
கடவுளின் திருவுருவங்களுக்குப் பூசை ஏன்?
விவேகானந்த சுவாமி அமெரிக்காவுக்குச் சென்று சிகாகோ நகரத்தில் பெரிய விரிவுரை நிகழ்த்தினார். அங்கே கூடியிருந்த உலகப் பேரறிஞர்கள் நுட்பமான கருத்துக்கள் புதைந்த அவர் சொற்பொழிவைக் கேட்டுப் பரவசமாகப் போனார்கள். அந் நாட்டைச் சேர்ந்த பலர் அவரிடம் அன்புகொண்டு அணுகிப் பணிந்தார்கள்.
அவர்களுக்குள் ஒருவர் ஒரு நாள் விவேகானந்தரைப் பார்த்துக் கேட்டார்; “உங்கள் நாட்டில் உள்ள சமயத்தைப் பற்றிப் பேசினீர்கள். இறைவன் எல்லை கடந்தவன், மனவாக்குச் செயலாலே உணர்வதற்கு அரியவன் என்று சொன்னீர்கள். அத்தனையும் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகின்றனவென்றும் அங்கே கடவுளின் திருவுருவங்களுக்குப் பூசை முதலியன நடந்து வருகின்றன வென்றும் சொன்னீர்களே, அதுதான் விளங்கவில்லை. எல்லைக்குள் அடங்காமல் இருக்கிற கடவுளுக்கு, அருவமாகிய பரம்பொருளுக்கு, உருவம் அமைத்து வழிபடுவது எதற்காக?” என்று கேட்டாராம்.
விவேகானந்தர் அதற்கு உடனே விடை சொல்லவில்லை. அவர் வீட்டிலே ஒரு படம் இருந்தது. ”இது யார்?” என்று சுவாமிகள் கேட்டார். “என் தந்தையார்” என்று கூறினார் அவர். ”வெறும் சட்டமும், கண்ணாடியும், அட்டையும் ஓவியமுமாக இருக்கின்ற இது உன் தந்தையா?” என்று கேட்டார். “இல்லை. இது என் தந்தை அல்ல. ஆனால் தந்தையை நினைக்கச் செய்கிற அடையாளம்” என்றார்.
“இதைப் போலத்தான் எங்கள் நாட்டுக் கோயில்களில் இருக்கிற விக்கிரகங்கள் இறைவனை நினைப்பூட்டும் அடை யாளமாகத் திகழ்கின்றன” எனச் சொன்னாராம். அப்புறந்தான் அந்தக் கேள்வியைக் கேட்டவருக்கு உண்மை விளங்கிற்றாம்.


