59. பத்தராய்ப்பணிவார்

சிவனடியாரைக் கண்டார் சாதி முதலியன விசாரியாமல் அவர்களைச் சிவனெனவே வழிபடுபவர்கள், சிவபூசைதனைக் கண்டு மகிழ்பவர்கள், சிவனை அருச்சிப்பவர்கள், சிவனுக்கே தொண்டு புரியும் நியமம் உடையவர்கள், சிவசரிதங்களை விரும்பிக் கேட்பவர்கள், சிவ பெருமானைத் தியானித்து மெய்ம்மயிர் பொடிப்பக் கண்ணீரரும்பி விதிர்விதிர்ப்பெய்துபவர்கள், நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் மறவாத சிந்தையினையுடையவர்கள், சிவ பெருமானுக்கு ஆட்பட்ட தம் அடிமைத்திறத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தி அதனாற் பயன்கொள்ளாத தூய நெஞ்சத்தினர். இங்குக் குறிக்கப்பட்ட எண் பெருங்குணங்களாலும் இவ்வுலகினை விளக்கும் பெருமை வாய்ந்த அடியார்களே பத்தராய்ப் பணிவார்கள் என்னுந் திருக்கூட்டத்தினராவர்.