70. திருநீலகண்டயாழ்ப் பாண நாயனார்
இவர் நடுநாட்டிலே திருஎருக்கத்தம்புலியூரிலே பாணர் மரபில் தோன்றியவர். மனைவியார் மதங்க சூளாமணியாருடன் மதுரைத் திருவாலவாய்த் திருக்கோயிலின் முன் நின்று இறைவரது பொருள்சேர் புகழ்ப் பாடல்களை யாழிலிட்டு வாசித்தார். ஆலவாயிறைவர் பாணரைத் திருக்கோயிலின் உள்ளே அழைத்துப் பொற் பலகையிடும்படி அடியார்கட்குப் பணித்தருளப் பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இன்னிசை யாழில் இட்டு வாசித்துப் போற்றினார். திருவாரூரையடைந்த போது ஆரூர்ப்பெருமான் பரணர் உள்ளே வர வட திசையில் வேறொரு வாயில் வகுத்தருள ஆரூர்த் திருமூலட் டானத்து அமர்ந்த இறைவர் திருமுன் யாழிசைத்துப் போற்றினார். காழிப்பதியை யடைந்த திருநீலகண்டப் பெருமானார் திருஞானசம்பந்தப் பிள்ளையாரை வணங்கினார். பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களை யாழி லிட்டு இசைத்துப் பிள்ளையாரைப் பிரியாதுடனிருக்கும் பேற்றினைப் பெற்றார். திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையார் திருமணத்தைக் கண்டு மதங்க சூளாமணியாருடன் ஈறில் பெருஞ்சோதியினுள்ளே புகுந்து பேரின்ப வாழ்வு பெற்றார்.