
சோமாஸ்கந்தமூர்த்தி
இந்திரன் ஒரு சமயம் திருப்பாற்கடலுக்குச் சென்றிருந்தான். திருமால் பாம்பணையில் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மார்பில் சோமாஸ்கந்தமூர்த்தி இருந்தார். ஒரு பக்கம் சிவன், மற்றொரு பக்கம் உமை, நடுவில் முருகப் பெருமான் உள்ள கோலமே சோமாஸ்கந்தமூர்த்தி, உமையுடனும் கந்தனுடனும் இருப்பவன் என்று பொருள். பிள்ளை இல்லாமல் திருமாலின் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த போது, “சோமாஸ்கந்த மூர்த்தியை உபாசனை செய்; பிள்ளை பிறக்கும்” என்று ஒரு முனிவர் சொன்னாராம். திருமால் அப்படியே பூசை செய்தார். மன்மதன் பிறந்தான். இவ்வாறு புராணம் சொல்கிறது. அந்தச் சோமாஸ்கந்தமூர்த்தியை, “யாருக்கும் கொடுக்காதே” என்று சொல்லித் திருமால் இந்திரனிடத்தில் கொடுத்தாராம்.
திருமாலின் மார்பில் உட்கார்ந்திருந்தவர் சோமாஸ்கந்த மூர்த்தி. அவரே தியாகராஜன். நடராஜா நின்று கொண்டிருக் கிறார். தியாகராஜா உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் நின்று கொண்டு ஆடுகிறார். இவர் திருமாலின் மார்பில் உட்கார்ந்து கொண்டு ஆடுகிறார். சுவாசம் உள்ளே போய் வரும் போது மார்பு வீங்கித் தணிய, இவர் உட்கார்ந்து கொண்டே ஆடுவதுபோல் இருக்கிறதாம். அதனால் இருந்தாடும் அழகர் என்று இவருக்குப் பெயர். நடராஜ மூர்த்தி நின்றுகொண்டு ஆடும் நடனத்திற்கு ஆனந்தத் தாண்டவம் என்று பெயர். உட்கார்ந்து கொண்டே ஆடுகிற தியாகராஜரின் நடனத்திற்கு அஜபா நடனம் என்று பெயர். அஜபை என்றால் வாயினாலே ஜபிக்காமல் மனசினாலே சுவாசத்தோடு ஜபிக்கிறது என்று பொருள். அது ஒரு மந்திரம்.
உசுவாச, நிசுவாசத்தோடே கலந்து உள்ளுக்குள் மனசினாலே சொல்கிற, ஜபிக்காத மந்திரம் அஜபை. திருமால் தம்முடைய மூச்சுக் காற்றோடு அதை ஜபிக்கிறார். சுவாசம் உள்ளே போகும் போது மார்பு விம்மி, வெளியே போகும்போது தணிகிறது; அவர் மார்பிலிருந்து தியாகராஜா அமர்ந்தபடியே ஆடுகிறார். அஜபா மந்திரத்தைத் திருமால் சொல்லுகையில் ஆடுவதால் இதற்கு அஜபா நடனம் என்று பெயர் வந்தது.
இந்த மூர்த்தியைத் திருமாலிடமிருந்து இந்திரன் வாங்கிக் கொண்டான். “நீ யாருக்கும் எந்தக் காலத்திலும் கொடுக்காதே” என்று சொல்லி நாராயணமூர்த்தி அவனுக்குக் கொடுத்தார்.
இந்திரன் தனக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்திக்குக் கைம்மாறாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். நம்மைப் போல பக்தி இல்லாதவனாக இருந்தால், இன்னும் கொஞ்சம் பொருள் கொடு என்று வாங்கிப் போயிருப்பான். நல்ல பக்தி உடையவன் ஆதலாலே, “நீ வைத்திருக்கும் சோமாஸ்கந்தரைக் கொடு” என்று கேட்டான்.
