67. மங்கையர்க்கரசியார்

சோழ நாட்டில் வளவர் குடியில் மணிமுடிச்சோழன் மகளாராகத் தோன்றி மானியார் என்னும் இயற் பெயர் பெற்ற இவர். செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் எனத்தகும் பொலிவுடையார்; பாண்டிய மன்னனை மணந்து பாண்டியர் குலத்துக்கு நேர்ந்த பழியினைத் தீர்த்த தெய்வப்பாவை. திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவருளினாலே செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் புறச்சமய இருள் நீக்கித் திருநீற்றினைப் பரவச் செய்தவர். ஆளுடைய பிள்ளையார் ‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை’ எனத் திருப்பதிகத்திற் சிறப்பித்துப் பாராட்டப்பெற்ற பெருந்தவச் செல்வியார். பாண்டிமா தேவியாராகிய இவ்வம்மையார் தம் கணவர் புறச் சமயக்கூனும் உடற்கூனும் நீங்கி நின்றசீர் நெடு மாறனாராகத் திகழச் சைவ வழித்துணையாய் நெடுங் காலம் வாழ்ந்து சிவநெறியினை வளர்த்தும் தம் கணவனாருடன் ஆலவாயரன் சேவடிக்கீழ் அமர்ந்திருக்கும் நற் பேறு பெற்றார்.