53. முனையடுவார் நாயனார்

இவர் சோழநாட்டில் திருநீடூரில் வேளாண் குலத்தில் தோன்றியவர். சிவபெருமானிடத்தும் சிவனடியார் திறத்தும் நிறைந்த பேரன்புடையவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற செல்வங்களைச் சிவனடியார்க்கு வரையாது அளிக்கும் வண்மையுடையவர். போரிற் பகைவர்க்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணைவேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையிற் கூலி பேசிக்கொண்டு அவர்கட்காகப் போர் முனையிற் சென்று போர் செய்து பொருள் சேர்த்துச் சிவனடியார்களுக்கு நிறையக் கொடுத்து அறுசுவைக் கறிகளுடன் திருவமுது செய்வித்தலைத் தமது பணியாகக் கொண்டிருந்தார். அதனால் இவருக்கு முனையடுவார் என்னுந் திருப்பெயர் வழங்குவதாயிற்று. முனையடுவார் நாயனார் ஈசனடியார்க்கான திருப்பணிகள் புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியா துறையும் பெருவாழ்வு பெற்றார்.