64. முழுநீறு பூசிய முனிவர்
அறநெறியில் ஒழுகித் தத்துவங்களை நன்குணர்ந்து நீதி நெறியில் தவறாதவர்களாய்த் தொன்று தொட்டுவரும் மும்மலங்களை அறுத்த வாய்மையையுடைய அரிய தவ முனிவர்கள் நியமம் தவறாது செய்யும் நித்தியாக் கினியில் விளைத்து எடுத்த திருநீற்றினைப் புதிய பாத்திரத்தில் வைத்துக்கொண்டு சிவபெருமானை வணங்கி அவரது திருவருள் வண்ணமாகிய நீற்றினை உடல் முழுவதும் பூசிக்கொள்வார். இப் பெரியோர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப் போற்றப் பெறுந் திருக்கூட்டத்தினராவர்.
கன்றீன்ற பசுவின் சாணத்தைச் சத்தியோசாத மந்திரத்தினால் ஏற்றுச் சிவமந்திரங்களால் உண்டாக்கப்பட்ட சிவாக்கினியில் இட்டு எடுத்த திருநீறு கற்பம் எனப்படும். காட்டில் உலர்ந்த பசுஞ்சாணத்தைக் கொணர்ந்து கோசலத்தைவிட்டு பிசைந்து அத்திர மந்திரம் ஓதி ஓமத்தீயில் இட்டுச் சிறப்புற வெந்த நீறு அநுகற்பம் எனப்படும். காட்டில் மரங்கள் பற்றியெரிந் தமையால் வெந்த நீறும் கொட்டில் முதலிய இட வகைகள் தீப்பற்றிக் கொள்ள வெந்த நீறும், செங்கற்களைச் சுட்ட தீயினால் விளைந்த நீறும் ஆகியவற்றை உண்டையாக்கித் திருமடங்களில் விளங்கும் சிவாக்கினியினால் விதிப்படி நீறாக்கப்பட்டவை உபகற்பம் எனப்படும்.