திருமுருகாற்றுப்படை பிறந்த வரலாறு

மாலை நேரம். தண்ணிய தென்றல் மெல்ல வீசியது. சூரியன் தன் கிரணங்களை மடக்கிக் கொண்டு மேல் கடலிலே குளிக்க விரைந்து கொண்டிருந்தான். அப்போது பாண்டியன் தன் அரண்மனையின் மேல் மாடத்தில் தென்றற் காற்றையும் வானத்துக் காட்சியையும் நுகர்ந்து உலாவிக் கொண்டிருந்தான். சட்டென்று பாண்டியன் இயக்கம் தடைப்பட்டது. அவன் எதையோ கூர்ந்து கவனித்தான். தென்றலோடு வந்த புதுமை மணத்தில் அவன் நெஞ்சம் ஈடுபட்டது. அத்தகைய மென்மணத்தை அவன் இதுகாறும் தனியே கவனித்ததில்லை. சற்றே திரும்பிப் பார்த்தான். அவனுடைய பட்டமகிஷி மற்றொரு கோடியில் தன் கூந்தலை ஆற்றிக் கொண்டிருந்தாள். அவளிடத்திலிருந்து தென்றல் மணத்தைச் சுமந்து வந்தது. ‘இவள் கூந்தலின் நறுமணமா இது! உயர் ஜாதி மகளிர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு போலும்!’ என்று நினைந்து வியந்தான் பாண்டியன்.

மறுநாள் வழுதி அரசவையில் வீற்றிருக்கும் போது அருகில் உள்ள புலவர்களை நோக்கி, “நேற்று மாலை நான் ஒரு நறுமணம் நுகர்ந்தேன். அதன் மூலகாரணத்தை ஓர்ந்து கவி புனைய வேண்டும்” என்றான். இச்செய்தி சங்கத்தில் இருந்த 49 புலவர்களுக்கும் தெரிவிக்கப் பெற்றது. கபிலர், பரணர், நக்கீரர் முதலிய புலவர்கள் வீற்றிருந்து தமிழரசாட்சியை நடத்தி வந்த காலம் அது.

புலவர்கள் பாடத் தொடங்கினார்கள். இறைவன் செய்த மாயையோ யாதோ, அவர்களால் பாண்டியனது உள்ளக் குறிப்பை உணர இயலவில்லை. பாட்டுப் பாடிப் பாண்டியனிடம் காட்டினர். அவன் எல்லாவற்றையும் நோக்கினான். ஒன்றாலும் அவனுக்கு திருப்தி உண்டாக வில்லை. தமிழுலகில் தலைசிறந்த அந்தப் புலவர்களாலேயே தன் கருத்துக்கு இசையப் பாட முடியவில்லையே என்ற துயரம் பாண்டியனை ஆட்கொண்டது. ‘அப்படியானால் தெய்வப் புலமையே உலகத்தில் அஸ்தமித்துப் போய்விட்டதா? அதையும் பார்த்துவிடலாம்’ என்று எண்ணி, ஆயிரம் பொன்னை எடுத்து ஒரு கிழியில் இட்டுத் தமிழ்ச் சங்கத்தின் முன்னே அதைத் தொங்க விட்டு, “என் கருத்தைத் தெரிவிக்கும் கவிதை பாடுவாருக்கு இது உரியது” என்ற செய்தியை எங்கும் பரப்பினான். சங்கப் புலவர்களின் அகங்காரத்தை அடக்கும் பொருளாக அக்கிழி சங்க மண்டபத்தின்முன் தொங்கிக் கொண்டிருந்தது.

மதுரையில் சுந்தரேசக் கடவுளுக்குப் பூஜை செய்து வந்த தருமி என்ற ஆதிசைவன் அப்பெருமானிடத்திலே அளவற்ற பக்தியுடையவனாக இருந்தான். அவன் பிரமசாரி. மணம் செய்து கொண்டு புத்திரனை பெற்றால் வழிவழி வந்த பூஜைத் திருத்தொண்டு இடையறாமல் நடைபெறும் என்ற வேட்கை அவனுக்கு எழுந்தது. ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்து கொள்ளப் போதிய பொருள் அவனிடம் இல்லை. பிறரிடம் சென்று யாசகம் செய்யும் மனப்பாங்கும் அவனுக்கு இல்லை.என் செய்வது? தனக்கு உரிய பெருநிதியும் துணையும் சுந்த ரேசப் பெருமானே என்ற உறுதியுடையவனாதலினால் அப்பிரானிடத்திலேயே முறையிட்டுக் கொண்டான். “உன்னுடைய வழிபாடு பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது. எனக்குச் சந்ததி உண்டானால் தான் இந்தத் தொண்டுத் தொடர் அறாது நிற்கும். நான் மணம் செய்து கொள்ளப் பொருள் இல்லையே!” என்று விண்ணப்பித்துக் கொண்டான்.

