66. பூசலார் நாயனார்

தொண்டை நாட்டில் திருநின்றவூர் என்னும் பதியிலே அந்தணர் குலத்திற் பிறந்தவர் பூசலார். சிவ பெருமானிடத்தும் அடியாரிடத்தும் பேரன்புடைய இவர் மனத்தினாலேயே பொருள் தேடித் தம் மனத்தின்கண்ணே நீண்ட நாளாகச் சிந்தனை செய்து சிவபெருமானுக்கு ஒரு திருக்கோயில் அமைத்தார். அக்கோயிலில் இறைவனை எழுந்தருளச் செய்ய நல்லதொரு நாளும் குறித்தார். அக்காலத்திற் காடவர் கோமானாகிய பல்லவமன்னன் காஞ்சி நகரத்திற் கற்றளி (கயிலாய் நாதர் திருக்கோயிலை) அமைத்து இறைவனை எழுந்தருளச் செய்தற்கு ஒரு நாளை நிச்சயித்தான். பூசலார் குறித்த நாளும் பல்லவன் குறித்த நாளும் ஒன்றாக அமைந்தது. பூசலாரது பேரன்பின் திறத்தை வெளிப்படுத்தத் திருவுளங் கொண்ட சிவபெருமான் பல்லவ மன்னன் கனவில் தோன்றித் தான் அந்நாளிற் பூசலார் கோயிலில் எழுந்தருளுவதாகவும், மன்னன் கட்டிய கோயிலில் மற்றொரு நாள் எழுந்தருளுவ தாகவும் அருள்செய்து மறைந்தார். மன்னவன் திருநின்றவூர்க்குச் சென்று பூசலாரை வணங்கி அவர் கட்டிய மனக் கோயிலின் மாண்பினை அறிந்துகொண்டார். பூசலாரும் தம் மனக்கோயிலுள் இறைவனை எழுந்தருளச் செய்து நாட்பூசனையும் திருவிழாவும் நடத்திச் சிவபெருமான் திருவடி சேர்ந்து இன்புற்றார்.