54. கழற்சிங்க நாயனார்

இவர் பல்லவர் குலத்தே தோன்றித் தொண்டை நாட்டினை ஆட்சி புரிந்த பேரரசர். வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாளும் வேந்தராகிய இவர், தம் தேவியுடன் திருவாரூர்ப் பெருமானை வழிபடச் சென்றார். கோயிலை வலம் வந்து திருப்பூமண்டபத்தையடைந்த பட்டத்தரசி கீழே கிடந்த நறுமலரொன்றை எடுத்து முகர்ந்தாள், அந்நிலையில் அங்கு வந்த செருத் துணையார் என்னும் சிவனடியார் ‘இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள்’ என்று வெகுண்டு அரசியின் மூக்கினைக் கத்தியால் அரிந்தார். அரசியின் அரற்றுதலைக் கேட்டு அங்கு வந்த கழற்சிங்கர் நடந்த நிகழ்ச்சியினை யறிந்து ‘பூவை எடுத்த கையை யன்றோ முதலில் தடிதல் வேண்டும்’ என்று கூறித் தம் உடைவாளை உருவி அரசியின் கையைத் தடிந்தார். சிவபெருமான் பால் வைத்த பேரன்பின் திறத்தால் இத்தகைய அரிய திருத்தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவ நெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பேரின்ப வாழ்வு பெற்றார்.