அன்பருக்கு இரங்கும் ஆலவாய் பெருமான் அவனுக்கு அருள் செய்யும் காலத்தை எதிர்நோக்கியிருந்தார். பாண்டியன் பொற்கிழியைத் தொங்கவிட்டு, தன் கருத்தைப் பாடுபவருக்கென்று வைத்திருப்பதை உணர்ந்து; ‘கொங்குதேர் வாழ்க்கை” என்று தொடங்கும் செய்யுள் ஒன்றைப் பாடித் தருமியின் கையில் அளித்து, “இதைக் கொண்டு சென்று பாண்டியனிடம் காட்டிப் பரிசு பெற்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வாயாக” என அருளினார். அந்தப் பிரமசாரி அப்படியே அதனைப் பெற்றுச் சென்று பாண்டியனிடம் காட்டினான். தலைசிறந்த புலவர்களாலும் உணர்தற்கரிய பொருளை உணர்ந்து பாடிய பாட்டாக அது இருந்தது.’மடந்தையர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென்பதை அகத்துறைப் பாட்டில் வைத்துத் தெரிவித்திருந்தது கண்ட பாண்டியன் உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது. “பொற்கிழியை எடுத்துக் கொள்க” என்று கூறினான். தருமியும் வெகு வேகமாகக் கிழியை அறுத்துக் கொள்ள ஓடினான்.

”நில் அப்பா! எங்கே,உன் பாட்டை இங்கே கொண்டு வா பார்க்கலாம்” என்ற குரலைக் கேட்டு அவன் நின்றான். சங்கப் புலவர் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்த நக்கீரரே அதைக் கூறினார். தருமி பாட்டைக் கொண்டுபோய்க் காட்டினான். புலவர் பாட்டைப் பார்த்தார். ”இந்தப் பாட்டைப் பாடிய புலவன் இவன் அல்ல” என்று ஒரு கணத்தில் தெரிந்து கொண்டார். “இந்தப் பாட்டில் பிழை இருக்கிறது. அது இன்ன தென்று சொன்னால் உனக்கு விளங்காது. இதனைப் பாடித் தந்த புலவனைக் கூட்டிக் கொண்டு வா. பேசிக் கொள்கிறேன்” என்று கடுமையான குரலில் அவர் கூறினார். தருமிக்கு நடுக்கம் எடுத்துக் கொண்டது. ‘இதென்ன விபரீதமாயிருக்கிறதே! அரசன் ஆணையை மிஞ்சிய அதிகாரமும், இறைவன் அருளை மறுக்கும் அகங்காரமும் படைத்த இந்த மனிதர் யார்?’ என்று அவன் நினைத்திருக்கலாம். உடனே ஆலயத்துக்கு ஓடினான்.”பெருமானே, எனக்குக் கல்யாணம் இல்லா விட்டாலும் போகட்டும், உன்னுடைய பாட்டைப் பிழையென்று சொல்லி ஒருவன் அகங்கரிக்கின்றானே; இந்த அபவாதத்துக்கு நான் அல்லவா காரணமாகி விட்டேன். முதலில் இதைப் போக்கியருள வேண்டும்” என்று கீழே விழுந்து அழுது புலம்பினான். ”நாம் போய் வாதம் செய்வோம்” என்ற திருவாக்கைக் கேட்டு ஆறுதல் அடைந்தான்.

சோமசுந்தரக் கடவுள் ஒரு புலவரைப் போல வேடம் பூண்டு கற்றுச் சொல்லிகளுடன் புறப்பட்டுச் சங்கத்தை நோக்கிச் சென்றார். “நம்முடைய பாட்டில் குற்றம் கூறினவர் யார்?” என்று கேட்டார்.

