
இறைவனுக்குப் பட்சபாதம் உண்டா?
வைகுண்ட ஏகாதசி அன்று ஓர் ஏழைக் கிழவி பலகாரத்திற்கு உப்புமாச் செய்ய ரவையை எடுத்தாள். எப்போதோ வாங்கி டப்பாவில் கொட்டி வைத்திருந்த ரவை அது. அதில் புழு இருந்தது. அதை முறத்தில் கொட்டி, சிறிது வெயிலில் காய வைத்தாள். காக்கை கொத்துமே என்று தன் பேரனை அழைத்து அதற்குக் காவலாக இருக்க வைத்தாள். பையன் வெயிலில் சுகமாக உட்கார்ந்து குளிர் காய்ந்தான். மார்கழி மாதமாதலால் அந்த வெயில் அவனுக்கு இதமாக இருந்தது. அதே சூரிய கிரணங்களைத் தாங்க முடியாமல் புழுக்கள் சுருண்டு சுருண்டு செத்துப் போயின.
பையனுக்கு இதமாக இருந்த சூரிய கிரணங்களே புழுக்ககளுக்கு வதமாக இருந்தன. சூரியன் பையனுக்கு ஒரு வகையான கிரணங்களையும் புழுவுக்கு வேறு வகையான கிரணங்களையும் வீசினான் என்று சொல்லலாமா? இரண்டு பேருக்கும் ஒரே வகையான கிரணங்களைத்தான் வீசினான். ஆனால் புழு இறந்தது. அந்தச் சூரியனுடைய கிரணங்களைத் தாங்கும் எலும்பு அதற்கு இல்லை. பையனுக்கோ எலும்பின் வலிவு இருந்தமையினால் அந்தக் கிரணங்கள் இதமாக இருந்தன. வலிமை உள்ளவனுக்கு இதமாக இருக்கிற கிரணமே வலிமையற்றதற்கு வதமாக இருக்கிறது.
அது போல் அன்பு உள்ளவர்களுக்கு அறக்கடவுளின் செயல் நன்மையைத் தருகிறது. அது இல்லாதவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றொரு கதை சொல்கிறார். இறைவனுடைய திருவருள் யார் யாருக்கு எப்படி இருக்கும் என்று கேட்ட போது அதற்கு இந்த உதாரணத்தைச் சொல்கிறார். பூனை, குட்டியைத் தன் வாயினால் கவ்விக் கொண்டு நெடுந்தூரம் போகும். அந்தக் குட்டியைப் பார்த்து, “உன்னைத் தன் வாயில் உன் தாய் கவ்விக் கொண்டு போன போது உனக்கு எப்படி இருந்தது?” என்று கேட்டால், “அது எவ்வளவு சுகமாக இருந்தது என்று சொல்லத் தெரியவில்லையே!” என்று சொல்லும். அதே பூனை, ஓர் எலியைத் தன் வாயில் கவ்விக் கொண்டு ஓடுகிறது. அந்த எலியிடத்தில் கேட்டால், “ஐயோ! என் உயிரே போய் விட்டதே!” என்று சொல்லும். இரண்டையும் பூனை தன் வாயினாலே கவ்வித் தான் சென்றது. ஆயினும் இந்த இரண்டு பிராணிகளுடைய நிலை வேறுபாட்டினால் ஒன்று சுகத்தையும், மற்றொன்று துன்பத்தையும் அடைந்தன. அதே போல் இறைவனுடைய கருணை நல்லவர்களுக்கு இன்பத்தைத் தரும்; பொல்லாதவர்களுக்குத் துன்பத்தைத் தரும். இப்படிப் பரமஹம்ஸர் சொல்கிறார்.
இறைவன் அன்பு உடையவர்களுக்கு நன்மை செய்கிறான், அல்லாதவர்களுக்குத் தீமை செய்கிறான் என்றால் இறைவனுக்குப் பட்சபாதம் உண்டா என்று எண்ணத் தோன்றுகிறது. ‘அவன் மேலே ஒரு தவறும் இல்லை. மக்கள் மேல்தான் தவறு இருக்கிறது’ என் பதைக் குறிப்பாக வள்ளுவர் புலப்படுத்துகிறார்.
அன்பு இருந்தால் அறக் கடவுளுடைய செயல் இன்பமாக இருக்கும்; அன்பு இல்லாவிட்டால் துன்பமாக அமையும் என்று சொல்கிறார். அதற்கு உபமானம் சொல்லும் போதுதான், ‘எலும்பு இல்லாத புழுவைக் கதிரவனுடைய கிரணம் கொல்லுகிறது. அது போல் அன்பு இல்லாதவர்களுக்கு அறக் கடவுள் துன்பம் தரும், என்கிறார்.
“என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.”
இந்த இரண்டு வகையான உதாரணங்களிலும், ஒரே வகையான செயல் இருவேறு வகையான பொருளுக்கு இருவேறு வகையான அநுபவங்களைத் தருவதைப் பார்க்கிறோம்.


