எல்லாம் பிரம்மம்

அகங்காரம், மமகாரம் அற்ற நிலையில் இறைவன் திருவருளோடு ஒன்றுபட்ட ஒருவனுக்கு உலகம் முழுவதும் நல்லதாக இருக்கும்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரியவர் ஒரு நாள் பிரசங்கத்தில், ”உலகத்திலுள்ள எல்லாம் பிரம்மம்” என்று சொன்னாராம். அதை ஒருவன் கேட்டுவிட்டு, “எல்லாம் பிரம்மம்” என்று கூவிக் கொண்டே போனான். போகும் வழியில் ஒரு மதம் பிடித்த யானை வந்தது. அதன்மேல் இருந்த பாகன், “ஐயா, ஐயா ! நகர்ந்து போங்கள்” என்று சொன்னான். “போடா போ, எல்லாம் பிரம்மம்” என்று சொல்லி அவன் போனான். யானை துதிக்கையால் பிடித்து அவனைத் தூக்கி எறிந்து விட்டது. நல்லவேளை, அவன் சாகவில்லை. உடனே உபதேசம் செய்தவரிடம் அவன் சென்று, “எல்லாம் பிரம்மம் எனச் சொன்னீர்களே; அந்த யானை என்னைத் தூக்கி எறிந்துவிட்டதே!” என்றானாம்.

அதற்கு அவர், ”ஆம், சொன்னேன். யானையைப் பிரம்மம் என்று எண்ணினாய். அதன் பாகனும் பிரம்மந்தானே? அந்தப் பிரம்மம் உன்னை நகர்ந்து போ எனச் சொன்னபோது நீ ஏன் நகரவில்லை?” என்றாராம். அவன் ஞானம் போலி ஞானம்.

உலகம் எங்கும் இறைவன் இருக்கிறான் என்பதை அநுபவப் பொருளாக ஞானிகள் காண்கிறார்கள். சுகமாக இருக்கும் போது நாம் இறைவனை நினைப்பதில்லை. “ஆண்டவன் கோயிலில் இருக்கிறான். தொண்டர்கள் கூட்டத்தில் இருக்கிறான்” என்றெல்லாம் சொல்கிறார்கள். அவன், “நோயுளார் வாய் உளான்” என்கிறார் சம்பந்தர். நோய் என்றால் துன்பம். யார் யார் துன்பம் உடையவர்களோ அவர்கள் வாயில் இருக்கிறானாம். துன்பப் படும்போதுதான் இறைவனை நினைக்கிறோம். இது மனித இயல்பு. எப்போதும் அவனையே நினைப்பது உண்மை அன்பர் இயல்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *