58. கோட்புலி நாயனார்

சோழநாட்டில் நாட்டியத்தான் குடியில் வேளாண் மரபில் தோன்றியவர் கோட்புலி நாயனார். சோழ மன்னர்க்குச் சேனாபதியாக விளங்கிய இவர், மன்னன் பால் ஊதியமாகத் தாம் பெற்ற பொருளைக் கொண்டு சிவாலயங்களுக்குத் திருவமுதுக்கென நெல்லை வாங்கி நெற்கூடுகளிற் சேமித்து வைக்குந் திருப்பணியைப் பல்லாண்டுகளாகச் செய்துவந்தார். அரசனது ஏவலால் கோட்புலியார் போர்முனைக்குச் செல்ல நேர்ந்தது. அப்பொழுது கோட்புலியார் தம் சுற்றத்தாரை நோக்கி ‘இறைவனுக்கு அமுது படிக்காக வைத்துள்ள இந்நெல்லினை நீங்கள் எடுத்தல் கூடாது, திருவிரையாக்கலி ஆணை’ எனத் தனித்தனியே சொல்லிவிட்டுப் போர்முனைக்குச் சென்றார்

சில நாளிலே கடும்பஞ்சம் வந்தது. அந்நிலையில் பசியால் வருந்திய சுற்றத்தார் “நாம் உணவின்றி இறப்பதைவிட இறைவர்க்கு வைத்த நெல்லைக் கொண்டாகிலும் பிழைத்து உயிர் தாங்கியிருந்து பின்னர் எடுத்த குற்றந் தீரக் கொடுத்துவிடுவோம்” என்று எண்ணி நெற் கூட்டைத் திறந்து செலவழித்து விட்டார்கள். போர் முனையிற் சென்று பகைவரை வென்று வந்த கோட்புலியார் இறைவன் திறத்துச் சுற்றத்தார் செய்த குற்றத்தை யுணர்ந்து சுற்றத்தாரை வீட்டினுள்ளே அழைத்து எல்லோரையும் வாளாற்கொன்று வீழ்த்தினார். அங்குள்ள இளங்குழந்தையைக் கொல்லப் புகுந்த போது வாயில் காவலன் தடுத்தான். ‘இக்குழந்தை நெல்லுண்டவளது பாலையுண்டது’ என்று அதனை மேலே எடுத்தெறிந்து வாளால் இருதுணிபட வீழ்த்தினார். அந்நிலையிற் சிவ பெருமான் கோட்புலியார்க்கு வெளிப்பட்டுத் தோன்றி அன்பனே, உன்னுடைய கைவாளால் பிறவிப்பாசம் அறுத்த நின் சுற்றத்தார் பொன்னுலகின் மேலுலகம் புக்கணைந்தனர். புகழுடைய நீ இந்நிலையே நம்முடன் அணைவாயாக’ என அருள் புரிந்து மறைந்தருளினார்.

கோட்புலி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தம் இல்லத்தில் வரவேற்று உபசரித்துத் தாம் பெற்ற வனப் பகை, சிங்கடி என்னும் பெண்கள் இருவரையும் பணிப் பெண்களாக ஏற்றருளும்படி வேண்டினார். சுந்தரர் அவ்விரு பெண்களையும் தம்முடைய அன்புக்குரிய மக்களாக ஏற்று அவர்களுக்குத் தந்தை எனத் தாம் பாடிய திருப்பதிகத் திருக்கடைக் காப்புப் பாடல்களில் தம்மைக் குறிப்பிட்டு மகிழ்கின்றார்.