57. புகழ்த்துணை நாயனார்

சோழநாட்டில் அழகார்புத்தூர் என வழங்கும் அரிசிற்கரைப் புத்தூரில் ஆதிசைவர் மரபில் தோன்றியவர் புகழ்த்துணையார். இவர் சிவாகம விதிப்படி அரிசிற்கரைப் புத்தூர்த் திருக்கோயிலில் இறைவனைப் பூசனை செய்திருந்தார். அக்காலத்திற் பஞ்சம் உண்டாயிற்று. தமக்கு உணவின்றி வாட்டமுற்ற நிலையிலும் ‘எம் இறைவனை வழிபடாது விடுவேனல்லேன்’ என்னுந்துணிவுடையராய் அல்லும்பகலும் வழிபாடு செய்தார். ஒருநாள் சிவலிங்கப் பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டும்போது பசிநோயினாற் கைசோர்ந்து திருமஞ்சனக்குடம் இறைவன் திருமுடிமேல் விழத் திருவடியில் உயிர்ப்பற்று வீழ்ந்தார். அப்பொழுது இறையருளால் உறக்கம் வர, இறைவன் கனவிலே தோன்றிப் பஞ்சம் நீங்கும் வரையிலும் நாம் நாள்தோறும் இங்கு ஒருகாசு வைப்போம் என்று அருள்செய்தார். துயிலுணர்ந்தெழுந்த புகழ்த்துணையார் இறைவர் திருப்பீடத்தின் கீழ் ஒரு காசு இருக்கக் கண்டு அதனைக் கைக்கொண்டு உணவு பெற்று அமுது செய்து தமது வழிபாட்டினைக் குறைவறச் செய்து வந்தார். அந்நாள் முதல் பஞ்சம் நீங்கும் வரையிலும் காசு பெற்று இறைவனைப் பூசித்துப் பஞ்சம் நீங்கிய பின்னரும் நெடுநாள் சிவபூசனை புரிந்து புனிதர் அடி நீழல் சேர்ந்தார்.