ணினார். சும்மா போய்ப் பார்த்தால் தமக்கு வேண்டியதை அவர் கொடுப்பாரா என்ற ஐயம் எழுந்தது. அதன்மேல் இறைவன் திருவருளை எண்ணி, ஒரு சிங்கத்தைக் கொண்டு வந்து அதன்மேல் ஏறிக் கொண்டு நவாபுக்கு முன்னால் போனார். சாதுவாக அந்த சிங்கம் குமரகுருபரரை ஏற்றிச் சென்றதைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினார்கள். நவாபும் ஆச்சரிய மடைந்து, “தாங்கள் யார்? என்னிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று பணிவுடன் கேட்டார். அப்போது குமரகுருபரர், “இங்கே எனக்கு ஒரு மடம் கட்ட வேண்டுமென்று ஆசை. கங்கைக் கரையில் ஒரு நல்ல இடம் வேண்டும். நீங்கள் அப்படி ஒரு நல்ல இடத்தைத் தந்தால் நன்றாக இருக்கும்”என்றார்.

நவாபோ இந்துஸ்தானி பேசுகிறவர். முனிவர் தமிழ் பேசுகிறவர். நவாபோடு தமிழில் பேச முடியாது. அவர் பேசுகின்ற மொழி குமரகுருபரருக்குத் தெரியாது. வேறு யாரையாவது தமக்கு மொழி பெயர்ப்பாளராக வைத்துக் கொண்டால் தம் கருத்தைச் சரியாகச் சொல்வாரா என்ற ஐயம். அவர் இந்தியைக் கற்கவேண்டுமென்று நினைத்தார். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும் போது, கிணறு வெட்டி அதிலிருந்து நீரை எடுத்து சாப்பிடுவது முடியாத காரியம். அப்படி, இனிமேல் இந்தியைக் கற்றுக்கொண்டு, அதில் பேசுவதற்குப் பழகி, அப்புறம் நவாபுடன் பேசுவது என்பது நடக்கிற காரியமா?

அப்போது முனிவர் எல்லாக் கலைகளுக்கும் நாயகியாகிய கலைமகளை எண்ணினார்; ‘சகலகலாவல்லி மாலை’ என்னும் நூலைப் பாடினார். பத்துப் பாடல் களையுடைய அந்த நூல் கலைமகளின் அருளை வேண்டும் துதியாக அமைந்திருந்தது. அவளது அருளால் இந்தியில் அவரால் நன்றாகப் பேச முடிந்தது. நவாபுக்குச் சமமாக இந்தியில் பேச வல்லுநர் ஆனார். இந்தி மொழியிலேயே நவாபுடன் பேசினார். சிங்கத்தின் மேல் அமர்ந்து வந்த ஆற்றலையும், இந்தியில் பேசிய சாமர்த்தியத்தையும் கண்டு நவாபு, “உங்கள் விருப்பம் போல மடம் கட்டிக்கொள்ள இடம் தருகிறேன். எந்த இடத்தில் இடம் வேண்டும்?” என்று கேட்டார்.“ எந்த இடத்தில் உபய கருடர்கள் வட்டமிடுகின்றனவோ, அந்த இடத்தைத் தரவேண்டும் என்று சொன்னார். அங்கே கேதார கட்டத்தில் ஓரிடத்தில் உபய கருடன்கள் வட்டமிட்டன. அந்த இடத்தை நவாபு குமரகுருபரருக்குத் தந்தார். அந்த இடத்தில் முனிவர் மடம் கட்டிக்கொண்டு வாழ்ந்தார்.

அங்கே புராணசாலை என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு புராணங்களைப் பற்றிய சொற்பொழிவு ஆற்றினார். அந்த மடம் இன்றைக்கும் கேதார கட்டத்தில் குமார சுவாமி மடம் என்ற பெயரோடு விளங்குகிறது.

நவாபுடன் பேசுவதற்கு வல்லமை பெறவேண்டு மென்று எண்ணிய முனிவர் பாடியது சகலகலாவல்லி மாலை. கலைமகள் சிறப்பையும், தத்துவத்தையும் பற்றி அந்த நூல் மிக நன்றாக விளக்குகிறது.

குறிப்பு: இன்றும் காசியில் குமரகுருபரர் நிறுவிய அந்த மடம் “குமரசுவாமி மடம்” என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *