61. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
படைத்தல், காத்தல், அழித்தல்: மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்யும் பிரமன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐம்பெருங்கடவுளர் இருக்கும் ஐவகைத் தாமரைப் பீடங் களையுடைய பதவிகளைக் கடந்து, அட்டாங்கயோகத்துள், இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தி யாகாரம் என்னும் ஐந்தனையும் பயின்று சித்தத்தை ஒருவழி நிறுத்தலாகிய தாரணையால் திகழொளியாயுள்ள சிவம் ஞானஒளி வீசி விளங்கும் நாதாந்தத்தில் சித்தத்தை நிறுத்துதலினாலே சிவத்தினிடத்தே நிலை பெற்ற சித்தத்தை யுடையவர்கள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் என்னும் திருக்கூட்டத்தினராவர்.
இவர்கள் மறைமுது முதல்வனாகிய தில்லைச்சிற்றம்பலவன் தொண்டின்வழி நின்று அம்முதல்வனை அடைந்தோராவர்.