55. இடங்கழி நாயனார்

சோழர் குடியில் தோன்றிய இவர், கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து இருக்கு வேளிர்குலத்து அரசினை ஏற்று அந்நாட்டின் தலைவராய் ஆட்சி புரிந்தார். சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியோடு தழைப்பத் திருக்கோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்ச்சனை நிகழச் செய்துவந்தார்; சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுப்பதனை இயல்பாகக் கொண்டிருந்தார். அந்நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர் உணவுக்குரிய நெல் எங்கும் கிடைக்காமையால் அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையிற் காவலர்கள் அவ்வடியவரைப் பிடித்து இடங்கழியார் முன்னர்க் கொண்டு வந்து நிறுத்தினர். அரசர் அவரைப் பார்த்து ஏன் நெல்லைக்களவு செய்தீர் என வினவினார். ‘சிவனடியார் களைத் திருவமுது செய்வித்தற்குப் பொருள் இல்லாமையால் இவ்வாறு செய்தேன்’ என அவ்வடியவர். கூறினார். அம்மொழி கேட்டு இரங்கிய இடங்கழியார் “எனக்கு இவரன்றோ பண்டாரம்” என்று சொல்லிப் பாராட்டினார்.

‘சிவனடியார்கள் எல்லோரும் எனது நெற்பண்டார மாத்திரமன்றி நிதிப்பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க’ என எங்கும் பறையறையச் செய்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியுடையராய் நெடுங்காலம் அரசு புரிந்து சிவபதம் பெற்றார்.