“நான்தான்” என்று மிடுக்காகக் கூறினார் நக்கீரர்.”சொல்லிலே குற்றமா? பொருளிலே குற்றமா?” என்று கேட்டார் புதுப்புலவர். “பொருளில்தான், மலராலும் நறுநெய்யாலும் மணம் பெறும் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென்பது பிழை” என்று நக்கீரர் வாதிக்கத் தொடங்கினார்.

“உத்தம மகளிர் திருமேனியிலும் கூந்தலிலும் மணம் உண்டு என்று நூல்கள் கூறுவதை நீர் உணர்ந்த தில்லையோ?”

“நூல்கள் கூறினாலும் நான் நம்பமாட்டேன். இயற்கையில் அது பொய்.”

“பாண்டியன் மனைவியைப் போன்ற அரசகுல மடந்தையர் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் உடைய தென்பதை நீவிர் அறியீரோ?”

“அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்.”

“தேவமடந்தையர் கூந்தலில் நறுமணம் இல்லையா?”

“இல்லை!”

‘இந்திராணியின் கூந்தலிலோ?”

“அதுவும் அப்படித்தான்.”

“கலைமகள் கூந்தல்?”

“அதுவுந்தான்.”

“திருமகளின் எழிற் கூந்தல்?”

“அதுவும் மணமற்றதே.”

”உமாதேவியாரின் கூந்தலிலும் இயற்கை மணம் இல்லையா?”

“அங்கும் இல்லை.”

“ஞானப் பூங்கோதை யென்ற திருநாமம் வழங்குவதை நீர் அறிந்ததில்லையா?”

“அது தவறு.”

நக்கீரர் பெரிய அபராதியாகிவிட்டார். உண்மையை மறுப்பதோடு தேவ மகளிரையும் மூன்று சக்திகளையும் அவமதிக்கும் பெரிய பாவத்துக்கு ஆளாகிவிட்டார். அவரைக் காரணங்காட்டி வெல்வதென்பது இயலாத காரியம். அகங்கார முனைப்பினால் அறிவு தட்டழிந்து நிற்கும் அவருக்கு ஓரளவு அதிகாரத்தைக் காட்டி வழிக்குக் கொண்டு வர வேண்டு மென்று இறைவர் எண்ணினார். சிறிதே தம் நெற்றிக் கண்ணைக் காட்டினார்.

அகங்காரம் தலையெடுத்து வெறி மூண்டால் எதிர் நின்ற பொருளை உணரும் தெளிவு இராது. எதிர்வந்த பொருள் எவ்வளவு வலியதானாலும் அதற்கேற்ப அது சீறி விழுந்து கொப்பளித்துப் பெருகும். நக்கீரர் அந்த நிலையில் இருந்தார். சும்மா சீறிய பாம்பு படமெடுத்துச் சீறுவதைப் போலச் சினம் பொங்க,”நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றந்தான்” என்று முழங்கினார்.

தமிழ் மரபு பிறழாமல், இயற்கைத் தத்துவத்தோடு இயைந்த அகத்துறைப் பாட்டைப் பிழையென்று சொல்ல எந்தச் சாமான்யமான புலவனும் துணியமாட்டான். பாண்டியன் மகிழ்ந்தது போல மகிழும் இயல்பு தான் தூய உள்ளம் படைத்த புலவனுக்கு இருக்கும். நக்கீரரோ அடிப்பட்ட சிங்கம். தன் தோல்வியினால் எழுந்த சீற்றம் பொங்கக் குமுறுவதைப் போல நின்றார். தம்மாலும் பிறராலும் பாட முடியாத ஒன்றை வேறொருவர் பாடுவது, அதைப் பாண்டியனும் பாராட்டிப் பரிசளிப்பது; இதை அவர் பார்த்துக் கொண்டிருப்பதா? இந்த அகங்காரம் கண்ணை மறைக்கக் குற்றம் இல்லாத இடத்தில் குறைகாணும் இயல்பு நக்கீரருக்கு வந்து விட்டது. நல்லிசைச் சான்றோர் நிலையிலிருந்து அழுக்காறும் அகங்காரமும் உடைய கீழ் மகனாகி விட்டார் அவர். ஆகவே, அந்த நிலையில் அவரை நக்கீரராக எண்ணி வாதிப்பதைவிட முரடனாக எண்ணித் தண்டிப்பதே சரியென்ற முடிவுக்கு வந்தார் சோமசுந்தரக் கடவுள்.

