69. கோச்செங்கட்சோழ நாயனார்
சோழநாட்டிற் சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள சோலையில் வெண்ணாவல் மரத்தடியில் வெளிப்பட்ட சிவலிங்கத்தைப் பெருந்தவத்தையுடைய வெள்ளை யானை திருமஞ்சனஞ் செய்து மலர் தூவி வழிபாடு செய்தது, அதனால் அவ்விடத்திற்குத் திருவானைக்கா என்ற பெயருண்டாயிற்று. அங்கே மெய்யுணர்விற்சிறந்த சிலந்தி யொன்று இறைவன் திருமுடிமேல் சருகு முதலியன உதிராதபடி தனது வாயின் நூலாற் பந்தரிழைத்து வழிபட்டது. வாய்நீர் நூலால் அமைந்த அப்பந்தர் தூய்மையில்லாதது என யானை சிதைத்தது. சிலந்தி மீளவும் பந்தர் செய்தது. யானை மறுநாளும் அதனைச் சிதைத்துப் போக்கியது. அது கண்டு வெகுண்ட சிலந்தி யானையின் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்தது. வருத்தம் பொறாத யானை, கையை நிலத்தில் அறைந்து உயிர் துறந்தது. சிலந்தியும் உயிர் துறந்தது. ஆனைக்கா இறைவர் வெள்ளானைக்கு வீடுபேறளித்தார்.
சோழமன்னன் சுபதேவனும் அவன் மனைவி கமல் வதியும் செய்த சிவபுண்ணியத்தின் பயனாகத் தன்னை வழிபட்ட சிலந்தியை அவர்கட்கு மகனாகப் பிறக்கச் செய்தருளினார். ஈன்றதாய் செங்கண்ணனாகிய அக் குழந்தையைக் கண்டு ‘என்கோச்செங்கணானோ’ என அருமை தோன்ற அழைத்து உடனே உயிர் நீங்கினாள். மன்னன் தன் குழந்தையை வளர்த்து உரிய காலத்தில் நாடாள் வேந்தனாக முடிசூட்டித் தவநெறியைச் சார்ந்து சிவலோகஞ் சார்ந்தான்.
கோச்செங்கட்சோழர் சிவபெருமானது திருவருளினாலே முன்னைப் பிறப்பின் உணர்வோடு நெறி வளரச் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுந் திருப் பணியை
மேற்கொண்டார். திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தடியில் வீற்றிருந்தருளும் இறைவனுக்குப் பெருந்திருக்கோயில் அமைத்தார். சோழநாட்டின் அகநாடுகள்தோறும் சிவபெருமானுக்கு மாடக்கோயில் அமைத்து நாள்வழிபாடும் திருவிழாவும் சிறப்புற நிகழவேண்டும் நிபந்தங்கள் வகுத்து நாட்டினை நல்ல முறையில் ஆட்சிபுரிந்தார். இறைவன் திருநடம் புரியும் தில்லைப்பதியை யடைந்து பொன்னம்பலவனை வணங்கித் தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து மேலும் பல திருப்பணிகளைச் செய்து தில்லையம்பலவாணர் திருவடி நீழலை அடைந்தார்.
சங்க காலச் சோழமன்னராகிய கோச்செங்கட் சோழர் சேரமாள் கணைக்காலிரும்பொறை வென்று சிறைப்படுத்திய பொழுது பொய்கையார் களவழி நாற்பது என்னும் பனுவலைப் பாடிச் சேரனைச் சிறையினின்றும் விடுவித்தார். இவர் பாண்டியர்க்குரிய தென்னாட்டையும் கைக்கொண்டு வேப்பமலர் மாலை சூடி ஆட்சி புரிந்தார் என்பது, ‘தென்னவனா யுலகாண்ட செங்கணாற கடியேன்’ என்ற திருத்தொண்டத்தொகையாலும் ‘நிம்பநறுந் தொங்கற் கோச்செங்கணான்’ என வரும் திருத் தொண்டர் திருவந்தாதியாலும் புலனாகும்.