இந்திரன் ‘கேட்டதைக் கொடுக்கிறேன்’ என்று சொன்னான் அல்லவா? இப்போது கொடுக்கக் கூடாத பொருளை அவன் கேட்டு விட்டான். என்ன செய்வது என்று இந்திரன் யோசித்தான். உடனே விசுவகர்மாவை அழைத்து அதே போன்று வேறு ஒரு சோமாஸ்கந்தமூர்த்தியைப் பண்ணச் சொல்லி, அதை மன்னனிடம் கொடுத்து ஏமாற்ற நினைத்தான். முசுகுந்த சக்கரவர்த்தி அதை வாங்கிக் கொண்டவுடனே, நல்ல பக்தி உடையவனாதலால் உண்மையை உணர்ந்து, “இது அல்ல அந்தச் சோமாஸ்கந்த மூர்த்தி; அதைத் தா” என்று கேட்டானாம். உடனே இந்திரன் விசுவகர்மாவைப் பின்னும் ஒன்று பண்ணச் சொல்லி அதைக் கொடுத்தான். அதையும் வாங்கிக் கொள்ள மறுத்தான் முசுகுந்தன். இப்படியே ஏழு சோமாஸ்கந்தமூர்த்தியைக் கொடுத்தும் அவன் ஏமாறவில்லையாதலால் உண்மையான சோமாஸ் கந்தரையே இந்திரன் கடைசியில் கொடுத்து விட்டான். இந்தச் சோமாஸ்கந்த மூர்த்தியைத்தான் அந்தச் சக்கரவர்த்தி திருவாரூரில் பிரதிஷ்டை பண்ணினான் என்று புராணம் சொல்கிறது. மற்ற ஆறு மூர்த்திகளையும் ஆறு வேறு இடங்களில் பிரதிஷ்டை பண்ணினான்.
அந்த முசுகுந்தன் இப்போது தேவசேனையோடு அம்மையப்பனாக வீற்றிருந்த முருகனை வழிபட்டுப் பேரானந்தம் அடைந்தான்.
இதுவரைக்கும் அம்மா அப்பாவுக்கு நடுவில் குழந்தையாக, நடுநாயகமாக வீற்றிருந்த பெருமான், திருப்பரங்குன்றத்தில் தேவசேனையோடு திருக்கல்யாணக் கோலங்கொண்டு வீற்றிருந்து உலகத்திற்கெல்லாம் அருள் செய்யலானான்.
குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி விரதத்தை அநுசரிப்பார்கள். முக்கியமாகத் தேவயானையை வழிபடுவது வழக்கம். அதனால் அந்தப் பெருமாட்டிக்குச் சஷ்டி தேவி என்று பெயர். தேவ சேனையைத் தேவயானை என்று சொல்வார்கள். தேவயானையாகிய ஐராவதத்தினால் வளர்க்கப் பட்டவளாதலினால் அந்தப் பெயர் வந்தது. அவளைத் தேவகுஞ்சரி என்றும் சொல்வதுண்டு. யானை என்ற பெயர் இருப்பதை எண்ணிப் புலவர்கள் பல வகையில் கற்பனை செய்வார்கள். அருணகிரியார்.
மத கும்ப கம்பத்
தறுகன் சிறுகண் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவும் கடகாசல பன்னிருபுயனே
என்று பாடுகிறார். தேவயானையை இறுகத் தழுவும் பன்னிரண்டு தோளாகிய மலைகளை உடையவன் முருகன். அந்தத் தோள்களில் வளைகளை அணிந்திருக்கிறான். மலையைச் சுற்றிப் பட்டை போட்டது போலக் கடகம் விளங்குகிறது. யானை மலையில் விளையாடுவது. தேவ யானையை யானை தந்த கொடி போன்ற பெண் யானைக்குட்டியாக உருவகம் செய்து, அந்த யானை முருகனுடைய கடகம் அணிந்த பன்னிரு தோள்களாகிய மலையில் விளையாடுகிறது என்று வருணிக்கிறார்.
ஓம் சரவணபவ