நெற்றிக் கண்ணிலிருந்து கொடுந்தீ புறப்பட்டு நக்கீரர் உடலை வெதுப்பியது. தெய்வமடந்தையரைக் குறை கூறும் அளவு தடித்த தடிப்பை உருக்க அது உதவியது. நக்கீரர் உள்ளத்தையும் அது சுட்டது. உடம்பெல்லாம் புண்ணாகியது. வெப்பம் தாங்க மாட்டாமல், “ஐயோ!” என்று அலறிக் கொண்டு பொற்றாமரைக் குளத்தில் போய் வீழ்ந்தார். ஓரளவு உடல் குளிர்ந்த போது உணர்வு உண்டாயிற்று. தாம் செய்த பிழையை உணர்ந்தார். “பெருமானே! ஓலம் ஓலம்! கருணாநிதியே; ஓலம் ஓலம்! நின் பெருமையை மறந்த என்னைக் காப்பாற்ற வேண்டும். அருளுருவாகிய பராசக்தியை அவமதித்த பெரும் பாவத்துக்கு ஆளாகிய என்னைக் கடைக் கணித்து ஆட்கொள்ள வேண்டும்” என்று முறையிட்டார்.

சிவபெருமான் திருவுள்ளம் இரங்கி அவரைப் பொற்றாமரையிலிருந்து எடுத்துக் கரையில் விட்டார். அவர் உடம்பு முழுதும் தொழுநோய் வந்துவிட்டது. “எம்பெருமானே! இதற்குத் தீர்வு இல்லையா?” என்று சிவபிரானது அடிபணிந்து வேண்டியபொழுது, “கைலாச தரிசனம் செய்தாயானால் இந்த நோய் நீங்கும்” என்று அருளிக் கடவுள் மறைந்தார்.

நக்கீரர் கைலையை நோக்கிப் புறப்பட்டார். மதுரையையும் தமிழ்ச் சங்கத்தையும் பாண்டியனையும் சோமசுந்தரக் கடவுளையும் பிரிய மனம் இல்லாதவராகி மிகவும் உருகிப் புலம்பி வேறு வழியில்லாமல் விடை பெற்றுக் கொண்டு தம் பிரயாணத்தைத் தொடங்கினார்.

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தை அடைந்த போது சிவபூஜை செய்யும் நேரம் ஆயிற்று. உடனே அங்குள்ள தடாகத்தில் நீராடி அதன் கரையிலுள்ள ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து பூஜை செய்யத் தொடங்கினார். பூஜை செய்யும் பொழுது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஆலமரத்திலிருந்து ஒரு பழுத்த இலை உதிர்ந்து கரையில் பாதியும் நீரில் பாதியுமாக விழுந்தது. உடனே கரையில் பட்ட பகுதி பறவையாகவும், நீரில் பட்டது மீனாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு நின்றன. சிவபூஜையில் ஈடுபட்டிருந்த நக்கீரர் இந்தக் காட்சியிலே மனத்தைப் பறிகொடுத்துச் சிலநேரம் சிவ பூஜையை மறந்திருந்தார். அந்தச் சமயம் பார்த்துக் கற்கிமுகி என்ற பூதம் ஒன்று அவரைத் தூக்கிப் போய் அந்த மலையில் உள்ள குகையில் அடைத்து விட்டது. அகங்காரத்தினால் பெற்ற தண்டனை போகக் கைலாசம் செல்ல வந்த அவருக்கு மனச் சலனம் என்ற குற்றத்துக்கு இங்கே சிறைத்தண்டனை கிடைத்தது.

அந்த முழையில் முன்பே 999-பேர் அடைபட்டுக் கிடந்தனர். சிவபூஜையினின்றும் வழுவச் செய்து அதுவே சாக்காகக் கொண்டு கற்கிமுகியினால் சிறைப்படுத்தப்பட்டவர்கள் அவர்கள். அக்கூட்டத்தினர் நக்கீரரைக் கண்டவுடன் ஆரவாரம் செய்து அவரை வைதார்கள். ”சிறைப்பட்டாலும் இதுவரையில் நாங்கள் உடல் கொழுக்க உண்டு வந்தோம். நீ வந்து எங்கள் வாழ்வுக்கே உலை வைத்தாயே!” என்று குறை கூறுவதைக் கேட்ட நக்கீரர், “விஷயம் என்ன? என்று விசாரித்தார்.”ஆயிரம் பேர்களைக் கூட்டி உண்ணும் வழக்கம் உடையது இந்தப் பூதம். இது வரையில் ஆயிரம் என்ற கணக்கு நிறைவேறாமல் நாங்கள் செளக்கியமாக இருந்தோம். நீ வந்து அந்தக் குறையைப் போக்கினாய். இனி நமக்கு இங்கே வேலை இல்லை. பூதத்தின் வயிற்றுக்குள் போகவேண்டியது தான்” என்று கூறி நைந்தார்கள்.

நக்கீரர் உண்மை நிலையை உணர்ந்தார். திருப்பரங் குன்றத்தில் முருகக் கடவுள் கோயில் கொண்டிருக்கிறார். வீரமும் கருணையும் உடைய அப்பொருமான் வாழும் மலையில் இப்படி அக்கிரமம் நடைபெறலாமா? புலவர் பெருமான் முருகவேளைத் தியானித்தார். மனம் கசிந்து திருமுருகாற்றுப்படையைப் பாடினார். தமிழுக்கு இரங்கும் கடவுளாகிய முருகவேள் தோன்றிக் கற்கிமுகி என்னும் பூதத்தைக் கொன்று யாவரையும் விடுவித்தான்.

“ஆறுமுகப் பெருமானே, நின் தந்தைக்கும் தாய்க்கும் அபசாரம் செய்து இந்த நோய்க்கு ஆளானேன். கைலைக் காட்சி பெற்றால் நோய் தீரும் என்று அருளினார் சிவபிரான். மதுரையை அடுத்துள்ள இதைத் தாண்டுவதற்குள்ளேயே இந்த இடையூறு தலைப்பட்டது. இனி நான் எவ்வாறு மக்களால் அணுகுவதற்கு அரி தென்று சொல்லும் கைலையை தரிசிப்பது!” என்று கூறி நக்கீரர் முருகக் கடவுள் தாளில் வீழ்ந்து அலறினார். அப்பிரான் திருவுள்ளம் இரங்கி, “நீ கவலைப்பட வேண்டாம்; தென்கைலையென்று புகழ்பெற்ற காளத் திக்குச் சென்றால் கைலாச தரிசனம் பெறலாம். உன் நோயும் நீங்கும்” என்று அருள் செய்து மறைந்தான்.

அவ்வாறே நக்கீரர் தம் யாத்திரையைத் தொடர்ந்து நடத்திக் காளத்தி அடைந்து அங்கே கைலாச தரிசனம் செய்தார். தொழுநோய் நீங்கப்பெற்று, “கைலைபாதி காளத்திபாதி அந்தாதி” என்ற பிரபந்தத்தைப் பாடி வழிபட்டார். ஒரு பாட்டுக் கைலையைப் பற்றியும் அடுத்த பாட்டுக் காளத்தியைப் பற்றியும் கூறும் நூறு வெண்பாக்களால் ஆனது அவ்வந்தாதி. அந்த தலத்தில் உள்ள அம்பிகையின் திருநாமம் ஞானப் பூங்கோதை என்பது. நக்கீரருக்கு எந்த உண்மையை மறுத்ததனால் நோய் உண்டாயிற்றோ, அந்த உண்மையை அறிவுறுத்தும் திரு நாமம் படைத்த அம்பிகை வாழும் தலம் அது.

மீண்டும் நல்ல மேனி படைத்து நக்கீரர் மதுரை வந்து சேர்ந்தார்.

நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை தெய்வீகமான நூல் என்று கருதி முருகனடியார்கள் அதைப் பாராயணம் செய்து வருகிறார்கள். அதனால் தம் விருப்பம் நிறைவேறப் பெறுவர்.

திருமுருகாற்றுப்படை பிறந்த வரலாறாகிய இந்தக் கதை திருவிளையாடற் புராணத்திலும், திருப்பரங் குன்றப் புராணத்திலும், சீகாளத்திப் புராணத்திலும் வருகிறது. கதைப் போக்கில் சில சில வேறுபாடு இருந்தாலும் மேலே சொன்ன வரலாற்றையே அவை குறிக்கின்றன.

ஓம் நமசிவாய ஓம்.

ஓம் சரவணபவ ஓம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *